பாரதிராஜாவின் முதல் திரைப்படமே கிராமம் X நகரம் என்ற இருமை எதிர்வைத் தொடங்கிவிட்டது. ’16 வயதினிலே’ திரைப்படத்தில் கிராமத்தில் வாழும், கனவும் கல்வியின் மீது தீராக்காதலும் கொண்ட மயிலின் வாழ்க்கை, நகரத்தில் இருந்து வந்த டாக்டரால் சீரழிகிறது. ஆனால் பாரதிராஜாவின் இரண்டாவது திரைப்படமான, ‘கிழக்கே போகும் ரயில்’, கிராமத்தில் நிலவும் சாதியத்தையும் மூடநம்பிக்கையையும் சித்திரித்தது. சாதியின் காரணமாக பாதிக்கப்பட்ட காதலர்கள் ரயில் ஏறி நகரத்துக்குச் செல்வதன் மூலம் விடுதலைநிலை எய்துவதாகச் சித்தரித்தது. ‘கிழக்கே போகும் ரயில்’- ரயில் என்பது நவீனத்தின் குறியீடு, கிழக்கு என்பது விடியலின் குறியீடு.
பாரதிராஜா என்பவர் கிராமத்து வாழ்க்கையைச் சித்தரிக்கும் இயக்குநர் என்ற பிம்பத்தைத் தகர்க்கும்படி ‘சிவப்பு ரோஜாக்கள்’ திரைப்படத்தை இயக்கினார் பாரதிராஜா. அழகியல்ரீதியாக பிரமிக்கும்வகையில் அமைந்த இந்த திரைப்படம் நகரத்து வாழ்க்கையை சைக்கோ வாழ்க்கையாகவும் பெண்களை ஏமாற்றுக்காரர்களாகவும் சித்திரித்தது. பின்பு மீண்டும் கிராமத்துக்கு வந்த பாரதிராஜா, கிராமத்தில் நிலவிய சாதியம் உள்பட பல்வேறு சிக்கல்களைச் சித்தரித்தார். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தேவர் சாதிய சினிமாக்களாக மாறி ‘கிழக்குச் சீமையிலே’வில் அது உச்சமடைந்தது.
ஆனால், பாரதிராஜாவைப் பின்தொடர்ந்து உருவான பெரும்பாலான கிராம சினிமாக்கள் இத்தகைய ஊசலாட்டம் எதுவுமின்றி, ஆதிக்கக் கருத்தியலைப் பிரதிபலிக்கும் சினிமாக்களாகவே அமைந்தன. கிராமம் என்றால் வெள்ளந்தி மனிதர்கள், விவசாயம், இயற்கை சார்ந்த வாழ்வு, நகரம் என்றால் சீரழிவு, வன்மம், கலாசார சீர்கேடு என்று சித்தரிக்கும் மனநிலை தமிழ் சினிமாவில் தொடர்ந்து இருந்து வந்தது. உதாரணத்துக்கு இரண்டு திரைப்படப் பாடல்களைப் பார்ப்போம்.
1967ல் வெளியான ‘அனுபவி ராஜா அனுபவி’ திரைப்படப் பாடல் :
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெதுவாப் போறவுக யாருமில்லே
இங்கே சரியாத் தமிழ் பேச ஆளுமில்லே
ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும்
வித்யாசம் தோணல்லே
ஊரு கெட்டுப் போனதுக்கு
மூர் மார்க்கெட்டு அடையாளம்
நாடு கெட்டுப் போனதுக்கு
மெட்ராஸு நாகரிகம் அடையாளம்
கெட்டுப்போன புள்ளிகளா
வாழப் பட்டணம்தான் வந்தீகளா
சென்னை குறித்து இந்தப் பாடல் உருவாக்கும் சித்திரங்கள்தான் தமிழ் சினிமாவின் தொடர் மனநிலையாக இருந்தது. சென்னையில் உழைக்கும் மக்கள் பேசும் தமிழ் இழிவானதாக சித்தரிக்கப்பட்டது. சோ ராமசாமி, லூஸ்மோகன், கமல்ஹாசன் ஆகியோர் சென்னைத்தமிழ் என்ற பெயரில் அதை இழிவுபடுத்தும்வகையில் தொடர்ச்சியாக சித்தரித்தனர். கொங்குத்தமிழ் என்பது கொங்கு வேளாளர் – கவுண்டர் தமிழாகவும் மதுரை தமிழ் என்பது முக்குலத்தோர், வெள்ளாளர் தமிழாகவும் உயர்வாகச் சித்தரிக்கப்பட்டு சென்னைத் தமிழ் கீழ்நிலைக்கு இறக்கப்பட்டது.
ஆணும் பெண்ணும் ஒரேமாதிரியான உடையை அணிவது, இருவரும் வேலைக்குப் போவது உள்ளிட்டவைதான் ‘ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் வித்தியாசம் தோணலை’ என்று கிண்டலடிக்கப்படுகிறது. ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் என்ன வித்தியாசம் இருக்க வேண்டும் என்ற கேள்வியில் இருந்துதான் இந்த கிராம சினிமாக்களின் ஆதிக்க மனநிலையை அறிய முடியும். மூர்மார்க்கெட் என்பது பலவகையான பொருட்கள் விற்கப்படும் இடம். இந்த பன்மைத்துவம் சாதிய மனநிலைக்கு தொந்தரவாகவே இருக்கிறது. அதனால்தான் மூர்மார்க்கெட்டும் மெட்ராஸ் நாகரிகமும் சீரழிவின் சின்னங்களாக சித்தரிக்கப்பட்டன.
அந்தப் பாடல் வெளியான 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான ‘வேலைக்காரன்’ திரைப்பட பாடல் இது :
தோட்டத்துல பாத்தி கட்டி...
பாத்திருக்கேன் பாத்திருக்கேன்...
சோத்துக்குள்ள பாத்திய கட்டுற...
பட்டணம் பட்டணமே...
கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி...
மனசு கெட்டிடும் கெட்டிடுமே...
சிங்காரமா ஊரு...
இது சென்னையினு பேரு...
ஊரைச் சுத்தி ஓடுதய்யா கூவம் ஆறு...
தொட்டாலும் கை மணக்கும்...
தொட்ட இடம் பூ மணக்கும்...
கூவமுன்னு பேரு சொன்னா...
சொன்னவங்க வாய் மணக்கும்...
கண்ணகி இங்க வந்தா...
கண்ணடிக்கும் கூட்டமுங்க...
மதுரைய எரிச்சவளே...
மனசு மாற கூடுமுங்க...
கல்லூரிக்குப் போனா...
கன்னிப் பொண்ணு மீனா...
கல்லூரியே படிக்கவில்லை கர்ப்பம் ஆனா...
இன்னமும் கதைய சொல்லட்டுமா...
குப்பைய கூடையில் அள்ளட்டுமா...
இங்கு ‘கூவம்’ என்பது சென்னை சீரழிவின் குறியீடாகத் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. காவிரி, வைகை என தமிழ்நாட்டின் நதிகள் வற்றிவிடுவதையோ கழிவுகள் கலப்பதையோ சுட்டிக்காட்டாத தமிழ் மனம், கூவத்தை சென்னையின் குறியீடாக சுட்டிக்காட்ட மட்டும் பயன்படுத்துகிறது. மேலும் கல்லூரிக்குப் படிக்கச் செல்லும் பெண், ‘கற்பை’ மீறிவிடுவாள் என்றும் எச்சரிக்கிறது. 1967 – 1987 என்னும் இரு காலங்களிலும் சென்னையின் பெண்களின் சுதந்திரமான, சுயேச்சையான வாழ்க்கை, ஆண்மனதை அச்சுறுத்துவதாகவே இருப்பதைப் பார்க்கிறோம்.
நகரத்தின் ‘சீரழிவுக்கு’ மாற்றாக முன்னிறுத்தப்படும் ‘புனித கிராமம்’ அடிப்படையில் நிலப்பிரபுத்துவம், சாதியம், ஆணாதிக்கம் நிறைந்ததாக இருக்கிறது. இதைச் சொல்வதன் மூலம் நகரத்தில் சாதியமோ ஆணாதிக்கமோ கிடையவே கிடையாது என்று அர்த்தமில்லை. ஒப்பீட்டளவில் கிராமங்களைவிட நகரங்களில் சாதியமும் ஆணாதிக்கமும் நெகிழ்வுத்தன்மை கொண்டிருக்கின்றன. நகரத்தில் ஒருவர் தன் சாதிய அடையாளத்தை மறைத்துக்கொண்டு வாழ முடியும். ஆனால் கிராமத்தில் அது சாத்தியமில்லை. கிராமங்களைவிட நகரங்களில் பெண்களுக்கு கல்வி கற்கும், பணிக்குச் செல்லும், ஆண்களுடன் பழகும், தன் துணையைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகள் ஒப்பீட்டளவில் அதிகம். குறிப்பாக கூட்டுக்குடும்பங்கள் இன்னமும் மிஞ்சியிருப்பது கிராமங்களில்தான். கூட்டுக்குடும்ப முறை ஒழிந்ததால்தான் பெண்களுக்கான சுதந்திர வெளி அதிகரித்திருக்கிறது. கூட்டுக் குடும்பமுறை நீடித்திருந்தால் பெண்களின் முன்னேற்றம் தடைபட்டிருக்கும்; ஆணவக்கொலைகள் இன்னும் அதிகரித்திருக்கும்.
நிலம் சார்ந்த உற்பத்திமுறை, அதன் அடிப்படையிலான உற்பத்தி உறவுகள் சாதியத்தை நிலைத்திருக்கச் செய்கின்றன. நிலம் என்பது கிராமங்களில் அதிகாரம் வழங்குகிறது. நில உடைமையாளர்களாக ஆதிக்கச் சாதியினரே இருக்கின்றனர். எனவே, நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகள் சாதியத்துக்கும் ஆணாதிக்கத்துக்கும் வலுசேர்க்கின்றன. இத்தகைய மதிப்பீடுகளையே தமிழ் கிராம சினிமாக்கள் பிரதிபலித்தன.
இந்த தமிழ் கிராம சினிமாக்களில் நிலப்பிரபு வலிமையான அதிகாரம் மிக்கவராகவும் அனைத்து சாதி, வர்க்கத்தினராலும் மதிக்கப்படுபவராகவும் காட்டப்பட்டது. நிலவுடைமை ஒரு தனிமனிதரிடம் குவிந்திருப்பது இங்கே கேள்விக்குள்ளாக்கப்படுவதில்லை. மாறாக, அவரோ அவர் முன்னோரோ நிலவுடைமையின் சிறுபகுதியை ஏழை மக்களுக்கு அளிக்கும் ‘கருணை’ போற்றப்பட்டது. அந்த நிலப்பிரபு கிராம பஞ்சாயத்தில் தீர்ப்பு சொல்பவராக, கோயில் திருவிழாக்களைத் தொடங்கிவைப்பவராக, கோயில்களில் முதல் மரியாதை பெறும் தகுதியுள்ளவராகச் சித்தரிக்கப்பட்டார்.
அவர் பட்டியலின மக்கள் மற்றும் பிறசாதி உழைக்கும் மக்கள் மீது பேதம் காட்டாதவராகச் சித்தரிக்கப்பட்டார். அவர் காலடி மண்ணைத் திருநீறாகப் பூசிக்கொள்வது, அவரைப் பார்த்தால் பட்டியலின சாதியினர் துண்டை கக்கத்தில் இடுக்கி குனிந்து வணங்குவது, குடை பிடிப்பது எல்லாம் எந்த விமர்சனங்களும் இன்றி ‘இயல்பாக’ சித்திரிக்கப்பட்டன.
இந்தக் கிராம சினிமாக்களில் நிலப்பிரபு ஏழைகளுக்கு வேட்டி, சேலை உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்கும் காட்சி தவறாமல் இடம்பெற்றிருக்கும். அத்தகைய உதவிகளைப் பெறும் அளவுக்கு அவர்கள் ஏன் ஏழைகளாக இருக்கிறார்கள் என்னும் கேள்விக்கே இடமில்லை.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி இயங்கும் காவல்துறை, நீதித்துறைக்குச் சவால்விடும் வகையிலான கிராம பஞ்சாயத்துகள் ‘புனிதமானவை’யாகச் சித்தரிக்கப்பட்டன. ஒருபோதும் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த பஞ்சாயத்துகளில் தீர்ப்பு வழங்கும் மாற்றம் நிகழவே நிகழாது. இந்த எதார்த்தம் ஒருவருக்கும் உறுத்தாது. இந்த பஞ்சாயத்து காட்சிகள் நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளை வலியுறுத்துபவையாக அமைந்தன. குறிப்பாக, பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்களுக்கு இந்த பஞ்சாயத்துகள் வழங்கும் தீர்ப்புகள் அநீதியானவை.
80களின் தமிழ் சினிமாக்களில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் பெண்களுக்கு மூன்று வாய்ப்புகளே இருந்தன.
· குத்துவிளக்கு அல்லது ஆப்பிள் நறுக்கும் கத்தியைக் கொண்டு, தன்னைப் பாலியல் வன்முறை செய்யவரும் வில்லனைக் குத்தி கொலை செய்வது..
· கற்பை, தமிழ்ப் பண்பாட்டின் மானத்தைக் காப்பாற்ற தன்னைத்தானே குத்திச் செத்துப்போவது..
· பாலியல் வன்முறை செய்த ஆணுக்கே, பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்ணைத் திருமணம் செய்துவைக்கும் பஞ்சாயத்து தீர்ப்புகள்.
பாலியல் வன்முறை செய்யும் ஆண் ஆதிக்கச்சாதி/ பணக்காரன், பாலியல் வன்முறைக்கு ஆளாகும் பெண் ஒடுக்கப்பட்ட சாதி / ஏழை என்றால் இந்த ‘திருமண தீர்ப்பே’ புரட்சிகரமானதாக கொண்டாடப்பட்டது.
80களின் தமிழ் கிராம சினிமாக்கள் மீண்டும் மீண்டும் தாலியின் புனிதத்தைப் பேசின. இத்தனைக்கும் தாலி கட்டும் வழக்கமல்லாத, அறுத்துக்கட்டும் வழக்கம் கொண்ட சாதிகளும் கிராமங்களில் வசித்தன. என்றாலும் தாலியின் புனிதம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
படித்த, திமிர் பிடித்த பெண்ணின் ஆணவத்தை அடக்க கிராமத்து முரட்டு இளைஞன் வலுக்கட்டாயமாக தாலி கட்டுவான். அதற்குப்பிறகு அந்தப் பெண், அடக்கமே உருவான குடும்ப குத்துவிளக்காக மாறிவிடுவாள். பல சமயங்களில் அம்மனின் கழுத்தில் இருக்கும் தாலியே கட்டப்படும். வில்லனோ வில்லனின் அடியாட்களோ ஒரு பெண்ணின் தாலியை அறுக்க முயலும்போது, கோயிலில் உள்ள அம்மனின் சிலை முன்பு உள்ள கோயில் மணிகள், பெரும் ஓசையுடன், பதற்றத்துடன் தனக்குத்தானே அடித்துக்கொள்ளும்; இடி இடித்து, மின்னல் மின்னி, பெருமழை பெய்யும்.
‘சின்னத்தம்பி’ என்ற திரைப்படம், தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம். வெள்ளந்தியான கதாநாயகனுக்கு ‘தாலி’ என்றால் என்ன என்றே தெரியாது. அவனை, அந்த ஊரின் மிகப்பெரிய பணக்கார குடும்பப் பெண் காதலித்துவிடுகிறாள். அதற்கு பழிதீர்க்க, அந்தப் பெண்ணின் அண்ணன்கள், நாயகனின் விதவைத்தாய்க்கு பொட்டுவைத்து, பூச்சூட்டி, மனநிலை பிறழ்ந்த ஒருவனுக்குத் திருமணம் செய்ய முயல்கிறார்கள்.
விதவை மணம் குறித்து துணிச்சலுடன் பேசிய தமிழ் மண்ணில்தான், இந்த அபத்தமான வக்கிரமான காட்சியும் வரவேற்பு பெற்றது.
(சினிமா தொடரும்..)