சிறப்புக் களம்

“கமல் தமிழகத்திற்கு செய்யும் துரோகம்” - பி.ஆர்.பாண்டியன் புகார் உண்மையா?

“கமல் தமிழகத்திற்கு செய்யும் துரோகம்” - பி.ஆர்.பாண்டியன் புகார் உண்மையா?

webteam

காவிரி பிரச்னை தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை நேரில் சந்தித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஆலோசனை நடத்தியுள்ளார். 

காவிரி பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதற்காக, அம்மாநில முதல்வர் குமாரசாமியை கமல்ஹாசன் இன்று நேரில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், காவிரி பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் என தெரிவித்தார். தமிழகத்தில் குறுவை சாகுபடி தொடங்கவுள்ளதால் காவிரி நீரின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததாகவும், இருமாநில அரசுகளும் சகோதரத்துவமாக பேசி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றார். ‘காலா’வெளியீடு குறித்து பேசவில்லை என்றும், சினிமாவை விட காவிரி முக்கியம் என்றும் கமல் கூறினார். அவரைத்தொடர்ந்து பேசிய குமாரசாமி, கர்நாடக விவசாயிகள் மட்டுமல்ல, தமிழக விவசாயிகளும் முக்கியமானவர்கள் தான் என்றும், தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றும் தெரிவித்தார்.

கமல்ஹாசனின் இந்தத் திடீர் பயணம் அரசியல் சூழலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. காவிரி தொடர்பாக அனைவரும் ஒவ்வொரு கருத்துக்களை கூறிக்கொண்டிருக்கும் நேரத்தில், நேரடியாக சென்று பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது ஆக்கப்பூர்வமானதுதான் என சிலர் கூறுகின்றனர். ஆனால் இதற்குள் ஒரு அரசியல் உள்ளது என்றும் சிலர் கூறுகின்றனர். அரசியலில் தான் புதுமையானவன் என்பதை காட்டிக்கொள்ள கமல் செய்யும் அரசியல் இது என சிலர் விமர்சிக்கின்றனர். தூத்துக்குடியில் பாதிக்கப்பட்டவர்களை கமல்ஹாசன் சென்று பார்த்தபோது, அந்த விஷயம் பெரிதாகப் பேசப்படவில்லை. ஆனால் ரஜினிகாந்தின் வருகை சர்ச்சைக்குள்ளானது. விவாதங்களுக்கு உள்ளானது. எனவே தன் மீது அனைவரின் கவனத்தையும் திருப்ப கமல் மேற்கொள்ளும் ஒரு அரசியல் முயற்சிதான் இது என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியனிடம் புதிய தலைமுறையின் இணையதளம் சார்பாக தொடர்பு கொண்டு பேசினோம். அதற்கு அவர், “கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை கமல்ஹாசன் சந்தித்தது சுயநலமானது. தமிழகத்துக்கு விரோதமானது. அவர் தனது தனிப்பட்ட சுயநலத்திற்காக காவிரிப் பிரச்னையை திசை திருப்பக்கூடாது. இதைவிட துரோகம் இல்லை. அனைத்துக்கட்சிகளும் கூட்டம் போட்டு, உச்சநீதிமன்றத்தின் மூலம் காவிரி நீரை மீட்க வேண்டும் என தீர்மானித்துள்ளோம். கர்நாடக சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்திற்கு கொடுக்க மாட்டேன் என்று வெளியிட்டவர் குமாரசாமி. அதனால் தான் அவர் அங்கு குறிப்பிட்ட சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளார். கமல்ஹாசன் எப்போது இருந்து காவிரிக்காக பேசுகிறார்? 2 மாதங்களாக தான் பேசுகிறார். காவிரி நீரை திறக்கும் அதிகாரம் ஆணையத்திற்கும், நீர்வளத்துறை அதிகாரிகளுக்கும்தான் உண்டு. அது குமாரசாமிக்கே இல்லை. அப்படி இருக்கும் போது கமல்ஹாசன் சந்திப்பதில் என்ன பயன்? அவர்கள் சந்திப்பால் நீர் வந்துவிடப் போகிறதா? இது கமல்ஹாசனின் சுயநலப் போக்கு. விவசாயிகளுக்கு  மட்டுமின்றி தமிழகத்திற்கே அவர் செய்யும் துரோகம்” என்று தெரிவித்தார்.

மக்கள் நீதி மய்யத்தின் உயர்மட்டக்குழுவிலுள்ள பாரதி கிருஷ்ணகுமார் புதிய தலைமுறையிடம் கூறுகையில், “கமல் சந்திப்பு 100% ஆக்கப்பூர்வமானது. இந்தச் சந்திப்பில் உச்சநீதிமன்றத்திற்கு எதிராக எதுவுமில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின் படியே இரு மாநில அரசுகளும் செயல்பட வேண்டும் என்றுதான் கமல்ஹாசன் கூறியுள்ளார். இதில் உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் என்ன இருக்கிறது? உரிமைகளை விட்டுக்கொடுத்தால்தான் தவறு. பேச்சுவார்த்தை நடத்திப் பெறுவதில் தவறில்லை. இதுவரை தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் தான் ஆணையத்திற்கான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் சார்பில் இதுவரை அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. தற்போது குறுவை சாகுபடி தொடங்கிவிட்டது. இனிமேல் எப்போது ஆணையம் அமைத்து நீர் திறப்பது? அதற்கு முன்னர் ஜனநாயக முறையில் பேச்சுவார்த்தை நடத்துவதில் தவறில்லை. எம்.ஜி.ஆர் அவரது காலத்தில் ஆந்திராவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தமிழகத்திற்கு நீரை பெற்றுத் தந்தார். உரையாடலின் வழியாக தான் பிரச்னைக்கு தீர்வு காண்பது சாத்தியமாகும். தமிழகத்திற்கு 4 டி.எம்.சி நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் எனக்கூறி எத்தனை நாட்கள் ஆகிறது. இதுவரை நீர் திறக்கப்பட்டதா? தற்போது கமல்ஹாசன், குமாரசாமியுடன் பேசுவதால் என்ன குறைந்துவிடும்? உச்சநீதிமன்ற தீர்ப்பு மாறிடுமா? இருமாநிலத்திலும் வன்முறை நடக்காமல் காவிரி நீரைப்பெறுவதற்கு, பேச்சுவார்த்தை நடத்துவதே ஆரோக்கியமானது. யாரும் செய்யாத நடவடிக்கையை கமல்ஹாசன் செய்துள்ளார். அது பாராட்டப்பட வேண்டிய நடவடிக்கை” என்றார்.