சிறப்புக் களம்

இது டூர் அல்ல குவாரண்டைன்... இயற்கையோடு இணைந்து அசத்தும் நாகலாந்து ஐடியா!!

Veeramani

நாகாலாந்து மாநிலம் பெக் மாவட்டத்திலுள்ள சிசாமி கிராமத்தில் அழகிய மலைச்சூழல், மூங்கில் குடில்கள், மழைநீர் சேகரிப்பு, தேநீர் தயாரிப்பு அடுப்பு என்று முற்றிலும் உயிரோட்டமான தனிமைப்படுத்துதல் மையத்தை உருவாக்கியுள்ளார்கள்.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக வெளியூர்களில் இருந்து பெர்க் மாவட்டத்திற்கு வருபவர்களுக்கு 14 நாட்கள் அரசு தனிமைப்படுத்துதல் மற்றும் 14 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்துதல் செய்துகொள்ளவேண்டும் என்று அரசு கூறியுள்ளது.

இதனால் சிசாமி கிராமத்திலிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் கிராம தன்னார்வலர்கள் இணைந்து முற்றிலும் சூழலுடன் இணைந்த மூங்கில்களால் ஆன குடில்களை இரண்டே நாட்களில் உருவாக்கினார்கள். மேலும் மழைநீர் சேகரிப்பு, சூழலுடன் இணைந்த கழிவறை, குளியலறை மற்றும் உரக்குழிகளையும் உருவாக்கியுள்ளனர். 14 குடில்கள் கொண்ட இந்த மையத்துக்கு “ கோவிட்-19 கிரியேட்டிவிட்டி ஹப்” என்று பெயரிட்டுள்ளனர்.

 “வெளியூரிலிருந்து திரும்புபவர்கள் ஏற்கனவே பெரும் அலைச்சலுடன் வந்திருப்பார்கள், பலர் வேலையிழந்தும் கூட வருகிறார்கள். அதனால் அவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டவும், புத்துணர்ச்சி அளிக்கவுமே இந்த மையத்தை அமைக்க முடிவு செய்தோம். எங்களுக்கு கிராமத்தை சேர்ந்த 200 தன்னார்வலர்கள் உதவி செய்தனர். அதனால்தான் முழுக்கவும் இயற்கையான் பொருட்களை கொண்டே இம்மையத்தை உருவாக்கினோம். இம்மையத்தில் பின்னல், ஓவியங்கள், கைவினைப்பொருட்கள் செய்யவும் பயிற்சியளிக்கிறோம். முற்றிலும் இயற்கையான உணவுகளை மட்டுமே கொடுக்கிறோம். அதனால் இவர்களின் மனமும், உடலும் புத்துணர்வு பெறுகிறது ” என்கிறார் இம்மையத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான பிசிசி கல்லூரியின் துணை பேராசிரியர் வெட்செட் தோபி

இந்த குடில்களில் இருந்து இதுவரை 22 பேர் தனிமைப்படுத்துதல் காலத்தை முடித்து கிராமத்திற்கு திரும்பியுள்ளனர், இரண்டுபேர் மையத்தில் உள்ளனர். நாகலாந்தில் இதுவரை 1,693 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் அதில் ஒருவர்கூட சிசாமி கிராமத்தவர் இல்லை.