தொடக்கத்தில் சினிமா என்ற ஊடகம் இந்திய சமூகத்திற்குள் நுழைந்தபோது அதை மேட்டுக்குடியினர் ஒவ்வாமையுடன், வெறுப்புடன் பார்த்ததாக ஆய்வாளர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் குறிப்பிடுகிறார். எல்லாச் சாதியினரும், எல்லா வர்க்கத்தினரும் ஒரே இடத்தில் அமர்ந்து சினிமா பார்க்கும் சாத்தியத்தை திரையரங்கம் வழங்கியதுதான் காரணம். அதற்குமுன்பு பொதுவெளி என்ற ஒன்றில்லை. உணவகங்களில் ‘பிராமணர்கள் சாப்பிடும் இடம்’ என்று எழுதப்பட்டிருந்தது. நாடகக் கொட்டகைகளில் ’பஞ்சமர்க்கும் தொழுநோயாளிகளுக்கும் அனுமதியில்லை’ என்று எழுதப்பட்டிருந்தது. ‘ஒடுக்கப்பட்ட மக்களை ஏற்ற மறுக்கும் பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும்’ என்று நீதிக்கட்சி ஆட்சியில் அமைச்சர் சௌந்தர பாண்டியனார் அரசாணை வெளியிடும் அளவுக்கு தீண்டாமை நிலவியது. ‘பொதுவெளிகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடமாடுவதற்கு சட்டம் இயற்றப்பட வேண்டும்’ என்று சட்டமன்றத்தில் எம்.சி.ராஜா தீர்மானம் கொண்டுவர வேண்டியிருந்தது.
28.12.1937 அன்று அன்றைய தஞ்சை மாவட்ட நீடாமங்கலம் கிராமத்தில், ‘தென் தஞ்சை ஜில்லா காங்கிரசின் மூன்றாவது அரசியல் மாநாடு’, பின்னாளில் சென்னை மாகாணத்தின் முதலமைச்சரான ஓமந்தூர் ராமசாமி தலைமையில் நடந்தபோது, ‘ஜாதி மதபேதமின்றி’ அனைவரும் விருந்துண்ண வரலாம் என்ற ‘சமபந்தி’ உணவுக்கான அழைப்பை ஏற்று மாநாட்டை வேடிக்கை பார்க்க வந்த, ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் பந்தியில் சாப்பிட அமர்ந்தனர். அவர்கள் உணவருந்திக் கொண்டு இருந்தபோதே கடுமையாகத் தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர். அடுத்த நாள், அவர்கள் வேலை பார்க்கும் பண்ணைகளுக்கும் தகவல் தரப்பட்டு அங்கும் அவர்கள் தாக்கப்பட்டனர். மரத்தில் கட்டிவைத்து அடித்து சாணிப் பாலை வாயில் ஊற்றி, மொட்டை அடித்து, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி ஊர்வலமாக அழைத்துப் போய் அவமானப்படுத்தப்பட்டனர். தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கமே இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து சட்டப்போராட்டம் நடத்தியது. ‘குடி அரசு’ இதழில் எழுதியும் தமிழ்நாடு முழுவதும் பரப்புரை செய்தும் போராடியது. ‘சமபந்தி’ என்று சொல்லப்பட்ட நிகழ்வின் தன்மையே இப்படியாகத்தான் இருந்தது.
இப்படி ‘பொதுவெளி’ என்ற ஒன்றே இல்லாத தமிழ்ச் சூழலில்தான் திரையரங்கம் ‘பொதுவெளி’யை உருவாக்கியது. இதுதான் மேட்டுக்குடியினரை சங்கடத்துக்கு உள்ளாக்கியது. அதேநேரத்தில், எந்த மேட்டுக்குடியினர் திரையரங்கை வெறுத்தார்களோ கொஞ்சம் கொஞ்சமாக அவர்களும் திரைத்துறையில் பங்குபெறத் தொடங்கினர். மேட்டுக்குடியினரின் ஆதிக்கத்தைத் தக்கவைக்கும் கருத்தியலே தொடக்ககாலத் தமிழ் சினிமாக்களில் செல்வாக்கு பெற்றது. எந்த நிலை செல்வாக்கு பெறுகிறதோ, அதைக் கைப்பற்றுவது ஆளும் வர்க்கத்தின் இயல்பு. இதற்கு வரலாற்றில் இருந்தே ஓர் உதாரணத்தைச் சொல்ல முடியும்.
இப்போது ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ் தேர்வுகள் இருப்பதைப்போல் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஐ.சி.எஸ் தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வுகள் லண்டனில் நடைபெற்றன. இந்திய தேசியவாதிகள் ‘ஐ.சி.எஸ் தேர்வுகள் இந்தியாவில்தான் நடத்தப்பட வேண்டும்’ என்று குரல் எழுப்பியபோது, ‘இல்லையில்லை, ஐ.சி.எஸ் தேர்வுகள் லண்டனில்தான் நடத்தப்பட வேண்டும்’ என்று ஓர் எதிர்க்குரல் எழும்பியது. அந்தக் குரல் இரட்டைமலை சீனிவாசனுடையது.
’கடல் கடந்தால் தீட்டு’ என்னும் நம்பிக்கை பார்ப்பனர்களிடம் நிலவியது. சங்கராச்சாரிகள் வெளிநாட்டுப் பயணங்களை முற்றிலும் தவிர்த்தார்கள். கணித மேதை ராமானுஜம் வெளிநாடு சென்றதால் தன் சொந்தச் சாதியினரின் எதிர்ப்பை எதிர்கொண்டார். இப்படிப்பட்ட சூழலில்தான், ‘இந்தியாவில் ஐ.சி.எஸ் தேர்வுகள் நடந்தால் பார்ப்பன மாணவர்களுடன் பார்ப்பனரல்லாத மாணவர்கள் போட்டிபோட வேண்டியிருக்கும். ஆனால் லண்டனில் நடந்தால் பார்ப்பனரல்லாத மாணவர்கள், குறிப்பாக ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வுகளில் வெற்றிபெற வாய்ப்பு அதிகம்’ என்னும் அடிப்படையிலேயே இரட்டைமலை சீனிவாசன் இப்படியான குரலை எழுப்பினார். ஆனால் இன்று சம்பிரதாயங்களைப் பின் தள்ளி, பார்ப்பனர்கள் வெளிநாட்டுப் பணிகளில் இருப்பதைக் காணலாம்.
இப்படித்தான் தொடக்ககாலத்தில் திரைப்படத்தை இழிவான கலையாகப் பார்த்த பார்ப்பனியம், பிறகு அதை மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கத் தொடங்கியது.
மேலும் இரட்டைமலை சீனிவாசனின் குரலும் தேசியவாதிகளின் குரலும் ஒரு புள்ளியில் தெளிவாக வேறுபடுவதை அவதானிக்கலாம். ‘இந்தியாவில் நிலவும் சாதிய ஒடுக்குமுறை ஒரு பிரச்னையே இல்லை. ஆங்கிலேயர் ஆட்சி மட்டும்தான் பிரச்சினை’ என்பது தேசியவாதிகளின் குரல். ஆனால் ‘சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம்தான் முதன்மையானது. ஆங்கிலேயர்கள் எப்படி எங்களுக்கு எப்படி அந்நியர்களோ அதேபோல் பண்பாட்டால் வேறுபட்ட பார்ப்பனர்களும் எங்களுக்கு அந்நியர்கள்தான். சாதிய ஒடுக்குமுறையைக் கண்டுகொள்ளாத, இன்னும் சொல்லப்போனால் சாதிய ஒடுக்குமுறையை ஊக்குவிக்கும் தேசியத்தின்மீது எங்களுக்கு அக்கறையில்லை. இந்த தேசிய விடுதலை ஒடுக்கப்பட்டோர் விடுதலையை உறுதி செய்யாதபோது அதைப் பற்றி நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்?’ என்பது இரட்டைமலை சீனிவாசனின் நிலைப்பாடு. இதை தமிழ் சினிமா வரலாற்றிலும் பொருத்திப்பார்க்கலாம்.
சினிமாக்களில் அரசியல் பேசுவது என்பது திராவிட இயக்கத்துக்கு முன்பே தமிழ் சினிமாவில் இருந்தது. இந்திய தேசியம், தேச விடுதலை ஆகியவை நாடகங்களிலும் சினிமாக்களிலும் பேசப்பட்டன. ஆனால் அவை இங்கிருக்கும் சாதிய- மத அதிகாரத்தைக் கேள்வி கேட்காமல் அதை அப்படியே உள்வாங்கி, ஆங்கிலேயர்களை மட்டும் எதிரியாக முன்னிறுத்தி தேசபக்தியை முன்வைத்தன. ஆனால் இவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டு ஒட்டுமொத்தமாகத் தமிழ்ச்சமூகத்தை சீர்திருத்த வேண்டியதன் அவசியத்தை திராவிட சினிமாக்கள் பேசின.
தேசியவாத சினிமாக்கள், திராவிட சினிமாக்கள் இரண்டுமே ‘அரசியல் சினிமாக்கள்’தான். ஆனால் இரண்டுக்கும் இடையில் என்ன வித்தியாசம்? தேசியவாத சினிமாக்கள் இந்திய சமூகத்தில் இருந்த சாதிய, வர்க்க, பாலின முரண்பாடுகளைப் பூசி மெழுகி, இந்திய பண்பாட்டை உன்னதமாக முன்வைத்து, ‘வெளியில் இருந்து வந்த ஆங்கிலேயர்களை’ மட்டும் எதிரிகளாக சித்திரித்தது. திராவிட சினிமாக்களோ நமக்குள் இருக்கும் அதிகாரத்தை, நமக்குள் இருக்கும் ஒடுக்குமுறையை, நமக்குள் இருக்கும் பாசிசத்தைக் கேள்வி கேட்டது.
தேசிய இயக்கத்துக்கும் அம்பேத்கர், பெரியாருக்குமான முரண் இதுதான். ‘ஆயிரம் உண்டிங்கு சாதி; இதில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி?’ என்ற தேசியவாத குரலுக்கு எதிரானதுதான் அம்பேத்கர், பெரியார், அயோத்திதாசர், எம்.சி.ராஜா, இரட்டைமலை சீனிவாசன், எல்.சி.குருசாமி ஆகியோரின் சிந்தனைகள். இவற்றை கலைத்தளங்களில் பிரதிபலித்தன திராவிட சினிமாக்கள்.
’வெளியில் இருந்து வந்த ஆங்கிலேயர்களை’ மட்டும் தொடக்ககால தேசிய இயக்கம் எதிரிகளாக சித்திரித்தது என்றால், இந்துத்துவ அரசியலோ ‘வெளியில் இருந்துவந்த மொகலாயர்கள், ஆங்கிலேயர்கள், மார்க்சியம்’ ஆகியவற்றை எதிரிகளாக முன்வைத்தது. சாவர்க்கர், கோல்வால்கர், ஹெட்கேவர் போன்றோரின் எழுத்துகளில் இந்த சிந்தனைமுறையைக் காணலாம்.
1992, டிசம்பர் 6 இந்துத்துவச் சக்திகளால் பாபர் மசூதி இடிக்கப்பட்டபிறகு இந்தியா மதரீதியான நெருக்கடிகளைச் சந்தித்தது. பாபர் மசூதி இடிப்பு, மதக்கலவரங்களின் விளைவாக குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இப்போது மீண்டும் ‘வெளியில் இருந்து வந்த எதிரிகளான’ வெளிநாட்டுச் சதிகளுடன் உள்ளூர் முஸ்லீம்களை இணைத்து ‘தீவிரவாதிகளாக’, ‘சந்தேகத்துக்குரியவர்களாக’ சித்திரிப்பது இந்துத்துவ அரசியலுக்கு எளிதாகிப்போனது.
இது இந்திய சினிமாக்களிலும் எதிரொலித்தது. இன்றும் பாலிவுட் சினிமாக்கள் ‘பாகிஸ்தான் சதி’யையும் முஸ்லீம் வெறுப்பையும் முன்வைக்கின்றன. தமிழ் சினிமா அதிலிருந்து கொஞ்சமேனும் விடுபட்டிருக்கிறது. ஆனால் 90களின் மத்தியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள், இஸ்லோமா போபியாவை முன்வைத்த சினிமாக்கள் தமிழில் உருவாகி வெற்றிபெற்றன. அதுவரை உள்ளூர் ஊழல் அரசியல்வாதிகளையும் நேர்மையற்ற காவல்துறை அதிகாரிகளையும் எதிர்த்துக்கொண்டிருந்த விஜயகாந்த், பாகிஸ்தான் தீவிரவாதிகளைப் பந்தாட தொடங்கினார். விஜயகாந்த், அர்ஜூன் இருவரும் இந்த ‘பாகிஸ்தான் தீவிரவாதிகள்’ எதிர்ப்பு சினிமாக்களின் முதன்மை நாயகன்கள் ஆயினர். இவர்களின் படங்கள் கச்சடா சினிமாக்களாக இருக்க, உயர்தர அழகியலுடன் மணிரத்னம் போன்றோர் முஸ்லீம் வெறுப்பு சினிமாக்களை உருவாக்கினர்.
அடையாள அரசியல் மேலெழுந்து வந்த சூழலில் இந்த முஸ்லீம் வெறுப்பு சினிமாக்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. 90களில் அமைதியாக இருந்ததைப் போல் அல்லாமல் 2000-ல் முஸ்லீம் அமைப்புகளும் முற்போக்காளர்களும் வெளிப்படையான எதிர்ப்பை முன்வைத்தனர். குறிப்பாக கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’, விஜய்யின் ‘துப்பாக்கி’ போன்ற படங்கள் எதிர்ப்புக்கு உள்ளாகின. அதன் காரணமாக முஸ்லீம் வெறுப்பு சினிமாக்கள் தமிழில் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கின. முஸ்லீம்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிப்பதை கேள்விக்குள்ளாக்கும் ‘விசாரணை’, ‘சிறை’ போன்ற படங்கள் வரத்தொடங்கின.
விஜயின் மூன்று சினிமாக்கள் இஸ்லாமோபோபியா படங்கள். ’வேலாயுதம்’ முஸ்லீம்களைத் தீவிரவாதிகளாக சித்திரித்தது. ‘துப்பாக்கி’ திரைப்படம் ‘வெளிநாட்டு முஸ்லீம் பயங்கரவாதிகளுடன் உள்ளூர் முஸ்லீம்களும் ஸ்லீப்பர்செல்களாக’ இயங்குவதாக சித்திரித்தது. முஸ்லீம் இயக்கங்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து எஸ்.ஏ.சந்திரசேகர் ‘என் மகன் விஜய் ஒரு படத்தில் முஸ்லீமாக நடித்து பிராயச்சித்தம் செய்வார்’ என்று அறிவித்தார். ஆனால் கடைசிப்படம் வரை அது நடக்கவில்லை.
‘துப்பாக்கி’ திரைப்படத்துக்கு எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து ‘பீஸ்ட்’ படத்தில் இஸ்லாமோபோபியா வெளிப்பட்டாலும் அதை சமன்செய்ய காஷ்மீரில் முஸ்லீம்கள் மீது நடைபெறும் அத்துமீறல்கள் போகிறபோக்கில் சித்திரிக்கப்பட்டது. இப்போது விஜயின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகியிருக்கிறது.
ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி, உள்ளூர் அரசியல்வாதியால் அவமானப்படுத்தப்படுகிறார். ‘தனக்கு இழைக்கப்பட்ட அவமானத்துக்கு காரணம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதி. எனவே மக்களைப் பழிவாங்கவேண்டும்’ என்று வினோதமாகச் சிந்திக்கிறார். சர்வதேச பயங்கரவாதியாக மாறும் அவர் வெளிநாட்டுச் சக்திகளின் உதவியுடன் இந்தியாவில் வன்முறையைத் தூண்டுகிறார். போலியான செய்திகளைப் பரப்பி மதக்கலவரத்தை தூண்டுகிறார். க்ளைமாக்ஸில் அவர் ஆளுநரையே மிரட்டி ‘முஸ்லீம்கள்தான் குண்டுவைக்கிறார்கள்’ என்று சொல்லச்சொல்கிறார். ஆனால் ஆளுநரோ அப்படி சொல்ல மறுக்கிறார். இறுதியில் வில்லனின் சதியை முறியடிக்கிறார் ‘ஜனநாயகன்’ விஜய்.
இந்த படத்தில் ’பாகிஸ்தான் பயங்கரவாதம்’ சித்திரிக்கப்பட்டாலும் நேரடியாக உள்ளூர் முஸ்லீம்கள் தீவிரவாதிகளாகச் சித்திரிக்கப்படுவதில்லை. ஆனால் ‘மதக்கலவரங்களுக்கு காரணமே வெளியில் இருந்து வந்த சக்திதான்’ என்று காட்டப்படுகிறது. அதன்மூலம் பாபர் மசூதி இடிப்பு, பாதிரியார் கிரகாம் ஸ்டெயின் குடும்பத்துடன் எரித்து படுகொலை, குஜராத் இனப்படுகொலை, மாட்டுக்கறி வைத்திருந்ததாக இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்திய சங்பரிவார் அமைப்புகளை, குற்றப்பழியில் இருந்து தப்ப வைக்கிறது ‘ஜனநாயகன்’.
இந்தியாவில் வெறுப்பை விதைக்கும் ஒரு மதவாத அரசியல் பல ஆண்டுகளாக இருக்கிறது, அது இப்போது அதிகாரத்தில் இருக்கிறது என்னும்போது அதை முற்றிலும் கேன்சல் செய்து, சம்பந்தமே இல்லாமல் அடிப்படையே இல்லாத ஒரு மிகைப்புனைவை உருவாக்கி, அந்தரத்தில் இருந்து ஒரு ‘வில்லனை’ உருவாக்குவதே, எதார்த்தத்தில் உள்ள மதவாத அரசியலைக் காப்பாற்றும் வேலைதான்.
மேலும் சாதியம், மதவாதம், ஆணாதிக்கம் ஆகிய உள்முரண்பாடுகளைப் பேசிய அம்பேத்கர், பெரியார் சிந்தனைகளுக்கு மாறாக, ‘இந்திய சமூகத்தில் எந்த பிரச்சினைகளும் இல்லை. வெளியில் இருந்து வரும் சக்திகளே எல்லாப்பிரச்சினைகளுக்கும் காரணம்’ என்று இந்து தேசியவாதிகளின் குரலையே ‘ஜனநாயகன்’ எதிரொலிக்கிறது.
தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி, கால்டுவெல், ஜி.யு.போப், கார்ல் மார்க்ஸ், சார்லஸ் டார்வின் ஆகியோர் ‘வெளியில் இருந்துவந்த தீமைகள்’, ‘பாரதம் சனாதனப் பண்பாட்டைக் கொண்ட உன்னத பூமி’ என்று தொடர்ச்சியாகப் பேசிவந்தார். ஆளுநரின் இதே குரலை ‘ஜனநாயகன்’ திரைப்படமும் முன்வைக்கிறது.
மதவாதம், பன்மைத்துவ மறுப்பு, மையப்படுத்தப்பட்ட அரசு அதிகாரம் என பல தீங்குகளுக்கு காரணமான இந்துத்துவ அரசியல் எந்த பிரச்சினைக்கும் காரணமில்லை, ஏதோ ‘வெளியில்’ இருந்து வந்ததுதான் எல்லாப் பிரச்சினைக்கும் காரணம் என்பது சாராம்சத்தில் இந்துத்துவ அரசியலைத் தப்ப வைப்பது மட்டுமல்ல, இந்துத்துவ அரசியலின் குரலிலேயே பேசுவதுதான்.
இந்துத்துவத்தை தொடர்ந்து முன்வைத்த ஆளுநர் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் வெளிநாட்டுச் சக்திகளால் மிரட்டப்படும் அப்பாவியாகவும், முஸ்லீம்களின்மீது அக்கறை கொண்டவராகவும் சித்திரிக்கப்படுகிறார். ஹெச்.வினோத்தின் ‘துணிவு’ படத்தில் ஆர்.என்.ரவி ஒரு வசனத்தின் மூலம் கிண்டலடிக்கப்படுவதற்கு முற்றிலும் மாறான நிலை இது.
தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியைத் தொடங்கியதில் இருந்து ‘கொள்கை எதிரி’ என்று அறிவித்துக்கொண்ட பா.ஜ.க.வுடன் இணக்கமான போக்கை மேற்கொள்ளும் விஜய்யின் அரசியல் விருப்பமே ‘ஜனநாயகன்’ திரைக்கதையில் எதிரொலிப்பதைக் காணலாம்.
திராவிட அரசியலின் தொடர்ச்சியாக தன்னை முன்னிறுத்தும் விஜய்யின் சினிமாக்கள் திராவிட சினிமாக்களுக்கு முற்றிலும் எதிர்த்திசையில் இயங்குபவை. அதற்கு முதலில் திராவிட சினிமாக்கள் எப்படிப்பட்டவை என்று தெரியவேண்டும். அதுகுறித்து அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
(சினிமா தொடரும்)