சிறப்புக் களம்

சீன தயாரிப்பு செல்போன்களை பயன்படுத்த வேண்டாம் - விரட்டும் லித்துவேனி.. முற்றும் மோதல்!

கலிலுல்லா

சீன தயாரிப்பு செல்போன்களை பயன்படுத்த வேண்டாம் என லித்துவேனியா பாதுகாப்புத்துறை அந்நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

லித்துவேனியா தேசிய சைபர் பாதுகாப்பு மையம் சீன தயாரிப்பான ஸியோமி ரக செல்போனை பரிசோதனைக்கு உட்படுத்தியதுள்ளது. அதில், free tibet, long live taiwan independence அல்லது democracy movement போன்ற வாசகங்கள் இடம்பெற்றால் இயல்பாகவே அதனை கண்டறிந்து அந்த பக்கத்தை தணிக்கை செய்யும் வகையில் செயலி நிறுவப்பட்டுள்ளதாக லித்துவேனியா தேசிய சைபர் பாதுகாப்பு மையம் கூறியுள்ளது. இது போல 499க்கும் அதிகமான சொற்களை ஸியோமி கைப்பேசி செயலிகள் தாமாகவே கண்டறிந்து தணிக்கை செய்யும் வசதி நிறுவப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

ஸியோமி கருவியில் உள்ள ரகசிய உள்ளீட்டுத்தரவுகள், சிங்கப்பூரிலுள்ள சர்வருக்கு தானியங்கியாக பரிமாற்றப்படுவது கண்டறியப்பட்டுள்ளதாகவும் லித்துவேனியாவின் ஆய்வு கூறுகிறது. ஆனால், அந்தந்த நாடுகளின் சட்ட விதிகளுக்கு உட்பட்டே சேவைகள் வழங்கப்படுவதாக செல்போன் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

இந்த பிரச்னை தொடர்பாக சைபர் கிரைம் வழக்கறிஞர் கார்த்திகேயன் கூறுகையில், ''ஸ்பைவேர்கள் மூலமாக கண்காணிக்க முடியும். இதில் சர்வசேத அரசியல் உள்ளடங்கியிருக்கிறது. இதன் வெளிப்பாடு தான் இது. ஸியோமி மட்டுமல்ல. அனைத்து செல்போன்களிலும் இதனை செய்ய முடியும். சைனாவுக்கும், தைவானுக்கும் இடையே ஏற்கெனவே பெரிய பிரச்னை இருந்துகொண்டுதான் இருக்கிறது. முதல்முறையாக லித்துவேனியாவுக்கு ஒரு கோரிக்கையை விடுத்துள்ளது. அது இனிமேல் எங்கள் தூதரகத்தை தைவான் தூதரகமாக அங்கீகரிக்க வேண்டும் என கூறியுள்ளது. இதனை லித்துவேனியாவும் ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்த விவகாரம் காரணமாக லித்துவேனியா மீது சீனா கடும் கோபமடைந்தது. இதனால், சீனாவில் இருந்த லித்துவேனியாவுடைய தூதரகத்தை அங்கிருந்து வெளியேற்றினார்கள். இதில் நம்மை பாதுகாக்கவும், சீனாவுக்கு எதிராகவும் என்ன செய்ய முடியும் என லித்துவேனியா ஆய்வு மேற்கொண்டிருக்கிறது. இதில், சீனாவுக்கு உலக அளவிலிருந்து எலக்ட்ரானிக் பொருட்கள் மூலமாக தான் அதிக அளவில் நிதி கிடைக்கிறது. எனவே, சீனா மொபைல்களை யாரும் பயன்படுத்த வேண்டாம் என அவர்களின் சைபர் குழு மூலமாக கூறிவருகிறது'' என்றார்.

உலகில் மற்றும் இந்திய சந்தைகளில் சீன செல்போன்களின் ஆதிக்கம்:

இந்தியாவில் எலக்ட்ரானிக் பொருட்கள் தொடங்கி அனைத்து பொருட்களிலும் சீன நிறுவனங்களின் ஆதிக்கம் இருப்பதை மறுக்க முடியாது. குறிப்பாக மொபைல் போன்களில் இந்தியாவில் இருக்கும் 80சதவீத போன்கள் சீன நிறுவனங்களுடையது தான். இதில் முதலிடம் பிடிப்பது ஜியோமி. இந்தியாவின் பல இடங்களில் காலூன்றியிருக்கும் மிகப்பெரிய சீன செல்ஃபோன் நிறுவனம். அடுத்தாக பி.பி.கியூ நிறுவனம். இது ஒன் பிளஸ், ஒப்போ, ரியல்மீ, வீவோ போன்களில் தாய் நிறுவனம். ஹுவெய், லெனோவோ, மோட்டரோலா, டெக்னோ, இன்பினி்க்ஸ் நிறுவனங்களின் மொபைல்களும் இங்கே விற்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

இந்தியாவில் ஸ்மார்ட் ஃபோன் விற்பனை

ஜியோமி - 27%

வீவோ - 16%

ரியல்மீ - 13%

ஓப்போ - 11%

மற்றவை - 16%

ஆக இந்திய அளவில் ஜியோமியின் விற்பனை அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.