எம்.ஜி.ஆர்., கலைஞர், சிவாஜி ai
சிறப்புக் களம்

நிறம் மாறும் சினிமா - 9 | எம்.ஜி.ஆர்., சிவாஜி.. நாயகர்களை உருவாக்கிய கலைஞர்!

கலை, இலக்கியத் தளங்களில் தன் தம்பிகளின் மூலம் திராவிட சிந்தனைப் பள்ளியை அண்ணா உருவாக்கினார் என்றால், கலைஞர் தன் எழுத்துகளின்மூலம் திராவிட கதாநாயக நடிகர்களை உருவாக்கினார்.

சுகுணா திவாகர்

நாயகர்களை உருவாக்கிய கலைஞர்!

அறிஞர் அண்ணா எப்படி நாடகத்தில் பல சாதனைகளை நிகழ்த்தினாரோ, அதைப்போல் திரையுலகில் தன் அழுத்தமான தடங்களைப் பதித்தவர் கலைஞர். அண்ணாவைவிட வெற்றிகரமான வசனகர்த்தாவாக விளங்கிய கலைஞர், அண்ணாவைவிட நீண்டகாலம் தொடர்ந்து திரையுலகில் இயங்கினார். ஒரு ஹீரோவுக்கான மதிப்பை, தன் உழைப்பின் மூலம் கலைஞர் உருவாக்கிக்கொண்டார். கலை, இலக்கியத் தளங்களில் தன் தம்பிகளின் மூலம் திராவிட சிந்தனைப் பள்ளியை அண்ணா உருவாக்கினார் என்றால், கலைஞர் தன் எழுத்துகளின்மூலம் திராவிட கதாநாயக நடிகர்களை உருவாக்கினார்.

சிவாஜி கணேசன்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல் திரைப்படம் கலைஞரின் கைவண்ணத்தில் உருவான ‘பராசக்தி’. அண்ணாவின் நாடகமான ‘சந்திரமோகன் அல்லது சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்’ நாடகத்தில் நடித்ததன் மூலம் கணேசன், பெரியாரின் பாராட்டால் ‘சிவாஜி’ கணேசன் ஆனார். கலைஞரின் வசனங்களால் நடிகர் திலகமாக உருவெடுத்தார். ‘பராசக்தி’ திரைப்படத்தில் கே.ஆர்.ராமசாமிதான் நடிக்க வேண்டியது. ஆனால் படத்தயாரிப்பாளர்களில் ஒருவரான ‘நேஷனல் பிக்சர்ஸ்’ பெருமாள்தான், நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்த சிவாஜி கணேசனை நடிக்க வைக்கவேண்டும் என்று விரும்பினார். படப்பிடிப்பு பாதி முடிந்தபோதும் இன்னொரு தயாரிப்பாளரான ஏவி.மெய்யப்பருக்கு சிவாஜி கணேசனை கதாநாயகனாக நடிக்க வைப்பதில் உடன்பாடில்லை. ஆனால் அண்ணா, பெருமாள் போன்றவர்களின் வலியுறுத்தலால் சிவாஜி கணேசனே தொடர்ந்தார். அந்த முயற்சிகள் மட்டும் தோற்றிருந்தால் நாம் சிவாஜி கணேசன் என்ற மகத்தான நடிகரை இழந்திருப்போம்.

கலைஞர் வசனத்தில் அறிமுக எஸ்.எஸ்.ஆர்.

சிவாஜி கணேசன் என்ற நடிகரை, ‘பராசக்தி’, ‘மனோகரா’, ‘ராஜாராணி’ என்று கலைஞரின் வசனங்களே வளர்த்தெடுத்தன. அதேபோல் எஸ்.எஸ்.ஆர் அறிமுகமானதும் கலைஞர் வசனம் எழுதிய ‘அம்மையப்பன்’ திரைப்படத்தின் மூலம்தான். எஸ்.எஸ்.ஆரின் கணீர் என்ற குரலும் ஏற்ற இறக்கங்களுடன் கூடிய உச்சரிப்பும் அவருக்கான இடத்தை உருவாக்கின. ’கடைசிவரை புராணப்படங்களில் நடிக்க மாட்டேன், கடவுள் வேடமிட்டு நடிக்க மாட்டேன்’ என்ற உறுதியுடன் இருந்ததால் ‘லட்சிய நடிகர்’ என்று அழைக்கப்பட்டார். மற்ற நடிகர்களைப் போல் அல்லாது, தி.மு.கவின் போராட்டங்களிலும் கலந்துகொண்டார். ‘பராசக்தி’, ‘பூம்புகார்’ என்று எஸ்.எஸ்.ஆரையும் கலைஞரின் வசனங்களே வளர்த்தெடுத்தன.

எஸ்.எஸ்.ஆர், சிவாஜி கணேசனுடன் ஒப்பிடும்போது எம்.ஜி.ஆருக்கு நீளநீளமான வசனங்களோ, அடுக்குமொழி வசனங்களோ பேசத் தெரியாது. கலைஞர் எம்.ஜி.ஆருக்கு ஏற்றபடி சுருக்கமான, அதே நேரம் கூர்மையான வசனங்களை எழுதினார். எம்.ஜி.ஆர் ஒரு மாஸ் ஹீரோவாக உருவாகுவதற்கான தொடக்கப்புள்ளி கலைஞரின் திரைக்கதை, வசனங்கள். குறிப்பாக ‘மலைக்கள்ளன்’ திரைப்படம் பிற்காலத்திய எம்.ஜி.ஆர் திரைப்படங்களுக்கான முன் மாதிரி.

ராபீன்ஹூட் பாத்திரம் முதன்முதலில் தமிழில் அமைந்த ‘மலைக்கள்ளன்’!

மக்களைச் சுரண்டி கொழுத்த பணக்காரர்களிடம் இருந்து பறித்து ஏழைகளுக்கு உதவும் ராபீன்ஹூட் பாத்திரம் முதன்முதலில் தமிழில் அமைந்தது ‘மலைக்கள்ளன்’ திரைப்படத்தில்தான். பணக்காரர்கள், முதலாளிகள், நிலப்பிரபுக்களை எதிர்ப்பது, உழைக்கும் மக்களின் பக்கம் நிற்பது என்ற பின்னாளைய எம்.ஜி.ஆர் படங்களுக்கு அடித்தளம் அமைத்தது ‘மலைக்கள்ளன்’. மேலும் ‘மலைக்கள்ளன்’ ராபீன்ஹூட் பாத்திரப்படைப்புகள் பிறகு ‘பாட்ஷா’ ரஜினி, ‘நாயகன்’ கமல் என்று இன்றுவரை தமிழ் சினிமாவில் நீடிக்கிறது.

ராம்சந்தர் என்ற பெயர் எம்.ஜி.ராமச்சந்திரன் என்று மாறியது கலைஞர் வசனம் எழுதிய ’மந்திரிகுமாரி’ திரைப்படத்தில்தான். அவருக்குப் ‘புரட்சி நடிகர்’ என்ற பட்டம் டைட்டிலில் போடப்பட்டதும் கலைஞர் எழுதிய ‘புதுமைப்பித்தன்’ திரைப்படத்தில்தான். பின்னாளில் ‘புரட்சி நடிகர்’ எம்.ஜி.ஆர் ‘புரட்சித்தலைவர்’ ஆனதும் கலைஞரின் வசனங்கள் மூலம் கட்டமைக்கப்பட்ட ‘ரட்சகன்’, ‘மக்கள் காவலன்’ என்ற பிம்பங்களின் மூலம் அரசியலில் வெற்றிபெற்று கலைஞரையே வெற்றிகொண்டதும் தனிக்கதை.

திராவிட இயக்கத்துக்கான கருத்துகளை வசனங்களாக மாற்றிய கருணாநிதி

கலைஞர் மாற்றுமுகாமில் இருந்து வந்த கதைகளையும் தனக்கான அரசியல்வயப்படுத்தினார். ‘மலைக்கள்ளன்’ திரைப்படத்தின் கதை நாமக்கல் கவிஞர் என்றழைக்கப்படும் நாமக்கல் ராமலிங்கனாருடையது. அவர் ஒரு இந்திய தேசியவாதி. ஆனால், அவர் கதையை வைத்து திராவிட இயக்கத்துக்கான கருத்துகளை வசனங்களாக மாற்றினார் கலைஞர்.

அதேபோல் ‘மனோகரா’ கதை நாடகமாக நடிக்கப்பட்டது. ‘மனோகரா’வின் கதை பம்மல் சம்பந்தருடையது. ‘மனோகரா’ திரைப்படமானபோது அது கலைஞரின் தனித்துவமிக்க படைப்பாக மாறியது. ‘பராசக்தி’யின் கதையும்கூட பாவலர் பாலசுந்தரத்துடையது. ஆனால், அது ‘கலைஞரின் பராசக்தி’யாகத்தான் வரலாற்றில் நிலைத்துநிற்கிறது. யாருடைய கதையாக இருந்தாலும் அதை தன் திரைக்கதை, வசனத்தால் மெருகேற்றுவதுடன் அதை தன் கருத்தியல் ஆயுதமாகவும் மாற்றக்கூடியவர் கலைஞர்.

கலைஞர் கருணாநிதி

‘மனோகரா’ நாடகத்தில் பம்மல் சம்பந்தனார் ஒரு பேய் பாத்திரத்தை வடிவமைத்திருந்தார். ஆனால், கலைஞரோ மூலிகைகள் மூலம் தன் உருவத்தை மறைத்துக்கொள்ளும் மனிதனாக (Invisible Man), அந்தப் பேய் பாத்திரத்தை மாற்றினார். அதேபோல்தான் இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தில் இருந்த பல மூடநம்பிக்கைகள், பார்ப்பனிய சார்பு கருத்துகளையும் அகற்றிவிட்டு ‘பூம்புகார்’ திரைப்படத்தை உருவாக்கினார் கலைஞர்.

இளங்கோவடிகளின் ’சிலப்பதிகார’த்தில் கண்ணகி மதுரையை எரிக்கும்போது ‘ பத்தினிப்பெண்டிர், சான்றோர், முதியோர், குழந்தைகள்’ இவர்களை விட்டுவிட்டு மதுரையை எரிக்கவேண்டும் என்று மட்டும் சொல்லவில்லை. பசு, பார்ப்பனர்களையும் நீக்கிவிட்டுத்தான் மதுரையை எரிக்கச் சொன்னாள் என்கிறது சிலப்பதிகாரம். ஆனால், கலைஞரோ கண்ணகியை, அறம் நாடும் ஒரு திராவிடப் பெண்ணாக வடிவமைத்தார்.

நாடகங்களில் பெண் வேடமிட்டு நடித்த ஆண்கள்!

‘மனோகரா’ கதை நாடகமாக நடிக்கப்பட்டபோது அதில் மனோகரனாக நடித்தவர் கே.ஆர்.ராமசாமி. சிவாஜி கணேசன் பெண் வேடத்தில் மனோகரனின் தாயாக நடித்தார். (நாடகத்தில் நடிக்கும்போது சிவாஜி கணேசன் பெண் பாத்திரங்களில் நடித்தார். அந்த காலகட்டத்தில் பெண்கள் நாடகங்களில் நடிக்கத் தயங்கியபோது ஆண்கள் பெண் வேடமிட்டு நடித்தனர். இது ‘ஸ்திரீபார்ட்’ என்றழைக்கப்பட்டது. ‘நூர்ஜகான்’ நாடகத்தில் சிவாஜி கணேசன் பெண் வேடமிட்டு நடித்ததைப் பார்த்துதான் ‘நேஷனல் பிக்சர்ஸ்’ பெருமாள் அவரை ‘பராசக்தி’ திரைப்படத்தின் ஹீரோவாக நடிக்க வைப்பது என்னும் முடிவுக்கு வந்தார்) அந்த சிவாஜிதான், ‘மனோகரா’ திரைப்படமானபோது, மனோகரனாக நடித்தார்.

மனோகரா

கலைஞரின் ‘மனோகரா’ வசனங்கள் இன்றும் தமிழ்த்திரையுலக வரலாற்றில் அழியாது நிலைபெற்றிருக்கின்றன. குறிப்பிட்ட காலகட்டம்வரை தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வருபவர்கள் ‘பராசக்தி’, ‘மனோகரா’ வசனங்களைப் பேசிக்காட்டுவது வழக்கமாக இருந்தது.

சிலப்பதிகாரத்தை திரைப்படமாக்க வேண்டிய அவசியம் என்ன?

‘பூம்புகார்’ திரைப்படத்தில் இருந்து கலைஞர் ஒரு புதிய உத்தியை அறிமுகப்படுத்தினார், படத்தின் தொடக்கத்தில் தோன்றி, அந்த படத்துக்கான கதை, வசனத்தை ஏன் எழுத நேர்ந்தது, இந்த திரைப்படத்தின் மூலம் தான் சொல்ல விரும்புவது என்ன என்பதைக் கலைஞர் திரையில் விளக்குவார். கடைசிப்படம் வரை கலைஞர் இதைத் தொடர்ந்தார். அனேகமாக ஒரு படைப்பாளி பார்வையாளர்களுடன் முதன்முறை இடையீடு செய்தது இதுவாகத்தான் இருக்கும். பிறகு தமிழ் சினிமாக்களில் அது வெவ்வேறு வடிவம் எடுத்தது. பாரதிராஜா தன் திரைப்படம் நிறைவடையும்போது தன் குரலில் பேசி கருத்துகளைப் பதியவைப்பார். இயக்குநர்கள் பா.இரஞ்சித், வெற்றிமாறன் போன்றோர் திரைப்படத்தின் தொடக்க காட்சியில் அந்த திரைப்படத்தின் கதைப்பின்னணியை தன் குரல் மூலம் விவரிக்கிறார்கள்.

கருணாநிதி

சிலப்பதிகாரத்தை திரைப்படமாக்க வேண்டிய அவசியம் என்ன என்பதையும் கலைஞரே விளக்கினார். ‘’மேலை நாடுகளில் பைபிள் கதைகளை அடிப்படையாக கொண்டு ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. குறிப்பாக ‘டென் கமாண்ட்மெண்ட்ஸ்’. இந்தியாவிலும் ராமாயணம், மகாபாரதம் ஆகிய புராணக்கதைகளை அடிப்படையாக வைத்து திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. தமிழ்க்காப்பியமான சிலப்பதிகாரத்தை திரைப்படமாக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உருவானதுதான் ‘பூம்புகார்’ ‘’ என்பதைக் கலைஞர் விளக்கியிருக்கிறார்.

திரையில் படைப்பாளியே பேசுவது போன்ற உத்தி!

திரையில் தோன்றி படைப்பாளியே பேசுவதைப் போன்ற பல உத்திகளையும் கலைஞர் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

‘மனோகரா’ திரைப்படத்தில் அரசவையில் நாடகம் நடப்பது போன்ற காட்சி. அப்போது இரு பாத்திரங்கள் உரையாடும் வசனம் இது.

‘’எங்கே கேசரி வர்மா, அவசர அவசரமாகச் செல்கிறாய்?”

“நாடகத்திற்கு”

“மறந்துவிட்டேன். இன்று மனோகரனின் பிறந்தநாள் அல்லவா? ஆமாம், நாடகத்திற்கு என்ன பேர் வைத்திருக்கிறாய்?”

“போர்வாள்”

‘’சபாஷ், நாடகத்திற்குத் தடையொன்றும் கிடையாதே?”

நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் ‘போர்வாள்’ நாடகம் காங்கிரஸ் ஆட்சியால் தடை செய்யப்பட்டது. இந்தச் சமகால எதார்த்தத்தை ராஜாராணி திரைப்படத்தில் சாமர்த்தியமாகப் புகுத்துகிறார் அதுதான் கலைஞர்.

‘ராஜாராணி’ என்னும் சமகால வாழ்க்கையை சித்திரிக்கும் திரைப்படத்தில் ‘சேரன் செங்குட்டுவன்’, ‘சாக்ரடீஸ்’ என்ற வரலாற்று மனிதர்களைச் சித்திரிக்கும் ஓரங்க நாடகங்கள். இந்த நாடகங்களில் சிவாஜி பேசும் கலைஞரின் வசனங்களும் காவியத்தன்மை கொண்டவை.

‘’உன்னையே நீ அறிவாய். சிந்திக்கக் கற்றுக்கொள்ளுங்கள் தோழர்களே. நான் தரும் அறிவாயுதத்தை எடுத்துக்கொள்ளுங்கள்’’ என்ற கலைஞரின் ‘சாக்ரடீஸ்’ வசனம் பெரியாரை நினைவுபடுத்துகிறது என்றால், ‘அடுக்குமொழி பேசி மயக்கிவிட்டேன்’ என்ற குற்றச்சாட்டுக்குச் சொல்லும் பதில்கள் அண்ணாவை நினைவூட்டும். இப்படி சாக்ரடீஸ் மூலம் ஒரேநேரத்தில் பெரியாரையும் அண்ணாவையும் நினைவூட்டினார் கலைஞர்.

இதேபோல் பெரியாரையும் அண்ணாவையும் இணைத்து ஒரே பாத்திரமாக ‘இருவர்’ திரைப்படத்தில் சித்திரித்திருப்பார் மணிரத்னம். ஆனால் அது திராவிட இயக்கத்தைக் கொச்சைப்படுத்தும் திரைப்படம்.

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க: நிறம் மாறும் சினிமா - 8 | விஜய்க்கும் கலைஞருக்கும் என்ன வித்தியாசம்?

(சினிமா தொடரும்..)