சிறப்புக் களம்

கொரோனா முதல் அலை ஓய்ந்துவிட்டதா? - மருத்துவர் விளக்கம்

கொரோனா முதல் அலை ஓய்ந்துவிட்டதா? - மருத்துவர் விளக்கம்

JustinDurai

கோவிட்-19 எனும் சுவாசப்பாதை பெருந்தொற்று பற்றி நாம் அறிந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப்போகின்றது. இந்நிலையில் நோய் குறித்த அறிவு, அது பரவும் விதம், அதை தடுப்பது எப்படி? நோய் குறிகள் தெரிந்தால் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து நிறைய பேசிவிட்டோம். இப்படி இருக்கையில் இன்று இரண்டாம் அலை குறித்த பேச்சு வருகின்றது. கொரோனா முதல் அலை நம்மைக் கடந்து சென்றுவிட்டதா? என்பது குறித்து விளக்குகிறார் அரசு பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

‘’ஆம். எடுக்கப்படும் பரிசோதனைகளில் பாசிட்டிவ் ஆகும் சதவிகிதம் பெரும்பான்மை மாவட்டங்களில் உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள 5%க்குள் இருக்கிறது. பல இடங்களில் அது 2%க்குள் வந்திருக்கிறது. கொரோனா தொற்று ஏற்பட்டு அட்மிட் செய்யப்படுபவர்களை விட நோய் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்படுபவர்கள் அதிகமாகி வருகின்றனர். Bed occupancy rate 10%க்கும் கீழ் வந்துள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மரணங்கள் நாம் உச்சத்தில் இருந்த மாதங்களைக் காட்டிலும் ஐந்து மடங்கு குறைந்துவிட்டது. இவையனைத்தையும் நம்மை முதல் தொற்று அலை கடந்திருப்பதின் முக்கிய புள்ளிகளாகக் கொள்ளலாம்.

கேரளா, புது டெல்லி போன்ற இடங்களில் இரண்டாம் மற்றும் மூன்றாம் அலை அடித்து வரும் நிலையில் நமக்கும் அவ்வாறு நிகழும் சாத்தியம் இருக்கின்றதா? தமிழகத்தின் நிலை குறித்த வாதங்களில் அறிவியலாளர்கள் இருவேறு கருத்துகளை முன்வைக்கின்றனர்

முதல் கூற்று, இது Hypothesis மட்டுமே. இதற்கு அறிவியல் பூர்வமான சாட்சிகள் இல்லை. தமிழகத்தில் முதல் அலை என்பதே மிகப் பெரியதாகவும் நீண்ட நாட்கள் நீடிக்கக்கூடியதாவும் இருந்தது. இரண்டாம் மற்றும் மூன்றாம் அலைகள், முதல் அலையின் நீட்சியாகத் தொடர்ந்து பெரும் அலையாக மாறி தற்போது அடங்கி இருக்கிறது.

தமிழகத்தின் 60% முதல் 90% மக்கள் கொரோனா தொற்றை தெரிந்தோ தெரியாமலோ பெற்று விட்டனர். அதனால் தொற்றுக்கு எதிரான மந்தை எதிர்ப்பாற்றல் உருவாகிவிட்டது.

இரண்டாம் ஹைபோதிசிஸ்

தமிழகத்தின் முதல் தொற்று மார்ச் மாதம் கண்டறியப்பட்டது. ஆனால் பெருத்தொற்றின் வீரியத்தை நாம் உணர ஜூன் ஜூலை ஆனது.
இதற்கு இடைப்பட்ட மூன்று மாதங்கள் நமது மாநிலத்தில் நிகழ்ந்தது OVER DISPERSION எனும் நிகழ்வாகும்.

அதாவது தொற்று சமூகத்தில் பரவி வந்தாலும் வெளியே தெரியாது. ஆனால் சிறிது சிறிதாகப் பரவி குறிப்பிட்ட கால அளவிற்குப் பிறகு கொள்ளை நோயாக உருமாறும். இதே OVER DISPERSION விசயம் சீனாவில் வூஹானில் நிகழ்ந்தது. அக்டோபர் மாதத்தில் இருந்தே கொரோனா தொற்று அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்து வந்த நிலையில் டிசம்பர் மாத இறுதியில்தான் அது அங்கு தலைவலி தரும் விசயமாக மாறியது.

கொரோனா தொற்றுக்கு எதிரான மந்தை எதிர்ப்பாற்றல் குறித்த விசயத்தில் பல ஆய்வுகளும் இந்த தொற்றின் secondary attack rate 20-30% என்றே குறிப்பிடுகின்றன. அதாவது குடும்பத்தில் முதன்முதலில் தொற்று ஏற்படும் ஒருவர் Index case என்று அழைக்கப்படுவார். அவரிடம் இருந்து எத்தனை உறுப்பினர்களுக்கு தொற்று பரவுகிறது? என்பதே secondary attack rate.

ஒரு குடும்பத்தில் 5 பேர் இருந்தால் அதில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் அவர் மேற்கொண்டு இன்னும் ஒருவருக்கு மட்டுமே தொற்றை பரப்புகிறார். எனவே இந்த தொற்றுக்கு எதிரான நேரடி எதிர்ப்பு சக்தியை 30-40% இதுவரை அடைந்திருப்பார்கள் என்று நம்பலாம். ஆனாலும் கொரோனாவுக்கு எதிரான மந்தை எதிர்ப்பாற்றல் உருவாக 60-70% பேருக்கு எதிர்ப்பு சக்தி கிடைத்திருக்க வேண்டும் என்று ஆய்வுகள் பறைசாற்றுகின்றன.

இருப்பினும் தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் லாக்டவுன் தளர்த்தப்பட்டு மக்கள் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி இருக்கின்றனர். கடந்த முப்பது நாட்களில் பிரச்சனைக்குரிய அளவில் தொற்று அதிகமாகவில்லை. மக்கள் கொரோனா நோய்க்கு அட்மிட் ஆகும் நிலையும் அதிகரிக்கவில்லை. மரணங்களும் குறைந்துள்ளன.இந்த நிலை உண்மையிலேயே நமது சமூகத்தில் கொரோனா தொற்றுப்பரவல் கட்டுப்பாட்டில் இருப்பது போன்று இப்போதைக்கு தெரிகின்றது.

இருப்பினும் தீபாவளி பண்டிகைக் காலம், பல மாதங்கள் தள்ளிப்போன திருமண வைபவங்கள் நடந்த வண்ணம் உள்ளன. இத்தகைய இடங்களில் மக்கள் மிகவும் நெருக்கமாக கூடிப் பிரிந்துள்ளனர். சென்னை , மதுரை , சேலம் போன்ற பெருநகரங்களில் இருந்து சொந்த கிராமங்களுக்கு பண்டிகையை கொண்டாடச் சென்று திரும்பியுள்ளனர். இத்தனையும் நிகழ்ந்த பின்னும் இன்னும் அடுத்த பதினைந்து நாட்களுக்குள் தொற்று சதவிகிதம் கூடவில்லை என்றால் தமிழ்நாடு தற்போதைக்கு கொரோனா பெருந்தொற்றுப் பரவலில் நிறைவு நிலை(Saturation) அடைந்து இருக்கிறது என்று பொருள் கொள்ளலாம்.

இனிவரும் இரண்டு வாரங்கள் தொற்றைப் பெற்றவர், தொற்றைப் பெறாதவருக்கு நோயைப் பரப்பாமல் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

அதை எப்படிச் செய்வது??

சமூகத்தில் பெரும்பான்மை  75%-80% மக்கள் நெருக்கமாகக் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். அடிக்கடி கைகளை சோப் போட்டுக் கழுவ வேண்டும். முதியோர்கள் எக்காரணம் கொண்டும் அடுத்த ஒரு மாதம் வெளியே வரக்கூடாது.  தனிமனித இடைவெளியை பேண வேண்டும்.

மேற்சொன்னவற்றை செய்தால் ஏற்கெனவே மிகக்குறைவான அளவில் சமூகத்தில் இருக்கும் தொற்று அடுத்தவருக்குப் பரவாமல் மீண்டும் ஒரு அலையாக மாறாமல் நம்மால் தடுத்திட முடியும். சமூகத்தின் பெரும்பான்மை மக்கள் இதைச் செய்தால் தமிழகம் 2020ஐ வெற்றிகரமாகக் கடந்து செல்லும் என்றே நம்புகிறேன்

உலகின் எங்கோ ஒரு நகரத்தில் இருந்து தொடங்கிய கொள்ளை நோய் உலகின் அனைத்து இடங்களுக்கும் சென்று பெருந்தொற்றாக மாறியது மனிதர்கள் ஒருவருக்கொருவர் நோயைப் பரப்பியதால் மட்டுமே. எனவே மனிதர்களாகிய நாம் மனது வைத்தால் தொற்றுச் சங்கிலியை அறுத்தெரியலாம்’’ என்கிறார் அவர்.