சிறப்புக் களம்

“காமராஜர் செய்ததும் ஆன்மிக அரசியல்தான்” - முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை பேட்டி!

“காமராஜர் செய்ததும் ஆன்மிக அரசியல்தான்” - முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை பேட்டி!

sharpana

“ஆன்மிக அரசியல் என்பது மண்ணைச் சார்ந்தது. மதத்தைச் சார்ந்ததல்ல. ஆன்மிக அரசியலுக்கும் மத அரசியலுக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் உள்ளன. மதம் என்பது பர்சனல். பொருளின் மேல் நாட்டமில்லாமல் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்று இருக்கும் பற்றுதான் ஆன்மிக அரசியல்” என ஆன்மிக அரசியலுக்கு புதுவிளக்கம் கொடுத்து பேசுகிறார், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை. இளம் வயதிலேயே ஐ.பி.எஸ் ஆகி கர்நாடக காவல்துறையில் பல்வேறு சிறப்பான மாற்றங்களை கொண்டுவந்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர். நேர்மையான அதிகாரியாக பெயரெடுத்ததால் “கர்நாடக சிங்கம்” என்று அம்மாநில மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். கடந்த வருடம் தனது ஐ.பி.எஸ் பதவியை ராஜினாமா செய்தவர், வரும் சட்டமன்றத் தேர்தலில் களம் காணவிருக்கிறார்.  எந்த கேள்விக் கேட்டாலும் கோபப்படாமல் சாந்த சொரூபமாக நிதானமாக பதிலளிக்கிறார். 

 தமிழகத்தில் ஏற்கனவே பல அரசியல் கட்சிகள் உள்ளன. அவற்றுடன் மோதி நீங்கள் எப்படி வெற்றி பெறுவீர்கள்? 

அரசியலில் வெற்றி என்பது உடனே நடந்துவிடாது. என்னைப் பொறுத்தவரை நம் பேச்சில்; நம் செயலில் மக்கள் மாறினாலே வெற்றிதான். எனது பயணம் நல்ல நோக்கத்திற்கானது. அதற்கு, வெற்றி கிடைக்க சில காலம் ஆகலாம். அரசியலில் பதவிக்கு வந்து அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்று நினைக்கவில்லை. எனது எண்ணம் தூய்மையானது. எல்லாம் கெட்டுவிட்டது என்று ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்ப்பதைவிட நல்ல விஷயங்களை செய்யும்போது மக்களுக்கு நம்பிக்கை வரும். நான் ஐ.பி.எஸ் பணியில் இருந்து விலகியிருக்கிறேன். பதவியின் மீது ஆசை இருந்தால் அதிலேயே தொடர்ந்திருப்பேனே? ஏன் செய்யவில்லை? நல்ல விஷயங்களைச் செய்யும்போது, மக்கள் நிச்சயம் அங்கீகாரம் கொடுப்பார்கள். அரசு பணியில் இருப்பவர்களையும், அதை மாற்றவேண்டும் என்று வருபவர்களையும் மக்கள் கொண்டாடவேண்டும். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.

நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்துள்ளீர்கள். ஆனால், தேர்தல் அரசியல் ஓட்டுக்கு லஞ்சத்தை எதிர்பார்க்குமே?

நீரோடை போல்  ஓடிக்கொண்டே இருக்க நினைக்கிறேன். ஒரே இடத்தில் இருந்தால் சேஃப். ஆனால், ஓடும்போதுதான் கஷ்டம். ஒரு துறையைப் பார்த்துவிட்டேன். அதில், சில மாற்றங்களை செய்துள்ளேன். அதேபோல, மற்றத்துறைகளில் மாற்றத்தைக் கொண்டுவர நினைக்கிறேன். காவல்துறையிலேயே செய்யும்போது ஏன் மற்றத் துறைகளில் செய்ய முடியாதா என்பது எனது எண்ணம்? நான், தனியாக சென்று பிசினஸ் செய்யவில்லையே? அரசாங்க துறையிலிருந்து அரசியலுக்கு வந்திருக்கிறேன். நல்ல விஷயங்கள் பண்ண பண்ண மக்கள் மாற ஆரம்பிப்பார்கள். அவர்களின் மனநிலையும் மாறும்.

உங்களை ரஜினி கட்சியின் முதல்வர் வேட்பாளர் என்கிறார்களே?

இதுவரை, ரஜினி கட்சியில் நிற்கப்போகிறேன் என்று சொல்லவில்லை. முதல்வர் வேட்பாளரும் நான் இல்லை. என்னுடையப் பாதை தனியான பாதை. நாங்கள்  நல்லக் கருத்துகளோடு முன்னேறி சென்று கொண்டிருக்கிறோம். வரும், ஜனவரி அல்லது பிப்ரவரியில் மக்களுக்காக சேவை செய்யவேண்டும் என்ற எங்கள் கருத்துகளோடு யார் ஒத்துப்போகிறார்களோ, அவர்களுடன் இணைவோம். அதன்பிறகு, சேர்ந்துதான் பயணப்படவேண்டும். மேலும், நான் ஒன்னும் பெரிய ஆள் கிடையாது. பண பலமும், ஆள் பலமும், படை பலமும் இல்லை. என்னுடையக் குடும்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளக்கூடிய வருமானம் என்னிடம் உள்ளது. நம்மிடம் வருபவர்களுக்கு பணம் செலவு செய்ய முடியாது. நல்லெண்ணம் கொண்ட மக்கள் இணைந்து செயல்படுவார்கள். கொள்கைகளை வைத்துகொண்டு கருத்துகளை பொதுவெளியில் பேசிக்கொண்டிருக்கிறோம். நேரம் வரும்போது முடிவெடுப்போம்.

உங்கள் அரசியல் கொள்கைகள் என்ன?

மக்களுக்காகத்தான் ஆட்சி நடக்கவேண்டுமே தவிர ஆட்சி நடத்துவதற்காக மக்கள் இருக்கக்கூடாது. சிலபேர், புண்ணியத்தினாலோ விதியினாலோ வாழ்க்கையில் முன்னேறி இருக்கிறார்கள். அவர்கள் ஏழ்மையானவர்களை முன்னேற்றவேண்டும்.   அதிகாரம் மக்கள்மேல் பற்றிருப்பவர்களுக்கும் அந்த அதிகாரம் மூலம் மக்களுக்கு நன்மை செய்பவர்களுக்கும் மட்டும்தான்  போகவேண்டும். இந்த மூன்றும்தான், எங்கள் அடிப்படைக் கொள்கைகள். ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடைத்துக்கொள்ள விரும்பவில்லை.

அதிரடி நடவடிக்கைகளால் ’கர்நாடக சிங்கம்’ என்று பெயரெடுத்த நீங்கள், தமிழகத்தில் ’சங்கி’ என்று பெயரெடுத்துள்ளது எப்படி இருக்கிறது?

சங்கி என்பது ஒரு தவறான வார்த்தை கிடையாது. நான் வரவேற்கிறேன். சங்பரிவாரில் இருப்பவர்களை அப்படி கூறுகிறார்கள். ஆனால், நான் அதில் இல்லை. எத்தனையோ நடுநிலையாளர்கள் என்னை பாராட்டுகிறார்கள்.அதற்காக, ஒரு குறிப்பிட்ட கட்சியின் ஐ.டி விங்கோ, ஐந்துபேரோ சொல்வது உண்மையாகிடுமா? சமுதாயம் என்பது சமூக வலைதளத்தின் வெளியே இருப்பது. சமூக வலைதளம் ஒரு குறுகிய இடம். எல்லோருக்கும் கருத்து சுதந்திரம் இருப்பதால் எல்லா கருத்துகளையும் நான் வரவேற்கிறேன். நேர்கொண்ட பார்வையோடு சென்று கொண்டிருக்கிறேன். எனது வாழ்க்கை ஒரு திறந்தப் புத்தகம்.

சங்பரிவார் அமைப்பில் தொடர்பில் இல்லாத உங்களை சங்கி என்று சொன்னால் தவறான வார்த்தை இல்லை என்கிறீர்களே?  கோபம்தானே வரவேண்டும்?

என்னுடைய இமேஜ் குறித்தே கவலைக்கொள்ளாதபோது, இதனை குறித்து எதற்கு கவலைக்கொள்ள வேண்டும்? நான், ஆன்மிகப் பயணத்தின் மூலம் தேவைகளைக் குறைத்து வாழ்கிறேன். என்மீது சாணியை எடுத்து வீசினால் அரைநாளில் கீழே விழுந்துவிடும். சங்கியை தப்பான வார்த்தை என்று நினைத்து தப்பானவர்கள் அப்படி பரப்புகிறார்கள். கருத்து சுதந்திரத்திற்கு அதிகமான சுதந்திரம் கொடுப்பவன் நான். அதற்காக அவர்களுடன் சண்டையிடமாட்டேன். பொது வாழ்க்கை என்று வரும்போது விமர்சனங்கள் வரத்தான் செய்யும். ஒரு ஆல மரத்தில் சுவையான பழத்தைத்தான் குருவி வந்து சாப்பிடும். அதுபோல் என்னை நினைத்துக்கொள்கிறேன்.

ஆன்மிக அரசியல் பேசுகிறீர்கள்.  ஆனால், அப்படியொரு அரசியலை தமிழக மக்கள் இதுவரை  ஏற்றுக்கொண்டதில்லையே?

ஆன்மிக அரசியலில் யோகா, தியானம், ஆழ்ந்த அமைதி எல்லாம் வருகிறது. ஆன்மிக அரசியலுக்கு ஒருவர் தயாராகிவிட்டாலே பரபரப்பான சூழலில் இருந்து வெளியில் வந்துவிடுகிறார். காமராஜர் செய்ததும் ஆன்மிக அரசியல்தான். குடும்பமே இல்லாமல் தனக்காக வாழாமல் மக்களுக்காக பொதுநலத்தோடு வாழ்ந்தார். அதில்தான், அவருக்கு மன அமைதி கிடைத்தது. காமராஜர் போன்ற நல்ல மனிதர்கள் ஏன் அரசியலுக்கு வருவதற்கு பயப்படுகிறார்கள் என்றால், ஊழல் நிறைந்த அரசியல் களத்தில் நம்மால் சாதிக்க முடியாது என்பதால்தான். ஆனால், ஆன்மிக அரசியல் தலைத்தூக்கும்போது, அந்த எண்ணம் கொண்டவர்கள் தலைதூக்கி வருவார்கள். இதில், மதத்தை திணிக்கக்கூடாது.

 ஆன்மிக அரசியலைப் பேசும் ரஜினி பணம் சம்பாதிக்க இன்னும் நடிக்கிறாரே? 

சிலபேர் பிறந்தவுடன் துறவியாகிவிடுகிறார்கள். இன்னும் சிலர் அனைத்து வாழ்க்கையையும் பார்த்துவிட்டு ஆன்மிகத்திற்கு வருகிறார்கள்.  ரஜினி சாரின் கருத்தை நான் ஏன் வரவேற்கிறேன் என்றால், அவர் ஊழல் நிறைந்த  சிஸ்டத்தில்  மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று நினைக்கிறார். அவர், அரசியல் கொள்கை முடிவுகளை இன்னும் வெளிப்படையாக அறிவிக்கும்போதுதான் ஆன்மிக அரசியலில் தெளிவு கிடைக்கும்.  ’ஒரு உண்மையை கொண்டுவரும் தூதனைக் கொன்றுவிடாதே’ என்பார்கள். அதனால், தூதனைக் கொல்லவேண்டாம். தூதன் வரட்டும். அதன்பிறகு அவரின் கருத்தை விவாதிப்போம்.

’தற்சார்பு வாழ்க்கை வாழவேண்டும்’ என்று சொல்லும் உங்களுக்கு 60 ஏக்கருக்குமேல் நிலம் இருக்கிறது. உணவுக்கே திண்டாடும் ஏழைகள் எப்படி தற்சார்பு வாழ்க்கை வாழ்வார்கள்?  

60 ஏக்கர் நிலத்தை நான் சம்பாதித்து வாங்கவில்லை. எனது தாத்தா காலத்திலிருந்து இருப்பதால், எனக்கு வந்து சேர்ந்திருக்கிறது. அந்த நிலத்தில்தான், விவசாயம் செய்து வருகிறேன். ஆளும் கட்சியிலோ எதிர்கட்சியிலோ ஒரு கவுன்சிலரே நான் காவல்துறையில் உழைத்து சம்பாதித்ததைவிட ஆயிரம் மடங்கு சம்பாதித்திருப்பார்கள். இந்த 60 ஏக்கரை மார்க்கெட்டில்  விற்று கிடைக்கும் பணம், பெரிய அரசியல்வாதிகளின் வீட்டில் நிறுத்தப்பட்டிருக்கும் 100 இறக்குமதி கார்களின் டயருக்குக்கூட வராது. அண்ணா நகரில் இடம் வாங்கினால், ஒரு செண்ட் இடம்தான் வாங்கமுடியும். குறிப்பிட்டக் கட்சியினர் புதிதாக ஒரு மனிதன் வந்துவிடக்கூடாது என்று நினைக்கிறார்கள். இவர்களின், பொய் பரப்புரையை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதுவும், 60 ஏக்கர் நிலம் கரூர் மாவட்டத்தில் பின்தங்கிய மழை இல்லாத பகுதியில் இருக்கிறது. குறிப்பிட்ட, கட்சியினரின் ஐ.டிவிங்கினர் நான் பேசுவதையெல்லாம் முழுதாகப் போடாமல் 30 செகெண்ட் மட்டுமே கட் செய்து வதந்தி பரப்புகிறார்கள். இதனால், மக்களிடம் குழப்பம்தான் வரும். ஆனால், ஒரு நல்லதும் நடக்கிறது.

என்னை தெரியாவதவர்கள் கூட இவர்கள் கொடுக்கும் விளம்பரத்தால் நான் யார்?  ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியாக மக்களுக்கு எப்படிப்பட்ட வேலையை செய்துள்ளேன்? நேர்மையோடு ஊழல் கறை படியாமல் இருந்திருக்கிறேன் என்பதையும் தேடிப்பிடித்து தெரிந்து கொள்கிறார்கள். என்னைப் பற்றி வதந்தி பரப்பி எனக்கு நல்ல ரீச் கொடுத்துள்ளார்கள். அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.  மற்றபடி, தேவைக்கேற்ப நமது வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக்கொள்வதுதான் தற்சார்பு வாழ்க்கை. சாப்பாடு இல்லாமல் இறப்பவர்களைவிட அதிகமாக சாப்பிடு நோயால் இறப்பவர்கள்தான் அதிகம். இதுபோன்ற தலைமுறையில் உருவாகும் தலைவர்கள் சுயநலத்தோடு இருப்பார்கள். தேவைக்கேற்ப வாழ்ந்துவிட்டு வசதியாக இருப்பவர்கள் ஏழைகளை முன்னேற்றவேண்டும். அவ்வளவுதான்.

தமிழராக இருந்தாலும் கர்நாடக மக்களின் நம்பிக்கைக்குரிய அதிகாரி நீங்கள். அங்கேயே தேர்தலை சந்தித்திருந்தால் வெற்றி எளிதாகியிருக்குமே?

எங்கு வேண்டுமென்றாலும் நிற்கலாம்தான். ஆனால், நான் பிறந்தபோது இருந்த தமிழ்நாடு, இப்போது இல்லை. ஒரு  தமிழனாகத்தான் கர்நாடகாவுக்குச் சென்றேன். அண்ணாமலை சூப்பராக வேலை செய்கிறார் என்பது எனக்கு கிடைத்த பெருமை கிடையாது. தமிழனுக்கு கிடைத்தப் பெருமை. தமிழை அங்கு உயர்த்திப் பிடித்திருக்கிறேன். எப்போதும் என்னை தமிழனாகத்தான் காட்டியிருக்கிறேன். அதனால்தான், சொந்த மாநிலத்திலேயே தேர்தலை சந்திக்கவிருக்கிறேன். 

ஜக்கி வாசுதேவுடன் நெருக்கமாக இருக்கிறீர்கள்? ஆனால், அவர்மீதே புகார்கள் உள்ளதே?

ஈஷா மையம் என்பது ஒரு நிறுவனம். அதில், என் தொடர்பு என்பது யோகமுறையைக் கற்றுகொள்வதுதான். ஈஷா மையம் மட்டுமல்ல. ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் மையத்திற்கும் நான் செல்கிறேன். அதேபோல, அஜ்மீரில் இருக்கும் இஸ்லாமிய தர்காவுக்கும் வேளாங்கண்ணியில் மாதாக்கோயிலுக்கும் செல்வேன். நான் மதம் பார்ப்பதில்லை. அமைதியை விரும்புவதால் சாமி கும்பிட்டுவிட்டு வந்துவிடுகிறேன். மற்றவைக் குறித்து நான் எப்படி கருத்துச்சொல்ல முடியும்? 

உங்கள் புகைப்படங்கள் எப்போதும் ஆடுகளுடனேயே வருகிறதே?

நான் ஆடு வளர்த்து சம்பாதிக்கக்கூடிய ஒரு விவசாயி. என் குடும்பத்தையும் மக்களையும் காக்க ஆடு வளர்க்கிறேன். அரசிடம் இருந்து நான் சம்பளம் வாங்கவில்லை. அதனால், ஆட்டுப் பண்ணையில் இருந்து வரக்கூடிய பணத்தில்தான் குடும்பத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறேன். பத்து வருடத்திலேயே பணியை ராஜினாமா செய்ததால் எனக்கு சம்பளமும் கிடையாது. அதனால், ஆட்டோடும் மாட்டோடும் சுற்றிக்கொண்டிருக்கிறேன். ஒரு விவசாயியாக ஆட்டுடன் இருப்பதை பெருமைப்படுகிறேன். காருடன் நிற்பது எனது அடையாளம் கிடையாது. சிலபேர் காருடனும் 100 ஆட்களுடனும் நிற்கிறார்கள். நான் தனியாக ஒரு ஆட்டோடுதானே நிற்கிறேன். 

உங்களுக்குப் பிடித்த அரசியல் தலைவர் யார்?

 பொதுநலத்தோடு மக்கள் சேவையாற்றிய ஒபாமா, காமராஜர்,  மோடிதான் எனக்கு அரசியலில் பிடித்த தலைவர்கள்

 ஆனால், தமிழக  மக்கள் மோடி என்றாலே எதிர்ப்பு மனநிலையில் இருக்கிறார்களே? அவரை ஆதரித்தால் உங்களுக்கும் அதே  நிலைமை வரும் என்று தோன்றவில்லையா?

2014 ஆம் ஆண்டு தமிழகம் மோடியை கொண்டாடியது. 80 லட்சம் வாக்குகளுக்குமேல் பா.ஜ.க வாங்கியது. பிரதமர் மோடி ஒரு தன்னலமற்றத் தலைவர். நாட்டுக்காக உழைக்கிறார். தமிழ்நாட்டில் மோடியை தவறாக சித்தரிப்பது நடந்துவிட்டது. ஆனால், அவர்மேல் அடித்தட்டு மக்களுக்கு நம்பிக்கையும் விசுவாசமும் இருக்கிறது. எல்லாத்துறையிலும் மோடி சாதனை செய்திருக்கிறார். தமிழக மக்கள் நிச்சயம் மோடியை ஏற்றுக்கொள்வார்கள். சமூக ஊடகங்களும் அரசியல் தலைவர்களும் மோடி குறித்த உண்மையான கருத்தை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். 

நீங்களும் ஓ.பி.சிதான். ஆனால், மோடி அரசு ஓ.பி.சி இடஒதுக்கீடு கொடுப்பதில் தடையாக இருந்து வருகிறதே?

பிரதமர் மோடி ஓ.பி.சி மக்களுக்கு  எதிரானவர் என்பது தவறான கருத்து.  நீதிமன்றம் ஒரு அருமையான தீர்ப்பை வழங்கி, இப்பிரச்சனையை தீர்த்து வைத்துவிட்டது. அதனை வரவேற்கிறோம். பிரதமர் மோடி நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யாமல் இருக்கும்போதே தெரியவில்லையா? அவர் எதிரானவர் இல்லை.  ஓ.பி.சி இட ஒதுக்கீட்டை ஏற்றுக்கொண்டுவிட்டார் என்பதைத்தானே சொல்கிறது. மற்றபடி 69 சதவீத சமூகநீதி கொள்கைகளில் கைவைத்தாலோ, 27 சதவீத இட ஒதுக்கீட்டை குறைத்தாலோ இந்தக் கருத்தை சொல்லலாம்; ஏற்றுக்கொள்ளலாம்.

கர்நாடக காவல்துறையில் நிறைய சீர்திருத்தம் செய்துள்ளீர்கள். தமிழக காவல்துறையில் என்ன மாற்றம் வரவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

தமிழகக் காவல்துறை ஒரு சிறப்பான காவல்துறை. அதில், எந்த சந்தேகமும் இல்லை. வாழைப்பழத்தை 5 நாட்கள் வைத்திருந்தால் கெட்டுப்போய்விடும். அப்படித்தான் ஒரு சிஸ்டத்தில் பழமை இல்லாமல் அடிக்கடி மாற்றங்களை கொண்டுவரவேண்டும். தமிழ்நாடு காவல்துறையை பொறுத்தவரை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி கொடுக்கும் முறைகள், ஷிப்ட் சிஸ்டம் போன்றவற்றோடு ஊழல் இல்லாத ஐ.பி.எஸ் அதிகாரிகளும் இருக்கவேண்டும்.  அரசியல்வாதிகளுக்கு ஃபேவராக இல்லாமல் பணியைச் செய்யவேண்டும். சாதி அரசியல் இல்லாமல் நல்ல ஐ.பி.எஸ் நல்ல இடத்திற்கு செல்லவேண்டும்.

 அ.தி.மு.க ஆட்சி குறித்து?

எடப்பாடி பழனிச்சாமி மேனேஜ் செய்து கொண்டு வந்துவிட்டார். ஆனால், ஒட்டுமொத்தமாக ஊழல் எல்லா ஆட்சியிலும் உள்ளது. 

 நீங்கள் ஒரு இளைஞர். தி.மு.கவில் வயதானவர்கள் புறக்கணிக்கிறார்கள் என்ற கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

 அது அவர்களின் உட்கட்சிப் பிரச்சனை. ஆனால், ஒரு கட்சிக்கு இளைய சமுதாயம் மட்டுமல்ல முதியோர்களும் வேண்டும். இரண்டு பேரும் சேரும்போது, அந்த ஆட்சி சிறப்பாக அமையும்.

 முதல் முயற்சியிலேயே 25 வயதில் ஐ.பி.எஸ் ஆனீர்கள். இளைஞர்களுக்கு சொல்ல விரும்புவது என்ன?

எப்போதும் இலக்கு என்பது தொலைநோக்குப் பார்வையுடன் இருக்கவேண்டும். நான் பத்து வருடம் பணிபுரிந்த பிறகு அடுத்த இலக்கில் காலை வைத்துள்ளேன். வாழ்க்கை ரொம்ப பெரியது. மாரத்தான் ஓட்டம் போன்றது. தொலைநோக்கு பார்வையுடன் பயணியுங்கள். ஒரே வட்டத்தில் இருக்காதீர்கள்.

நீங்கள் ஆரம்பித்த ’வீ த லீடர்’ செயல்பாடுகள் எப்படி போய்க்கொண்டிருக்கிறது?

இளைஞர்களிடமும் மக்களிடமும் நல்ல ஆதரவும் வரவேற்பும் கிடைத்துள்ளது. நான் ராஜினாமா செய்தபிறகு ஆறுமாதம் இந்தியா முழுக்க பயணம் செய்து மக்களின் வாழ்க்கை முறையை பார்த்துவந்தேன். அதன்பிறகு, தமிழக மாவட்டங்களுக்கும் சென்று விவசாய முறைகளையும் மக்கள் பிரச்சனைகளையும் கேட்டறிந்துள்ளேன். மக்களிடம் களச்செயல்பாடுகள் செய்ய கொரோனா மட்டும்தான் தடையாக இருக்கிறது என்பதில் வருத்தம். ’வீ த லீடர்’ மூலம் பல  இளைஞர்களைத் தலைவர்களாக உருவாக்கியிருக்கிறோம். 

- வினி சர்பனா