சிறப்புக் களம்

இனி மாற்றுத்திறனாளிகளும் சுற்றுலா தலங்களை கண்டு மகிழலாம்.. சாத்தியப்படுத்திய கேரளா..

JustinDurai

நீங்கள் சக்கர நாற்காலியில் வலம் வருபவராக இருந்தாலும், இப்போது வரலாற்று சிறப்புமிக்க கொச்சியின் கோட்டைகளையும், சீன மீன்பிடி வலைகளையும் பார்வையிடுவதோடு சங்குமுகம் கடற்கரையின் அலைகளையும் உணரலாம். மேலும், சைகை மொழி மூலம் கேரளாவின் புராணங்களையும் கதைகளையும் நீங்கள் கேட்கலாம். மட்டுமின்றி, யாருடைய உதவியுமின்றி பிரெய்லி மெனு மூலம் தலச்சேரி பிரியாணியை ஆர்டர் செய்யலாம். அனைவரையும் இரு கரங்களை கூப்பி அழைத்து தனது விருந்தோம்பலை காண்பிக்க தயாராகிறது கேரளா. 

மாற்றுத் திறனாளிகளுக்கும் சுற்றுலாவை சாத்தியப்படுத்தும் வகையில் பெரும் ஆவலோடு கேரள சுற்றுலா துறை எடுத்த, தடைகள் இல்லாத கேரளா’ (Barrier Free Kerala) என்ற முன்முயற்சி திட்டத்தின் முதல் கட்டம் மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. சாய்வுப் பாதைகள் மட்டுமின்றி சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல்கள் மற்றும் பிற வசதிகள் எளிதாக கிடைக்கும் வகையிலும், சுற்றுலா வாசிகளை சைகை மொழியில் வழிநடத்த நன்கு பயிற்சி பெற்ற பணியாளர்களையும் நியமித்துள்ளது கேரள அரசு. அதோடு ஆடியோ வழிகாட்டுதலும் ப்ரெய்லி மொழியில் தகவல்களும் மேலும் உதவிகரமாக உள்ளது. அதுவும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது கவனிப்பாளர்களுக்கு தனி வரவேற்பு கொடுக்கப்படுகிறது.

இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளுக்கும் வயதானவர்களுக்கும் தேவையான அடிப்படை கட்டுமானங்களையும் வசதிகளையும் சுற்றுலா மையங்களில் ஏற்படுத்தி தந்த முதல் மாநிலம் கேரளாவே. இதன்மூலம் மற்ற மாநிலங்களுக்கு உதாரணமாக திகழ்கிறது கேரளா.

தடைகள் இல்லாத கேரள சுற்றுலா திட்டத்தின் முதல் கட்டமாக மூன்று இடங்களை மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு உகந்த இடமாக மாற்றப்பட்டுள்ளது. 2021-க்குள் கேரளாவில் உள்ள அனைத்து சுற்றுலாப் பகுதிகளையும் தடைகள் இல்லாத கேரள சுற்றுலா திட்டத்தின் கீழ் கொண்டுவர திட்டமிட்டுள்ளது அம்மாநில அரசு. இந்த திட்டத்தின் மூலம், ஐ.நா. உலக சுற்றுலா அமைப்பு கூறிய ‘அனைவருக்கும் சுற்றுலா’ என்பதை இந்தியாவில் நடைமுறைப்படுத்திய முதல் மாநிலம் என்ற பெயரை பெற்றுள்ளது கேரளா. 

ஆலப்புழா கடற்கரை

இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளுக்கும், பார்வை குறைபாடு கொண்டவர்களுக்கும் நட்புறவான முதல் கடற்கரையாக ஆலப்புழா கருதப்படுகிறது. அழகிய இடமான இந்த கடற்கரையின் ஒரு பக்கத்தில் 50 மீட்டர் அகலத்திற்கு சாய்வுப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. தேவைப்படுபவர்களுக்கு வசதியாக பிரெய்லி பெயர் பலகைகளும் ஆடியோ வழிகாட்டல்களும் உள்ளது.

சுற்றுலாத் துறை, சுகாதாரத் துறை, தன்னார்வ அமைப்புகள் மற்றும் மாற்றுத்திறனாளி சங்கங்கள் சேர்ந்து செய்த முயற்சியில் தானியங்கி சக்கர நாற்காலிகள் முதல் பல வசதிகள் கடற்கரையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.  

கொச்சி கோட்டை

மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கப்பட்ட முதல் சுற்றுலா மையம் இதுவே. டச்சு-போர்த்துகீசிய கட்டிடங்களுக்கும், சீன மீன்பிடி வலைகளுக்கும், அழகான கஃபேகளுக்கும், முசிறிஸ் பியானெல் எனப்படும் சர்வதேச கலைத் திருவிழாவுக்கும்  புகழ்பெற்றது கொச்சி கோட்டை. வழுக்காத டைல்ஸ் பதிக்கப்பட்ட சாய்வு பாதைகள் கொண்டிருப்பதால் சாப்பிடும் இடங்களுக்கு எளிதாக செல்லவும், வெளியேறவும் மற்றும் கழிவறை வசதிகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்த இடமாக உள்ளது. இதனால் கொச்சி கோட்டைக்கு எளிதாக சுற்றுலா செல்ல்லாம்.

கொச்சியின் சிறப்பு வாய்ந்த சீன மீன்பிடி வலைகளை, கைப்பிடிகளும் விளக்குகளும் அமைக்கப்பட்ட உயர்ந்த தளத்திலிருந்து பார்வையிடலாம். இதனால் தாங்கள் விரும்பிய இடங்களிலிருந்து நாற்காலியில் இருந்து கொண்டே பார்வை இட முடிகிறது.

சங்குமுகம் கடற்கரை, திருவனந்தபுரம்

கேரள தலைநகரில் இருக்கும் இந்த அழகான கடற்கரையில் ஏற்கனவே சாய்வு பாதைகளும் நடைபாதைகளும் அமைக்கப்படுள்ளன. மாற்றுத் திறனாளிகள் எளிதாக மணலில் நடப்பதற்கு வசதியாக சிறப்பு தரைவிரிப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஏதாவது உதவி தேவைப்பட்டால் மற்றவர்களை அழைப்பதற்கு அலார ஒலிகளும் பொறுத்தப்பட்டுள்ளன. அடையாளக் குறிகளும் தகவல்களும் ப்ரெய்லி மற்றும் ஆடியோ விஷுவல் முறையில் தெரிவிக்கும் வசதிகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

ஏற்கனவே பல சுற்றுலா நிறுவனங்கள் கேரளா மற்றும் இந்தியாவின் பல இடங்களுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற சுற்றுலா பேக்கஜ்களை அளித்து வருகிறது. Royal Indian Voyages மற்றும் Enable Travels போன்ற நிறுவனங்கள் #CanDo என்ற பிரச்சாரத்தின் மூலம் அணுகக்கூடிய சுற்றுலாக்களை மலிவு விலையில் வழங்குகிறது. இந்த சுற்றுலாக்கள் யாவும் பார்வை, பேச்சு, கேட்கும் திறன் மற்றும் இடம்பெயர்தல் ஆகிய குறைபாடுகளின் அடிப்படையில் வடிவமைக்கப்படுகிறது. அணுகக்கூடிய மற்றும் அனைத்து வசதிகளை கொண்ட ஹோட்டல்களே தங்குவதற்கு தேர்வு செய்யபடுகின்றன. மேலும் வாடிக்கையாளர்களோடு நன்றாக தொடர்பாடக் கூடிய தன்னார்வலர்களே நியமிக்கப்படுகிறார்கள். இதுபோன்ற சுற்றுலாக்களுக்கு செல்வதால் மாற்றுத் திறனாளி நபர்களுக்கும் அவர்களை கவனிப்பர்களுக்கும் சற்று நிவாரணமாக இருக்கும்.

நம் சமூகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு தினசரி வாழ்வே பிரச்னைக்குரிய வகையில் இருக்கும் போது, அவர்களுக்கான சுற்றுலாவை உறுதிசெய்வது கூடுதல் பொறுப்புடையதாகிறது. 

இது புதுமையான யோசனை மட்டுமல்ல, இதன்மூலம் மாற்றுத் திறனாளிகளை பொது அடையாளத்திற்குள் கொண்டு வந்துள்ளது கேரள அரசு. கேரளாவின் பிரபலமான சுற்றுலாப் பகுதிகளை சிலர் கால்நடையாகவும், சிலர் தானியங்கி சக்கர நாற்காலியிலும், சிலர் தொட்டுணரக்கூடிய வழிகாட்டுதல் மூலம் வாசித்தும் மற்றவர்களோ ஆடியோ வழிகாட்டுதல் மற்றும் சைகை மொழி மூலம் கேட்டறிந்தும் பார்வையிட்டு வருவது மனதிற்கு சந்தோஷமாக உள்ளது. 

ஒதுக்கப்பட்ட சமூகமாக இருக்கும் மாற்றுத் திறனாளிகளை மைய நீரோட்ட பொதுமக்களிடம் சேர்க்கும் முயற்சியாக கேரளா சுற்றுலாத் துறை செயல்படுத்தும் இந்த திட்டங்களுக்கு பாராட்டுக்களும் வரவேற்புகளும் கிடைத்துள்ளது.