அறிஞர் அண்ணா PT
சிறப்புக் களம்

நிறம் மாறும் சினிமா - 7 | அண்ணா – கலைத்துறையில் தம்பிகளை உருவாக்கிய தளபதி!

படைப்புகளில் வரும் பாத்திரங்களின் பெயர்களைத் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டுவதையும் திராவிட இயக்கம் தொடங்கிவைத்தது. ‘

சுகுணா திவாகர்

முற்றிலும் மாறானதாக இருந்த அண்ணாவின் கண்ணோட்டம்

தந்தை பெரியார் ஒரு மாபெரும் சிந்தனையாளராகவும் போராளியாகவும் இருந்தாலும் கலை மற்றும் இலக்கியம் குறித்து விலகல் பார்வை கொண்டவராகவே இருந்தார். கலையும் இலக்கியமும் சாதியம், ஆணாதிக்கம் போன்ற பாகுபாடுகளுக்கு எதிரானதாகவும் பகுத்தறிவு கொண்டவையாகவும் இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால் அவர் காலத்திய தமிழ்ப்பண்டிதர்கள் எழுத்துச்சீர்திருத்தத்தைக்கூட ஏற்க மறுத்தவர்களாக இருந்தார்கள். எனவே பெரியாருக்கு கலை, இலக்கியவாதிகள் மீது இத்தகைய விலகல் கண்ணோட்டம் ஏற்பட்டது. ஆனால் அண்ணாவின் கண்ணோட்டமோ, பெரியாரின் கண்ணோட்டத்துக்கு முற்றிலும் மாறானதாக இருந்தது.

கருத்தியலைப் பரப்ப கலையையும் இலக்கியத்தையும் ஆயுதங்களாகப் பயன்படுத்த வேண்டும் என்று எண்ணிய அண்ணாவுக்கு கலை, இலக்கியத்தின் ஆற்றல் தெரிந்திருந்தது. அதனால் திராவிட இயக்க இதழ்களில் தொடர்ந்து கலை, இலக்கியம் குறித்து எழுதினார். திராவிட இயக்க மேடைகளில் தொடர்ந்து கலைஞர்களைப் பயன்படுத்தினார்.

கலை, இலக்கியத்தை வெளிப்படுத்திய அண்ணா

1944-இல் நீதிக்கட்சி திராவிடர் கழகமாகப் பெயர் மாற்றமடைந்து அதன் முதல் மாநாடு 1945இல் திருச்சியில் நடைபெற்றது. அந்த மாநாட்டில், ‘போர்வாள்’ நாடகத்தை நடத்துவதற்காக எம்.ஆர்.ராதாவை அணுகிய அண்ணா, ‘’நாடகம் நடத்த எவ்வளவு பணம் தரவேண்டும்?” என்று கேட்டார். ‘’பொதுவாக ஆயிரம் ரூபாய் வாங்குகிறேன். உங்களுக்காக 500 ரூபாய் வாங்கிக்கொள்கிறேன்’’ என்றார் ராதா. அவர் முதன்முதலில் பங்கேற்ற திராவிடர் இயக்க மேடை அதுதான். பெரியாரோ பணவிஷயத்தில் கறார் தன்மை காட்டும் சிக்கனக்காரர். அவர் ‘’இது போதும்’’ என்று முந்நூறு ரூபாய்தான் தந்தார். அண்ணாதான் தன் நண்பர்களிடம் பணம் வசூலித்து, எம்.ஆர்.ராதாவிடம் 500 ரூபாயாகத் தந்தார். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பற்றி முதன்முதலில் ‘திராவிட நாடு’ இதழில் எழுதியவர் அண்ணாதான் என்பதைக் குறிப்பிட்டிருக்கிறேன். இப்படி தொடர்ச்சியாக கலை, இலக்கியம் குறித்த தனது ஆர்வத்தை அண்ணா வெளிப்படுத்தினார்.

அவ்வை டி.கே,சண்முகம் சகோதரர்களின் ’குமாஸ்தாவின் பெண்’ நாடகம் குறித்து விரிவான விமர்சனத்தை ‘விடுதலை’ இதழில் எழுதிய அண்ணா, அந்த நாடகம் எப்படி அமைந்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அதைப் படித்த டி.கே.எஸ்.சகோதரர்கள் அந்த நாடகத்தின் திரைக்கதையை மாற்றித் தரும்படி அண்ணாவிடம் வேண்டினார்கள். அண்ணாவால் மாற்றித்தரப்பட்ட அந்தக் கதை நூலாக வெளியாகி, பிறகு திரைப்படமாகவும் வெற்றிபெற்றது.

இப்படி தொடர்ந்து கலை மற்றும் கலைஞர்கள் மீது ஆர்வம் காட்டிய அண்ணா தானும் நாடகங்கள், சிறுகதைகள், நாவல்களை எழுதத் தொடங்கினார். தான் எழுதியதுடன் மட்டுமல்லாது, தன் தம்பிகளையும் படைப்புகளை எழுதத் தூண்டினார். அவர்களே தி.மு.க உருவானபோது அண்ணாவின் தளபதிகள் ஆனார்கள்.

அண்ணாவின் ‘நீதிதேவன் மயக்கம்’ நாடகத்தை நடத்திய கே.ஆர்.ராமசாமி, ‘அறிஞர் அண்ணாவின் வசனத்தில் உருவான ‘நீதிதேவன் மயக்கம்’ என்று விளம்பரப்படுத்தினார். ‘அறிஞர்’ என்று அண்ணா முதன்முதலில் அழைக்கப்பட்டது அப்போதுதான். அண்ணா கலையில் ஆர்வம் காட்டிய அதேநேரம், அது தன் இயக்க மற்றும் கொள்கைப்பணிக்கு வலுசேர்க்க உதவ வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அண்ணாவின் ’குமாஸ்தாவின் பெண்’ நாடக விமர்சனத்தையும் முதல் நாடகமான ‘சந்திரோதய’த்தையும் பார்த்த ஒரு படக்குழுவினர், தாங்கள் தயாரிக்கும் திரைப்படத்துக்கு கதை, வசனம் எழுதித்தருமாறு கேட்டார்கள். திராவிட இயக்க நடிகரான டி.வி.நாராயணசாமியை நாயகனாக நடிக்க வைத்தால், தான் வசனம் எழுதித் தருவதாக அண்ணா சொன்னார். படக்குழு அதை ஏற்காததால் அந்த முயற்சி ஈடேறவில்லை.

இந்த தொடரையும் படிக்க: வடக்கு வாசல் - 3 | திக்விஜய் சிங் Vs கமல்நாத்.. ம.பியில் முடிவுக்கு வரும் காங். சீனியர்ஸ் ஆட்டம்?

திரைப்படங்களாக உருவெடுத்த அண்ணாவின் எழுத்துகள்!

அதேபோல் சாண்டோ சின்னப்பர்(தேவர்) ‘’என்னிடம் காளை, குதிரை, நாய், புலி, சிங்கம் இருக்கிறது. அதற்கேற்றாற்போல் ஒரு கதை எழுதித் தரவேண்டும்’’ என்று கேட்டார். ‘’உங்களிடம் அவை இருப்பதற்காக அதற்கேற்ப கதை எழுதித் தர முடியாது’’ என்று மறுத்துவிட்டார் அண்ணா. எஸ்.எஸ்.வாசன் தயாரித்து, கே.பி.சுந்தராம்பாள் நடித்த ‘அவ்வையார்’ திரைப்படத்துக்கு பல பிரபலங்களிடம் பாராட்டு வரிகள் பெற்று நாளிதழ்களில் விளம்பரமாகப் பிரசுரித்துவந்தார்கள். அண்ணாவை அணுகியபோது, ‘’பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த பல அவ்வையார்களை இணைத்து ஒரே அவ்வையாராக மாற்றிய திரைப்படத்தைப் பாராட்ட முடியாது’’ என்று மறுத்துவிட்டார். இப்படி கலை குறித்த கறாரான நிலைப்பாடு கொண்டவராகத் திகழ்ந்தார் அண்ணா.

அண்ணாவின் எழுத்துகள் பத்து திரைப்படங்களாக உருவெடுத்தன. அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’, ‘வண்டிக்காரன்’ கதைகளுக்கு கலைஞர் வசனம் எழுதினார். அண்ணாவின் முதல் படம், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தயாரிப்பில் உருவான ‘நல்லதம்பி’. அவரது இரண்டாவது திரைப்படமான ‘வேலைக்காரி’ அவருக்குப் புகழ் பெற்றுத்தந்தது. ’வேலைக்காரி’யும் நாடகமாக இருந்து திரைப்படமான படைப்புதான். அந்த நாடகத்துக்கு வந்த எதிர்ப்பு குறித்து அண்ணா இப்படி குறிப்பிடுகிறார்.

”பதினைந்து ஆண்டுகளுக்கு முன் 'வேலைக்காரி' நாடகம் எழுதினேன். வேதாசல முதலியார் என்பவரின் கெட்ட நடத்தையை எடுத்துக் காட்டினேன். அதைப் பார்த்த ஒருவர் - தஞ்சையைச் சேர்ந்தவர் - எனக்கு ஒரு கடிதம் எழுதினார். மிகவும் ஆத்திரப்பட்டு! போயும் போயும் கேவலமாக எழுத, ’முதலியார் தானா கிடைத்தார் உங்களுக்கு?' என்று எழுதியிருந்தார். அதே கதையில், 'வேலைக்காரி’ வன்னிய சமூகத்தைச் சார்ந்தவர் என்று எழுதியிருந்தேன்; அதைப் பற்றி தென்னாற்காட்டிலிருந்து ஒருவர் வன்மையாகக் கண்டித்துக் கடிதம் எழுதினார். அப்படியிருந்தும் நான் தஞ்சைக்குப் போய் – தென்னாற்காட்டிற்குப் போய் உருப்படியாக வந்திருக்கிறேன். அப்படிப்பட்ட குறுகிய எண்ணமுடையவர்கள் சமுதாயத்தில் ஓரிருவர்தான் இருப்பார்கள். அதற்காகப் பயந்து நாம் நினைப்பதை எழுதாமல் இருக்கக்கூடாது. மனம் புண்பட்டுவிடும் என்று பயப்படக்கூடாது’

’வேலைக்காரி’ என்னும் டைட்டிலில் ஒரு திரைப்படம் வெளியாகுவது அன்றைய காலகட்டத்தில் ஒரு கலைப்புரட்சியே.

அண்ணா - காமராசர் முதன்முதலில் சந்திப்பு

அண்ணாவின் ‘ஓர் இரவு’ திரைப்படத்துக்கான திரைக்கதை, வசனத்தை அண்ணா, ஏ.வி.எம் நிறுவனத்துக்காக ஒரே இரவில் எழுதித் தந்தார். கதையும் ஒரே இரவில் நடக்கக்கூடிய சம்பவம்தான். எப்படி தமிழ் சினிமா வரலாற்றில் முதல் ஆந்தாலஜி படத்தில் கலைவாணர் நடித்தாரோ, அதுபோல் தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முதலாக பிளாஷ்பேக் காட்சி இடம் பெற்ற திரைப்படம், அண்ணாவின் ‘ஓர் இரவு’.

லட்சுமிகாந்தன் கொலைவழக்கில் சிறைப்பட்டு விடுதலையான தியாகராஜ பாகவதருக்காக ‘மதிவாணன்’ என்னும் நாடகத்தையும் கலைவாணருக்காக ‘நல்லதம்பி’ திரைக்கதையையும் அண்ணா எழுதியிருந்தார். கலைவாணர் ‘நல்லதம்பி’யைத் திரைப்படமாக்கினார். பாகவதரோ ‘மதிவாணன் நாடகத்தில் நாத்திக கருத்துகள் நிரம்பியிருக்கின்றன’ என்று நடிக்க மறுத்துவிட்டார். பிறகு இந்த நாடகம் ‘சொர்க்கவாசல்’ என்னும் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தை, தயாரிப்பாளர்கள் காமராசருக்குத் திரையிட்டுக் காண்பித்தனர். அதுதான் அண்ணா காமராசரை நேரில் முதன்முதலில் சந்தித்த நிகழ்ச்சி.

கறுப்பு-வெள்ளை திரைப்பட காலத்தில் உண்மையான வரலாற்று நிகழ்வுகளைக் கொண்ட சரித்திரப்படங்களும் கற்பனையான சம்பவங்களைக் கொண்ட ‘ராஜாராணி’ திரைப்படங்களும் வெளியாகின. கலைஞர், என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர் உள்ளிட்ட எல்லாக் கலைஞர்களும் இத்திரைப்படங்களில் பங்களிப்பை வழங்கியவர்கள். ஆனால் அண்ணா ஒரே ஒரு ராஜாராணி திரைப்படத்துக்குக்கூட கதை, வசனம் எழுதியதில்லை. அவர் எழுதியது எல்லாமே சமூகப்படங்களே. ‘ரோமாபுரி ராணிகள்’, ‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்’ போன்ற சரித்திரப்படைப்புகளை எழுதியிருந்தாலும் அண்ணாவுக்கு சரித்திர சினிமாக்களுக்கு எழுதும் வாய்ப்பு அமையவில்லை.

‘கூத்தாடிகள்’ என்று இகழப்பட்ட கலைஞர்களுக்கும் புறக்கணிக்கப்பட்ட அடித்தட்டு மக்களுக்காக உழைத்த கலைஞர்களுக்கும் திராவிட இயக்கம் பட்டங்களை அடைமொழிகளை வழங்கி கௌரவித்தது. அண்ணாவின் ‘சந்திரமோகன் அல்லது சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்’ நாடகத்தில் நடித்த வி.சி.கணேசன், சிவாஜி கணேசன் ஆனார். பெரியார், அறிஞர், கலைஞர், கலைவாணர், நடிகவேள், புரட்சி நடிகர், லட்சிய நடிகர், நடிப்பிசைப்புலவர், நடிகமணி என்றெல்லாம் பட்டங்களால் அவர்கள் அழைக்கப்பட்டார்கள்.

பண்பாட்டு மரபுகளைத் தொடங்கிவைத்த திராவிட இயக்கம்

படைப்புகளில் வரும் பாத்திரங்களின் பெயர்களைத் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டுவதையும் திராவிட இயக்கம் தொடங்கிவைத்தது. ‘வேலைக்காரி’ நாயகப் பாத்திரம் ஆனந்தன், ‘சொர்க்கவாசல்’ நாயகப்பாத்திரம் மதிவாணன். கே.ஆர்.ராமசாமி தன் குழந்தைகளுக்கு ஆனந்தன், மதிவாணன் என்று பெயர் சூட்டினார். ‘சந்திரமோகன்’ நாடகத்தில் நடித்த டி.வி.நாராயணசாமி தன் மகனுக்கு சந்திரமோகன் என்ற பெயரைச் சூட்டினார். இப்படி பல பண்பாட்டு மரபுகளைத் திராவிட இயக்கம் தொடங்கிவைத்தது.

அண்ணா தான் மட்டும் கலைத்துறையில் இயங்கவில்லை. தன் தம்பிகளையும் சிறுகதைகள், நாவல்கள் எழுத, பத்திரிகைகள் நடத்த, நாடகங்கள், திரைப்படங்களில் எழுத ஊக்குவித்தார். அதனால்தான் திராவிட கலை இலக்கிய மறுமலர்ச்சி சாத்தியமானது.

இந்தத் தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க: நிறம் மாறும் சினிமா - 6 | கவர்னர், முதலமைச்சர் பதவி வேண்டாம்! – எம்.ஆர்.ராதா என்னும் கலகக்காரன்!

(சினிமா தொடரும்..)