முத்தடுப்பூசியை எடுக்கும் குழந்தைகள் எண்ணிக்கையும்; போலியோ - தட்டம்மை தடுப்பூசி எடுக்கும் குழந்தைகள் எண்ணிக்கையும் குறைவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுபற்றிய உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகள்; இப்படி குழந்தைகள் தங்களின் அடிப்படை தடுப்பூசியை எடுக்கத் தவறுவதால் என்னென்ன பிரச்னைகள் இந்திய அளவில் அடுத்தடுத்த மாதம் / வருடங்களில் உருவாகலாம்; இதை தவிர்ப்பது ஏன் முக்கியம், அதை எப்படி சாத்தியப்படுத்துவது என்பது பற்றி நிபுணர் விளக்கத்துடன் இங்கு காணலாம்.
பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், பிறந்தவுடன் அடுத்த சில மாதங்களில் டிப்தீரியா, டெட்டனஸ், கக்குவான் இருமல் போன்ற நோய்களுக்கு எதிரான முத்தடுப்பு (டி.டி.பி.) ஊசியின் முதல் டோஸை போட்டுக்கொள்ள வேண்டியிருக்கும். பின் குறிப்பிட்ட கால இடைவெளியில் அடுத்தடுத்து தடுப்பூசி டோஸ்கள், உடன் மருத்துவப் பரிந்துரையுடன் தேவைப்பட்டால் பூஸ்டர் டோஸ் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். இவற்றை முறையாக எடுத்துக்கொள்ளாதபட்சத்தில் எதிர்க்காலத்தில் இந்த நோய் அவர்களை தாக்கலாம். அதனால் அவர்களுக்கு தீவிரமான பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பும் உயிரிழப்பு அல்லது வாழ்நாளுக்கான உடல் சார்ந்த பாதிப்புகள் (போலியோ தாக்குதல் போல) ஏற்படும் வாய்ப்பு உள்ளதென்பதால், இந்த தடுப்பூசியை எந்தச் சூழலிலும் தவிர்க்ககூடாததென மருத்துவர்கள் அறிவுறுத்துவதுண்டு.
கடந்த ஆண்டுகளில், மக்கள் மத்தியில் இந்தத் தடுப்பூசிக்கான விழிப்புணர்வு அதிகமாகவே இருந்துள்ளது. அதற்கு அரசின் பங்களிப்பும் மிக மிக முக்கியமானது. மக்கள் மற்றும் அரசின் ஒன்றிணைந்த பங்களிப்பால்தான் இந்தியாவில் போலியோ, தட்டம்மை, கக்குவான் இருமல் போன்ற பாதிப்பெல்லாம் இப்போது வெகுவாக குறைந்துள்ளது.
ஆனால்... கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா பேரிடர் உலகம் முழுவதும் நிலவிவருவதால் அடிப்படை தேவையான பல மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தடைப்பட்டு வருகிறது. அதில் ஒன்றாக, கொரோனா காரணமாக 2020 – ல் இந்தியாவில் கிட்டத்தட்ட 30 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களின் முத்தடுப்பு ஊசியின் முதல் டோஸை எடுத்துக்கொள்ள தவறியுள்ளனர். உலக சுகாதார நிறுவனமும், யுனிசெஃப்-ம் இணைந்து நடத்திய ஆய்வில் இவையாவும் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலுக்கு முந்தைய ஆண்டான 2019ல் கிட்டத்தட்ட இந்தியாவில் 14 லட்சம் குழந்தைகள் இதை எடுக்கத்தவறியதாக கூறப்பட்டது. அந்தவகையில் 2020ல், கூடுதலாக 16 லட்ச குழந்தைகள் தங்களின் அத்தியாவசிய தேவையான முத்தடுப்பூசி மற்றும் போலியோ - தட்டம்மை போன்ற தடுப்பூசிகளை எடுக்கத் தவறியுள்ளனர் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா ஏற்படுத்திய இடையூறுகள் காரணமாகவும், அடுத்தடுத்த கொரோனா திரிபுகள் – கொரோனா மரணங்களின் காரணமாகவும் இந்தளவுக்கான தடுப்பூசி பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் அடிப்படை தடுப்பூசிக்கான டோஸ்களை 2020-ல் எடுக்கத்தவறிய குழந்தைகளின் எண்ணிக்கை 230 லட்சமாக உள்ளது. 2019ம் ஆண்டுடன் இதை ஒப்பிடுகையில், கூடுதலாக 37 லட்ச குழந்தைகள் உலகளவில் தடுப்பூசியை எடுக்காமல் இருந்துள்ளனர். அதிகபட்சமாக 170 லட்ச குழந்தைகள் உலகளவில் தங்களின் ஒரு டோஸ் தடுப்பூசியைக்கூட எடுக்காமல் இருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. தடுப்பூசியை எடுத்துக்கொள்ளாத குழந்தைகளில் மிக அதிகமானோர் தெற்கு ஆசியாவை (இந்தியாவை சுற்றியிருக்கும் பகுதிகள்) சார்ந்திருப்பதாக ஆய்வில் சொல்லப்பட்டுள்ளது.
லேன்செட்டின் மற்றொரு ஆய்வில், இந்தியாவை பொறுத்தவரை தட்டம்மைக்கான தடுப்பூசியின் முதல் டோஸ் எடுப்பவர்கள் எண்ணிக்கை 86 சதவிகிதத்துக்கும் குறைவாகவும்; முத்தடுப்பு தடுப்பூசிக்கான மூன்றாவது டோஸ் எடுப்போர் எண்ணிக்கை 75% க்கும் குறைவாகவும் பதிவாகியிருப்பது தெரியவந்துள்ளது. மொத்தமாக முத்தடுப்பு தடுப்பூசி எடுத்துக்கொள்வோர் எண்ணிக்கையானது 91% என்பதிலிருந்து 85% என குறைந்துள்ளதாக ஆய்வு சொல்கிறது.
தட்டம்மை, டிப்தீரியா, டெட்டனஸ் மற்றும் கக்குவான் இருமல் – இந்த நான்கு நோய்களுக்கும் தடுப்பூசி அளிக்கப்பட்டதன் மூலம் உலகளவில் 2019ம் ஆண்டில் மட்டும் 2,07,000 குழந்தைகளின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது என்பது தகவல். இந்த ஒரு தகவலே, இந்தத் தடுப்பூசிகளின் அவசியத்தை நமக்கு சொல்கிறது.
தடுப்பூசியின் முக்கியத்துவத்தை உணர்ந்தும், இன்று பல குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருக்கின்றனர். இதன் பின்னணி என்ன, இதை எப்படி சரிசெய்வது என்பது பற்றி சென்னையை சேர்ந்த குழந்தைகளுக்கான தொற்றுநோயியல் மருத்துவர் ராஜ்குமாரிடம் பேசினோம். அவர் பேசும்போது, “குழந்தைகள் தவறியிருக்கும் ஒவ்வொரு தடுப்பூசியும், அது பரவிய காலத்தில் கொரோனாவை விடவும் மோசமான உலகளாவிய பெருந்தொற்றாக இருந்தவை. இந்தியாவில் தட்டம்மை – போலியோ போன்றவற்றின் பரவல் குறித்தும் அது நம் மக்களிடம் ஏற்படுத்திய பாதிப்பு குறித்தும் கண்கூடாக நாம் நிறைய அறிந்திருக்கிறோம். ஏராளமான மாற்றுத்திறனாளிகள் இதனால் உருவாகினர்.
ஒவ்வொரு நோயையும் இந்தியாவிலிருந்து ஒழித்ததற்கு தடுப்பூசிகளே அடிப்படை. அந்தவகையில் அனைத்து குழந்தைக்கும் தடுப்பூசி போட்டுவிட்டு, குழு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி அதன்மூலம் மட்டுமே நோயை இந்தியா அதிலிருந்து மீண்டுள்ளது. இப்போது தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் எண்ணிக்கை குறைந்தால், குழு நோய் எதிர்ப்புத் திறன் குறையத்தொடங்கும். அதனால் மீண்டும் நோய்ப்பாதிப்பு அதிகரிக்கக்கூடும். அதுவும் இந்தக் கொரோனா பரவலின்போது, போலியோ போன்ற நோய்களெல்லாம் அதிகரித்தால் நமக்கு அது கூடுதல் சிக்கலாக அமையும்.
அப்படி நடந்தால், கொரோனா மட்டுமன்றி உடல் வேறு சில உலகளாவிய பெருந்தொற்றையும் சமாளிக்க வேண்டிய நிலை அரசுக்கு உருவாகும். குறிப்பாக இப்போது கொரோனா பரவல் அதிகமிருக்கும் நாடுகள் மற்றும் பகுதிகளில், இந்த கூடுதல் பெருந்தொற்று நோய்க்கான வாய்ப்பு மிக அதிகமாக பரவ வாய்ப்புள்ளது. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல.
இந்த விஷயத்தில் பெற்றோரும் அரசும் மிகுந்த பொறுப்புடன் இருக்க வேண்டியது அவசியம். தடுப்பூசியை தவறவிட்டவர்கள் எண்ணிக்கையை அறிந்து, அவர்கள் பயன்பெறும் வகையில் அரசு தடுப்பூசி மையங்களை அமைத்து, அனைவரையும் நோய்க்கு எதிராக மாற்றுவது அவசியம்.
கொரோனா மூன்றாவது அலையில் குழந்தைகள்தான் பாதிக்கப்படுவர் என்ற கருத்துக்கணிப்புகளை மனதில் வைத்து, அரசு இதை துரிதமாக செயல்படுத்த வேண்டியது தற்போது அவசியமாகிறது.
முன்பெல்லாம் பள்ளிகள் வழியாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாய்ப்பிருந்தது. ஆனால் கடந்த ஓராண்டாக அதற்கும் வழியில்லை என்பதால், ஆரம்ப சுகாதார நிலையங்கள் வழியாகவும் – வார்டு மெம்பர்கள் வழியாகவும் அடிமட்டம் வரை அரசு இதை ஆலோசிக்க வேண்டியுள்ளது. ஒருவேளை இதை அரசு தவறும்பட்சத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்போது கொரோனா மட்டுமன்றி பிற பெருந்தொற்று நோய்ப்பரவலின் தாக்கமும் அதிகமாகும். அது நிலைமையை இன்னும் மோசமாக்கும். ஆகவே துரிதமான நடவடிக்கை அவசியம்” என்றார்.
கொரோனா மூன்றாவது அலை முன்னெச்சரிக்கை விஷயத்தில், குழந்தைகள் நோய்த்தடுப்பு விவகாரத்தில் அரசு கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கூறியிருக்கிறார். அதனடிப்படையில் அரசு இவ்விவகாரத்தையும் கையில் எடுத்தால், மகிழ்ச்சியே!