சிறப்புக் களம்

‘திரும்ப திரும்ப வர்ர நீ’ : கை கொடுத்ததா ‘டைம் லூப்’ மேஜிக்? - ‘ஜாங்கே’ திரைப்பார்வை.!

subramani

இந்தியாவின் முதல் ‘டைம் லூப்’ திரைப்படம் என விளம்பரம் செய்யப்பட்டு இன்று திரைக்கு வந்திருக்கும் சினிமா ஜாங்கோ. சதீஸ்குமார், மிருநாளினி, கருணாகரன், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்திருக்கும் சயின்ஸ் பிக்‌ஷன் சினிமாவான இதனை இயக்குநர் மனோ கார்த்திகேயன் இயக்கியிருக்கிறார்.

சென்னையில் பிரபல மருத்துவரான நாயகனும் தொலைக்காட்சி நெறியாளரான மிருநாளினியும் திருமணம் செய்து கொள்கிறார்கள். இருவருக்கும் இடையிலான சின்ன கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள். பூமியை நெருங்கும் எரிகல்லின் கதிர்வீச்சு தாக்கப்பட்டதால் நாயகன் சதீஸ் தன்னுடைய ஒரே நாளுக்குள் சிக்கிக் கொள்கிறார். அந்த ஒரு நாள் மீண்டும் மீண்டும் டைம் லூப் ஆகிறது. இந்த ஐடியாவினை சுவாரஸ்யமாக தர முயற்சித்திருக்கிறது படக்குழு.

மீண்டும் மீண்டும் திரும்பும் அந்த ஒரே நாளில் நடக்கும் வெவ்வேறு சம்பவங்கள் அதனை மாற்ற முயலும் நாயகனின் முயற்சிகள் என சுவாரஸ்யமான ஐடியாவை முடிந்த மட்டும் தெளிவாக சொல்ல நினைத்திருக்கிறார் இயக்குநர். ஆனால் வழக்கமான சயின்ஸ் பிக்‌ஷன் படங்களுக்கேயான பிரச்னையினை இந்த சினிமாவும் சந்தித்திருக்கிறது. சயின்ஸ் பிக்‌ஷன் படங்களை புரிந்து கொள்வதில் ஒரு பொது சிக்கல் உண்டு அதனை புத்திசாலித்தனமாக கையாண்டால் படம் நன்றாக வரும். ஜாங்கோ அதனை முழுமையாக தவற விட்டிருக்கிறது என்று சொல்ல முடியாது. அதே நேரம் இன்னுமே மெனக்கெட்டிருந்தால் இந்த சுவாரஸ்யமான டைம் லூப் ஐடியா ரசிகர்களுக்கு எளிமையாக புரிந்திருக்கும்.

மீண்டும் மீண்டும் திரும்பும் ஒரு நாளின் காட்சிகள் சம்பவங்கள் இவற்றில் ஓரளவு சுவாரஸ்யங்கள் உள்ளன. காதல், நகைச்சுவை என நல்ல மசாலா விசயங்களும் சேர்ந்திருப்பதால் நல்ல பொழுதுபோக்கு சினிமாவாக இது அமைகிறது. நாயகன் தனது நடிப்பு விசயத்தில் இன்னுமே தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. நாயகி மிருநாளினி நல்ல செட்டில்டாக தனது கதாபாத்திரத்தை நடித்துக் கொடுத்திருக்கிறார். அவிழாத ரகசியங்களை க்ளைமேக்ஸில் வழக்கம் போல வில்லனே வந்து ஒப்புதல் வாக்குமூலமாக தருவது க்ளீசே. ஜிப்ரானின் பின்னனி இசை கதைக்கு பொருத்தமாக அமைந்திருக்கிறது, கார்த்திக் கே தில்லையின் ஒளிப்பதிவு ஓகே ரகம்.

துவக்கத்தில் கருணாகரனுக்கு முக்கியத்துவம் இல்லாதது போல இருந்தாலும் பிற்பாதியில் அவருக்கு முக்கிய இடம் தரப்பட்டிருக்கிறது. அதனை அவர் நன்றாகவே பயன்படுத்தி இருக்கிறார். வேலு பிரபாகரனும் தன்னுடைய நடிப்பில் நன்றாக ஸ்கோர் செய்திருக்கிறார்.

இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் சிறப்பான வரவேற்பை படம் பெற்றிருக்கும்., என்றாலும் அறிவியல் புனைவுப் படங்களை விரும்பி பார்க்கிறவர்களுக்கு படம் ஓரளவும் திருப்தியினைத் தரும். ஜாங்கோ இயக்குநர் மனோ கார்த்திகேயன் மற்றும் அவரது குழுவின் இந்த புதிய முயற்சிக்கு பாராட்டுகள். இத்திரைப்படத்தின் மையக்கருவைப் போல டைம் லூப்பில் மீண்டும் மீண்டும் பார்க்க முடியாவிட்டாலும் நிச்சயம் ஒருமுறை ஜாங்கோவை பார்த்து ரசிக்கலாம்.