சிறப்புக் களம்

“நோயும், வறுமையும் தின்ற இறுதி நாட்கள்” – சுதேசி கனவு கண்ட வ.உ.சியின் துயர பக்கங்கள்!

Veeramani

"..சிதம்பரம் பிள்ளையின் பிரசங்கத்தை கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும், புரட்சி ஓங்கும், அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்" என்று 1908ஆம் ஆண்டு சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்த தீர்ப்பில் நீதிபதி ஃபின்ஹே எழுதினார். சுயசார்பு பொருளாதாரமே சுயசார்புள்ள நாட்டை உருவாக்கும் என்ற சிந்தனையை முதன்முதலில் விதைத்த வ.உ.சியின் 85 வது நினைவுநாள் இன்று…

வ.உ.சியின் வாழ்வினை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று இந்த சிறை தண்டனைக்கு முந்தையது, மற்றொன்று பிந்தையது. சிறைதண்டனைக்கு முன்பான சிதம்பரம் பிள்ளையின் வாழ்க்கை செல்வ செழிப்பும், போராட்ட நெருப்பும், சுதேசி சீற்றமும், ஆங்கிலேயரை அலறவைத்த ஆளுமையும் நிரம்பியது. ஆனால் சிறையிலிருந்து வெளியில் வந்த இவரின் சுதந்திர வேட்கையும், போராட்ட குணமும் குறையாத போதும் உடல் நலிவும், வறுமையும் இவரை சின்னாபின்னமாக்கியது. சிறையில் பீடித்த நோய்மை, வறுமையுடனே இவரின் வாழ்வும் முடிந்தும் போனது.

பிறப்பும் -  போராட்டமும்:

1872 ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் உலகநாத பிள்ளை, பரமாயி அம்மாளுக்கு மூத்த மகனாக பிறந்தவர் வ.உ.சி. சிறுவயது முதலே செல்வசெழிப்புடன் வளர்ந்த இவர், இளம் வயதிலேயே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நற்புலமை பெற்று தந்தையின் வழியில் புகழ்பெற்ற வழக்கறிஞராகவும் திகழ்ந்தார்.

ஒரு நாடோ, ஒரு இனமோ அடிமையாக காரணமே வணிகம்தான், இதனை உணர்ந்த சிதம்பரனார், தனது சொத்துக்கள் முழுமையும் விற்று, இந்தியா முழுவதும் 40 ஆயிரம் பங்குதாரர்களை உருவாக்கி சுமார் 10 இலட்சம் மதிப்பில் “சுதேசி ஸ்டீம் நேவிகேஷன்” என்னும் நிறுவனத்தை உருவாக்கினார். சிதம்பரனாரின் சுதேசிக்கப்பலை அப்போது நாடே கொண்டாடியது, அனைத்து இந்திய பத்திரிகைகளும் கொண்டாடி தீர்த்தது, இந்திய விடுதலைப்போராட்ட வரலாற்றில் மாபெரும் திருப்புமுனையாக இந்த சுதேசி கப்பல் விளங்கியது.

அதேபோல 1908 ஆம் ஆண்டு தூத்துக்குடி கோரல் நூற்பாலை ஊழியர்கள் தங்களின் உரிமையை பெறுவதற்காக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட காரணமாகவும் வ.உ.சி இருந்தார். தனது சொந்த பணத்தை கொண்டு உதவி செய்து இப்போராட்டத்தை வீரியமடைய செய்ததால் இறுதியாக ஆங்கிலேய அரசு தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்றது. இந்திய தொழிற்சங்க வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக அமைந்த இப்போராட்டத்திற்கு பிறகு பல்வேறு நிறுவனங்களும் தொழிலாளர்களுக்கான உரிமைகளை வழங்கியது. சுதேசி கப்பல், தொழிற்சங்க போராட்ட வெற்றி காரணமாக ஆங்கிலய அரசு கோபமடைந்து 12.03.1908 அன்று சிதம்பரனார் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

வ.உ.சி. கைது செய்யப்பட்டதை அறிந்தவுடன் மக்கள் கொந்தளித்தனர். நகரில் பந்த் அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டங்களின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியானார்கள். இதுவே இந்தியாவில் முதல் அரசியல் வேலை நிறுத்தம். இந்த வழக்கில் சிதம்பரனாருக்கு முதலில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது, நாட்டையே கொந்தளிப்பில் ஆழ்த்திய இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு வலுத்தது. இந்த தீர்ப்பினை கேட்ட சிதம்பரனாரின் சகோதரர் மீனாட்சி பிள்ளை மனநலம் பாதிக்கப்பட்டார், இறக்கும்வரை அவரின் உடல்நிலை குணமாகவே இல்லை.

சிறைக்கொட்டடி சிதைத்த உடல்நிலை:

இளம்வயது முதலே செல்வ செழிப்புடன் வாழ்ந்த சிதம்பரனார் கோயமுத்தூர் சிறைக்கொட்டடியில் பெரும் துன்பங்களை சந்தித்தார். மற்ற சிறைக்கைதிகளை போல இவரை நடத்தாமல் பெரிய கொடுமைகளை செய்தது ஆங்கிலேய அரசு. கைகளின் தசைகள் கிழியும் வரை கல் உடைத்தார், உச்சி வெயிலில் வெறும் காலுடன் மாடுகள் இழுக்கும் செக்கினை இழுக்க வைக்கப்பட்டார். உடலை உருக்கும் சணல் நூற்பு, தோட்ட வேலை உள்ளிட்ட கடுமையான வேலைகளை செய்யவைக்கப்பட்டார், அவருக்கு மிக மோசமான உணவினையே வழங்கினார்கள், இதனால் சிதம்பரனாரின் உடல்நிலை மிகவும் நலிவுற்றது.

உடல் நலிவுடன் சேர்த்து மனம் நலிவுறும் வண்ணம் மற்றொரு அதிர்ச்சியையும் வ.உ.சி சந்தித்தார். அவர் சிறையில் இருந்த போது சுதேசி கப்பல் நிர்வாகிகள் பயந்து போட்டியை சமாளிக்க முடியவில்லை என்று இரண்டு கப்பலையும் வெள்ளையருக்கே விற்றுவிட்டனர், இதனை அறிந்து உள்ளம் குமுறினார் சிதம்பரனார். "மானம் பெரிதென கருதாமல் வெள்ளையனிடமே விற்றதற்கு பதிலாக அந்தக் கப்பலை உடைத்து நொறுக்கி வங்கக் கடலில் வீசியிருக்கலாம் " என கொந்தளித்தார். இவரின் நலிந்த உடல்நிலையை கண்டு துடித்துபோன பாரதியார், “ மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ? என்று உள்ளம் வெதும்பினார்.

மேல் முறையீட்டினால் தண்டனை குறைக்கப்பட்டு 1912 ஆம் ஆண்டு விடுதலை அடைந்து வெளியில் வந்தபோது, தன்னை வரவேற்க மக்கள் திரண்டிருப்பார்கள் என எதிர்பார்த்தார் சிதம்பரனார். ஆனால் சிறைக்கு வெளியே அவரின் நண்பர் சுப்ரமணிய சிவாவும், சிலருமே நின்றனர். தன் சொத்தையெல்லாம் இழந்து, சிறையில் உடல்நலத்தையும் நாட்டுக்காக இழந்த வ.உ.சிக்கு இந்த ஏமாற்றம் பெரும் இடியாக இறங்கியது.

தீராத வறுமை – கண்ணீர் சூழ்ந்த இறுதி நாட்கள்:

வழக்கின் காரணமாக இவரின் வழக்கறிஞர் உரிமமும் பறிக்கப்பட்டது, இதனால் அவரால் வழக்கறிஞர் தொழில் செய்ய இயலவில்லை. ஏற்கனவே சுதேசி கப்பல், தொழிற்சங்க பணிகளுக்காக சொத்துக்களையும், பொருளையும் இழந்துவிட்டதால் வறுமையின் பிடியில் சிக்கினார். பிறகு குடும்பத்துடன் சென்னைக்கு சென்று  வீதி வீதியாக மண்ணெண்ணெய் வியாபாரம் செய்து அதிலும் தோல்வியடைந்தார், அரிசி வியாபாரம் செய்தார் அதிலும் வறுமை ஒழிந்தபாடில்லை. உதவி செய்யவும், உறுதுணைக்கும் யாரும் இல்லாத போதிலும் சென்னை, தூத்துக்குடி, கோவை உள்ளிட்ட பல ஊர்களிலும் எண்ணற்ற தொழிற்சங்கங்களை உருவாக்கினார் சிதம்பரனார்.

பின்னர் அவருக்கு ஈ.எச்.வாலஸ் என்ற ஆங்கிலேய அதிகாரி வழக்கறிஞர் உரிமத்தை திரும்ப தந்தார், இதன் நன்றி கடனாக தனது கடைசி மகனுக்கு ‘வாலேஸ்வரன்’ என்று பெயர்சூட்டினார். வழக்கறிஞர் பணி செய்ய தொடங்கியபோதுகூட அதில் பழையபடி சிதம்பரனாரால் சோபிக்க முடியவில்லை.

விடுதலை போராட்ட வீரராக மட்டுமின்றி சிறந்த தமிழ் நூலாசிரியராகவும் இவர் இருந்தார். மெய்யறம், மெய்யறிவு, பாடல் திரட்டு, என் சுயசரிதை, இன்னிலை உரை, சிவஞானபோதம் உரை, திருக்குறள் உரை ஆகிய நூல்களை இவர் எழுதியுள்ளார். பல ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிப்பெயர்த்திருக்கிறார். விவேகபானு, இந்து நேசன், தி நேஷனல் போன்ற பத்திரிகைகளிலும் ஆசிரியராக பணியாற்றினார். 1912இல் சிறையிலிருந்து வெளிவந்த பிறகு உடல் நலிவு, பொருளாதார நலிவில் சிக்கிய சிதம்பரனாருக்கு திலகர் மாதம் 50 ரூபாய் நிதி அனுப்பினார் என்பது கண்ணீரை வரவழைக்கும் செய்தி.

சுதந்திரம் பெற்ற இந்திய தேசத்தை தரிசித்திவிடுவோம் என்று நம்பியே அவரின் இறுதி காலங்கள் கழிந்தன. படுத்த படுக்கையான சூழலில் தன்னுடைய உயிர் காங்கிரஸ் அலுவலகத்தில்தான் போக வேண்டும் என்று காங்கிரஸ் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லச் சொன்னார். சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் இல்லத்துக்கு அழைத்து வரப்பட்ட வ.உ.சி, காங்கிரஸ் தொண்டர் சிவகுருநாதனை, ‘என்று தணியும் இந்த சுதந்திரத் தாகம்’ என்ற பாடலைப் பாடச் சொல்லிக் கேட்டவாறே தன்னுடைய இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டார். தனது சொத்துக்களை விற்று சுயசார்புடன் இந்தியாவுக்கென முதல் சுதேசிக்கப்பலை கட்டிய வ.உ.சி, கடைசிகாலத்தில் வறுமையுடன் உழன்று 1936 நவம்பர் 18 ஆம் தேதி உயிரிழந்தார்.