கலைஞர் மு.கருணாநிதி pt web
சிறப்புக் களம்

நிறம் மாறும் சினிமா 3: திராவிடம் முழங்கிய பாரதிதாசனும் கலைஞர் என்னும் கலகக்காரும்

புனிதத்திலேயே பெரும் புனிதம் கடவுள். அக்கடவுள் மீது கல்லெறிந்தது கலைஞரின் பேனா. அந்த ஒற்றை வசனம் மிகப்பெரும் தாக்கத்தை 1952ல் தமிழ்ச்சமூகத்தில் ஏற்படுத்தியது. ‘பராசக்தி’ படத்துக்குத் தடை கோரி எதிர்ப்புகள் எழுந்ததற்கு காரணமும் அந்த வசனம்தான்.

சுகுணா திவாகர்

திரௌபதி வஸ்திராபணம், மோகினி அவதாரம், காளிதாஸ், லவகுசா, மயில் ராவணன், மார்க்கண்டேயன், ஸ்ரீ கிருஷ்ண லீலா, போஜராஜன், சக்தி கௌசல்யா – இவையெல்லாம் திராவிட இயக்கம் தமிழ் திரையுலகிற்குள் நுழைவதற்கு முன்பு வெளியான தமிழ் சினிமாக்களின் டைட்டில்கள். திராவிட சினிமாக்களின் முதல் சாதனை என்பது இந்த டைட்டில்களை மாற்றியமைத்ததுதான்.

ஒரு முழுமையான மாற்றம் என்பது வடிவம், உள்ளடக்கம் என்னும் இரண்டிலும் நிகழும் மாற்றம்தான். வடிவம் என்பது முதலில் பெயரில் இருந்துதான் தொடங்குகிறது. ‘மதமாற்றம் என்பது அடிப்படையில் பெயர் மாற்றம்தான்’ என்றார் அண்ணல் அம்பேத்கர். மதமாற்றத்தை ஆதரித்த தந்தை பெரியாரும் இதையே சொன்னார். முனுசாமி என்ற தலித் 4 மணிக்கு இஸ்லாத்தைத் தழுவி முஸ்தபாவாக மாறும்போது சாதிய இழிவு நீங்குகிறது என்றால் அதை, தான் ஆதரிப்பதாக அவர் சொன்னார். மோட்சம் என்பதைவிட சாதிய அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை அடைவதற்காகவே தான் மதமாற்றத்தை ஆதரிப்பதாகவும் சொன்னார்.

திராவிட இயக்கத்தின் வருகைக்குப் பிறகு ‘நமஸ்காரம்’ ஒழிந்து ’வணக்கம்’ ஆனது. இன்று தென்மாநிலங்களில் உள்ள ஒரு செய்தி சேனல்கூட செய்தி வாசிக்கும்போது ‘நமஸ்காரம்’ என்று வடமொழியில் தொடங்குவதைப் பார்க்கிறோம். ஆனால் தமிழ்நாட்டில் ‘வணக்கம்’ நீக்கமற நிறைந்திருக்கிறது என்றால் அது திராவிட இயக்கத்தால்தான் சாத்தியமானது. ‘அபேட்சகர்’ என்னும் சொல் ‘வேட்பாளர்’ ஆனது. ‘அக்கிராசனர்’ என்னும் சொல் ‘தலைவர்’ என்றானது. ‘ஸ்ரீ’ மறைந்து ‘திரு’ ஆனது. இப்படி திராவிட இயக்கம் பொதுவெளியில் நிகழ்த்திய மாற்றத்தை திரைவெளியிலும் நிகழ்த்திக்காட்டியது.

கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட டைட்டில்களைப் பாருங்கள். திரௌபதி வஸ்திராபணம், மோகினி அவதாரம், காளிதாஸ், லவகுசா, மயில் ராவணன், மார்க்கண்டேயன், ஸ்ரீ கிருஷ்ண லீலா, போஜராஜன், சக்தி கௌசல்யா – இவற்றுக்கு மாறாக ‘வேலைக்காரி’ என்னும் டைட்டில் ஒரு திரைப்படத்துக்கு வைக்கப்பட்டது என்றால் அது எவ்வளவு பெரிய புரட்சி! ஒரு பெண்ணின் பெயர், அதுவும் அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் பெயர் ஒரு திரைப்படத்தின் பெயராக மாறும் அளவுக்கான நெகிழ்ச்சியை திராவிட சினிமா உருவாக்கியது.

திராவிட சினிமாவுக்கு முன் தமிழ் சினிமாக்களின் டைட்டில்கள் முதல் பாடல்கள் வரை சமஸ்கிருதம் நிரம்பி வழிந்தது. பெரும்பாலான திரைப்படங்களின் கதை என்பது பகுத்தறிவுக்கு எதிரான புராணக்கதைகளே. பெண்களை அடிமைப்படுத்தும், சாதிய ஒடுக்குமுறையை நியாயப்படுத்தும் மனநிலை இயல்பானதாக சித்திரிக்கப்பட்டது. ஆனால் திராவிட சினிமாக்கள் இவற்றை எல்லாம் கேள்விக்குட்படுத்தின. கேள்விக்குட்படுத்தியது மட்டுமல்லாமல் மாற்றுக்கதையாடல்களையும் முன்வைத்தன.

திராவிட இயக்கத்தில் இருந்து நாடகங்களிலும் சினிமாக்களிலும் பங்களித்த கலைஞர்கள் ஏராளம்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், அறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி, நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி, நடிகவேள் எம்.ஆர்.ராதா, நடிகர் திலகம் சிவாஜிகணேசன், எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ராஜேந்திரன், கண்ணதாசன், டி.வி.நாராயணசாமி, ராம. அரங்கண்ணல், திருவாரூர் தங்கராசு, ஏவிபி ஆசைத்தம்பி, முரசொலிமாறன், கே.ஜி.ராதாமணாளன், ஏ.கே.வேலன், எஸ்.எஸ்.தென்னரசு, ஏ.கே.வில்வம், சொர்ணம், இரா.செழியன், சுரதா என்று ஒரு நீண்ட பட்டியல் உண்டு.

திராவிட சினிமா ஆளுமைகளின் பட்டியல் நீண்டது என்பதால் முக்கியமான ஐந்து ஆளுமைகளைப் பற்றி மட்டும் இந்த தொடரில் பார்ப்போம். திராவிட இயக்கத்திலிருந்து முதன்முதலில் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். 1935ல் ‘கவி காளமேகம்’ திரைப்படத்துக்கு கதை, வசனம், பாடல்கள் அமைக்குமாறு பாரதிதாசனை கேட்டுக்கொண்டவர் ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’ சுந்தரம். அதாவது ‘திராவிடர் கழகம்’ என்னும் அமைப்பு உருவாகுவதற்கு முன்பே பாரதிதாசன் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்துவிட்டார்.

பாரதிதாசன் தமிழ் இலக்கியத்தில் பெருவெடிப்பை நிகழ்த்தியவர். அவரது புரட்சிகரமான கவிதைகளும் அழகியல் கவிதைகளும் தனித்துவமானவை. ‘குயில்’ இதழ் ஆசிரியராகவும், திராவிடர் கழக செயற்பாட்டாளராகவும் பாரதிதாசன் முக்கியமான ஆளுமை. அதேநேரம் அவரது உயரத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் அவருடைய திரைப்பட பங்களிப்புகள் அமையவில்லை என்பதே உண்மை. திராவிட இயக்க கருத்தியலை அழுத்தமாகச் சொல்லும் அளவிற்கான வாய்ப்புகள் பாரதிதாசனுக்கு ஏற்படவில்லை. ஓர் இயக்கமாக திராவிட இயக்கத்தினர் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்து அதன் முகத்தையே மாற்றியமைக்கும் காலத்துக்கு முன்பாகவே நுழைந்துவிட்டதால், தனியொரு மனிதராக அவரால் பெரும் மாற்றங்களை ஏற்படுத்த முடியவில்லை என்று புரிந்துகொள்ளலாம்.

இராமாநுஜர், பாலாமணி அல்லது பக்காத்திருடன், கவி காளமேகம், சதி சுலோசனா, ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி, பொன்முடி, வளையாபதி ஆகிய படங்களுக்கு பாரதிதாசன் பங்களித்தார். இவற்றில் சில படங்கள் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டவை. சில படங்கள் வெறுமனே புனைவுகளே. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் ஆகிய பங்களிப்புகளைப் பாரதிதாசன் செய்தார். அவர் பங்களித்த படங்களில் ஓரளவு திராவிட இயக்க கருத்தியல் பிரதிபலித்த திரைப்படம் என்று ‘பொன்முடி’யை மட்டும் சொல்லலாம்.

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் பாரதிதாசனின் ‘எதிர்பாராத முத்தம்’ என்னும் கதையையே ‘பொன்முடி’ என்னும் திரைப்படமாக எடுத்தனர். கதை மட்டும்தான் பாரதிதாசன். பாடல்கள் மருதகாசி மற்றும் கா.மு.ஷெரிப். திரைப்படத்தின் முதல்பகுதியின் வசனங்களை ஜலகண்டபுரம் ப.கண்ணன் என்பவரும் பிற்பகுதி வசனங்களை கலைஞர் மு.கருணாநிதியும் எழுதியதாக 05.03.1950 ‘திராவிட நாடு’ இதழ் குறிப்பிடுவதைத் திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு சுட்டிக்காட்டுகிறார். அதேநேரம் கலைஞர் இந்த ‘பொன்முடி’ திரைப்படம் குறித்து எங்கும் தன் எழுத்தில் பகிர்ந்துகொள்ளாதது குறித்தும் க.திருநாவுக்கரசு ஆச்சர்யத்துடன் சுட்டிக்காட்டுகிறார். ஆனால் ஒரு காட்சி, கலைஞரின் பங்களிப்பு ‘பொன்முடி’ திரைப்படத்துக்கு இருந்ததற்கான சான்று என்று சொல்லலாம்.

படத்தின் நாயகனான பொன்முடி உள்ளிட்ட வணிகர்கள் வடநாட்டுப்பயணம் மேற்கொள்ளும்போது வடக்கில் இருக்கும் காபாலிகர்கள் என்னும் இனத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ் வணிகர்களிடம் எப்படியாவது பொய் சொல்லி பணம் பறிக்கலாம் என்று திட்டமிடுகிறார்கள். அவர்கள் ஆதிவாசி தோற்றத்தில் இருந்தாலும் பூணூல் அணிந்திருக்கிறார்கள்

‘’கோயில் கட்டுகிறோம் என்று சொல்லி பணம் கேட்கலாமா?” என்கிறான் ஒருவன். ‘’தமிழர்கள் தர்ம சிந்தனை கொண்டவர்கள். யாகம் செய்ய தர்மம் வேண்டும் என்று கேட்போம்’’ என்கிறான் தலைவன்.

வணிகர்களிடம் வடநாட்டவர்கள் தர்மம் கேட்க, வணிகர்கள் ‘’எதற்கு தர்மம்?” என்று கேட்கிறார்கள். ’’மன்னவன் செங்கோல் வாழ, மனுமுறை வாழ, நான்குவேதங்களின் அடிப்படையிலான (வர்ணாசிரம) தர்மம் தழைக்க, ஆயிரம் பசுக்களைக் கொன்று யாகம் செய்ய தர்மம் வேண்டும்’’ என்கிறான் பூணூல் அணிந்த வடநாட்டு தலைவன்.

‘’ஏதாவது செய்வோமா?’’ என்று வணிகர்கள் ஆலோசிக்கும்போது அங்கே வரும் நாயகன் பொன்முடி, ‘’கூடவே கூடாது. இவர்களுக்கு தர்மம் செய்வதே பாவம்’’ என்கிறான்.

‘’ஏனப்பா அப்படி சொல்கிறீர்? நாங்கள்தான் புண்ணியத்தின் சொரூபங்கள்’’ என்கிறார் அந்த பூணூல் அணிந்த வடவர்.

’’அதனால்தான் துணிந்து பாவம் செய்கிறீர்கள், யாகம் என்று சொல்லிக்கொண்டு’’ என்கிறான் பொன்முடி.

’’யாகம் செய்வது பாவமா?” என்று கோபப்படும் வடவரிடம், ’’நாங்கள் தமிழர்கள். தென்னாட்டவர்களான நாங்கள் யாகம் செய்வதை ஏற்பதில்லை’’ என்கிறான் பொன்முடி.

‘’ஏதாவது தர்மம் செய்துவிடுவோமே’’ என்று சொல்லும் சக வணிகரிடம் ‘’நீதியான காரியங்களுக்கு தர்மம் செய்ய தமிழன் தயங்க மாட்டான். அக்கிரமான காரியத்துக்கு அரைக்காசுகூட கொடுக்க மாட்டான்’’ என்கிறான் பொன்முடி.‘’அன்னையே பராசக்தி, உன்னையே நிராகரித்துவிட்டார்கள். நீதான் அவர்களுக்கு புத்தி புகட்ட வேண்டும்’’ என்று அங்கிருந்து செல்லும் காபாலிகர்கள், தமிழ் வணிகர்கள் பயணம் மேற்கொள்ளும்போது அவர்களைப் பிடித்துவந்து. பொன்முடியைக் கட்டிப்போட்டு காளிக்குப் பலியிட முயல்கின்றனர்.

‘’நம் சாஸ்திரம் மோட்ச சாம்ராஜ்ஜியத்துக்கு வழிகாட்டி. நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் அன்னை பராசக்திக்காக. அதை இகழ்ந்துவிட்டான் இந்த பாவி. இப்போதாவது மாகாளியிடம் மன்னிப்பு கேள்’’ என்கிறான் வடவர் தலைவன்.

‘’மனித வேட்டையாடும் உன்னைப் பார்த்து மகிழ்ந்திருக்கும் இந்த மாகாளியிடமா மன்னிப்பு? மன்னிப்பு தமிழன் சரித்திரத்திலேயே கிடையாது’’ என்பதுடன் ‘’ஏன் பேசாமல் இருக்கிறாய்?’’ என்று காளி சிலையிடமே கேட்கிறான் பொன்முடி. அவனைக் கொல்லப் போகும்போது, ஆண்வேடத்தில் இருக்கும் பொன்முடியின் காதலி பூங்கொடி தலைமையிலான படை வந்து போரிட்டு அவர்களைக் காப்பாற்றுகிறது.

இந்த காட்சிகளின் வசனங்கள் முழுவதிலும் தமிழ்வீரம், வடவர் ஆதிக்க எதிர்ப்பு, மனுதர்ம எதிர்ப்பு, வர்ணாசிரம எதிர்ப்பு, சாஸ்திர எதிர்ப்பு ஆகியவை நிறைந்திருக்கின்றன. ‘ஆண்மை என்றால் வீரம்’ என்பது தலைகீழாக்கப்பட்டு, ஒரு பெண் தலைமையிலான படையே ஆண்களைக் காப்பாற்றுவதாக சித்திரிக்கப்பட்டிருக்கிறது.

கட்டிப்போடப்பட்டிருக்கும் பொன்முடி பேசும் வசனங்கள் ‘மனோகரா’ திரைப்பட வசனங்களை நினைவுபடுத்துகிறது என்றால், காளியை நோக்கி பொன்முடி எழுப்பும் கேள்விகள், ‘அம்பாள் எந்த காலத்திலடா பேசினாள்?’ என்னும் ‘பராசக்தி’ வசனத்தை நினைவுபடுத்துகிறது.

புனிதத்திலேயே பெரும் புனிதம் கடவுள்தான். அந்த கடவுள் மீது கல்லெறிந்தது கலைஞர் என்னும் கலகக்காரரின் பேனா. அந்த ஒற்றை வசனம் மிகப்பெரும் தாக்கத்தை 1952ல் தமிழ்ச்சமூகத்தில் ஏற்படுத்தியது. ‘பராசக்தி’ படத்துக்குத் தடை கோரி எதிர்ப்புகள் எழுந்ததற்கு காரணமும் அந்த வசனம்தான்.

ஆனால் ‘பராசக்தி’க்கு முன்பே இந்த கேள்வியை கலைஞர் தன் படைப்பில் முன்வைத்ததைக் கவனப்படுத்துகிறார் நாடகச்செயற்பாட்டாளர் மு.இராமசுவாமி.

1947ல் நடத்தப்பட்ட நாடகம் கலைஞரின் ‘தூக்குமேடை’. அந்த நாடகத்தில் பூசாரி, மாரி என்ற பெண்ணைக் கையைப் பிடித்து இழுக்கிறான். ’ மருத்துவர்கள் பெண்களின் கையைப் பிடித்து பார்ப்பதில்லையா, அதேபோல் பகவானுக்கு நெருக்கமான நாங்களும் பெண்களின் கையைத் தொட்டால் குற்றம் ஆகாது’ என்று அந்த பூசாரி சொல்கிறான். அப்போது அந்தப் பெண்ணின் அண்ணன் மாரியம்மன் சிலைக்குப் பின்னால் இருந்து பேசுகிறான். ’யாரு மாரியாத்தாவா பேசுவது?’ என்று கேட்கிறான் பூசாரி. ‘எந்தக் காலத்திலடா மாரியாத்தாள் பேசினாள்? மாரியாத்தாள் உனக்கு தாய், என் தங்கை மாரி உனக்கு தாசி. அட மூடனே’ என்று அந்தக் காட்சியில் வசனம் வருகிறது.

1947ல் ‘தூக்குமேடை’யில் மாரியாத்தா, 1950 ‘பொன்முடி’யில் காளி, 1952ல் ‘பராசக்தி’யில் அம்பாளை எதிர்த்த கலக வசனமாக பரிணமிக்கிறது.

‘பொன்முடி’யில் காட்டப்படும் காபாலிகர்கள் ஆதிவாசிகளைப் போல் சித்திரிக்கப்பட்டு பழங்குடி நடனமே ஆடுகிறார்கள். ஆனாலும் பூணூல் அணிந்தபடி வர்ணாசிரமத்தையும் மனுதர்மத்தையும் போற்றி வசனம் பேசுகிறார்கள். ‘பராசக்தி’யில் காளி சிறுதெய்வம், பூஜை செய்வது பூசாரி. ஆனால் வசனத்தில் பார்ப்பன வழக்கான ‘அம்பாள்’ வருகிறாள்.

நேரடியான பார்ப்பன சித்திரிப்பு தணிக்கை சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதால் அதை தவிர்த்து, வசனத்தில் பார்ப்பனிய எதிர்ப்பை திறமையாக கொண்டுவந்திருக்கிறார் கலைஞர்.

இனி பாரதிதாசனுக்கு வருவோம். பின்னாளில் அண்ணா, கலைஞருக்கு அமைந்ததைப் போன்ற வாய்ப்புகள் தொடக்க காலத்தில் பாரதிதாசனுக்கு அமையவில்லை. தன் இறுதிக்காலத்தில் ‘பாண்டியன் பரிசு’ காவியத்தைத் திரைப்படமாக்கும் முயற்சியிலும் தோல்வியடைந்தார். அதேநேரத்தில் பாரதிதாசன் பங்களிப்பின் இடைவெளியை அவரது பாடல்கள் நிரப்பின.

கலைஞரின் ‘பராசக்தி’ திரைப்படமே பாரதிதாசனின் ‘வாழ்க வாழ்கவே வாழ்கவே வளமார் எங்கள் திராவிட நாடு’ பாடலுடன்தான் தொடங்கியது. ’துன்பம் நேர்கையில்’, ’சங்கே முழங்கு’, ’தமிழுக்கும் அமுதென்று பேர்’, ’புதியதோர் உலகம் செய்வோம்’ என்று பாரதிதாசனின் பாடல்கள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன.

பாரதிதாசன் உயிருடன் இருந்தவரை கண்ணதாசன் கவியரசு என்று அழைக்கப்படவில்லை என்ற தகவலையும் திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு குறிப்பிடுகிறார். பாரதிதாசன்மீது பெரும் மரியாதை கொண்ட பாடலாசிரியர்கள் தொடர்ந்து திரையுலகில் இயங்கினர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ’பாரதிதாசன் வாழ்க’ என்று எழுதிவிட்டுத்தான் பாடல் எழுத தொடங்குவாராம். உவமைக்கவிஞர் சுப்புரத்தின தாசன் என்னும் சுரதா ‘அமுதும் தேனும் எதற்கு?’ போன்ற பல புகழ்பெற்ற பாடல்களை எழுதியுள்ளார்.

இங்கு ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். திராவிட சினிமா மேலெழுந்து உச்சத்தை அடைந்த காலத்தில்தான் தமிழ் சினிமாக்களில் பாரதிதாசன் பாடல்கள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. திராவிட சினிமாக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தபோது பாரதிதாசனின் பாடல்களுக்கான இடமும் குறைந்தது.

பாரதிராஜா, பாலச்சந்தர் காலகட்டத்தில் பாரதியே முற்போக்குத் திருவுருவாக முன்வைக்கப்பட்டார்.

பாரதியைவிடவும் தீவிரப் பெண்ணியச் சிந்தனையாளர் பெரியார்தான். பாரதியார் பெண்ணுரிமை சார்ந்து எழுதியிருந்தபோதும் அவருக்குள் இருந்த பார்ப்பனிய, இந்து தேசிய சிந்தனைகள் வரம்புக்குட்பட்ட பெண்ணியத்தையே முன்வைத்தன. ஆனால் பாரதியே பெண்ணியச் சிந்தனையாளராக மீண்டும் மீண்டும் தமிழ் சினிமாக்களில் முன்வைக்கப்பட்டார். ’மனதில் உறுதி வேண்டும்’, ‘புதுமைப்பெண்’, ‘அச்சமில்லை அச்சமில்லை’ என்று பாரதியின் வரிகள் டைட்டில்கள் ஆயின. பாரதியின் திருவுருவாக்க காலத்தில் பாரதிதாசன் ஓரம்கட்டப்பட்டார்.

நீண்ட இடைவெளிக்குப் பின் வேலுபிரபாகரனின் ‘புரட்சிக்காரன்’ திரைப்படத்தில் ‘தூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம்’ (2000), கரு.பழனியப்பனின் ‘சிவப்பதிகாரம்’ திரைப்படத்தில் ’கொலைவாளினை எடடா’ (2006), கௌதம் வாசுதேவ் மேனனின் ‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படத்தில் ‘அவளும் நானும்’ (2016) ஆகிய பாடல்கள் இடம்பெற்றன.

தொடரும்..