தமிழக சட்டப்பேரவையில் தலைவர்களின் சிலைகள் தொடர்பான அறிவிப்புகள் நாளுக்கு நாள் வெளியாகிக் கொண்டிருப்பதை காணமுடிகிறது. இந்த சிலைகள் தேவையானது தானா? அல்லது அவசியமற்றதா என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
உலகின் அனைத்து பகுதிகளிலும் புகழ் பெற்ற ஒருவர் மறைந்த பிறகு அவரின் நினைவாக சிலை அமைப்பது என்பது பொதுவான ஒன்றாகவே இருக்கிறது. எனினும் அதற்கான நிதி ஒதுக்கீடுகளும், நில ஒதுக்கீடுகளும் சில நேரங்களில் விவாதத்திற்கு வழிவகுக்கின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் சிலை திறப்பும் அது தொடர்பான அறிவிப்புகளும் நீள்கின்றன. தமிழக சட்டப்பேரவையில் செய்தி மற்றும் விளம்பரத் துறைக்கான மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய அமைச்சர் சாமிநாதன், புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சிலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரவீந்திரநாத் தாகூர், முத்துலட்சுமி ரெட்டி, மருது சகோதரர்களுக்கும் சிலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 1கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காமராஜர் மண்டபம், காந்தி மண்டபம், ராஜாஜி நினைவு மண்டபத்தை மேம்படுத்த 3.30 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் தியாகி ஈஸ்வரனுக்கு மணிமண்டபம் சிலை அமைக்க 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் விழுப்புரத்தில், கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் சிலை அமைக்க 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அண்ணா சாலையில் சிலை அமைக்கப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 2020ஆம் ஆண்டு வல்லநாட்டில் சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவனின் சிலை அமைக்க 36 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தியாவின் பிற மாநிலங்களிலும் நிதி ஒதுக்கப்பட்டது பேசு பொருளானது. அரபிக்கடலில் வீரசிவாஜியின் சிலை அமைக்க 1900 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது சர்தார் வல்லாபாய் பட்டேலின் சிலை அமைக்க 3,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தலைவர்களின் பெயர்களால் அழைக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் போக்குவரத்துக் கழகங்களின் பெயர்கள் நீக்கம்:
தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சி அவர்கள் விரும்பும் தலைவர்களின் பெயர்களை மாவட்டங்கள், போக்குவரத்து கழகங்கள், பல்கலைக் கழகங்கள், மருத்துவமனைகளுக்கு சூட்டுவதும், பின்னர் ஆட்சி மாறும் போது அவை மாற்றப்படுவதும் வழக்கம். எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் பெரியார் மாவட்டமாக இருந்தது ஈரோடாகவும், அண்ணா மாவட்டம் திண்டுக்கல்லாகவும் பெயர் மாறியது. வ.உ.சிதம்பரனார் மாவட்டமாக இருந்தது தூத்துக்குடி மாவட்டமாகவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதேபோல, தலைவர்கள் பெயர்களால் அழைக்கப்பட்ட மாவட்டங்கள், பின் அதன் தலைநகரின் பெயர்களால் அழைக்கப்பட்டன.
இதே நிலைதான் போக்குவரத்துக் கழகங்களுக்கும். பெரியார் போக்குவரத்துக் கழகம் தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் பிரிவு ஒன்றாகவும், எம்.ஜி.ஆர் போக்குவரத்துக் கழகம் தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் பிரிவு 3ஆகவும், தீரன் சின்னமலை போக்குவரத்து கழகம் தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் பிரிவு 2ஆகவும், அண்ணா போக்குவரத்துக் கழகம் தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் சேலம் பிரிவு 1ஆகவும் மாற்றப்பட்டன. இவ்வாறு பெயர் மாறிய போக்குவரத்துக் கழகங்களின் பட்டியல் நீள்கிறது.
இது தொடர்பாக அரசியல் விமர்சகர் சூர்யா சேவியர் பேசுகையில், ''மனித சமூகம் இரண்டு வகையாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஒன்று இயற்கை சார்ந்த கட்டமைப்பு. மற்றொன்று சமயம், சடங்குகள், புராணங்கள் சார்ந்த கட்டமைப்பு. தமிழ் சமூகம் இயற்கை சார்ந்து கட்டமைக்கப்பட்டது. சிலை என்பதை இரண்டு வகையாக பார்க்கலாம். ஒன்று வழிபாடு சார்ந்தது மற்றொன்று வரலாறு சார்ந்தது. சிலையின் மூலம் வரலாறு என்பது மறு வாசிப்புக்கு உட்படுத்தப்படுகிறது. வாழ்க்கைத் தேவைக்கான செலவு முக்கியமா? சிலை வைப்பதற்கான செலவு முக்கியமான என கேள்வி எழுகிறது. அடையாள முன்னிறுத்தல் அரசியலிலிருந்து தான் எழுகிறது. சிலைகளே வைக்க கூடாது என்பது தவறு. சிலைகளாகவே இருப்பதும் தவறு. அடையாளப்படுத்தலாம்; ஆனால் அது ஆடம்பரம் சார்ந்ததாக இருக்க கூடாது.
தன்னுடைய வரலாறு தெரியாமல் இருக்கக்கூடாது. அந்த வரலாறு மீட்டுருவாக்கம் செய்யக்கூடியதற்கான முதல் அடையாளம் தான் சிலை. தமிழ் சமூகத்திற்கான வரலாறு பத்தாயிரம் ஆண்டுகளுக்கானது. அந்த வரலாறு இந்த மண்ணில் நிலைபெற்று நிற்பதற்கு சிலைகள் அவசியமாக இருக்கிறது. மக்கள் பசியாக இருக்கும்போது சிலை வைப்பது தவறு. 3ஆயிரம் ரூபாய்க்கு சிலை தேவையா என்றால் அது தேவையற்றது. அதேசமயம் வல்லபாய் படேலுக்கு சிலை அவசியம். அவர் இந்தியாவை ஒருங்கிணைத்தவர். ஆனால் 3ஆயிரம் கோடிக்கு சிலை என்பது அதில் ஒரு அரசியல் இருப்பதாக உணர முடிகிறது. மாறாக, 1கோடி 2கோடிகளில் அரசின் செலவினங்களைப்பொறுத்து சிலைகள் அமைக்கப்பட வேண்டும்.
அதேசமயம், வரலாற்றுக்கு சம்பந்தமே இல்லாத சிலைகளை நிறுவுவதே தேவையற்ற ஏற்பாடு. தமிழ்நாட்டில் திப்பு சுல்தானுக்கு சிலைகள் அமைக்க வேண்டும். வேலூர் புரட்சியில் ஈடுபட்ட அவரது பிள்ளைகளுக்கு சிலை வைக்க வேண்டும். கற்பிதங்கள் நிறைய உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. அந்த கற்பிதங்களை உடைக்க சிலைகள் தேவை. சிலைகள் ஒரு அடையாளங்கள். அவை நிறுவப்படும்போது தான் சமூகம் தன்னை மறுவாசிப்பு செய்து கொள்ளும்''என்றார்.