Tourist places
Tourist places File Image
சிறப்புக் களம்

அடிதூள்.. 100 ரூபாயில் மூணாறு.. 150 ரூபாயில் கொடைக்கானல்.. குறைந்த செலவில் சுற்றுலா செல்ல ரெடியா..?

Justindurai S

இனி கொடைக்கானலை சுற்றிப் பார்க்க ஆயிரக்கணக்கில் செலவு செய்து வேனோ காரோ பிடிக்கத் தேவையில்லை. வெறும் 150 ரூபாய் கொடுத்தால் கொடைக்கானலில் உள்ள 12 சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்கும் அசத்தல் திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை. இந்த சுற்றுலா பேருந்து திண்டுக்கல், பழனி, மதுரை, திருச்சி, வத்தலகுண்டுவிலிருந்து கொடைக்கானலுக்கு இயக்கப்படுகின்றன. கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்தும் இந்த சுற்றுலா பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் முன்பதிவின் பேரில் இயக்கப்படுகின்றன.

அப்பர் லேக் வியூ, மோயர் பாயிண்ட், பைன் காடுகள், குணா குகை, தூண் பாறை, பசுமைப் பள்ளத்தாக்கு, கால்ஃப் மைதானம், பாம்பார் ஆறு காட்சி, 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம், கோக்கர்ஸ் வாக், பிரையண்ட் பூங்கா, லேக் (டிராப்) ஆகிய 12 சுற்றுலா தலங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த இடங்களை காண நபர் ஒருவருக்கு 150 ரூபாய் பேருந்து கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளாக இருந்தால் அவர்களுக்கு ரூ 75 வசூலிக்கப்படும். அந்த பேருந்துகளில் இயற்கை எழில் காட்சி Natural Scene என குறிப்பிடப்பட்டிருக்கும்.

இந்த 12 இடங்களுக்கும் அந்த பேருந்துகளின் நடத்துநரே அழைத்துக் கொண்டு காட்டுகிறார்கள். சுற்றுலா பயணிகளுக்காக நீண்ட நேரம் ஒதுக்குவதால் பயணிகள் மத்தியில் இந்த டூர் பேக்கேஜ் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டூர் பேக்கேஜ் ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரு மாதங்களுக்கு இருக்கும் என்று போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

மூணாறில் 100 ரூபாயில் ஏசி பஸ்ஸில் தங்கும் வசதி

 தென்னகத்தின் காஷ்மீர் என்று அழைக்கப்படும் மூணாறுக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இப்படி வரும் சுற்றுலா பயணிகள் அறை வாடகைக்காக சீசன் உள்ளிட்ட முக்கிய நாட்களில் பெரும் தொகையை செலுத்த வேண்டியதிருக்கும். மற்ற நாட்களிலும் அறையை பொறுத்து ஓரளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

 குறைந்தது 1,500 ஆயிரம் ரூபாய் இருந்தால் மட்டுமே அறை வாடகைக்கு எடுக்க முடியும் என்கிற நிலை மூணாறில் காணப்படும். ஆனால் கேரள அரசு சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமாக அருமையான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இதன்படி மூணாறு வரும் சுற்றுலாப்பயணிகள் குறைந்த பட்ஜெட்டில் தங்க விரும்பினால் இனி இரவில் தங்க அறைகள் தேடி அலைய வேண்டியதில்லை. கேரள அரசின் பேருந்துகளிலேயே தங்கி ஓய்வெடுக்கலாம். அதுவும் ஏசி பேருந்துகளில். கேரள அரசின் ஏசி பேருந்துகளில் ஒரே நேரத்தில் 16 பேர் தங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு படுக்கைக்கு ஒரு நாளைக்கு 100 மட்டுமே வாடகை வசூலிக்கப்படுகிறது. கம்பளி, போர்வை தேவைப்பட்டால் கூடுதலாக ரூ.50 செலுத்த வேண்டும். மூணாறு டெப்போ கவுண்டரில் இதற்கு முன்பதிவு செய்ய வேண்டும். பணம் செலுத்தி விட்டு, மாலை 5 மணிக்கு பேருந்தில் ஏறி ஓய்வெடுக்கலாம். 1,600 செலுத்தி முன்பணம் செலுத்தி மொத்த பேருந்தையும் குடும்பத்துக்காக முன்பதிவு செய்யலாம்.

இந்த பேருந்துகள் மூணாறு டெப்போவில் நிறுத்தப்பட்டிருக்கும். பேருந்தில் தங்க விரும்புபவர்கள் டெப்போவில் உள்ள கழிவறைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். அருகில் உணவகங்களும் இருக்கின்றன. படுக்கை, மொபைல் சார்ஜிங் போர்ட் உள்பட பல வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

23,000 ரூபாயில் 5 மாநிலங்களுக்கு ரயில் சுற்றுலா

 ஒரு அற்புதமான சுற்றுலா பேக்கேஜ்ஜை பயணிகளுக்காக கொண்டு வந்துள்ளது இந்திய ரயில்வே. வட இந்தியா மற்றும் தென் இந்தியாவில் உள்ள ஐந்து மாநிலங்களுக்கு 11 நாட்கள் செல்லும் பயணமாக இது இருக்க போகிறது. பாரத் கௌரவ் ஸ்பெஷல் டூரிஸ்ட்ஸ் ரயிலின் மூலம் GOLDEN TRIANGLE WITH HYDERABAD AND GOA என்ற ரயில் பயணத் தொகுப்பை கொண்டு வந்துள்ளது ஐஆர்சிடிசி.

10 இரவுகள் மற்றும்  11 நாட்கள் நாட்டின் முக்கிய கலாச்சார மற்றும்  சுற்றுலா தலங்களான ஹைதராபாத், ஆக்ரா, டெல்லி, ஜெய்ப்பூர் மற்றும் கோவா ஆகிய இடங்களுக்கு இந்த பேக்கேஜின் மூலம் பயணிக்கலாம். கேரளாவில் உள்ள கொச்சுவேலி எனும் இடத்தில் தொடங்கும் இந்த பயணம், கொச்சுவேலி - ஹைதராபாத் - ஆக்ரா - டெல்லி - ஜெய்ப்பூர் - கோவா - கொச்சுவேலி என்ற வரிசையில் நிறைவுபெறும்.

கேரளாவில் தொடங்கும் இந்த பயணத்திற்காக கேரளா வரை பயணிக்க வேண்டுமா என்று கேட்டால் அதுதான் இல்லை. நீங்கள் கோவை, ஈரோடு, சேலம் ஆகிய தமிழ்நாட்டு ரயில் நிலையத்தில் இருந்து இந்த பயணத்தைத்  தொடங்கலாம். இந்த பயணத்தின் போர்டிங் பாயிண்டுகளாக, கொச்சுவேலி - கொல்லம் - கோட்டயம் - எர்ங்குளம் டவுன் - திருச்சூர் - ஒட்டப்பாலம் - பாலக்காடு - கோவை (போத்தனூர்) - ஈரோடு - சேலம் ஆகிய இடங்கள் உள்ளன. இதில் உங்களுக்கு ஏற்ற இடத்தை தேர்வு செய்து அங்கே நீங்கள் ரயில் ஏறிக் கொள்ளலாம்.

 19.05.2023 அன்று கொச்சுவேலியில் இருந்து தொடங்கும் இந்த பயணத்தில் ஹைதராபாத் (ராமோஜி பிலிம் சிட்டி, சார்மினார், சாலர்ஜங் மியூசியம், கோல்கொண்டா), ஆக்ரா (தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை), டெல்லி (செங்கோட்டை, ராஜ்காட், தாமரை கோயில், குதுப்மினார்), ஜெய்ப்பூர் (சிட்டி பேலஸ், ஜந்தர் மந்தர், ஹவா மஹால், அமர் கோட்டை), கோவா (கலங்குட் பீச், வாகேட்டர், பாம் ஜீசஸ் பசிலிக்கா, சே கதீட்ரல்) ஆகிய இடங்களை கண்டுகளிக்கலாம்.

10 இரவுகள் 11 நாட்கள் பேக்கேஜின் விலையானது பெரியவர்களுக்கு ரூ.22,893, குழந்தைகளுக்கு ரூ.21,318 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கட்டணத்திற்குள் காலை உணவு மற்றும் இரவு உணவு, தண்ணீர், போக்குவரத்து, வழிகாட்டிகள், ஆகியவற்றுக்கான செலவுகள் அடங்கும். உணவு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட உணவுதான் பரிமாறப்படும். விருப்பத்தின்படி வழங்கப்படாது. வேறு உணவு சாப்பிட விரும்பினால் அது தனிப்பட்ட செலவில் சேரும்.

 இந்த பயணம் 19.05.2023 அன்று கொச்சுவேலியில் இருந்து தொடங்குகிறது. நீங்கள் குறைந்த விலையில்  பார்க்க விரும்பினால் இப்போதே https://www.irctctourism.com/pacakage_description?packageCode=SZBG02 என்ற இணைய முகவரியில் பதிவு செய்து கொள்ளுங்கள்.