சிறப்புக் களம்

பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கும் மாநிலங்கள்: கேள்விக்குறியாகும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம்

பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கும் மாநிலங்கள்: கேள்விக்குறியாகும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம்

Veeramani

ராஜஸ்தான், டெல்லி, ஒடிசா, மேற்குவங்கம் மாநிலங்களை தொடர்ந்து கர்நாடகாவிலும் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொடர்பான காரணங்களால் தீபாவளி பண்டிகையின் பட்டாசு உபயோகத்திற்கு மாநிலத்தில் தடை விதிப்பதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். “ ஏற்கனவே கொரோனா பாதித்துள்ள சூழலில், பட்டாசு வெடிக்கும்போது மக்களின் உடல்நிலை மோசமாகக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. இதனால் மருத்துவ நிபுணர்கள் பட்டாசு உபயோகத்தை கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர்” என கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் தெரிவித்துள்ளார்.

இதுபோலவே கொரோனா பாதிப்புகள் மற்றும் குளிர்காலம் போன்ற  காரணங்களுக்காக ராஜஸ்தான், டெல்லி, ஒடிசா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களிலும், மும்பை நகரத்திலும் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு விற்பனைக்கும், வெடிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில மாநிலங்களும் பட்டாசு உபயோகத்திற்கு தடைவிதிக்கும் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டாசு தொழில், பல்வேறு மாநிலங்களில் விதிக்கப்படும் பட்டாசுக்கான தடையால் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

பட்டாசு தடையால் தமிழகத்துக்கு என்ன சிக்கல்?

இந்தியாவில் அதிகளவு பட்டாசு தயாரிக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது, ஒட்டுமொத்தமாக நாட்டின் பட்டாசு உற்பத்தியில் 90 % தமிழகத்தில்தான் நடக்கிறது. இந்த தொழிலை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். பட்டாசு வெடிப்பதற்கு பல்வேறு மாநிலங்களும் தடைவிதிக்கும் பட்சத்தில் இவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். இதனை கருத்தில் கொண்டு பட்டாசு உரிமையாளர்களும், அரசியல் கட்சிகளும், மாநிலங்கள் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்

பட்டாசு உபயோகத்திற்கான தடையை நீக்க வலியுறுத்தி ஒடிசா மற்றும் ராஜஸ்தான் மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில்” காற்று, ஒலி மாசு விதிகளின் படி தமிழகத்தில் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. நாட்டின் பட்டாசு உற்பத்தியில் 90 சதவீதத்தை தமிழ்நாடு கொண்டுள்ளது. மாநிலத்தில் பட்டாசு உற்பத்தியில் நேரடியாக 4 இலட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக 4 இலட்சம் தொழிலாளர்களும் ஈடுபட்டுள்ளனர். எனவே இந்த பட்டாசு தடையால் 8 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள். இதனால் பட்டாசு விற்பனை மற்றும் வெடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கவேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்க்கை ஆதாரமே மக்கள் ஒரு நாள் வெடிக்கும் பட்டாசுகளில்தான் உள்ளது என்பதுதான் உண்மை. ஆனால் கொரோனா கால நெருக்கடியும், குளிர்கால சூழலும் கவனத்திற்குரியதே. எனவே பட்டாசு தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க அரசுகள் எதுபோன்ற முடிவுகளை எடுக்கின்றன என்று பொறுத்திருந்து பார்ப்போம்.