சிறப்புக் களம்

லக்கிம்பூர் வன்முறை: காவல் துறை மீது நிருபர் ராமனின் குடும்பம் சந்தேகிப்பதன் பின்புலம்

PT WEB

உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், இறந்த பத்திரிகையாளர் ராமன் காஷ்யப் மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது. விவசாயிகள் தாக்கியதில் அவர் இறந்ததாக செய்திகள் பரவ, அதனை ராமன் காஷ்யபின் குடும்பம் முற்றிலும் மறுத்துள்ளது. அத்துடன், தங்களுக்கு சம்பவம் நடந்து 12 மணி நேரம் கழித்துதான் தகவலே தெரிவிக்கப்பட்டதாகவும் உருக்கமாக கூறியுள்ளனர்.

கடந்த ஞாயிறு அன்று உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்போது காரில் மோதியது உள்ளிட்ட வன்முறைச் சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டனர். இதில் 4 விவசாயிகளும், ஒரு பத்திரிகையாளரும் அடங்குவர். இறந்த பத்திரிகையாளரின் பெயர் ராமன் காஷ்யப். இவர் மரணம் தொடர்பாக இப்போது சர்ச்சை வலுத்துள்ளது.

ராமன் காஷ்யப் மரணமடைந்த சில மணி நேரங்களுக்கு சில வட இந்திய செய்தி ஊடகங்கள் 'ராமன் விவசாயிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்' என்று செய்திகள் வெளியிட்டன. ஆனால், இந்தச் செய்திகளை ராமன் காய்ஷப் குடும்பம் மறுத்துள்ளது. ராமன் காஷ்யப்பின் தந்தை மற்றும் சகோதர் ஆகியோர் அளித்துள்ள பேட்டிகளில், "ராமன் லத்திகள் போன்ற குச்சிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சொன்னதாக சில ஊடகங்கள் தொடர்ந்து எங்களிடம் சொல்லி வருகின்றனர். ஆனால் இறுதிச்சடங்குகள் செய்யும்போது நாங்கள் ராமன் உடலை பார்த்தபோது குச்சிகள் தாக்கப்பட்டதற்கு எந்த அடையாளுமும் இல்லை. மாறாக, வண்டியின் தடம்தான் அவரின் உடலில் இருந்தது.

அவரது உடலில் கார் சக்கர அடையாளங்கள் இருந்தன. ராமன் எப்படி இறந்தார் என்பதில் எங்களுக்கு சந்தேகம் இல்லை. அமைச்சர் மகனின் காரால்தான் ராமன் கொல்லப்பட்டிருக்கிறார். ஆரம்பத்தில் இருந்து நாங்கள் இதைத்தான் கூறிவருகிறோம். சில சேனல்கள் எங்கள் கூற்றை திருத்தி வெளியிட்டு வருகின்றன. பிரேதப் பரிசோதனை அறிக்கையே இன்னும் தரவில்லை. அதற்குள் அவர் தடிகளால் அடிக்கப்பட்டு இறந்தார் என்கிறார்கள். ஊடகங்கள் ஏன் இதில் அரசியல் செய்கிறார்கள் எனப் புரியவில்லை" என்று கூறியுள்ளனர்.

அவர்கள் கூறியவாறே ராமன் மரணம் குறித்த பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்னும் மருத்துவர்கள் தரவில்லை. அதற்குள் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியானதாக இந்தி மொழியின் சில முன்னணி செய்தி ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.

இதனிடையே, ராமன் காஷ்யப் இறப்பு குறித்து அவரது தந்தை ராம் துலாரே காஷ்யப் காவல் நிலையத்தில் எழுத்துபூர்வ புகாரை அளித்தார். அதில், 'கார் ஏற்றி கொல்லப்பட்டதுடன், அதற்கு முன்னதாக விவசாயிகள் மீது கார் மோத முயன்றபோது ராம் சுடப்பட்டார். காரை மறித்து நின்றதால் அவர் சுடப்பட்டார். இதற்கு நேரில் கண்ட சாட்சிகள் உள்ளன. அதேபோல், வன்முறை தொடர்பான வீடியோ காட்சிகளிலும் துப்பாக்கிச் சுட்ட சத்தங்கள் பதிவாகியுள்ளன" என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் புகாரை போலீஸார் வாங்க மறுத்துள்ளனர். சர்ச்சைகளுக்கு பிறகுப் புகாரை போலீஸார் பெற்றுக்கொண்டாலும் இதுவரை எஃப்ஐஆர் பதிவு செய்யாமல் இருந்து வருகின்றனர்.

இறந்த 12 மணி நேரத்துக்கு பிறகே தகவல்...

விவசாயத்தை பின்னணியாக கொண்டது ராமன் காஷ்யப் குடும்பம். குடும்பத்தில் மூத்த மகனான ராமன் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் ஐந்து மாதங்களுக்கு முன்புதான் நிருபராக பணியில் இணைந்துள்ளார். அதற்கு முன் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய ராமன் காஷ்யப் பத்திரிகைத் துறை மீதான ஈர்ப்பின் காரணமாக இந்தப் பணியில் இணைந்துள்ளார்.

இந்த நிலையில்தான் அக்டோபர் 3-ம் தேதி, லக்கிம்பூர் கேரியில் மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவின் நிகழ்ச்சியில் செய்தி திரட்டும் பொறுப்பு, அதற்கு முந்தைய நாள் ராமனுக்கு அலுவலகத்தில் இருந்து கொடுக்கப்படுகிறது. இதற்காக அன்றைய இரவே லக்கிம்பூர் சென்றுள்ளார் ராமன். மறுநாள் நாள் மாலை 4 மணி அளவில் அவரின் தந்தை துலாரே காஷ்யப்புக்கு போன் செய்த அவரின் இளைய மகன், லக்கிம்பூர் சென்ற ராமன் போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கும் தகவலை சொல்கிறார். சில மணித்துளிகளில் லக்கிம்பூரில் வன்முறை ஏற்பட்டதையும், அதில் 4 விவசாயிகள் உயிரிழந்தது பற்றியும் தகவலும் தெரியவர, மொத்தக் குடும்பமும் பதற்றம் அடைந்தது. ராமனுக்கு என்ன ஆனது என்பது தெரியாமல் அன்று முழுவதும் குடும்பம் தவித்துகொண்டிருக்க, 12 மணி நேரம் கழித்து, அதிகாலை 3 மணியளவில் போலீஸிடம் இருந்து ராமன் இறந்துவிட்டதாக செய்தி கிடைத்துள்ளது. அதுவும், அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் இருக்கிறது என்றே அழைத்துள்ளனர்.

பின்பு காலை 6:30 மணியளவில் ராமன் உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட அங்கு சென்று மகனின் உடலை அடையாளம் காட்டியிருக்கிறார் துலாரே காஷ்யப். ``மதியம் 3 மணியளவில் நடந்த எனது மகனின் இறப்பு பற்றி அதிகாலை 3 மணிக்கு தான் எங்களுக்கு தகவல் தெரிவித்தார்கள். நாங்கள் பிணவறையை அடைந்தபோது, மூன்று உடல்களின் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அங்கே உரிமை கோரப்படாத ஒரு சடலம் கிடப்பதைக் கண்டோம். சாய்ந்து கிடந்த அந்த உடலை திருப்பி பார்த்தபோது நாங்கள் கதறி அழுதோம். அது எங்கள் மகன்தான்" என்று கலங்கியபடி ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார் பத்திரிகையாளர் ராமனின் தந்தை துலாரே காஷ்யப்.

- மலையரசு