சிறப்புக் களம்

ஐபிஎல் அறிமுகம் 2: ஆஸி. அதிரடி டிஆர்ஸி ஷார்ட்!

ஐபிஎல் அறிமுகம் 2: ஆஸி. அதிரடி டிஆர்ஸி ஷார்ட்!

webteam

இந்த வருட ஐபிஎல்-லில் கவனம் ஈர்க்கப் போகும் அதிரடி ஆல்-ரவுண்டர்களில் D'Arcy Short  முக்கியமானவர். ஏனென்றால் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்திருக்கிற பிக்பாஷ் தொடர், இவர் பவரை பக்காவாக வெளிப்படுத்தி இருக்கிறது. இதில் அவரது பேட்டின் வேகத்தில் பந்துவீச்சாளர்கள் அலறிதான் போயிருக்கிறார்கள். அப்படியொரு விளாசல்!

ஐபிஎல்-லில் இவரை ரூ.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருக்கிறது, ராஜஸ்தான் ராயல்ஸ். சர்வதேசப் போட்டிகளில் அதிகமாக ஆடவில்லை என்றாலும் D'Arcy Short -ன் திறமையை அபாரமாக வெளிப்படுத்தியது பிக்பாஷ்தான். இதில் இவரது ஸ்டிரைக் ரேட் 160. ’பிரிஸ்பேன் ஹீட்’ அணிக்காக இவர் அடித்த 122 ரன்கள், அதிரடி சரவெடி. இதில் தொடர் நாயகன் விருது பெற்ற ஷார்ட், அதிக ரன்கள் (572) குவித்தவர் என்ற ரெக்கார்டையும் வைத்திருக்கிறார். இடது கை பேட்ஸ்மேனான ஷார்ட் சுழற்பந்து வீச்சிலும் கில்லாடி ஜில்லாடி! 

’இந்த வருட ஐபிஎல்-லில் D'Arcy Short முக்கியமான வீரராக இருப்பார்’ என்று ஏலத்துக்கு முன் கூறியிருந்தார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். மும்பைக்கு அவரை எடுக்க நினைத்திருந்தார் ரிக்கி. ஆனால், மேலும் கீழும் ஏறிய ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அவரை இழுத்துக்கொண்டது.

‘ஷார்ட்டின் பேட்டிங் டெக்னிக் புதுமையானது’ என்கிறார்கள் ஆஸ்திரேலிய வீரர்கள். பாண்டிங் பாராட்டியது பற்றி கேட்டால், ‘கிரிக்கெட் பற்றி அதிகம் தெரிந்தவர் ரிக்கி பாண்டிங். நன்றாக விளையாடுவதாகப் பாராட்டினார். அதுவே எனக்கு பெரும் மகிழ்ச்சியாகவும் ஊக்கப்படுத்துவதாகவும் இருக்கிறது’ என்கிற ஷார்ட், ‘அணியின் வெற்றிக்கு எப்படியெல்லாம் உதவ வேண்டுமோ, அதை செய்ய வேண்டும் என்று நினைப்பவன் நான். எந்த வரிசையிலும் என்னால் ஆட முடியும். ஓபனிங் பேட்ஸ்மேனாகவும் ஆடுவேன்’ என்கிறார்.

வாங்கண்ணா, வணக்கங்கண்ணா!