பல கோடி ரசிகர்களைக் கொண்ட கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் 20 ஓவர் தொடர் நாளை தொடங்குகிறது. தேர்தல் திருவிழா சற்றே ஓய்ந்துள்ள நிலையில் கிரிக்கெட் திருவிழாவைக் கொண்டாட வீரர்களும், ரசிகர்களும் தயாராகி வருகின்றனர்.
கிரிக்கெட் ரசிகர்களால் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் திருவிழா போல கொண்டாடப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 14 ஆவது சீசன் நாளை தொடங்கவுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்தாண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரவாரமின்றி ஐபிஎல் நடைபெற்றதால் நடப்பாண்டுக்கான சீசன் இந்தியாவில் நடைபெற வேண்டும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். இவ்வாறான சூழலில் ஐபிஎல் இந்தியாவில் தான் நடக்கும் என்பதை உறுதி செய்த பிசிசிஐ நிர்வாகம், போட்டிகளின் அட்டவணையைக் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது.
வழக்கமாக 8 அணிகள் சார்ந்த 8 நகரங்களில் நடைபெறும் போட்டிகள், இம்முறை சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா மற்றும் அகமதாபாத் நகரங்களில் மட்டுமே அட்டவணை படுத்தப்பட்டுள்ளன. பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் நகரங்களில் இம்முறை போட்டிகள் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இம்முறை எந்த அணிக்கும் அதன் சொந்த மைதானத்தில் போட்டிகள் திட்டமிடப்படவில்லை. பிளே ஆஃப் போட்டிகள் அனைத்தும் சுமார் ஒரு லட்சம் ரசிகர்கள் அமர்ந்து பார்வையிடும் வகையிலான அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் அட்டவணை படுத்தப்பட்டுள்ளன.
மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவடையவில்லை என்பதால் பாதுகாப்பு நலன் கருதி மே 8 ஆம் தேதி வரை கொல்கத்தாவில் போட்டிகள் திட்டமிடப்படவில்லை. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை எனவும், சூழ்நிலைக்கு ஏற்ப ரசிகர்கள் அனுமதிக்கப்படுவது குறித்து அறிவிக்கப்படும் எனவும் ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொடரின் முதல் இருபது போட்டிகள் சென்னை மற்றும் மும்பை மைதானங்களில் மட்டுமே அட்டவணை படுத்தப்பட்டுள்ளன.
சென்னையில் நாளை நடைபெறும் முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் ஆஸ்தான போட்டியாளர்களான மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணிக்கு முதல் போட்டி ஏப்ரல் 10 ஆம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. சென்னை அணிக்கான 14 லீக் போட்டிகளும் மும்பை, பெங்களூரு, டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய 4 நகர மைதானங்களில் நடைபெறுகின்றன.
தொடரின் முதல் இறுதிப் போட்டியாளரை தீர்மானிக்கும் QUALIFIER 1 மே 25 ஆம் தேதியும், வெளியேற்றுதல் போட்டியான ELIMINATOR மே 26 ஆம் தேதியும், இரண்டாவது இறுதியாளரை தீர்மானிக்கும் QUALIFIER 2 மே 28 ஆம் தேதியும் நடைபெறுகின்றன. மகுடம் சூட போகும் சாம்பியனை தீர்மானிக்கும் பிரமாண்ட இறுதிப் போட்டி மே 30 ஆம் தேதி நடைபெறுகிறது.