வேகமான நெட்வொர்க் என தனது விளம்பரங்களில் ஏர்டெல் நிறுவனம் குறிப்பிடுவதை நிறுத்தவேண்டும் என இந்திய விளம்பர தர கவுன்சில் (ASCI) ஏர்டெல் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
இணையதள வேகத்தை அளவிடும் ஊக்லா நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து தவறான விளம்பரங்களின் வழியிலான பிரச்சாரத்தை ஏர்டெல் நிறுவனம் மேற்கொண்டுள்ளதாகவும், இதைத் தடுக்குமாறு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கொடுத்திருந்த புகாரின் அடிப்படையில் இந்திய விளம்பர தர கவுன்சில் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ஊடக விளம்பரங்களில் குறிப்பிடப்படும் இத்தகைய வாசகத்தை நிறுத்த வேண்டும் அல்லது இதில் மாற்றங்களை ஏற்படுத்தி ஒளிபரப்ப வேண்டும் என இந்திய விளம்பர தர கவுன்சில் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. இத்தகைய விளம்பரங்கள் ஏப்ரல் 11-ம் தேதிக்குள் மாற்றப்பட வேண்டும் என்று காலக்கெடுவும் விதித்துள்ளது.
இணையதளத்தின் வேகத்தை மதிப்பீடு செய்வதற்கு ஸ்பீடு டெஸ்ட் எனும் செயலி பயன்படுத்தப்படுகிறது. இந்த செயலியை ஊக்லா எனும் நிறுவனம் அளிக்கிறது. இந்த நிறுவனம் ஏர்டெல் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து அந்த நிறுவனத்துக்குச் சாதகமாகச் சான்றளிப்பதாகவும் இதுபோன்ற சான்றை அளிப்பதற்காக இந்த நிறுவனம் பணம் பெறுவதாகவும் ஜியோ குற்றம்சாட்டி இருந்தது. இதே நிறுவனம் இதுபோன்ற சான்று அளிப்பதற்கு தங்களை அணுகியதாகவும் ஜியோ குறிப்பிட்டிருந்தது. இந்த புகார் குறித்து இந்திய விளம்பர தர கவுன்சில் விசாரித்து ஜியோ நிறுவனக் குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாகத் தெரிவித்துள்ளது.