நிறம் மாறும் சினிமா மாதிரிப்படம்
சிறப்புக் களம்

நிறம் மாறும் சினிமா 1 | வணிக சினிமா நாயகரால் இரண்டரை ஆண்டுகளில் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது எப்படி?

தமிழ் சினிமாக்களில் முன்வைக்கப்பட்ட கருத்தியல் அரசியல், ‘அரசியலற்ற சினிமாக்களின்’ அரசியல், பார்வையாளர்களிடம் சினிமா அரசியல் ஏற்படுத்திய தாக்கங்கள், சமூகமாற்றங்களிலும் தேர்தல் அரசியலிலும் தமிழ் சினிமாக்களின் பங்கு குறித்து பேசும் நிறம் மாறும் சினிமா

சுகுணா திவாகர்

தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு நடிகர் முதலமைச்சர் ஆகியிருக்கிறார். இதற்குமுன்பு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்ற இரண்டு முதலமைச்சர்கள் தமிழ் சினிமாவில் இருந்து உருவாகியிருக்கிறார்கள் என்றாலும் முந்தைய சூழலுக்கும் இப்போதைய சூழலுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் உள்ளன. ‘கோட்டைக்கான குறுக்குவழி கோடம்பாக்கம்’ என்று வேடிக்கையாகச் சொல்லப்படுவதுண்டு. தமிழ் சினிமா என்பது கோடம்பாக்கத்தில் இருந்து வடபழனி, சாலிகிராமம், ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி, உலகின் பல்வேறு மூலைகளில் உள்ள அனிமேஷன் கிராபிக்ஸ் கணினிகள் என்று பல்வேறு தளங்களுக்கு நகர்ந்திருக்கிறது என்றாலும் அரசியலுக்கும் தமிழ் சினிமாவுக்குமான தூரம் குறையவில்லை.

model image

இன்னொருபுறம், 2000க்குப் பிறகு தமிழ் சினிமாவின் முகம் மாறியிருக்கிறது. புதிய அலை இயக்குநர்கள் தமிழ் சினிமாவை வேறொரு தளத்துக்கு நகர்த்தியிருக்கின்றனர். பட்டியலினத்தவர்கள், முஸ்லீம்கள், திருநங்கைகள் போன்ற அடையாள அரசியல், விளிம்புநிலை அரசியல் தமிழ் சினிமாக்களில் பிரதிபலித்திருக்கிறது. மேலும் கதையற்ற கதை (பீட்சா) , அ-நேர்கோட்டு கதைசொல்லல் (மகாராஜா), கதாநாயக மையத்தை உடைக்கும் சினிமாக்கள் (மங்காத்தா, சூதுகவ்வும்), தமிழ் சினிமாவில் அதிகார மையங்களாகவும் புனிதங்களாகவும் கட்டமைக்கப்பட்டதைக் கேள்விக்கும் கேலிக்கும் உள்ளாக்கும் பகடி சினிமாக்கள் (தமிழ்ப்படம், ‘கோவா’ போன்ற வெங்கட்பிரபுவின் சினிமாக்கள்), டார்க் ஹியூமர் (’கோலமாவு கோகிலா’ போன்ற நெல்சனின் சினிமாக்கள்), மேஜிக்கல் ரியலிச சினிமாக்கள் (ஆயிரத்தில் ஒருவன், குதிரைவால், தங்கலான்) என்று பரிசோதனை சினிமாக்கள் உருவாகி பல சினிமாக்கள் வணிக வெற்றிகளையும் ஈட்டியிருக்கின்றன.

80கள் – 90களில் மீண்டும் மீண்டும் உன்னதமாக முன்வைக்கப்பட்ட எல்லா செண்டிமெண்டுகளையும் கிண்டலடித்து உடைத்துநொறுக்கும் சினிமாக்கள் உருவாகி தமிழ் சினிமா வேறு திசைக்கு நகர்ந்தபிறகும் எப்படி ஒரு வணிக சினிமா நாயகரால் அரசியல் கட்சியைத் தொடங்கி இரண்டரை ஆண்டுகளில் ஆட்சியைப் பிடிக்க முடிகிறது? ஒரு நடிக அரசியல் தலைவரால் எப்படி செண்டிமெண்ட்களை வைத்து வெற்றிபெற முடிகிறது?

முன்னெப்போதையும்விட, அவ்வளவாக வெற்றிபெறாவிட்டாலும் நாயகிமைய சினிமாக்கள் வெளிவரத் தொடங்கியது கடந்த பத்தாண்டுகளில்தான். இன்னொருபுறம் வழமையான தமிழ் சினிமா நாயக பிம்பங்களை பகடி செய்யும் சினிமாக்களும் வெளியாகி வெற்றிபெற்றிருக்கின்றன. இருந்தபோதும் எப்படி மீண்டும் மீண்டும் நாயக வழிபாட்டு (Cult) மனநிலை உருவாகிறது?

எம்.ஜி.ஆர் சினிமாவில் உருவாக்கிய பிம்பக்கட்டுமானம் எப்படி அவருக்கான அரசியல் வெற்றிகளைச் சாத்தியமாக்கியது என்று 1992இல் ஆய்வாளர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் ‘பிம்பச்சிறை’ என்ற நூலை எழுதினார். 34 ஆண்டுகளைக் கடந்தபின்னும் தமிழர்கள் பிம்பச்சிறையில் இருந்து விடுதலை அடையவில்லையா? இரண்டும் ஒரேமாதிரியான பொறிதானா?

இப்படி பல்வேறு கேள்விகளுக்கு மத்தியில்தான் நாம் தமிழ் சினிமாவின் அரசியல் குறித்தும் கருத்தியல்ரீதியாக உருவான சினிமாக்கள் குறித்தும் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

எது விமர்சனம்?

model image

‘அரசியல்’ என்றால் அது தேர்தல் அரசியல் என்றே தட்டையாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் கருத்தியலை மையப்படுத்திய அரசியல், அதன் செயற்பாடுகள், சமூகத்தில் அது ஏற்படுத்தும் தாக்கங்கள் ஆகியவற்றை முன்வைத்து நிகழ்த்தப்படும் தீவிர உரையாடல்களின் மூலம்தான் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் தேர்தல் அரசியல் குறித்தும் புரிந்துகொள்ள முடியும்.

அப்படியான புரிதலுக்கு வருவதற்கு சினிமா என்னும் கலைவடிவத்தைக் கோட்பாட்டுரீதியில் அணுக வேண்டும். தமிழ் வெகுஜன ஊடகங்களில் சினிமாவின் கதைச்சுருக்கம், அது பார்வையாளர்களுக்கு அளிக்கும் சுவாரஸ்யத்தின் வெற்றி தோல்வி, நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் குறித்த ரசனை சார்ந்த கருத்துகள் என்பதே ‘சினிமா விமர்சனம்’ என்று புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. இதைத்தாண்டி சினிமா முன்வைக்கும் அரசியல் குறித்து பேசுவது தேவையற்ற ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

ஒரு சினிமா மீது அரசியல்ரீதியிலான விமர்சனங்களை முன்வைக்கும்போது இருவகையான எதிர்வினைகள் முன்வைக்கப்படுகின்றன.

‘சினிமாவை சினிமாவாகப் பாருங்கள்’ என்பது ஒருகுரல்.

‘இவ்வளவு பேசுகிற உங்களால் ஒரு சினிமாவை உருவாக்க முடியுமா?’ என்பது இன்னொரு குரல்.

இது திரைத்தளங்களில் மட்டும் கேட்கிற குரல்கள் இல்லை. நீண்டகாலமாகவே இலக்கியத்தில் இதுதான் நிகழ்ந்திருக்கிறது. ஒரு கவிதை, சிறுகதை, நாவலை முன்வைத்து கோட்பாட்டு ரீதியிலான விமர்சனங்கள் முன்வைக்கப்படும்போதும் இதே குரல்கள் வேறொரு தொனியில் எழுந்திருக்கின்றன.

model image

‘இலக்கியம் என்பது ரசனைக்கானது. கலை கலைக்காகவே’ என்பது ரசனை விமர்சகர்கள், தூய இலக்கியவாதிகளின் வாதம். ஆனால், மார்க்சிய விமர்சகர்கள் ஓர் இலக்கியத்தில் எந்த வர்க்கத்தின் குரல் ஒலிக்கிறது என்று கோட்பாட்டு ரீதியிலான விமர்சனங்களை முன்வைத்தனர். மார்க்சிய அணுகுமுறையை ஆதரிக்கும் படைப்பாளிகள் ‘கலை கலைக்காக அல்ல, கலை மக்களுக்காக’ என்றனர். ஆனால், அப்படி எழுந்த பல படைப்புகளில் பிரசாரம் மேலோங்கியிருந்த அளவுக்கு கலைத்தன்மையும் அழகியலும் இல்லை. அதற்குப்பின்பு தமிழில் அறிமுகமான அமைப்பியல், பின் அமைப்பியல், பின் நவீனத்துவம் போன்ற சிந்தனைமுறைகள் இலக்கியங்களில் உள்ள அழகியல், கலைத்தன்மையை ஏற்றுக்கொண்டதுடன் மாற்று அழகியல், மாற்றுக்கலாசாரம், எதிர்க்கலாசாரம் ஆகியவற்றை முன்வைத்தன.

90களில் அண்ணல் அம்பேத்கர் நூற்றாண்டு விழாவையொட்டி மராத்தி, கன்னட தலித் இலக்கியங்களின் பாதிப்பில் தமிழிலும் தலித் இலக்கியங்கள் உருவாகின. அவை அதற்கு முன்பிருந்த தமிழ் இலக்கியங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தன. அதுவரை தமிழ் இலக்கியத்தில் பேசப்படாத வாழ்க்கை, மொழி, உணர்வுகள் பதியப்பட்டன. எவையெல்லாம் புனிதங்கள் என்று போற்றப்பட்டனவோ, அவையெல்லாம் தலைகீழாக்கப்பட்டன. அதேபோல் உடல் அரசியலை முன்வைத்து வீரியமிக்க பெண்ணெழுத்து உருவாகியது.

உடனே காலங்காலமாகத் தமிழ் இலக்கியத்தில் கோலோச்சியவர்கள், ‘இலக்கியத்தில் அரசியல் கூடாது’, ‘கோட்பாட்டுரீதியாக விமர்சிப்பவர்களுக்கு படைப்புமனம் கிடையாது’, ‘படைப்பாளிகள் உன்னதமானவர்கள்’, ‘உள்ளொளி, பிரக்ஞையில் இருந்தே படைப்புகள் உருவாகின்றன’ என்றெல்லாம் தூய்மைவாதத்தை முன்வைத்தார்கள். ஆனால் ‘ஆசிரியர் இறந்துவிட்டார்’ என்ற கோட்பாட்டை ரோலாந்த் பர்த் (Roland Barthes) அறிமுகப்படுத்தியபின் நவீனத்துவ சிந்தனையாளர்கள் முதலில் படைப்பாளியின் புனித ஒளிவட்டங்களை உடைத்தனர்.

படைப்பின் அர்த்தத்தை எப்படி புரிந்துகொள்வது?

model image

‘ஒரு படைப்பை உருவாக்கியபிறகு, அதன் அர்த்தங்களை, படிக்கும் வாசகர்கள்தான் உருவாக்குகிறார்கள். ஒரு படைப்பை இப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. ஒரு படைப்பை வெவ்வேறு காலங்களில் படிக்கும்போது வெவ்வேறு அர்த்தங்கள் உருவாகும்.

ஒரு படைப்பாளியின் சாதிய, வர்க்க, பாலினச் சார்பு அந்த படைப்புகளில் பிரதிபலிக்கலாம். அவற்றை அந்த படைப்பாளி திட்டமிட்டோ, தன்னுணர்வுடனோ எழுதாவிட்டாலும் படைப்பாளியின் சாதிய, வர்க்க, பாலினச் சார்பு அந்த படைப்புகளில் பிரதிபலிக்கப்பட்டிருக்கலாம்’ என்ற புதிய கோட்பாட்டுரீதியிலான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

உதாரணத்துக்கு ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற வரியை எடுத்துக்கொள்வோம். உலகம் முழுவதையும் தனது உறவாகக் கருதும் பொதுமைச் சிந்தனை, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழர்களிடம் இருந்தது என்பதற்குச் சான்றாக இந்த வரி சொல்லப்படுவதுண்டு.

அதேநேரம் இந்த வரி எழுதப்பட்ட காலம் பேரரசுகள், உருவான காலம். இனக்குழு வாழ்க்கையையும் சிற்றரசுகளையும் அழித்து பேரரசுகள் உருவாயின. இந்தப் பேரரசுகளின் மன்னர்கள் பல்வேறு ஊர்களை, நாடுகளை வென்று தங்கள் அரசை உருவாக்கினர். இந்த காலகட்டத்தின் பிரதிபலிப்பாக ‘யாதும் ஊரே’ என்னும் வரி விளங்குவதாகவும் ஒருவர் புரிந்துகொள்ளலாம்.

பல அர்த்தங்களோடு ஒரே குறள்

2000 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட திருக்குறளை பரிமேலழகர், நச்சினார்க்கினியர், அயோத்திதாசர், மு.வரதராசன், நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் மு.கருணாநிதி, சாலமன் பாப்பையா, சுஜாதா, வைரமுத்து என்று பலரும் பல்வேறு விதமாக விளக்கியுள்ளனர். திருக்குறளை சைவ நூலாக, சமண நூலாக, பௌத்த நூலாக, மதச்சார்பற்ற நீதி நூலாக முன்வைத்து பல்வேறு உரைகள் எழுதப்பட்டுள்ளன. எழுதப்பட்டது ஒரே ஒரு திருக்குறள்தான். ஆனால், அதை வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு கருத்தியல் சார்ந்தவர்கள் வெவ்வேறுவிதமாக வாசித்திருக்கின்றனர்; வெவ்வேறுவிதமாக அணுகியிருக்கின்றனர். சினிமா என்னும் கலை வடிவமும் அப்படித்தான்.

திட்டவட்டமாக மார்க்சியம், திராவிடம், தலித்தியம், பெண்ணியம் ஆகிய கருத்தியல்களை முன்வைக்கும் சினிமாக்கள் ஒருபுறம் என்றால், அரசியலே இல்லாமல் உருவாக்கப்படும் சினிமாக்கள், வணிக சினிமாக்கள் ஆகியவையும் தன்னளவில் ஓர் அரசியலைக் கொண்டிருக்கின்றன என்பதை வெளிக்கொண்டு வருவதுதான் கோட்பாடு சார்ந்த விமர்சன முறை.

வேதம் புதிது : இன்னொரு புரிதல்

முற்போக்கான அரசியலை முன்வைக்கும் ஒரு சினிமாவின் ஓர் இழைகூட அதன் நோக்கத்துக்கு எதிரானதாக இருக்கலாம். உதாரணத்துக்கு பாரதிராஜாவின் ‘வேதம் புதிது’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பாலுங்கிறது பேரு, தேவர்ங்கிறது எங்கே வாங்கின பட்டம்’ என்ற புகழ்பெற்ற வசனத்தை எடுத்துக்கொள்ளலாம்.

இது சாதியத்துக்கு எதிரான வசனமாக முற்போக்காளர்களால் கொண்டாடப்பட்ட வசனம். சாதியத்துக்கு எதிரான கூறு இந்த வசனத்தில் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் இப்படி யோசித்துப் பார்ப்போம்.

‘பாலுத்தேவர்’ என்பது எப்படி சாதி அடையாளமோ, அதுபோல் பூணூல் என்பதும் சாதி அடையாளம்தான். தன் பூணூலைக் கழட்டாத பார்ப்பனச் சிறுவன்தான் ‘பாலுத்தேவர்’ என்னும் சாதிய அடையாளத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறான்.

ஒருவேளை பாலுத்தேவர் ‘’தேவர்ங்கிறது எங்கேயும் வாங்கின பட்டமில்லைதான் தம்பி. ஆனா, நீ போட்டிருக்கிற பூணூலும் ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் வாங்கின பட்டமில்லையே?’’ என்று கேட்டிருந்தால், அந்தக் காட்சியின் தன்மையே மாறியிருக்கும். மேலும், ‘’தேவர்ங்கிறது எங்கே வாங்கின பட்டம்?” என்ற கேள்வியை கேட்பது ஒரு பார்ப்பனச் சிறுவனாக இல்லாமல், ஒரு பட்டியலின சிறுவனாக இருந்திருந்தால் அதன் பரிமாணமே வேறாக இருந்திருக்கும்.

இப்படியான பார்வைகளின் வழியாகத் தமிழ் சினிமாக்களை அணுகுவதுதான் இந்த தொடரின் நோக்கம்.

நிறம் என்பது வெறும் நிறமல்ல. அது அரசியல் குறியீடாக மாறியிருக்கிறது. கருப்பு, சிவப்பு, நீலம், பச்சை, காவி என்று பல்வேறு நிறங்கள் பிரதிபலிக்கும் களமே தமிழ் சினிமா.

தமிழ் சினிமாக்களில் முன்வைக்கப்பட்ட கருத்தியல் அரசியல், ‘அரசியலற்ற சினிமாக்களின்’ அரசியல், பார்வையாளர்களிடம் சினிமா அரசியல் ஏற்படுத்திய தாக்கங்கள், சமூகமாற்றங்களிலும் தேர்தல் அரசியலிலும் தமிழ் சினிமாக்களின் பங்கு போன்றவை குறித்து தொடர்ந்து உரையாடுவோம்.

(சினிமா தொடரும்)