சிறப்புக் களம்

ஆட்டோமொபைல் ஆலைகளை உடனே மூடுக: சென்னை அருகே தொழிலாளர்கள் போராட்டம்

நிவேதா ஜெகராஜா

ஆட்டோமொபைல், மற்றும் அது சார்ந்த தொழிற்சாலைகளையும் இயங்க அரசு அனுமதிக்க கூடாது என்றும், ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடி முழு ஊதியத்துடன் விடுப்பு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி சென்னை அருகே தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முழு ஊரடங்கு தளர்வில் தடையின்றி தொடர்ந்து இயங்கும் (Continuous Process Industrial) தொழிற்சாலைகள் பிரிவில் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் உள்ள அனைத்து ஆட்டோமொபைல் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் 100 சதவீத பணியாளர்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் குடும்ப உறுப்பினர்களும் நோய் தொற்றுக்கு ஆளாகின்றனர். பல தொழிலாளர்கள் இந்த நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளனர் .

ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளை தொழிலாளர்களின் பாதுகாப்பு கருதி உற்பத்தியை நிறுத்தி விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த கோரிக்கை மீது நிர்வாகம் எந்தவித பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவுக்குக் கொண்டு வர விருப்பம் இல்லாமல் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசுக்கு தொழிற்சங்கங்கள் வைத்த கோரிக்கைக்கும் இன்னும் முறையான பதில் கிடைக்கவில்லை.

இந்நிலையில், சென்னை அருகே காஞ்சிபுரம் மாவட்டத்தின் இருங்காட்டுக் கோட்டையில் உள்ள பிரபல பன்னாட்டு கார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில், தொழிற்சங்கத்தின் சார்பாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட ஆலையில் பணியாற்றுவோர் புகார் தெரிவித்துள்ளனர்.

நோய்தொற்றின் தீவிரம் குறையாத காரணத்தால் அரசு ஊரடங்கை ஒரு வார காலத்திற்கு நீடித்தும், தொழிற்சாலை தொடர்ந்து இயங்கி வருவதை கண்டித்து தொழிற்சாலைகளில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், ஆட்டோமொபைல், ஆட்டோமொபைல் சார்ந்த தொழிற்சாலைகளையும் இயங்க அரசு அனுமதிக்க கூடாது என்றும், ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடி முழு ஊதியத்துடன் விடுப்பு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தொழிலாளர்கள் சார்பாகவும் கோரிக்கை எழுப்பப்பட்டு தற்போது ஆலை நிர்வாகத்துடன் தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் தொழிலாளர்கள் வாயிலில் அமர்ந்து அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலை மிகப்பெரிய பாதிப்பையும், உயிரிழப்புகளையும் பெரிய அளவில் ஏற்படுத்தி வருகிறது. இதனையொட்டி தமிழக அரசு மே 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவித்தது. அதைத் தொடர்ந்து வருகிற 31-ஆம் தேதி வரை தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு தற்போது நடைமுறையில் அமல்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

- பிரசன்னா