டி.கே.சிவக்குமார்
டி.கே.சிவக்குமார் twitter page
சிறப்புக் களம்

”நான் அடிச்ச 10 பேருமே டான்கள் தான்” - கர்நாடக தேர்தலில் காங்கிரஸின் கிங் ஆன டி.கே.சிவக்குமார்!

Prakash J

கடந்த காலத்தில், சித்தராமையா ஆட்சியில் அமைச்சர் பதவியைப் பெறுவதற்காகப் போராடிய கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், இன்று அவருக்கு இணையாக முதலமைச்சர் பதவியில் அமருவதற்கான வாய்ப்புகள் தேடி வந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

சமீபத்தில், நடைபெற்று முடிந்த கர்நாடகச் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி யாருடைய துணையும் இன்றி ஆட்சி அமைக்கும் அளவிற்கு மெஜாரிட்டியில் (136-ல் வெற்றி) வென்றிருக்கிறது. இதற்கு அம்மாநில மூத்த தலைவர்களின் ஒற்றுமையான செயல்பாடுகளும் ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கும் இடையே மறைமுகமாக நீடித்துவரும் பனிப்போரை கவனத்தில் கொள்ளாமல் இருவரும் இணைந்து காங்கிரஸின் வெற்றிக்கு அடித்தளமிட்டுள்ளனர். அதிலும் டி.கே.சிவக்குமாரின் பங்கு அளப்பரியது என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.

அனுமன் பிரசாரத்தை பாஜக கையில் எடுக்க, காஸ் சிலிண்டருக்கு பூஜை செய்து `ஜெய் காஸ் சிலிண்டர்' என தேர்தல் பிரசார டிரெண்டைக் கையிலெடுத்து அசத்தினார், டி.கே.சிவக்குமார். இவர் கர்நாடக மாநிலத்தில் அதிகளவில் வசிக்கும் லிங்காயத் சமூகத்தினருக்கு அடுத்த இடத்தில் உள்ள ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்தவர். கர்நாடகாவில் லிங்காயத், ஒக்கலிகா சமூகங்களின் வாக்குகள் மிக முக்கியமானதாக இருக்கும் நிலையில், அச்சமூகத்தின் ஆதரவு மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு (குமாரசாமி கட்சி) அதிகமாக இருந்தது. இந்த நிலையில், காங்கிரஸ் மீது பற்றுக்கொண்ட சிவக்குமார், சிறுவயது முதலே அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இவருடைய பின்னணியைப் புரிந்துகொண்ட காங்கிரஸும் குமாரசாமியின் தந்தையான தேவகவுடாவை எதிர்க்கக் களம் அமைத்துக் கொடுத்தது. ஆரம்பத்தில் அவரிடம் தோல்வியைத் தழுவிய டி.கே.சிவக்குமார், பின்பு வெற்றிப் பட்டியலில் இடம்பிடித்தார். தொடர்ந்து தேவகவுடா, குமாரசாமிக்கு எதிராகத் தேர்தல் வியூகங்களை வகுத்து தானும் ஜெயித்ததோடு மட்டுமின்றி, தன்னுடைய ஆதரவாளர்களையும் வெற்றிபெற வைத்தார். 2001ஆம் ஆண்டு, மகாராஷ்டிராவில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்ட சமயத்தில், அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பெங்களூரு ரெசார்ட்டில் பாதுகாப்பாய் தங்கவைத்து ஆட்சியைக் காப்பாற்றினார்.

இதன்மூலம் சோனியா காந்தி குடும்பத்தின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் உருவானார். பின்னர் 2017ஆம் ஆண்டு, குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் அகமது படேலை வெற்றிபெற வைப்பதற்காக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்களைப் பாதுகாத்து அதில் வெற்றிபெற்றார், சிவக்குமார். இதனால் மேலும், காங்கிரஸின் தலைமைக்குள் முக்கியமான இடத்தைப் பிடித்தார். ஆனால், அதற்கு அடுத்த ஆண்டே (2018) அவர்மீது பல வழக்குகள் பாய்ந்தன. வருமான வரி, அமலாக்கத்துறை, சி.பி.ஐ, பண மோசடி, நேஷனல் ஹெரால்டு வழக்கு எனப் பல வழக்குகள் அவர்மீது பதியப்பட்டன. ஏன், சிறைக்கம்பிகளைக்கூட எண்ணிவிட்டு வந்தார். என்றாலும், இதற்கு எல்லாம் கொஞ்சமும் பயப்படாத டி.கே.சிவக்குமார், தொடர்ந்து பாஜகவை வீழ்த்தும் வகையிலேயே மாநிலத்தின் நடவடிக்கைகளில் செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில்தான் 2019ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் பதவியைப் பெற டி.கே.சிவக்குமார் போராடினார். ஆனால், சித்தராமையா அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். டி.கே.சிவக்குமார் தலைவராக நியமிக்கப்பட்டால், தாம் மீண்டும் முதலமைச்சர் ஆவதில் சிக்கல் ஏற்படும் என்று உணர்ந்தே சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இன்னும் அந்த பனிப்போர், இருவருக்குள்ளும் நீறுபூத்த நெருப்பாகவே இருப்பதாகவே சொல்லப்படுகிறது. அவரை செயல்பட விடாமல் கடிவாளங்கள் போடப்பட்டதாகவும் கதைகள் சொல்லப்பட்டன. ஆனால், இவை எல்லாவற்றையும் தவிடுபொடியாக்கி இன்று வெற்றி வீரராக வலம் வருகிறார், டி.கே.சிவக்குமார் என்கின்றனர், அவரது ஆதரவாளர்கள்.

இன்னும் சொல்லப்போனால், சித்தராமையா ஆட்சியில் அமைச்சர் பதவியைப் பெற போராடிய டி.கே.சிவக்குமார், இன்று அவருக்கு இணையாக முதலமைச்சர் பதவியில் அமருவதற்கான வாய்ப்புகள் தேடி வந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஆம், கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று சித்தராமையா முதல்வரானார். அப்போது ஊழல் புகார் காரணமாக டி.கே.சிவக்குமாருக்கு அமைச்சர் பதவி நிராகரிக்கப்பட்டது. அமைச்சர் பதவியைப் பெறுவதற்காகக் காங்கிரஸ் மேலிடத்திடம் போராடினார். இறுதியில் அக்கட்சியின் மேலிடத்திடம் போராடி, அவருடைய ஆட்சியிலும் அமைச்சர் பதவியை அலங்கரித்தார். தற்போதைய வெற்றியால், சித்தராமையாகூட, சிவக்குமாரின் உதவியை நாடியிருப்பதாகக் கூறப்படுகிறது.

8 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டி.கே.சிவக்குமார், சில துறைகளின் அமைச்சராகவும் இருந்துள்ளார். இதனால் அவர், "டிரபிள் ஷூட்டர்" என்று கருதப்படுகிறார். இந்த வெற்றிக்காகக்கூட, தாம், ’’மூன்று வருடங்களாகத் தூங்கவில்லை’’ என்று சொல்லும் டி.கே.சிவக்குமார், ”இது எனது வெற்றி மட்டும் அல்ல” என்று பெருமையாகவும் அடக்கமாகவும் சொல்லி கர்நாடக மக்களின் இதயங்களைக் கரைய வைத்துள்ளார். இதன்மூலம் கர்நாடக மக்களும், நெட்டிசன்களும் அவரைப் புகழின் உச்சியில் கொண்டுபோய் உட்கார வைத்துள்ளனர். அதிலும் சினிமா டயலாக்குகளை அவர் படத்துடன் வைரலாக்கி வருகின்றனர். ”யாரோ 10 பேர அடிச்சி, டான் ஆனவர் இல்லை டி.கே.சிவக்குமார்; இவரு அடிச்ச 10 பேருமே டான்தான்” என வசனங்களைப் பதிவிட்டு அவரின் பெயர்க் கொடியைப் பட்டொளி வீசி பறக்கவிட்டு வருகின்றனர்.

இந்த தேர்தலில்கூட, குமாரசாமி கட்சி வேட்பாளரைத்தான் வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறார், டி.கே.சிவக்குமார். கனகாபுரா தொகுதியில் போட்டியிட்ட ம.ஜ.த. வேட்பாளர் நாகராஜூவை 1,22,392 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, வெற்றி பெற்று உள்ளார்.