தமிழ் சினிமாவில் ஒரு புதிய யுகம், பாரதிராஜாவின் வருகைக்குப் பின் தொடங்கியது.
தமிழ் சினிமாவின் முகமும் நிறமும் ஒவ்வொரு காலகட்டத்துக்கும் மாறிவந்திருக்கிறது. 80களில் தமிழ் சினிமாவின் முகத்தையும் நிறத்தையும் மாற்றியமைத்த, அதன் திசைவழிப்போக்கைத் தீர்மானித்த ஆளுமை, இயக்குநர் இமயம் பாரதிராஜா.
நெடுங்காலம் தமிழ் சினிமா என்பது நாடகங்களின் நீட்சியாகவே இருந்தது. திராவிட சினிமா உருவாகுவதற்கு முன்பிருந்த தமிழ் சினிமா, பெரும்பாலும் புராண நாடகங்களின் நீட்சியாகவே இருந்தது.
திராவிட சினிமாக்கள் அதன் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் வேறுபட்டிருந்தன என்றாலும் அவையும்கூட நாடகங்களின் நீட்சியாகவே இருந்தன. முன்பிருந்த வைதீக சினிமாக்கள் புராண நாடகங்களின் நீட்சி என்றால், திராவிட சினிமாக்கள் அவர்களின் சமூகச் சீர்திருத்த நாடகங்களின் நீட்சியாக அமைந்தன. புராண நாடகங்களில் பாடல்களின் செல்வாக்கு அதிகம் என்பதால் அவற்றின் நீட்சியாக அமைந்த சினிமாக்களில் பாடத் தெரிந்தவர்களே நடிகர்கள் ஆகினர். திராவிட சினிமாக்கள் பாடல்களின் இடத்தில் வசனங்களைக் கொண்டுவந்தன. நீளமான வசனங்களைப் பேசத் தெரிந்த சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் திராவிட சினிமா நாயகர்கள் ஆயினர். மேலும் நாடகங்களில் கடைசிவரிசை பார்வையாளர்களுக்கும் கேட்கும் வகையில் உரத்த குரலில் வசனங்களைப் பேசுவது, கடைசிவரிசை பார்வையாளர்களும் நாடகத்தை உணரும்வகையிலான மிகை நடிப்பை இவர்கள் கைக்கொண்டனர். திராவிட சினிமாக்களின் காலத்திலும் அதன்பிறகும் உருவான பாலச்சந்தர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் போன்றோரின் சினிமாக்கள் பார்ப்பனிய மதிப்பீடுகளை உள்வாங்கிக்கொண்ட நடுத்தர வாழ்க்கையைச் சித்திரிக்கும் அமெச்சூர் நாடகங்களின் நீட்சியாக விளங்கின. (கொஞ்சம் நாடகிய அம்சங்கள் இருந்தாலும் ஶ்ரீதரின் படங்கள் இவற்றிலிருந்து வேறுபட்டவை. )
1967இல் தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு திராவிட சினிமாக்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கிய நேரத்தில் பாரதிராஜாவின் வருகை நிகழ்ந்தது. ‘பராசக்தி’ போன்ற படங்களின் வசனம் தனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியதாக பாரதிராஜா சொன்னாலும் அவர் படங்கள் அதற்கு முற்றிலும் மாறான வடிவத்தில் இருந்தன. சமூகச்சீர்திருத்த நாடகங்கள், அமெச்சூர் நாடகங்களின் நீட்சியாக இருந்த தமிழ் சினிமாவை அதன் நாடகத்தன்மையில் இருந்து பிரித்தெடுத்து புதியவகை சினிமாவை உருவாக்கியவர் பாரதிராஜா. அதுதான் அவரின் மிகப்பெரும் சாதனை.
பாரதிராஜா என்ற கலைஞன் உருவானதால்தான் தமிழில் ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ தேவராஜ், மகேந்திரன், பாலுமகேந்திரா போன்ற பல இயக்குநர்கள் தமிழில் உருவானார்கள்.
திராவிடர் கழகம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஆகியவை பாரதிராஜாவை முற்போக்கு இயக்குநராக மதிப்பிட்டு கொண்டாடிய அதேவேளை மார்க்சிய-லெனினிய பார்வை கொண்டவர்களும் பட்டியலியனப் பார்வை கொண்டவர்களும் பாரதிராஜா படங்களைத் தீவிர விமர்சனத்துக்குள்ளாக்கியுள்ளனர். குறிப்பாக, பாரதிராஜா படங்களை சாதிய சினிமாக்களாக மதிப்பிடும் விமர்சனங்களை அவ்வளவு எளிதில் புறம்தள்ளிவிட முடியாது. இத்தகைய இரு பார்வைகளுக்கு இடையில் பாரதிராஜாவை எப்படி மதிப்பிடுவது?
பகுத்தறிவு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, பார்ப்பனர் எதிர்ப்பு, தமிழ்ப்பற்று, வரையறுக்கப்பட்ட பெண்ணியம், இந்திய பெருந்தேசிய எதிர்ப்பு ஆகியவற்றை முன்வைத்த திராவிட சினிமாக்களின் முதன்மை பாத்திரங்களாக வெள்ளாள, முதலியார் பாத்திரங்கள் அமைந்தன. பார்ப்பன மைய சினிமாக்களுக்கு அடுத்தபடியாக உருவான சினிமாக்கள் இப்படி அமைவது இயல்புதான். ஆனால், இந்தப் படங்களில் நுட்பமான வெள்ளாளர், முதலியார் வாழ்க்கைச் சித்தரிப்புகளோ சாதியப் பெருமிதங்களோ இல்லை என்பதையும் கணக்கிலெடுக்க வேண்டும்.
தமிழ் சினிமாவில் நுட்பமான சாதிய அடையாளம் சித்திரிக்கப்பட்டது, எப்போது உண்மையான அசல் கிராமம் தமிழ் சினிமாவில் காட்சிப்படுத்தப்பட்டதோ, எப்போது எதார்த்தவாதத்தின் நிழல் தமிழ் சினிமாவில் படிந்ததோ, அப்போதுதான். குறிப்பாகப் பாரதிராஜாவின் வருகைக்குப் பிறகுதான். ‘தமிழ் சினிமாவை ஸ்டூடியோக்களுக்கு வெளியே கிராமத்து தெருக்களுக்கு கைபிடித்து அழைத்துச் சென்றவர்’ என்பது பாரதிராஜாவுக்கு வழங்கப்படும் புகழாரம், அது உண்மையும்கூட.
தமிழ் சினிமா என்பது ஸ்டூடியோக்களுக்கு வெளியே கிராமங்களுக்குச் சென்றபோதுதான் வெளியே இருந்த எதார்த்தம் திரைக்கு உள்ளே வந்தது. ‘தேவர் சினிமா' என்று யோசித்தால் பாரதிராஜா உடனடியாக நினைவுக்கு வந்தாலும் உண்மையில் அவரது தொடக்ககாலப் படங்களில் வெவ்வேறு சாதியினர் குறித்த சித்தரிப்புகள் இடம்பெற்றன.
'கிழக்கே போகும் ரயில்' படத்தில் நாயகன் நாவிதர் சாதியைச் சேர்ந்தவன்: நாயகி ராஜு சாதியைச் சேர்ந்தவள். 'அலைகள் ஓய்வதில்லை' நாயகன் பார்ப்பன இளைஞன், நாயகி கிறிஸ்தவப் பெண் என்பதும் படத்தின் இறுதிக்காட்சியில் சிலுவையும் பூணூலும் அறுத்தெறியப்பட்டன என்பது அனைவரும் அறிந்த செய்திதான். 'கிழக்குச்சீமையிலே' படம்தான் பாரதிராஜா படத்தில் உச்சபட்சமான தேவர் படம் எனலாம். தேவர் கலாசாரம் குறித்த பெருமித வார்த்தைகள் நிரம்பி வழிந்த படம். குறிப்பாக, பஞ்சாயத்து காட்சியில் விஜயகுமார் பேசும் வசனங்கள் தேவர் சாதி பெருமிதத்தை தீவிரமாக முன்வைத்தன.
'முதல் மரியாதை' படமும் தேவர் பாத்திரங்களைக் கொண்ட படம் என்றாலும் தேவர் சாதிப் பண்ணையாருக்கும் படகோட்டும் எளிய சாதிப்பெண்ணுக்குமான நட்புறவு, தேவர் சாதி இளைஞனுக்கும் செருப்பு தைக்கும் அருந்ததியர் சமூகப் பெண்ணுக்குமான காதல் ஆகியவற்றை அப்படம் பேசியது. ஆனால் அருந்ததியரான ‘எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்' வீராசாமி தன் வயதுக்குக் குறைவான சிவாஜிகணேசனின் காலில் விழும் மோசமான காட்சியும் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பாரதிராஜாவின் 'பசும்பொன்', 'கருத்தம்மா' இரண்டும் தேவர் சாதி வாழ்க்கையைப் பேசிய படங்கள்தான் என்றாலும் சுயவிமர்சனத்தோடு வெளிப்பட்ட படங்கள். விதவைப் பெண்ணின் மறுமணக் கணவனுக்கும் முதல் மணத்தின் மூலம் பிறந்த மகனுக்குமான முரண்பாட்டு உறவைப் பற்றிப் பேசிய படம் 'பசும்பொன்'. 'கருத்தம்மா' படம் தொடங்கும்போதே பசும்பொன் முத்துராமலிங்கத்தின் சிலையைக் காட்டியே ஆரம்பிப்பதன்மூலம் தெளிவாக 'உசிலம்பட்டித் தேவர்களே பெண்சிசுக் கொலையில் ஈடுபடுபவர்கள்' என்பதை அழுத்தமாகப் பதிவு செய்தது. இதனால் சொந்தச் சாதியில் இருந்தே எதிர்ப்பு வந்ததையும் பாரதிராஜா நேர்காணல்களில் பதிவு செய்திருக்கிறார். இவ்விரண்டு படங்களுமே பெண்களின் பார்வையிலிருந்து தேவர் சாதிக் கலாசாரத்தை அணுகிய படங்கள் என்பவை குறிப்பிடத்தக்கது.
பாரதிராஜாவின் முற்போக்குப் படமாகக் கொண்டாடப்படுவது 'வேதம் புதிது'. பார்ப்பனர்களின் கடும் எதிர்ப்பையும் திராவிடர் கழகத்தின் ஆரவார வரவேற்பையும் ஒருசேரப் பெற்ற படம். சாதிய இறுக்கம், பார்ப்பனச் சமூகத்தின் கட்டுப்பெட்டித்தனம், சங்கராச்சாரி என்ற புனிதப் பிம்பத்தின் மீதான விமர்சனம் ஆகியவற்றை முன்வைக்கும் படமாக இருந்தாலும் 'வேதம் புதிது' படத்தின் சில பிரச்னைகளையும் பேசியாக வேண்டும்.
படத்தின் முதன்மைப் பாத்திரமான சத்யராஜ் சாதிப்பெயர் கொண்ட நாத்திகராகச் சித்தரிக்கப்படுவது ஏன் என்ற கேள்வி எழுகிறது. நாத்திகர்களிலும் சாதிப்பற்றாளர்கள் இருக்கிறார்கள் என்றாலும் சாதிக்கும் மதம், கடவுளுக்குமான உறவு குறித்து அதிகம் பேசப்பட்ட தமிழ்மண்ணில் ஏன் இப்படியொரு பாத்திரம்? அதிலும் சத்யராஜ் ஒரு காட்சியில் பேசும் 'அன்பே சிவம்னா அவன் கையில் சூலாயுதம் எதுக்கு?' என்ற வாக்கியம் திராவிடர் கழகத்தாரால் எழுதப்பட்ட சுவர் வாசகங்களுள் ஒன்று.
'பாலுங்கிறது பேரு; தேவர்ங்கிறது எங்கே வாங்கின பட்டம்?' என்ற வசனம் பிரபலமான ஒன்று. ஆனால் இந்த கேள்வியைக் கேட்கும் பார்ப்பனச் சிறுவன் சாதிய அடையாளமான பூணூலைக்கூட கழற்றவில்லை என்பது கவனிக்கத்தக்கது. தேவர் என்பது எங்கேயும் வாங்கிய பட்டம் இல்லை என்பதைப்போல பூணூலும் யேல் பல்கலைக்கழகப் பட்டமில்லையே! மேலும் பார்ப்பனச் சிறுவன் பாலு(தேவர்)வின் வீட்டுக்குள் வந்தபிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவரால் விரும்பிச் சாப்பிடப்படும். கோழிகள், ஆடுகள் மறைவதாகவும் காட்டப்படும். இது பார்ப்பனிய உட்செரித்தல்தானே!
'தேவர்ங்கிறது எங்கே வாங்கிய பட்டம்?' என்று கேள்வி எழுப்பிய பாரதிராஜாதான் பின்பு 'தேவர்' பெருமிதம் பேசிய 'கிழக்குச்சீமையிலே' படத்தை எடுத்தார். தன் தந்தையின் பெயரில் சாதிப்பெயரை நீக்கமாட்டேன் என்று கோபப்பட்டார். முக்குலத்தோர் சமூக வரலாறான 'குற்றப்பரம்பரை'யை யார் படமாக்குவது என்று அதே சமூகத்தைச் சேர்ந்த பாரதிராஜாவுக்கும் பாலாவுக்கும் இடையில் பிரச்னைகள் எழுந்தன.
அதேநேரம், பாரதிராஜாவை முற்றும் முழுதுமாக பிற்போக்கு சினிமாக்களை எடுத்தவர் என்ற முத்திரையும் நியாயமானவை அல்ல. 90களில் உருவான கிராம சினிமாக்கள் வெளிப்படையாகவே சாதியம், நிலப்பிரபுத்துவம், பெண்ணடிமைத்தனம் ஆகியவற்றைத் தூக்கிப்பிடித்தன.
90களின் கிராம சினிமாக்களில் தாலி ஒரு புனிதப்பொருளாகச் சித்திரிக்கப்பட்டது. ஒரு பெண்ணின் கழுத்தில் உள்ள தாலியில் வில்லனோ, அடியாட்களோ கைவைக்கும்போது அம்மன் கோயில் மணி பதற்றத்துடன் வேகமாக அடிக்கும், மின்னல் மின்னி, இடி இடித்து, பெருமழை பெய்து பிரளயம் ஏற்படும். ஆனால் ‘அறுத்துக்கட்டும் சாதியில் பிறந்தவர்’ இயக்கிய படங்கள் என்பதாலோ என்னவோ ‘புதிய வார்ப்புகள்’, ‘கிழக்குச்சீமையிலே’ நாயகிகள் இயல்பாகத் தாலியை அறுத்தெறிவார்கள். ‘கருத்தம்மா’ பெண்களுக்கான வாழ்வுரிமையையும் தனித்துவத்தையும் அழுத்தமாகப் பேசிய படம். இவற்றையும் சேர்த்தே பாரதிராஜாவை மதிப்பிட வேண்டும்.
பாரதிராஜா தன் படங்களில் வெவ்வேறு அரசியல் பிரச்னைகளைப் பேச முயன்றார். சாதி, மதத்தை மீறும் காதலின் வலிமையைச் சொல்லும் ‘அலைகள் ஓய்வதில்லை’, பாரதியாரைப் பெண்ணியத் திருவுருவாக முன்னுறுத்திய பொதுப்புத்தி பெண்ணியத்தின் அடிப்படையிலான ‘புதுமைப்பெண்’, வறுமையையும் வேலையில்லாத் திண்டாட்டத்தையும் சொன்ன ‘நிழல்கள்’, அரசியல் கட்சிகளின் சுரண்டலுக்கு ஆளாகும் இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் 'என்னுயிர்த் தோழன்', சனாதனப் பார்ப்பனியத்தின் இறுக்கத்தை விமர்சனத்துக்குள்ளாக்கிய 'வேதம் புதிது'. பெண்சிசுக் கொலைக்கு எதிராகப் பேசிய 'கருத்தம்மா' எனப் பல அரசியல் சினிமாக்களை எடுத்தார். இந்தப் படங்கள் அனைத்தும் முற்றிலும் அரசியல் தெளிவுகொண்டவை என்று சொல்ல முடியாது. ஆனால் திராவிட இயக்க சினிமாக்களுக்குப் பிறகு சமூகப் பிரச்சனைகளைத் திரையில் பேச விழைந்த முயற்சி எனக்கொண்டு விமர்சனபூர்வமாகப் பாரதிராஜா படங்களை அணுகலாம்.
இளையராஜா சகோதரர்கள் கம்யூனிஸ்ட் கட்சி மேடையில் பாடிய காலத்தில் இருந்து நட்பில் இருந்த பாரதிராஜா தன்னை கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகள் ஈர்த்ததாக சொல்லியிருக்கிறார். ஆனால் அவர் படங்களில் மார்க்சியக் கூறுகள் பிரதிபலித்ததாகச் சொல்ல முடியாது. ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘வேதம் புதிது’ போன்ற படங்களில் பார்ப்பனர்களின் வைதீக மனநிலையை அவர் விமர்சனத்துக்கு உள்ளாக்கினாலும் அவர் பெரியாரியத்தை உள்வாங்கியவர் என்றும் சொல்லிவிட முடியாது.
திராவிடக் கட்சி தலைவர்களில் அவர் கலைஞரைவிட எம்.ஜி.ஆரிடம் கூடுதல் நெருக்கம் கொண்டவராக இருந்தார். அவருடைய ‘வேதம் புதிது’ திரைப்படம் பார்ப்பனர்களின் எதிர்ப்புக்குள்ளானபோது எம்.ஜி.ஆர் அரசு பாரதிராஜாவுக்கு ஆதரவாக நின்றதால் அந்த நெருக்கம் உண்டாகியிருக்கலாம். (ஆனால் அதே எம்.ஜி.ஆர் அரசு ‘அக்கிரகாரத்தில் கழுதை’ படத்துக்கு நெருக்கடி கொடுத்தது)
ஈழ ஆதரவும் திராவிட எதிர்ப்பு தமிழ்த் தேசிய சாய்வும் பாரதிராஜாவிடம் உண்டு. ‘திராவிடக் கட்சிகள் தமிழ்த்தேசிய ஓர்மை உருவாகவிடாமல் தடுத்துவிட்டதாக’ குற்றம் சாட்டியவர் அவர். அதேநேரம் ஒரு கலைஞனுக்கே உரிய தத்தளிப்பும் தடுமாற்றமும் கொண்டவர் பாரதிராஜா.
‘விஜயகாந்த் போன்ற தெலுங்கர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகக்கூடாது’ என்று சீற்றத்தை வெளிப்படுத்தியவர். ‘தமிழ் பேசும் சாதிகளே தமிழர்கள்’ என்ற பார்வை கொண்டவர். ஆனால் அத்தகைய காலத்தில்தான் அவர் இயக்கிய ‘அன்னக்கொடியும் கொடிவீரனும்’ திரைப்படத்தில் தெலுங்கு பேசும் அருந்ததியர் நாயகனையும் படைத்தார். பாரதிராஜா படங்களில் சாதியக்கூறுகள் இருந்ததாக விமர்சித்த சிந்தனைப்பள்ளியில் இருந்துவந்த மாரி செல்வராஜின் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தைக் கண்கலங்கிப் பாராட்டினார். இத்தகைய முரண்கள் எப்போதும் ஒரு படைப்பாளிக்குச் சொந்தமானவைதான்.
பாரதிராஜா உருவாக்கிய கிராம சினிமாக்களின் முக்கியத்துவம் கிராமங்களை பன்மைத்துவம் கொண்ட நிலப்பரப்பாக காட்சிப்படுத்தியதும் அன்றாட வாழ்க்கையை முற்போக்குப் பார்வையில் அணுகியதும்தான். ஆனால் பாரதிராஜாவின் சில திரைப்படங்களே இதற்கு முற்றிலும் எதிராகவும் இருந்தன. பாரதிராஜாவைத் தொடர்ந்து உருவான தமிழ் கிராம சினிமாக்கள் இந்த இரண்டாவது அம்சத்தை பற்றிக்கொண்டு நிலப்பிரபுத்துவத்தையும் சாதியத்தையும் ஆணாதிக்கத்தையும் முன்வைத்தன.
(சினிமா தொடரும்...)