சிறப்புக் களம்

ஓய்வு நாளிலும் சிக்ஸ் அடித்த செல்லமேஸ்வர் !

ஓய்வு நாளிலும் சிக்ஸ் அடித்த செல்லமேஸ்வர் !

webteam

ஒரு பொறுப்பில் இருந்து கொண்டு அதனை சிறப்பாக செய்யும் நேரத்தில், குறைகளை நிவர்த்தி செய்ய முயல்வோர் சிலர். எந்த ஒரு தீர்ப்பிலும் சமரசமில்லா நபர், தவறெனப் படுவதை பட்டென போட்டுடைக்கும் மனம், மக்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் எண்ணம், சரியென யார் சொன்னாலும் பிரச்னை உள்ளதென்றால் எதிரணியில் நிற்கும் குணம் வாய்த்த உச்சநீதிமன்ற நீதிபதிதான் செல்லமேஸ்வர். கொலீஜியம் முறையை மிகக் கடுமையாக சாடிய நீதிபதி. மத்திய அரசு நீதிபதிகள் நியமன சட்டம் கொண்டு வந்த போது , அதை விசாரித்து தீர்ப்பளித்த அமர்வில் கொலீஜியம் முறை தவறு என்று எதிர்க்கருத்து சொல்லி அதை நியாயப்படுத்தியவர்.

சபாநயாகரின் அதிகாரம் வானளாவ இருந்தாலும் சரியான முறைப்படி அதனை பயன்படுத்தாமல் இருந்தால் அதனை விசாரித்து ஆய்வு செய்து முடிவை தள்ளுபடி செய்ய நீதிமன்றத்துக்கு முழு உரிமை உண்டு என கூறி அரசியல்வாதிகள் வயிற்றில் புளியை கரைத்தவர். உச்சநீதிமன்ற வரலாற்றில் நீதிமன்ற விவகாரத்தை மக்கள் முன் சொன்ன வரலாறே இல்லை. ஆனால் தலைமை நீதிபதியையே விமர்சித்து பத்திரிகையாளர்களை சந்தித்தவர் செல்லமேஸ்வர். முக்கிய தீர்ப்பு வழங்கிய பல்வேறு அமர்வுகளில் தலைவராகவும், சக நீதிபதியாகவும் இருந்தவர். 

உத்தராகண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான கே.எம்.ஜோசப் உச்சநீதிமன்ற நீதிபதியாக கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்டும் , மத்திய அரசு அவரது பெயரை திரும்பி அனுப்பியது. இந்நிலையில் அடுத்தடுத்த கொலீஜியம் கூட்டங்களில் அவரது பெயரை மீண்டும் இதர சில நீதிபதிகள் பெயரோடு சேர்த்து பரிந்துரைப்பது என முடிவெடுக்க முக்கிய காரணமாக இருந்தவர். இன்னும் கே.எம்.ஜோசப் பெயர் மத்திய அரசுக்கு அனுப்பப்படவில்லை என்பது மற்றொரு கதை. 

இந்நிலையில் இந்த கலகக்காரர் செய்த விஷயங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். ஓய்வு பெற போகிறோம் என்பது தெரிந்ததுமே பணி ஓய்வுக்குப் பின் எந்த பதவியையும் ஏற்கப் போவதில்லை என்று வெளிப்படையாக அறிவித்தார். ஏனெனில் பல நீதிபதிகள் பல்வேறு ஆணையங்களில் ஓய்வுக்கு பின் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். இதையும் தாண்டிய மற்றொரு விஷயம். சாதாரணமாக பணியில் இருக்கும் எம்பி, அமைச்சர், நீதிபதி, இராணுவத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளோர், குடியரசுத்தலைவர் மற்றும் குடியரசு துணைத்தலைவர் ஆகியோருக்கு அரசு பங்களாக்கள் வழங்கப்படும். அப்படி வழங்கப்பட்டும் எந்த பங்களாவையும் தங்களது பதவிக்காலம் முடிவடையும் நாளில் அரசிடம் திருப்பி வழங்குவோரை யாரும் பார்த்ததில்லை.

தனது வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் ஏற்கனவே பேக் செய்து வைத்திருந்த செல்லமேஸ்வரின் மனைவி, காலை 4 மணிக்கே எழுந்து சில பொருட்களை உருட்டிக் கொண்டிருந்தார். தாங்கள் வீட்டுக்கு வந்த போது இருந்தது என்ன, அதெல்லாம் சரியாக இருக்கிறதா என சரிபார்த்து கொண்டிருந்தார். மிச்ச பொருட்களை பேக் செய்தார். காலை 6 மணிக்கு வீட்டை விட்டு வெளியே வந்தனர் செல்லமேஸ்வரும் அவரது மனைவியும். காவலாளியிடம் வீட்டு சாவியை ஒப்படைத்தனர். வீட்டை விட்டு வெளியேறினர். கலகக்காரர் இப்போது உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி..