சிறப்புக் களம்

ஸ்ட்ரீமிங் தளங்களில் பின்தங்கும் கன்னட சினிமா... என்ன காரணம்?!

நிவேதா ஜெகராஜா

ஓடிடி ஸ்ட்ரீமிங் தளங்கள்தான் தற்போதைய கொரோனா பேரிடர் சூழ்நிலையில் இந்திய சினிமா உலகை காப்பாற்றி வருகின்றன. 2016ம் ஆண்டு முதல் இந்தியாவில் ஸ்ட்ரீமிங் தளங்கள் இருந்து வருகிறது என்றாலும்கூட, கொரோனா பரவலுக்குப் பின்தான் அவை அதிக வளர்ச்சியை பெற்றுவருகின்றன. பிராந்தியம் மற்றும் மொழி தடைகளை தாண்டி பார்வையையாளர்கள் இந்த ஓடிடி தளங்கள் மூலம் சினிமாவை ஆராதிக்கின்றனர்.

தென்னிந்திய மொழிகளில் மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் தங்கள் இருப்பை வலுவாக பதித்து வரும் நிலையில், கன்னட திரைப்படத் துறை மட்டும் தங்களுக்கான இடத்தை பிடிக்க பெரும் போராட்டத்தை சந்தித்து வருகிறது. இதன் பின்னணி என்ன, இதிலிருந்து மீள்வதற்கு கன்னட சினிமாக்கள் தங்களை எப்படி மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும், அந்த மாற்றம் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பற்றி, இங்கு அறிவோம்!

ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான பிற மொழிப்படங்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், கன்னட படங்களின் எண்ணிக்கை சற்று குறைவுதான். சொல்லப்போனால் கடந்த ஆண்டு லாக்டவுன் தொடங்கியதிலிருந்து விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே ஓடிடி தளத்தில் கன்னட படங்கள் வெளியாகி இருந்தன. எண்ணிக்கை மட்டுமன்றி, நல்ல உள்ளடக்கம் கொண்ட திரைப்படங்கள் என்று வரும்போதும் மற்ற மொழிகளைவிட கன்னட திரையுலகம் மிகவும் பின்தங்கியே உள்ளது.

இக்காரணங்களினால் கன்னட திரைப்படங்கள், கர்நாடகத்தை தாண்டி மற்ற மொழி சினிமா ரசிகர்கள் மத்தியில் எவ்வித சலசலப்பையும், விவாதத்தையும், ஆக்கப்பூர்வமான உரையாடல்களையும் நிகழ்த்த தவறிவிட்டது. தியா, கேஜிஎப், லவ் மோக்டெயில் போன்ற ஒருசில திரைப்படங்கள் இதில் விதிவிலக்காக இருக்கலாம். ஆனால் இந்த திரைப்படங்கள் பெற்ற வரவேற்பும் வெற்றிக்குப் பிறகும் கன்னட சினிமாவின் ஓடிடி தளங்கள் மீதான போக்கு மாறவில்லை.

கன்னட சினிமாவில் ஓடிடி வெளியீட்டைப் பெற்ற முதல் கன்னடத் திரைப்படம் ‘யு-டர்ன்’தான். இதற்கு வரவேற்பு அதிகமாக இருந்தது. அதன்காரணமாக இதே கதை தமிழ் உட்பட மற்ற மொழிகளிலும் ரீ மேக் செய்யப்பட்டது. இந்தப் படத்தின் இயக்குநர் பவன்குமாரேவும், மற்ற மொழிகளை விட கன்னட மொழி சினிமா ஓடிடி தளங்களில் பின் தங்கியுள்ளது என்ற உண்மையை ஒப்புக்கொள்கிறார். ``பல வருடங்களாக, கன்னட மொழி திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன. என்றாலும் மலையாளம் மற்றும் பிற தென்னிந்திய மொழி திரைப்படங்களை போல பல்வேறு மொழி ரசிகர்களை ஈர்க்க கன்னட சினிமா தவறிவிட்டது.

மற்ற மொழி திரைத்துறையினர் தங்களின் படங்களில் உள்ளடக்கம் ரீதியாக வலுவாகி ஓடிடிக்கு வருகின்றனர். இதனால் அந்த திரைப்படங்கள் வரவேற்பு பெறுவதுடன், வலைதளங்களில் பேசுபொருளாகவும் மாறுகிறது. அதிகம் பேசப்படும்போது, அத்திரைப்படங்கள் மற்ற மொழி ரசிகர்களையும் பார்க்க வைக்கிறது. மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களை பார்வையாளர்கள் தேடி செல்வதன் பின்னணியும் இதுதான்” என்று கூறியுள்ளார் அவர்.

முன்னணி ஸ்ட்ரீமிங் தளம் ஒன்றில் பணிபுரியும் ஒரு நிர்வாகி ஹிந்துஸ்தான் டைம்ஸ் தளத்துக்கு அளித்த பேட்டியொன்றில், “இந்திய நகரங்களிலேயே பெங்களூரு நகரில் வசிப்பவர்களே அதிக அளவில் ஓடிடி ஸ்ட்ரீமிங் தளங்களில் அதிக சப்ஸ்கிரைபர்களாக மற்றும் அதிக பார்வையாளர்களாக உள்ளனர் என்கிறது ஒரு தரவு. ஆனால் இவர்கள் பெரும்பாலும் கன்னட திரைப்படத்திற்காக ஓடிடி சேவைகளை நாடவில்லை. மாறாக இங்குள்ள பார்வையாளர்கள் பெரும்பாலும் சர்வதேச திரைப்படங்கள், மற்ற பிராந்திய திரைப்படங்கள் போன்றவற்றையே அதிகம் பார்க்கிறார்கள். அதன் காரணம், மற்ற மொழி திரைப்படங்களின் தரம் மற்றும் அவற்றைப் பற்றி எழும் பேச்சுக்கள் ஆகியவைதான்" என்று கூறியிருக்கிறார்.

இப்படி கன்னட திரைப்படத்துறை மற்ற திரைப்படத்துறையை விட பின்தங்கியதுக்கு காரணமாக அம்மொழி சினிமாவை உன்னிப்பாக கவனித்து வரும் திரைப்பட விமர்சகர்கள் குறிப்பிடுவது - “பொதுவாக கன்னட திரைப்பட தயாரிப்பாளர்கள், மாஸ் மற்றும் சூப்பர் ஸ்டார் சினிமாக்கள் என்ற படிநிலையை சார்ந்தே படங்களை தயாரிக்கின்றனர். மேலும் நடிகர்களின் பிரத்யேக ரசிகர்களுக்காக ஹீரோயிச காட்சிகள் அதிகம் திணிக்கப்படுகின்றன. இத்தகைய படங்களின் பட்டியலில், கேஜிஎஃப் போன்ற ஒருசில படங்கள் விதிவிலக்காக இருக்கலாம்.

கேஜிஎஃப் போலவே திதி, தியா போன்ற உள்ளடக்கத்தை மட்டும் கருத்தில் கொண்டு கன்னடத்தில் வெளியான சில திரைப்படங்களும், கர்நாடகத்தை தாண்டிய ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றன என்பதை நாம் இங்கு நினைவுகூற வேண்டும். சமீபத்தில் வெளியான `இக்காட்' திரைப்படம் இதற்கு மற்றொமொரு சிறந்த உதாரணம். ஆனால் இதுபோன்ற திரைப்படங்கள் சொற்ப அளவிலேயே கன்னடத்தில் வெளியாகியுள்ளன. அதிகப்படியாக ஒரேமாதிரியான உள்ளடக்கம் கொண்ட மற்றும் தரம் இல்லாத திரைப்படங்களே அதிகம் வெளிவருகின்றன.

இந்த பின்னடைவுக்கு வேறு சில காரணங்கள் இருப்பதாகவும் குறிப்பிடுகிறார்கள் கன்னட திரையுலகினர். அதில் முக்கியமாக, ‘நல்ல உள்ளடக்க சினிமாக்கள் எடுக்க முடியாது என்பதில்லை. ஆனால் அதுபோன்ற கதைகளுக்கு நிதி அளிக்க பெரும்பாலான தயாரிப்பாளர்கள் முன்வருவதில்லை’ என்பது. அதையும் மீறி எடுத்தால் வேறு சில பிரச்சனைகளும் எழுகின்றன. உதாரணமாக 2020ல் வெளியான கன்னட வெப் சீரிஸ் `ஹனிமூன்'. முதலில் இந்த வெப் சீரிஸை வெளியிட எந்த ஓடிடி தளங்களும் தயாராக இல்லை. பல பெரிய நிறுவனங்களிடம் பேசிய படக்குழு, அவர்களால் நிராகரிக்கப்பட்டனர். இறுதியாக நீண்ட இடைவெளிக்கு பிறகு தெலுங்கு மொழியைச் சேர்ந்த `ஆஹா' ஸ்ட்ரீமிங் தளம் தெலுங்கு டப் வெர்சன் கண்டிஷனுடன் வெப்சீரிஸை வெளியிட்டது. இதேநிலைதான் சமீபத்தில் வெளியான யு-டர்ன் இயக்குநர் பவன்குமார் - அமலாபால் காம்பினேஷனில் வெளியான ‘குடி யெடமைதே' வெப் சீரிஸ்-க்கும் உண்டானது.

இதுபோன்ற சிரமங்களை தாண்டி வலுவான இருப்பை உறுதி செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது கன்னட திரையுலகம். ஓடிடி தளங்களில் கன்னட சினிமா மற்ற மொழிகளுடன் போட்டி போட வேண்டும் என்றால் தற்போதையை இணையத் தலைமுறையினரை ஈர்க்கும் புதிய வகையிலான நல்ல உள்ளடக்கம் கொண்ட திரைப்படங்கள் அங்கு தயாராக வேண்டும். முக்கியமாக கன்னட திரையுலகினர் தாங்கள் உருவாக்கும் உள்ளடக்கத்தின் தரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

உதாரணமாக மலையாள சினிமா உலகினர் உள்ளடக்கம் ரீதியாக கடந்த தசாப்தம் முழுக்கவே மேம்பட்டுக்கொண்டேதான் இருந்தனர் என்றபோதிலும், இந்த லாக் டவுனுக்கு பிறகு கொரோனா பேரிடரால் ஏற்பட்ட சவால்களுக்கு ஏற்ப தங்களின் திரைப்படங்கள் பாணியை மறுவரையறை செய்து, அதில் உச்சம் பெற்றனர். ஓடிடி தளங்களில் வெளியிடுவதற்காகவே அவர்கள் திரைப்படங்களை தயாரிக்கத் தொடங்கினர். இதுபோன்ற ஒரு சீரமைப்பு தற்போது கன்னட சினிமா உலகிலும் தேவைப்படுகிறது. அதை செய்யும்பட்சத்திலேயே இந்திய சினிமாவில் தனக்குரிய இடத்தை கன்னட சினிமா பெறும் என்பதே நிதர்சனம்.

மலையரசு