சிறப்புக் களம்

ஸ்டார்ட் அப் இளவரசிகள்- 18 வேலைவாய்ப்பு தேடலில் புதிய பாதை காட்டிய கேத்தரின் மின்ஷு

webteam

நீங்கள் என்ன வேலை பார்க்க விரும்புகிறீர்கள் என்பதற்கும் நீங்கள் வாழ்க்கையில் என்ன செய்ய விரும்புகிறீர்கள் எனும் கேள்விக்கும் வேறுபாடு இருக்கிறது அல்லவா? இந்த வேறுபாட்டை உணர்ந்தவர்கள் தங்களுக்கு ஏற்ற வேலைவாய்ப்பை தேடிக்கொள்ள வழிகாட்டுவதோடு, மற்றவர்கள் இந்த வேறுபாட்டை உணர்ந்து கொள்ளவும் வழிகாட்டி வருகிறார் கேத்தரின் மின்ஷு (Kathryn Minshew ).

தி மியூஸ் (https://www.themuse.com/) இணையதளம் மூலம் இதை அவர் செய்து வருகிறார். தி மியூஸ் இணையதளத்தை மாறுபட்ட/ மேம்பட்ட வேலைவாய்ப்பு இணையதளம் என்றோ, தொழில் வாழ்க்கை வழிகாட்டி இணையதளம் என்றோ சொல்வதும் பொருத்தமாக இருக்கும். அதைவிட வாழ்கை அனுபவ இணையதளம் என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். ஏனெனில், மின்ஷுவின் வாழ்க்கை அனுபவத்தின் பயனாக பிறந்த இந்த தளம் அதை நாடி வருபவர்களுக்கு சரியான வாழ்க்கை அனுபவத்தை பெற உதவுகிறது.

எதிர்கால பாதை

எத்தனையோ வேலைவாய்ப்பு தளங்கள் இருக்கையில் தி மியூஸ் தளம் எந்த வகையில் அவற்றில் இருந்து வேறுபட்டது என்பதை தெரிந்து கொள்ள முதலில் மின்ஷுவின் வாழ்க்கை பாதையை தெரிந்து கொண்டால், இந்த தளத்தின் தன்மையை எளிதாக விளங்கிக் கொள்ளலாம். ஏனெனில் மின்ஷு தனக்கு ஏற்ற எதிர்கால வேலை எது எனும் கேள்வியை எதிர்கொண்டபோது தனக்கு ஏற்பட்ட குழப்பம் தன்னைப்போன்ற வேறு யாருக்கும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என வழிகாட்ட விரும்பி தி மியூஸ் தளத்தை துவக்கினார்.

இணை நிறுவனர்களுடன் இணைந்து தி மியூஸ் இணைய நிறுவனத்தை துவக்கிவதற்கு முன் கேத்ரின் மின்ஷு நல்ல வேலையில் இருந்தார். நல்ல வேலை என்று சொல்வதைவிட பலரும் கனவு வேலையாக நினைக்கும் வேலை என்று சொல்லலாம். ஆம், சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆலோசனை நிறுவனமான மெக்கின்சியில் அவர் உயர் பதவியில் இருந்தார். எம்பிஏக்களின் கேந்திரம் என வர்ணிக்கப்படும் மெக்கின்சி வேலை என்பது கைநிறைய சம்பளம் தரக்கூடியது மட்டும் அல்ல, அந்தஸ்து மிக்கதும்தான். ஆனாலும், மின்ஷு மெக்கின்சியில் வர்த்தக அதிகாரியாக இனி தொடர்வதில்லை எனும் முடிவை மேற்கொண்டார்.

மெக்கின்சி வேலை

மெக்கின்சி போன்ற பெரிய நிறுவனத்தில் பார்த்துக்கொண்டிருக்கும் வேலையை விடுவது என்பது பெரிய முடிவு தான். சிலர் இதை துணிச்சலான முடிவு என நினைக்கலாம் என்றால், சிலர் இதை முட்டாள்தனமானது என்றும் கருதலாம். அனால், மின்ஷு தனது முடிவில் தெளிவாக இருந்தார். ஆனால் அடுத்து என்ன செய்வது என்பதில் தான் அவருக்கு குழப்பமாக இருந்தது. மெக்கின்சி நிறுவனத்தில் அவருக்கு மன வருத்தமோ, குறையோ இருக்கவில்லை. அந்த வேலையை அவர் விரும்பவும் செய்தார்.

ஆனால், ஏனோ மெக்கின்சி வேலை தனக்கானது இல்லை என உணர்ந்தார். இதை ஏற்றுக்கொள்வது முதலில் தனக்கே கஷ்டமாக இருந்தது என அவர் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். நல்ல வேலைக்காகவே கடினமாக முயற்சிக்கும் நிலையில், அதன் பயனாக கிடைத்த மெக்கின்ஸி வேலையை மகிழ்ச்சியோ ஏற்றுக்கொள்வதே இயல்பாக இருக்க வேண்டும் என்றாலும், தனது மனம் வேறு விதமாக நினைத்தது என்கிறார் மின்ஷு.

நல்ல வேலை என்பது சரி, ஆனால் அந்த வேலையில் எந்த அளவு முன்னேற முடியும் என்றொரு கேள்வி இருக்கிறது அல்லவா? அதைவிட முக்கியமாக எதிர்பார்க்கும் முன்னேற்றம் கிடைத்தாலும், வாழ்க்கை முழுவதும் பார்க்க விரும்பும் வேலை இது தானா? எனும் கேள்வியும் முக்கியமானது அல்லவா? மின்ஷு மனதிலும் இத்தகைய கேள்விகள் எழுந்தன.

மெக்கின்சி நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவத்தில் அவர் முக்கிய திறன்களை கற்றுக்கொண்டிருந்தாலும், அந்த நிறுவனத்தில் முன்னுக்கு வர வேண்டும் என்றால் அதற்கான வழிகளை அறிந்திருக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டார். இந்த திறன் தன்னிடம் இருக்கிறதா? என யோசித்துக்கொண்டிருந்த போது தான், வாழ்நாள் முழுவதும் தான் பார்க்க விரும்பும் வேலை இது அல்லவே என்று அவருக்குத்தோன்றியது. வேலை என்பது உயர் பதவி, சம்பளம், இன்னும் பிற வசதிகளை எல்லாம் தாண்டி மனதுக்கு பிடித்தமானதாக இருக்க வேண்டும் என நினைத்தார். அப்படி தன் மனதுக்கு பிடித்த வேலை எது என்பதை அறிவதில் தான் அவர் குழம்பித்தவித்தார்.

பணி அனுபவம்

வேலைவாய்ப்பின் எதிர்கால திசை குறித்து தனக்கிருந்த எண்ணங்களை அவர் சக ஊழியரும், நெருங்கிய தோழியுமான அலெக்ஸ் கேவலகோசுடன் (Alex Cavoulacos ) மனம் விட்டு பேசுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். மின்ஷு போல் அல்லாமல் அலெக்ஸ் மெக்கின்சி வேலையை மிகவும் விரும்பினார். கடவுள் கொடுத்த வேலை என கருதும் அளவுக்கு மெக்கின்சி வேலையை அவர் உயர்வாக நினைத்தார். இந்த முரண்பாடும் மின்ஷூவை யோசிக்க வைத்தது. ஒரே வேலையை ஒருவர் மனநிறைவுடன் எதிர்கொள்ளும் போது இன்னொருவர் அதில் குறைகளை உணர்வது ஏன் என அவர் யோசித்தார்.

வேலையின் குறை நிறைகள் தவிர, 'உங்கள் வாழ்க்கையில் என்ன செய்ய விரும்புகிறீர்கள்' எனும் அடிப்படையிலான கேள்வி இருவர் மனதிலும் இருந்தது. இந்த கேள்விக்கு பொருத்தமான பதிலாக பார்க்கும் வேலை இருக்க வேண்டும் என மின்ஷு நினைத்தார். தனக்கான அந்த பொருத்தமான வேலை எது எனும் கேள்விக்கு பதில் தேட முற்பட்டபோது தான் வாழ்க்கை அவருக்கான புதிய பாதையை காட்டியது.

தன்னைப்போன்றவர்கள் சரியான வேலையை தேட வழிகாட்டும் புதுமையான வேலைவாய்ப்பு தளத்தை துவக்குவது என்பது தான் அந்த பாதை. ஆம், மெக்கின்சி வேலைக்கு பதிலாக வேறு வேலையை கண்டறிய, பிரபல வேலைவாய்ப்பு தளம் ஒன்றை நாடியபோது, அவர் குறிப்பிட்ட பணி வாய்ப்பிற்காக அந்த தளம், பல்வேறு நகரங்களில் உள்ள 5,000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை பட்டியலிட்டது. எல்லாம் ஏறக்குறைய ஒரே மாதிரி இருந்ததோடு, அவருக்கு வழிகாட்டும் வகையில் அந்த பட்டியல் அமைந்திருக்கவில்லை.

இத்தகைய பழையபாணி வேலைவாய்ப்பு தளத்தை விட சிறந்த வேலைவாய்ப்பு தளம் தேவை என அவர் உணர்ந்தார். அலுவலகத்தில் ஏற்பட்ட இன்னொரு அனுபவமும் இதற்கு வலு சேர்த்தது. மெக்கின்சியில் அவர் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் தேவை என உணர்ந்த போது, அதற்கான உரையாடலை எப்படி துவக்குவது எனத்தெரியாமல் தவித்தார். மேலதிகாரியுடம் எப்படி இந்த கோரிக்கையை வைப்பது என பதற்றத்துடன் யோசித்து தயார் செய்து கொண்டிருந்த போதும் அவரால் உறுதியாக பேசவும் முடியவில்லை. அவருக்கு ஊதிய உயர்வும் கிடைக்கவில்லை.

என் வழி என்ன?

இந்த அனுபவமும் அவரை யோசிக்க வைத்தது. பதவியில் இருக்கும் தன்னால் ஊதிய உயர்வுக்கான காரணங்களை தெளிவாக விளக்க முடியாத நிலையில் இதற்கான வழிகாட்டுதல் இல்லையே என நினைத்தார். இத்தகைய வழிகாட்டுதலை அளிப்பதும் வேலைவாய்ப்பு தளத்தின் நோக்கமாக இருக்க வேண்டும் என நம்பினார். அதோடு தனக்கிருந்த தனித்திறமைகளை அலசிப்பார்த்தவர், மற்றவர்களுக்கான சரியான வேலைவாய்ப்பு ஆலோசனையை தன்னால் வழங்க முடியும் என நினைத்தார்.

அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் பிறந்து வளர்ந்தவர் பள்ளி பருவத்தில் கதை புத்தகங்களை வேகமாக படிக்க கூடியவராக இருந்தார். இத்தகைய திறன்கள் தனக்கு உதவும் என நினைத்தார். மேலும் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது, வளர்ந்து பெரிய பெண்ணாகும் போது சர்வதேச அளவில் பணியாற்றும் வாய்ப்பை பெற வேண்டும் என விரும்பியிருக்கிறார்.

இந்த நம்பிகையோடு, அலெக்ஸ் உள்ளிட்ட இணை நிறுவனர்களுடன் துவக்கியது தான் தி மியூஸ் வேலைவாய்ப்பு வழிகாட்டி இணையதளம். 2011 ல், துவக்கப்பட்ட இந்த தளம், (துவக்கத்தில் டெய்லி மியூஸ்), முன்னணி வேலைவாய்ப்பு வழிகாட்டி தளமாக உருவாகியிருக்கிறது. வேலை தேடும் இளைஞர்கள், வேலையில் இருக்கும் இளம் வயதினர் பொருத்தமான வேலையை தேடுவதற்காக நாடி வரும் தளமாக தி மியூஸ் கருதப்படுகிறது.

புதிய பாதை

வேலைவாய்ப்புகளை மட்டும் பட்டியலிடாமல், வேலை தேடுபவருக்கு பொருத்தமான வேலையை அடையாளம் காட்டுவதோடு, வேலை வாய்ப்பு தொடர்பான பல்வேறு வழிகாட்டுதல்களையும் கட்டுரை வடிவில் இந்த தளம் வழங்குகிறது. எந்த வேலைவாய்ப்பை தேர்வு செய்தால் எதிர்காலத்திற்கு ஏற்றதாக இருக்கும் என்பது தொடர்பான வழிகாட்டுதல் கட்டுரைகள் இந்த தளத்தின் தனிச்சிறப்பாக இருக்கிறது. அதோடு, தனிப்பட்ட தன்மையை வழங்கும் வகையில் வர்த்தக நிறுவனங்களின் கலாசாரம், பணி சூழல் போன்றவற்றை தெரிந்து கொள்ள வழி செய்யும் கட்டுரைகளை வழங்குகிறது.

வேலைவாய்ப்பு தேடல் என்பது ஊதியம் போன்ற விஷயங்களை மட்டும் அடிப்படையாக கொண்டிராமல், ஒருவருடைய எதிர்பார்ப்பு, குணாதிசயம், கொள்கைகள் ஆகியவற்றுக்கு எல்லாம் பொருத்தமாக அமைய வேண்டும் என்பதை இந்த தளம் நோக்கமாக கொண்டுள்ளது. எனவே, வேலை தேடுபவர்கள் தங்கள் நம்பிக்கைக்கு ஏற்ற நிறுவனங்களை கண்டறியலாம். அடுத்த கட்ட வளர்ச்சி தேவைப்படுபவர்களுக்கு கட்டண சேவையாக தொழில்முறை வழிகாட்டுதலையும் இந்த தளம் வழங்குகிறது. இதன் காரணமாக லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்புக்காக மியூஸ் தளத்தை விரும்பி பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த வெற்றி மின்ஷுவுக்கு எளிதாக சாத்தியமாகவில்லை. ஆரம்ப தோல்விகள் தவிர பல்வேறு சோதனைகளை அவர் கடந்து வந்திருக்கிறார். மிகுந்த நம்பிக்கையோடு அவர் முதலில் துவக்கிய நிறுவனத்தில் இருந்து கசப்பான அனுபவத்தோடு அவர் வெளியேற நேர்ந்தது.

ஆரம்ப தோல்விகள்

மெக்கின்சி வேலையை விட்டு விலகியதும், அவர் உடனடியாக ஸ்டார்ட் அப் பயணத்தை துவக்கிவிடவில்லை. முதலில் கிளிண்டன் பவுண்டேஷன் எனும் அமைப்பில் தன்னார்வலராக பணியாற்றினார். இந்த வேலைக்காக ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணிக்க முடிந்தது. வெளிநாடுகளில் பணியாற்ற வேண்டும் சிறு வயது கனவு நிறைவேறியதோடு சிறந்த அனுபவமும் அவருக்கு கிடைத்தது. இடைப்பட்ட காலத்தில் வேலைவாய்ப்பு சேவை தொடர்பான தெளிவான புரிதல் கிடைத்த நிலையில், 2010 ல் பிஒய்.ஐ (Pretty Young Professional ) எனும் நிறுவனத்தை நண்பர்களோடு இணைந்து துவக்கினார். வேலைவாய்ப்பு ஆலோசனை வழங்கிய இந்நிறுவனம் மூடப்படும் நிலை ஏற்பட்டதோடு, இதன் இணை நிறுவனர் என்ற முறையில் அவருக்கு எந்த இழப்பீடும் கிடைக்கவில்லை. நிறுவனர்களுக்குள் முறையான சட்ட ஒப்பந்தம் இல்லாதது இதற்கான காரணமாக அமைந்தது. எனினும் இதை ஒரு பாடமாகவே எடுத்துக்கொண்டார்.

வெற்றி வழி

2011 ல் தி மியூஸ் நிறுவனத்தை துவக்கிய போது, பழைய குழுவை அப்படியே தன்னுடன் இணைத்துக்கொண்டார். அதோடு முக்கியமாக, நிறுவனத்தில் பங்கு உரிமையையும், பொறுப்புகளையும் தெளிவாக எழுதி ஒப்பந்தமாக்கி கொண்டார். இதன் பயனாக நிறுவனத்தில் எந்த முடிவுகளை யார் மேற்கொள்வது என்பது தொடர்பான தெளிவான புரிதல் இருந்தது. இது வளர்ச்சிக்கு வழிவகுத்தது. மேலும் நிறுவன உறுப்பினர்கள் அனைவரும், இணையதளத்தின் நோக்கத்தை புரிந்து கொண்டு அதற்கேற்ப ஈடுபாட்டுடன் பணியாற்றினர்.

நிறுவனத்திற்கு தேவையான நிதி திரட்டுவது அடுத்த சோதனையாக அமைந்தது. அவர் நிதி கோரி அணுகியபோது நிராகரிப்புகளையே எதிர்கொண்டார். மொத்தம் 148 முறைக்கு மேல் நிராகரிப்புக்குள்ளாகினார். மேலும், இந்த யோசனையை கேட்ட பலரும், வேலைவாய்ப்பு இணையதளத்தில் வழிகாட்டுதல் கட்டுரைகள் இடம்பெறுவது சரியாக இருக்காது என அச்சுறுத்தினர்.

ஆனால் மின்ஷு தனது திட்டத்தில் உறுதியாக இருந்தார். அடுத்த கட்ட முதலீட்டாளர்களை சந்தித்தபோது, அவர் தெளிவான அணுகுமுறையுடன் சென்றார். முதலீட்டாளர்களை சந்திக்க வாய்ப்பு கேட்ட போது, அவர்கள் ஒதுக்கிய நேரத்திற்கு செல்லாமல், முதலிலேயே குறிப்பிட்ட நாட்களை தெரிவித்து சந்திக்க நேரம் ஒதுக்க முடியுமா எனக் கேட்டார். குறிப்பிட்ட கெடுவுக்குள் சந்திப்புகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தவர், வேண்டுமானால் சில நாட்கள் தள்ளி வைக்கலாம் என்றார். பலரும் இதற்கு உடன்பட்டனர். கோரிக்கையை நிராகரித்தவர்கள் பற்றி அவர் கவலைப்படவில்லை.

நம்பிக்கையோடு முதலீட்டாளர்களை சந்தித்து தேவையான நிதி முதலீட்டையும் பெற்று நிறுவனத்தை துவக்கியவர் மற்றொரு முக்கிய நடவடிக்கையையும் மேற்கொண்டார். நிறுவனத்தின் இலக்கு வாடிக்கையாளர்களை சந்தித்து அவர்கள் கருத்துக்களை கேட்டறிந்து செயல்படுத்தினார். இதனால் வேலைவாய்ப்பு தேடுபவர்கள் எதிர்பார்க்கும் சேவையாக இந்த தளம் உருவாகி பெரும் வெற்றி பெற்றது. சிலிக்கான் வேலியில் இளம் வயதில் சாதித்த நிறுவனர்களில் ஒருவராக, செல்வாக்கு மிக்க பெண் சி.இ.,ஓவாக மின்ஷு உருவாகி நிற்கிறார்.

- சைபர்சிம்மன்