சிறப்புக் களம்

போஸ்டர் பாத்தீங்களா பெண்ணுரிமைவாதிகளே?

போஸ்டர் பாத்தீங்களா பெண்ணுரிமைவாதிகளே?

webteam

எந்த போஸ்டர்னு கேட்கறவங்க ராய் லட்சுமி நடித்த ஜூலி 2 போஸ்டரை இன்னும் பாக்கலைன்னு நினைக்கிறேன்.
இன்னும் எந்த பெண்ணுரிமைவாதியும் குரல் கொடுக்கல.. மகளிர் அமைப்புகள் எதுவும் குரல் கொடுக்கல.. என்ன ஆச்சு.. இதுக்கு கூட தமிழிசைதான் வந்து குரல் கொடுத்து துவக்கி வைக்கணுமா? என்ன மேடம் நீங்க.. இப்படிப் பண்றீங்களே...

உடனே கோவிக்காதீங்க.. ஒரு போஸ்டருக்கு போய் ஏன் இப்படி? என்று கேட்கிறீர்களா?

மெல்லிய வெண்திரை துணி போர்த்திய உடலுடன் நடிகை ராய் லட்சுமி காட்சியளிக்கும் இந்த போஸ்டரை கண்டு பெண்கள் முகம் சுளித்து செல்லும் காட்சிகளை அநேக இடங்களில் பார்க்க முடிகிறது.. சிலர் சங்கடத்தில் தலை திருப்பிக்கொள்கிறார்கள்.

பெண்கள், பள்ளி மாணவர், மாணவிகள், முதியவர்கள், இளைஞர்கள் அதிகம் பேர் வந்து செல்லக்கூடிய பேருந்து நிலையம் தொடங்கி பொது இடங்களில் பளிச்சென ஒட்டப்பட்டுள்ளது ஜூலி 2 படத்தின் போஸ்டர். போஸ்டர் ஒட்டிகளில் சிலர் படத்தின் குறுக்கே தியேட்டர் பெயரை ஒட்டி கலாசாரம் காத்திருக்கிறார்கள்.

பல இடங்களில் போஸ்டர்கள் பளிச்சென வெளிச்சமிட்டு காட்டப்பட்டு இருக்கின்றன. பேனர்கள், போஸ்டர்கள், விளம்பர பதாகைகளை வைக்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்களை தந்திருக்கிறது. சிக்னல்களில் விளம்பர பேனர்களை வைக்கவும் தடை உத்தரவு இருக்கிறது- வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்துகளுக்கான வாய்ப்பு ஏற்படும் என்பதே இதன் சாரம்சம். எனில் இதுபோன்ற போஸ்டர்களால் கவனம் சிதறாதா?
 
உங்களுக்கு கலைக்கண் இல்லை என்று பொதுவாகச் சொல்வார்கள். ஒரு பெண்ணுக்கு ஆடை சுதந்திரம் இல்லையா? என்ற கேள்விகளை எழுப்புவார்கள் சில பெண்ணுரிமைவாதிகள். ஒருநிமிடம் யோசித்துச் சொல்லுங்கள். ஒரு நடிகையின் கதை என்று விளம்பரப்படுத்தப்படும் இந்த திரைப்படத்தின் கதை என்னவாகாவாவது இருக்கட்டும்.. இளைஞர்களை கவர என்று காரணங்கள் கூட சொல்லட்டும். பெண்ணை உடலாக , உறுப்பாக பார்ப்பவர்களுக்கு தீனி போடுவதைத் தவிர வேறு எதற்கு இந்த போஸ்டர்? 

ஒருகாலத்தில் ஆபாச திரைப்பட போஸ்டர்களை தார் வைத்து அழித்த கோபம் இருந்தது. அந்த அளவுக்குக் கூட போக  வேண்டாம். நாச்சியார் பட டீசரில் ஜோதிகா பேசும் ஒற்றை வார்த்தையின் ஆபாசத்தைப் பார்த்து கொதித்த பெண்ணுரிமைவாதிகள் இதற்கும் குரல் கொடுத்தால் நன்றாக இருக்கும்.