சிறப்புக் களம்

வர்ணாசிரமக் கோட்பாடுகளை கடுமையாக எதிர்த்த லிங்காயத்!

வர்ணாசிரமக் கோட்பாடுகளை கடுமையாக எதிர்த்த லிங்காயத்!

கர்நாடக மாநிலத்தில்  அதிகளவில் வாழும் லிங்காயத் சமூகத்தினரை தனி மதத்தினராக ஆளும் காங்கிரஸ் அமைச்சரவை அங்கீகரித்து ஒப்புதல் அளித்துள்ளது.  இந்திய ஞான மரபின்படி சமுதாய சீர்திருத்தவாதிகள் தனி மனிதர்களாக எப்போதும் இருந்ததில்லை. அவர்கள் ஒரு சமூகமாக வாழ்ந்து வழிக்காட்டி பிறகு சமூக சீர்த்திருத்தங்களில் ஈடுபட்டனர். கி.பி. 12-ம் நூற்றாண்டில் வட கர்நாடகத்தில் உருவான வசனக்காரர்களின் இயக்கம் (பக்தி இயக்கம்) சமூகப் பண்பாட்டுத் தளத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது அனைத்து அதிகாரங்களும் பிராமணர்களின் ஆதிக்கத்தில் இருந்த காலகட்டம் அது. வசனக்காரர்களின் இயக்கம் அதைக் கேள்விக்கு உட்படுத்தியதோடு மட்டுமல்லாமல், மாற்றுச் சமூகக் கட்டமைப்பை உருவாக்கவும் முனைந்தது. இந்த முரண்பாடு வர்ணாசிரம சாதி ஆதிக்க சக்திகளுக்கும் வசனக்காரர்களுக்கும் இடையில் சமரசம் செய்ய முடியாத முரண்பாடாக வளர்ந்தது.

வீர சைவம் எனும் லிங்காயத்

வீர சைவம் என்பது லிங்கத்தை மட்டுமே வழிபாடு செய்வதாகும்.குருவிடம் இருந்து பெற்றுக் கொண்ட லிங்கத்தை கழுத்தில் கட்டிக் கொள்வது இவர்கள் கொள்கையாகும். இந்த லிங்கத்தை ஒரு போதும் இவர்கள் பிரியமாட்டார்கள். மார்பில் சிவலிங்கத்தை அணிந்ததால் இவர்கள் “லிங்காயத்” என்றும் அழைக்கப்படுகின்றனர்.  உபதேசம் தருபவர் குருவாகவும்,அவர் அளிக்கும் சிவ அடையாளப் பொருள் லிங்கமாகவும் உள்ளது. லிங்காயத் சமூகத்தினர் தாங்கள் அணிந்திருக்கும் லிங்கத்தை மட்டுமே வழிபடுகின்றனர்.வர்ணாசிரம முறையிலான சாதி வேறுபாடுகளை வீர சைவம் ஏற்கவில்லை. சிவ தீட்சை பெற்ற பிறகு அனைவரும் ஒன்றாகவே கருதப்பட்டனர். அறிவையும், தொழிலையும் பெரிதாகக் கருதாமல் பக்திக்கு வீர சைவர்கள் முதலிடம் தந்தனர். வீரசைவத்தினர் "சரணர்” என்றும் அழைக்கப்பட்டனர். சாதி ,பொருளாதார வேறபாடுகளின்மை, பெண்ணுக்குச் சம மதிப்புத் தந்து போற்றியது ஆகியவை லிங்காயத் சமூகத்தின் பெருமையாக பார்க்கப்படுகிறது. உடலே கோயில், ஆன்மாவே தெய்வம் என்ற தத்துவத்தை நடைமுறைப்படுத்தியதன் மூலம் சமூகத்தில் இருந்த அனைத்துச் சாதியினரும் அப்போது வீர சைவமான, லிங்காயத்தில் இணைந்தனர். இந்தப் பக்தி இயக்கத்தை தலைமைத் தாங்கி வழிநடத்தியவர் பசவண்ணர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரவணைத்த பசவர்!

தமிழகத்தில் எட்டாம் நூற்றாண்டுவாக்கில் உருவாகி இந்தியாவெங்கும் சென்ற ஓர் அலையை பக்தி இயக்கம் என்கிறார்கள். ஒவ்வொரு பகுதியிலும் அது பக்தியை முதன்மையாக முன்வைத்த ஞானிகளை உருவாக்கியது. அவர்கள் அன்றைய ஆசாரவாதத்திற்கும் பிரிவினைப்போக்குகளுக்கும் எதிரானவர்கள். ஆகவே சீர்திருத்தவாதிகள். அவர்களைத் தொடர்ந்தவர்கள் அமைப்புகளாக ஆனார்கள். காலப்போக்கில் துணை மதங்களாகவோ சாதிகளாகவோ ஆனார்கள். 

அவ்வாறு உருவான பல மத இயக்கங்கள் இந்துமதத்திற்குள் உள்ளன. அத்தகைய இயக்கங்களான ராமானுஜர், மத்வர், சைதன்யர், வல்லபர் போன்றவர்களின் அதே வரிசையில் வருபவர் பசவர். அவர் வலியுறுத்தியது சிவபக்தியை. அவர் உருவாக்கியது வீரசைவமரபை. சைவமன்றி வேறு வழிபாட்டை தன் ஆதரவாளர்களுக்குத் தடை செய்தார். கழுத்தில் சிவலிங்கத்தை கட்டித் தொங்கவிடும்படி ஆணையிட்டார். ஆகவேதான் அவர்கள் லிங்காயத்துக்கள் என அழைக்கப்பட்டனர். லிங்கம் கட்டிய அனைவரையுமே தன்னவர் என அவர் ஏற்றுக்கொண்டார். ஆகவே அனைத்துச் சாதிகளிலிருந்தும் அவரிடம் சென்று வீரசைவ நோன்பை  பெற்றுக்கொண்டார்கள் மக்கள். 

கர்நாடாகவில்  லிங்காயத் சமூகத்தினர் 11.5 % முதல் 19% மக்கள் தொகை உள்ளனர். மொத்தம் உள்ள 224 சட்டசபை தொகுதிகளில் 110 இல் தீர்மானிக்கும் சக்தியாக லிங்காயத்து இன மக்கள் இருக்கின்றனர். இந்நிலையில், லிங்காயத் சமுதாயத்தினரை தனி மதத்தினராக கர்நாடகா அரசு அங்கீகரித்துள்ளது. நீதிபதி நாகமோகன்தாஸ் அறிக்கையின்படி தனி மதமாக கர்நாடக அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. லிங்காயத்துகளை தனி மதமாக அறிவிக்க வேண்டய கோரிக்கை இன்றோ நேற்றோ எழுந்தது அல்ல அது 900 ஆண்டுக்கால கோரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.