கடந்த ஜனவரி 10-ம் தேதி உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் கூடியது. ஒரு பெயரை உச்சநீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைக்கிறது அந்த கூட்டம். அப்படி பரிந்துரைக்கும் போது “இந்தியாவில் உள்ள மற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளோடு ஒப்பிடுகையில் மிகச் சிறந்த, தகுதியான ஒருவரை நாங்கள் கண்டுபிடித்திருக்கிறோம். அவர் பெயர் கே.எம்.ஜோசப்” என்று கொலீஜியம் சொன்னது. அப்படிப்பட்ட ஒரு நபரைத்தான் பல கட்ட போராட்டத்துக்கு தன்னிடம் வரும் செவ்வாய்க்கிழமை அணைத்துக் கொள்ளப் போகிறது உச்சநீதிமன்றம்.
நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, வினீத் சரண் ஆகியோரோடு நீதிபதி கே.எம்.ஜோசப்பும் வரும் செவ்வாய்க் கிழமை உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்க உள்ளனர். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார். ஜோசப் 2023 வரையிலும் , மற்ற இரண்டு நீதிபதிகளும் 2022 வரையிலும் நீதிபதிகளாக பணியாற்ற போகிறார்கள்.
ஜனவரியில் உச்சநீதிமன்ற கொலீஜியம் கே.எம்.ஜோசப்பை பரிந்துரைத்த போது, மத்திய அரசு அதனை நிராகரிக்கிறது. கடந்த ஏப்ரலில் மத்திய அரசு நிராகரித்த போது, பலத்த எதிர்ப்பு எழுந்தது. உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த செல்லமேஸ்வர் , ரஞ்சன் கோகாய் போன்றோர் கே.எம்.ஜோசபை மீண்டும் பரிந்துரைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை கொலீஜியம் ஏற்றது. ஆனால் தொடர்ந்து காத்திருப்பில் வைத்தது. மூன்று கூட்டங்களில் கே.எம்.ஜோசப்பை பரிந்துரைப்பது என முடிவெடுத்தும் கூட, இன்னும் சில நீதிபதிகளின் பெயரோடு சேர்ந்து பரிந்துரைக்கலாம் என முடிவெடுத்தார்கள்.
ஒருவழியாக ஜூலை 16-ம் தேதி மேற்கூறிய மூன்று நீதிபதிகளையும் கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. மத்திய அரசும் மூவரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது. ஒப்புதலுக்கு பிறகும் இவர்கள் மூவருக்கும் பதவியேற்பு விழா நடைபெறும் என உச்சநீதிமன்றம் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் “உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்திரா பானர்ஜி, வினீத் சரண், கே.எம்.ஜோசப் ஆகியோர் பதவியேற்க உள்ளனர்” கூறப்பட்டுள்ளது. அதாவது கடந்த ஜனவரியில் கண்டுபிடிக்கப்பட்ட கே.எம்.ஜோசப் மூன்றாம் இடத்தில் ஜூனியராகவும் ஜூலையில் நடந்த கூட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டு பரிந்துரைக்கப்பட்ட இந்திரா மற்றும் வினீத் ஆகியோர் அவரை விட உச்சநீதிமன்றத்தில் மூத்த நீதிபதிகளாகவும் இருக்க போகிறார்கள்.