viay, M. Karunanidhi chat gpt
சிறப்புக் களம்

நிறம் மாறும் சினிமா - 8 | விஜய்க்கும் கலைஞருக்கும் என்ன வித்தியாசம்?

அரசியலுக்கு வந்தபிறகுதான் என்றில்லை, திரைத்துறையில் இருந்தபோதே நெருக்கடிகள் வந்தபோது பம்மிப் பதுங்கியவர் விஜய்.

சுகுணா திவாகர்

நெருக்கடிகள் வந்தபோது பதுங்கிய விஜய்

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சமீபத்தில் சட்டமன்றத்தில் பேசியபோது முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டபோது, சிறைச்சாலை சித்திரவதைகளுக்கு உள்ளானதைக் கொச்சைப்படுத்தும் வகையில் ஒரு சைகை செய்தார். கடுமையான கண்டனங்கள் எழுந்தபிறகு ‘எதேச்சையாக அமைந்த உடல்மொழிதான். யாரையும் புண்படுத்தச் செய்யவில்லை’ என்று விளக்கமளித்தார்.

CM Vijay

தனக்கென்று தியாக வாழ்க்கையோ, போராட்ட வரலாறோ, அரசியல் லட்சியங்களோ இல்லாத விஜய் என்ற மனிதரின் வக்கிரமான, அருவெறுப்பான செயல் அது. கரூரில் 41 பேர் இறந்தபோது தலைதெறிக்க ஓடிய ஒரு மனிதரால், சிறைச்சாலை சித்திரவதைகளை எதிர்கொள்ளும் துணிச்சல் குறித்து சிந்திக்க முடியாது. அரசியலுக்கு வந்தபிறகுதான் என்றில்லை, திரைத்துறையில் இருந்தபோதே நெருக்கடிகள் வந்தபோது பம்மிப் பதுங்கியவர் விஜய். ‘தலைவா’ திரைப்படத்துக்கு அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் நெருக்கடி வந்தபோது, அவரிடம் மண்டியிட்டு சமரசம் ஆனார்.

ஆனால், கலைஞர் மு.கருணாநிதி என்னும் இளைஞர், தான் சினிமாவில் நெருக்கடியைச் சந்திக்கும்போது எல்லாம் அதைத் துணிச்சலாக எதிர்கொண்டதுதான் திராவிட சினிமாவின் வரலாறு.

‘பராசக்தி’ திரைப்படத்தைத் தடைசெய்ய முயற்சி!

1952இல் வெளியான கலைஞரின் ‘பராசக்தி’ திரைப்படம் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதேநேரம் ஆதிக்கவாதிகள் ‘பராசக்தி’ திரைப்படத்தின்மீது கடும் கோபம் கொண்டனர். ‘தமிழன்’ என்ற பெயரில் ஒருவர் மொட்டைக்கடிதாசி எழுதி, அன்றைய சென்னை மாகாண முதலமைச்சர் ராஜாஜிக்கு அனுப்பினார்.

‘நான் சென்னை அசோக் நகரில் முதல் நாளன்று படத்தைக் காணச் சென்றேன். தியேட்டரில் மனிதர்கள் குரங்குகள்போல் டிக்கெட் கவுண்டரில் தொற்றித் தாவி ஒருவர்மேல் ஒருவர் ஏறி, உள்ளே செல்லப் போராடிக் கொண்டிருந்தார்கள். இத்தனைக்கும் படத்தின் கதாநாயக நடிகர் உட்பட பலரும் அறிமுகம். பின், ஏன் இந்த ஆரவாரம்? எனக்குப் புரியவில்லை. ஆனால், ’திரைக்கதை வசனம் மு.கருணாநிதி’ என்ற டைட்டில் கார்டு முதலில் போடப்பட்டதும் அரங்கம் அதிரும் வகையில் கைதட்டலும், விசில் ஒலியும் அடங்க வெகுநேரமானது.

பராசக்தி

‘எங்கள் திராவிடப் பொன்னாடே, கலை வாழும் தென்னாடே’ எனும் கமலாவின் நடனக்காட்சியுடன் துவங்கிய படத்தின் ஒவ்வொரு வசனமும் இந்த நாட்டை, ஆட்சியை இழிவுசெய்தும், தேசாபிமானிகளின் மனம் புண்படும்படியாகவும் இருந்தது. ஆனால், அரங்கத்தில் ஒவ்வொரு காட்சிக்கும் பயங்கர ஆரவாரம். அதிலும் அந்தக் கோயிலில் பூசாரி தாக்கப்படுவதும், நீதிமன்றக் காட்சிகளும் வசனமும் ஜனங்களை மிக மோசமான பாதையில் அழைத்துச் செல்லக்கூடியவை' – இவை அந்தக் கடிதத்தில் இருந்த வரிகள். ராஜாஜி முயற்சித்தும் ‘பராசக்தி’ திரைப்படத்தைத் தடைசெய்யும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

கருணாநிதியைப் பார்த்து வியந்துபோன அண்ணா!

‘பராசக்தி’யைத் தடை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்து ஆய்வாளர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் விரிவாக எழுதியிருக்கிறார். மேலும் இதுகுறித்த ஆவணங்களைத் தொகுத்து பத்திரிகையாளர் கடற்கரய் மத்தவிலாஸம், ‘பராசக்தி தடை : அச்சில் வராத அரசாங்க ரகசிய ஆவணங்கள்’ என்ற 1,120 பக்கங்கள் கொண்ட புத்தகமாக உருவாக்கியுள்ளார்.

கலைஞர், மாணவனாக இருந்தபோதே ‘இளமைப்பலி’ என்னும் சிறுகதையை எழுதி, அது ‘திராவிடநாடு’ இதழில் வெளியானது. திருவாரூர் மிலாது நபி விழாவுக்கு வந்த அறிஞர் அண்ணா, அந்த சிறுகதையை எழுதிய கருணாநிதி என்பவர் யார் என்று அறிய விரும்பினார். சிறுவயது பையனைப் பார்த்ததும் வியந்துபோன அண்ணா, படிப்பில் கவனம் செலுத்தச் சொல்லி அறிவுரை சொன்னார்.

கருணாநிதி, அண்ணா

ஆனால் மு.கருணாநிதியோ, அண்ணாவைத் தொடர்ந்து சுயமரியாதை இயக்க, திராவிடர் கழகப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அண்ணாவின் நாடகங்கள் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தானும் நாடகங்கள் எழுதத் தொடங்கினார். பிறகு திரைத்துறையில் நுழைந்து அண்ணாவைவிட வெற்றிகரமான வசனகர்த்தாவாக விளங்கினார்.

தந்தை பெரியாரின் ‘குடி அரசு’ இதழில் கலைஞர் பணிபுரிந்துகொண்டிருந்தபோதுதான், வசனம் எழுதுவதற்கான அழைப்பு கோவை ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்திடமிருந்து வந்தது. கலைஞர் வசனம் எழுதிய முதல் திரைப்படம் ‘ராஜகுமாரி’. பல்வேறு சிறுசிறு வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர் கதாநாயகனாக அறிமுகமான திரைப்படமும் இதுதான். முதல் திரைப்படத்துக்கு வசனம் எழுதும்போது கலைஞரின் வயது வெறும் 23தான்.‘ராஜகுமாரி’யில் தொடங்கிய கலைஞரின் திரைப்பயணம் ‘இளைஞன்’ திரைப்படத்துடன் நிறைவுபெற்றது. 77 திரைப்படங்களில் பங்களித்திருந்தார் கலைஞர் மு.கருணாநிதி.

புராணப் படத்தில் அரசியல்  கருத்தைத் திணித்த கருணாநிதி

முதல் திரைப்படமான ‘ராஜகுமாரி’ வெளியானபோது கலைஞரின் தந்தை முத்துவேலருக்கு கண்பார்வை பழுதாகியிருந்தது. அவரைத் திரையரங்கத்துக்கு அழைத்துச் சென்றார் கலைஞர். மகனின் வசனங்களைக் காதுகுளிரக் கேட்ட முத்துவேலர், "அடுத்து எந்த திரைப்படத்துக்கு வசனம் எழுதுகிறாய்?" என்று கேட்டார். "அபிமன்யு" என்று பதிலளித்தார் கலைஞர். "அந்தப் படம் வெளியாகும்போது நான் உயிருடன் இருப்பேனோ இல்லையோ" என்று பதிலளித்தார். அதேபோல் இரண்டாவது திரைப்படமான ‘அபிமன்யு’ வெளியாகும்போது கலைஞரின் தந்தை முத்துவேலர் உயிருடன் இல்லை.

இரண்டாவது திரைப்படமான ‘அபிமன்யு’ ஒரு புராணக்கதையைக் கொண்ட திரைப்படம். ஆனாலும் அதிலும் தன் அரசியல் கருத்துகளை சாதுரியமாக நுழைத்தார் கலைஞர். “அண்ணா, அது ஆச்சாரியாரின் சூழ்ச்சி!” – இது துச்சாதனன் பேசும் வசனம். ஆச்சாரியார் என்பது ராஜகோபாலாச்சாரியார் என்ற ராஜாஜியையும் அண்ணா என்பது பேரறிஞர் அண்ணாவையும் குறித்தது.

முதல் இரண்டு திரைப்படங்களிலும் கலைஞரின் கைவண்ணம் இடம்பெற்றாலும் டைட்டிலில் அவர் பெயர் இடம்பெறவில்லை. “இன்னும் நீங்கள் வளரவேண்டும். அப்போதுதான் டைட்டிலில் பெயர் போடுவோம்” என்றது ஜூபிடர் பிக்சர்ஸ். ‘மானமிகு சுயமரியாதைக்காரன்’ என்று தன்னை வர்ணித்துக்கொண்ட கலைஞர், ஜூபிடர் பிக்சர்ஸில் இருந்து வெளியேறினார்.

அண்ணாவின் நாடகங்கள் புகழ்பெற்று விளங்கிய காலத்தில்தான் கலைஞர் ‘மந்திரிகுமாரி’ நாடகத்தை அரங்கேற்றினார். தமிழின் ஐஞ்சிறுகாப்பியங்களில் ஒன்றான, பௌத்த இலக்கியமான ‘குண்டலகேசி’யைத் தழுவி எழுதப்பட்ட நாடகம்தான் ‘மந்திரிகுமாரி’. கலைஞரின் ‘மந்திரிகுமாரி’ நாடகத்தைத் திரைப்படமாக்க சேலம் மாடர்ன்ஸ் தியேட்டர்ஸ் முன்வந்தது. இயக்கப் பணிகளில் தீவிரமாகச் செயற்பட்டுவந்த கலைஞர், “நான் மாடர்ன் தியேட்டர்ஸ் அலுவலகத்தில் தங்கினால் இயக்கப் பணிகளில் ஈடுபட முடியாது. எனவே, வெளியில் தங்கியபடியே வசனம் எழுதுகிறேன்” என்றார்.

கலைஞருடன் நட்பு; திமுக மீதுஆர்வம் காட்டத் தொடங்கிய எம்.ஜி.ஆர்.

’மந்திரிகுமாரி’ திரைப்படத்திலும் எம்.ஜி.ஆர் கதாநாயகன். ‘ராஜகுமாரி’, ‘மந்திரிகுமாரி’, ‘மருதநாட்டு இளவரசி’, ‘மலைக்கள்ளன்’ என்று தொடர்ந்து கலைஞரின் வசனங்களின் மூலம் எம்.ஜி.ஆர் என்ற நாயகன் உருவானார். இந்த காலகட்டத்தில் கலைஞருடன் நட்பு ஏற்பட்டுதான், காங்கிரஸ் மீது அபிமானம் கொண்ட எம்.ஜி.ஆர்., தி.மு.க மீது ஆர்வம் காட்டத் தொடங்கினார்.

MGR

எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கத்தில் உருவான ‘மந்திரிகுமாரி’ திரைப்படம் ’ Manthiri kumari is powerful dialogues picture’ என்று ஆங்கிலத்தில் விளம்பரப்படுத்தப்பட்டது. நடிகர்களும் இயக்குநர்களும்தான் உச்சம் பெறுவார்கள் என்பதை உடைத்து வசனகர்த்தாவும் உச்சம் பெற முடியும் என்று நிரூபித்தவர் கலைஞர். பொதுவாக டைட்டிலில் நடிகர்கள் பெயர் திரையில் வரும்போது ரசிகர்கள் ஆரவாரத்துடன் கைதட்டுவார்கள். அப்படிப்பட்ட ஆரவார கைதட்டல் ‘திரைக்கதை வசனம் – மு.கருணாநிதி’ என்ற பெயருக்கும் கிடைத்தது. கலைஞர் எழுதிய திரைப்படங்கள் வணிகரீதியாக வெற்றிபெற்றதைத் தொடர்ந்து வெற்றிகரமான வசனகர்த்தாவாக விளங்கினார் கலைஞர். தான் ஈட்டிய வருமானத்தின் மூலம் அண்ணாவுக்கு முன்பே சொந்தமாக கார் வாங்கும் அளவுக்கு அவர் வெற்றி அமைந்தது.

திராவிட சினிமாக்களிலும் கலைஞரின் பங்களிப்பு

முன்பே சொன்னதுபோல் அண்ணாவுக்கு ‘ராஜா ராணி’ வரலாற்றுப் படங்களுக்கு கதை, வசனம் எழுதும் வாய்ப்பு அமையவில்லை. ஆனால் கலைஞர் ‘ராஜகுமாரி’ தொடங்கி ஏராளமான ‘ராஜா ராணி’ திரைப்படங்களுக்கு வசனம் எழுதினார். அன்றைய காங்கிரஸ் ஆட்சி, காங்கிரஸ் தலைவர்கள், பார்ப்பனியம் ஆகியவற்றை மறைமுகமாக கிண்டலடிக்கும், விமர்சிக்கும் வசனங்களையும் பகுத்தறிவு, சாதி மறுப்பு, திராவிட நாடு, தமிழ்ப்பற்று ஆகியவற்றை முன்வைக்கும் வசனங்களையும் அவர் எழுதினார்.

மேலும் கலைஞர் எழுதியது மன்னர்களைப் பற்றிய திரைப்படங்களாக இருந்தாலும் அதில் மன்னராட்சிக் கூறுகளையும் வலியுறுத்தினார். ‘மந்திரிகுமாரி’ திரைப்படத்தில் படைத்தளபதி மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவராக திரைக்கதையை அமைத்திருந்தார். அதற்குப்பிறகு கலைஞர் பங்களிக்காத திராவிட சினிமாக்களிலும் இது தொடர்ந்தது.

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க: நிறம் மாறும் சினிமா - 7 | அண்ணா – கலைத்துறையில் தம்பிகளை உருவாக்கிய தளபதி!

(சினிமா தொடரும்..)