சிறப்புக் களம்

இருளர் பழங்குடியினர் வலியை பேசும் ‘ஜெய் பீம்’ - பாராட்டு மட்டுமே போதுமா?

இருளர் பழங்குடியினர் வலியை பேசும் ‘ஜெய் பீம்’ - பாராட்டு மட்டுமே போதுமா?

கலிலுல்லா

'ஜெய்பீம்' திரைப்படத்தை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அது வெறும் பாராட்டாக இருந்துவிடாமல், அம்மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஸ்டாலின் முன்வரவேண்டும் என்பதே பலரின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது. படத்தில் காட்டப்பட்டுள்ள இருளர் இன மக்களின் வாழ்வியல் குறித்து பார்ப்போம்.

'6 முதல் 14வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயமாக கல்வி அளிப்பது அரசின் கடமை; சட்டத்தின் மூலம் அரசு அதனை தீர்மானிக்கலாம்' என்கிறது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21Aபிரிவு. மேலும், 51A (k)பிரிவின்படி கல்வியை அடிப்படை உரிமையாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்திய அரசியலமைப்பில் உள்ள சட்டங்களும், விதிகளும் ஏட்டிலிருந்து வெளியே வரமுடியாமல் தவிப்பதுதான் மிகப்பெரிய சிக்கல். அனைவருக்கும் அடிப்படை உரிமையான கல்வி பின்தங்கிய மக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் எப்போதும் எட்டாக்கனியாக்கத்தான் இருக்கிறது.

தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய 'இருளர்' பழங்குடியின மக்களின் வாழ்க்கை, அவர்களின் பெயர்களுக்கு ஏற்றார்போல இருளாகவே இருக்கிறது. விடியல் இன்னும் அவர்களுக்கு அகப்படவில்லை. அடிப்படை உரிமையான கல்வியைப்பெற அவர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக கொரோனா ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது இருளர் சமூக மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.

பல்வேறு சவால்களை எதிர்கொண்டு பள்ளிகளின் வாசல்களை காலடி எடுத்துவைக்கும் அவர்களுக்கு சாதிச்சான்றிதழ்கள் சாதிக்க தடையாக நிற்கின்றன. உதாரணமாக கடந்த ஆண்டு, விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதிக்கு உட்பட்ட தி.பரங்கினி கிராமத்தைச் சேர்ந்த தனலட்சுமி என்ற பழங்குடி இருளர் சமூக மாணவி 12ஆம் வகுப்பை நிறைவுசெய்து, தனது மேற்படிப்புக்காகக் கல்லூரிகளில் விண்ணப்பிக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால், சாதிச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால், மேற்கொண்டு அவரது படிப்பைத் தொடர முடியவில்லை. அவர்கள் கிராமத்தில் 15க்கும் மேற்பட்ட இருளர் மக்கள் 12ம் வகுப்பு முடித்த கையோடு கூலி வேலைக்கு சென்றுவிட்டனர். அவர்களின் மேற்படிப்புக்கு சாதிச்சான்றிதழ் பூட்டு போட்டிருக்கிறது.

அதாவது, கடந்த 1999ம் ஆண்டு தமிழக அரசு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி, மாணவர்கள் சான்றிதழுக்காக வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், 10-வது அல்லது 12-வது வகுப்பில் படிக்கும்போது பள்ளியே சான்றிதழ்களை பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. நடைமுறை சிக்கல்கள் காரணமாக அது கைவிடப்பட்டது. பின்பு 2012ம் ஆண்டு 6-ம் வகுப்பிலேயே சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டுமொரு அரசாணை பிறப்பித்தது.

ஆனால், அவை செயல்படுத்தப்படாமல் கிடப்பில் கிடப்பதால் அம்மக்களின் வாழ்க்கை முடங்கியே கிடக்கிறது. சாதிச் சான்றிதழ்களைப் பெறுவதில் நிர்வாகத் தாமதத்தால் பல ஆண்டுகளாக உயர்கல்விக்கு ஆசைப்படும் மாணவர்களின் நம்பிக்கையைத் தகர்ந்திருக்கிறது. சாதிச்சான்றிதழ் இல்லாத காரணத்தால் அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை பெறமுடியாமல் தவிக்கின்றனர். இதற்கு அதிகாரிகளின் அலட்சியமும், அரசின் கவனமற்ற தன்மையுமே காரணமாக முன்வைக்கப்படுகின்றன.

வேலைவாய்ப்புகள், வீடுகள், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் அம்மக்கள் நாடோடிகளாக இடம்பெயர்ந்துகொண்டேயிருக்கிறார்கள். அவர்களின் துயரமும் கூடவே பயணித்துக்கொண்டிருக்கிறது. அம்மக்களுக்கு ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வாக்களிக்கும் முகாந்திரம் இல்லாத காரணத்தால் பொதுத்தளத்தில் அரசியல் கட்சிகளாலும் அவர்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை. தமிழ்நாட்டில் பழங்குடியினர் சமூகத்தை பொறுத்தவை இருளர் இன மக்கள் இரண்டாவது இடத்தில் உள்ளனர். இவர்களில் 40சதவீததிற்கும் குறைவான மாணவர்களே கல்வி கற்றுள்ளனர்.

அடிப்படை தேவைக்கே போராடும் நிலை:

ஒரு மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் அத்தியாவசியம் என அரசியலமைப்பு சொல்கிறது. ஆனால், இருளர் இன மக்கள் ஆண்டாண்டுகாலமாக நிரந்தர வீடுகள் மற்றும் வீட்டு பட்டாக்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர். இது சமூகத்தின் மற்றொரு அவலமாகும். பழங்குடியின சமூகங்கள் தங்கள் நிலம் மற்றும் வீட்டு பட்டாக்களை பெறுவதற்கு பல போராட்டங்களை நடத்தியும் பயனில்லை.

பனை ஓலைகள் பிளாஸ்டிக் ஷீட்களால் ஆன தற்காலிக கூடாரங்களில் வசித்து வரும் அவர்களுக்கு முறையான மின்சாரம், குடிநீர், கழிப்பறை ஆகிய அடிப்படை வசதிகள் கிடைப்பதில்லை. அவர்கள் பெரும்பாலும், ஆறுகள், குளங்கள், ஏரிகளையொட்டியே வாழ்ந்து வருகின்றனர். நாடோடி மக்கள் என அடையாளப்படுத்தப்படும் அவர்கள் காவல்துறையினரின் கோரகரங்களில் சிக்கி இஷ்டத்துக்குமான வழக்குகளுக்கு பலியாகிவிடுகின்றனர். தொடரும் அம்மக்களின் துயரங்களை பொது சமூகம் கவனத்தில் கொள்ளும் முயற்சியை ஜெய்பீம் திரைப்படம் தொடங்கியிருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தை பாராட்டியதோடு நின்றுவிடாமல் அம்மக்களின் துயரத்தை துடைக்க முன்வரவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையும்!