சிறப்புக் களம்

பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முடியுமா? - காங்கிரஸின் 'தலையாய' பிரச்னை

பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முடியுமா? - காங்கிரஸின் 'தலையாய' பிரச்னை

PT WEB

'2024 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும்' என தேசிய தலைவர்கள் பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு தலைவர் யார் என்கிற கேள்வி குழப்பத்தை உண்டாக்கியுள்ளது. பாரதிய ஜனதாவுக்கு எதிரான பல கட்சிகளும் காங்கிரஸ் தலைமையை வெளிப்படையாக எதிர்த்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுவிடுமோ என்கிற அச்சம் தேசிய அரசியலில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் ராஷ்ட்ரீய ஜனதா கட்சி தலைவர் லாலு பிரசாத், காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளது இந்த சர்ச்சையை சூடுபிடிக்க வைத்துள்ளது. ஏற்கெனவே மம்தா பானர்ஜி மற்றும் சரத் பவார் உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் காங்கிரஸ் கட்சியின் வலிமை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே தலைமையை எதிர்த்து பல குரல்கள் எழுந்துள்ளது எதிர்க்கட்சிகளுக்கு புதிய தலைவர் வேண்டும் என்கிற கருத்துக்கு வலு சேர்ப்பதாக அரசியல் வல்லுநர்கள் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

லாலு பிரசாத் யாதவ் விமர்சனத்தால் பீகார் மாநிலத்தில் ராஷ்டிரீய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் அமைத்துள்ள கூட்டணி உடைந்து விடலாம் என கருதப்படுகிறது. பீகார் சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களை ராஷ்ட்ரீய ஜனதா தளம் கைப்பற்றிய நிலையில், கூட்டணி கட்சியான காங்கிரஸ் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால்தான் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பாரதிய ஜனதாவுடன் இணைந்து மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றியது என ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சித் தலைவர்கள் கருதுகிறார்கள்.

பீகார் சட்டமன்றத்தில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இரண்டு தொகுதிகளிலும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் தனித்தனியாக ஒருவரை எதிர்த்து ஒருவர் போட்டியிடுகிறார்கள். இதனால் பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டுமே பயன் என்றும், பாஜகவுக்கு ராஷ்ட்ரீய ஜனதா தளம் உதவுகிறது என்றும் காங்கிரஸ் தலைவர் பக்த சரண் தாஸ் தெரிவித்திருந்தார்.

பக்த சரண் தாசுக்கு புரிதல் இல்லை என்றும், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதியை அளித்திருந்தால் கட்டாயம், அந்தத் தொகுதியில் காங்கிரஸ் தோல்வியை தழுவும் என லாலு பிரசாத் யாதவ் கிண்டலாகப் பேசியுள்ளார். காங்கிரஸ் தலைவர்களுக்கு இந்த நையாண்டி கடும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.

இத்தனை நாள் வரை பாரதிய ஜனதாவுக்கு மாற்றாக காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைந்த எதிர்கட்சிக் கூட்டணிக்கு தலைமை வகிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் சந்தேகங்கள் இருந்ததில்லை. அப்படி இருந்தாலும் வெளிப்படையான விமர்சனங்கள் மூலம் காங்கிரஸின் வலிமை கேள்விக்குறியாக்கபட்டதில்லை. தற்போது, அந்த நிலை மாறியுள்ளது.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி, பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க காங்கிரசால் இயலாது என வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார். மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை கடும் போட்டியில் வீழ்த்திய மம்தா பானர்ஜி மட்டுமே அதேபோன்ற வெற்றியை தேசிய அளவிலும் உண்டாக்க முடியும் என திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் முழங்கி வருகிறார்கள்.

அதேநேரத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கோவா மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் போட்டியிட தயாராகி வருகிறது. மேற்கு வங்கத்தின் அண்டை மாநிலங்களான அசாம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களிலும் வேரூன்ற திரிணாமூல் காங்கிரஸ் முயற்சி செய்து வரும் நிலையில், அந்தக் கட்சிக்கு அந்நியமான உத்தரப் பிரதேசம் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் மம்தா பானர்ஜி களம் காண விழைவது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெவே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் கட்சியின் வலிமையைக் குறித்து தலைமை குறித்தும் வெளிப்படையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் கூட்டணி அரசில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன என்பதும் காங்கிரஸ் கட்சிக்கு 3-வது இடமே அளிக்கப்பட்டுள்ளது என்பதும் அப்பட்டம்.

திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து, பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. பாரதிய ஜனதாவுக்கு எதிராக இருந்தாலும் ஆம் ஆத்மி கட்சி போன்ற பல கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் செயல்பட ஆர்வத்துடன் இல்லை.

காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தி 'நான்தான் கட்சியின் முழுநேர தலைவர்' என சமீபத்தில் வலியுறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்தக் கட்சியின் தற்போதைய நிலையை பிரதிபலிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். தேர்தல்களில் ஏற்பட்ட தொடர் தோல்விகள் காரணமாக காங்கிரஸ் பின்னடைவு தொடரலாம் என எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. மத்தியப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பாரதிய ஜனதா அதிகாரத்தை கைப்பற்றி உள்ளதும் இத்தகைய கருத்துக்கு வலு சேர்த்துள்ளது.

அதேநேரத்தில் மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், நவீன் பட்நாயக் மற்றும் அரவிந்த் கேஜ்ரிவால் போன்ற தலைவர்கள் பாரதிய ஜனதாவை தங்களால் தோற்கடிக்க முடியும் என நிரூபித்துள்ளனர். எனவேதான் காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பாஜகவை எதிர்ப்பது அத்தியாவசியம் என கருதப்பட்டாலும், தலைமையில் மாற்றம் தேவை என்கிற கருத்தும் வலுத்து வருகிறது.

- கணபதி சுப்ரமணியம்