Venkatesh Athreya
Venkatesh Athreya pt desk
சிறப்புக் களம்

2,000 ரூபாய் நோட்டு விவகாரம்: டிஜிட்டல் கரன்சியை நோக்கிய முயற்சியா? பொருளாதார வல்லுநர் விளக்கம்!

Kaleel Rahman

2,000 ரூபாய் நோட்டு தொடர்பாக ஆர்பிஐ புதிய அறிவிப்பு ஒன்றை இரு தினங்களுக்கு முன் வெளியிட்டிருந்தது. அதில், தற்போது புழக்கத்தில் உள்ள நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என அறிவித்தது. அதையடுத்து அது தொடர்பாக மக்களுக்கு பல்வேறு கேள்விகள் எழுந்தன. முக்கியமாக 2,000 ரூபாய் நோட்டு இப்போ செல்லுமா செல்லாதா என்பதும் ‘செப்டம்பர் 30 வரையிலும் இந்த நோட்டுகளை வங்கியில் கொடுத்து வேறு நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்’ என்றால் அதன்பிறகு என்னவாகும் என்ற குழப்பமும் கேள்வியும் எழுந்தன.

ரிசர்வ் வங்கி, 2,000 ரூபாய்

இந்நிலையில், பொருளாதார வல்லுநரும் ஓய்வு பெற்ற பேராசிரியருமான வெங்கடேஷ் ஆத்ரேயா அவர்களுடன் புதிய தலைமுறை நெறியாளர் நடந்திய நேர்காணலை விரிவாக பார்க்கலாம்...

2,000 ரூபாய் நோட்டு தொடர்பாக ஆர்பிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில் என்ன சொல்லப்பட்டுள்ளது?

“கடந்த 2016 ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கை முடிவை அரசு எடுத்தபோது, 500 மற்றம் 1,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து எடுத்தார்கள். கூடவே 2,000 ரூ நோட்டுகளையும் கொண்டுவந்தனர். இந்நிலையில் இப்போதுவந்து, ‘அப்போது அந்த நோட்டுகளை திடீரென மாற்றியதால், அதற்கு மாற்றாக சிறிது காலத்திற்கு பெரிய மதிப்புள்ள ஒரு நோட்டை கொண்டுவர வேண்டும் என்று 2000 ரூபாய் நோட்டை கொண்டுவந்தோம்’ என்று சொல்கிறார்கள். ஆனால் அப்போது எதுவும் சொல்லவில்லை. மேலும் இப்போதுவந்து ‘கடந்த 4 வருடங்களாக 2000 ரூபாய் நோட்டு பயன்பாடு குறைந்து வருகிறது. அதனால் மக்களின் பயன்பாட்டிற்கு அவை தேவையில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆகவே படிப்படியாக குறைக்கிறோம்’ என்றும் கூறுகிறார்கள்.

PM Modi

இப்போதும் சட்ட ரீதியாக 2000 ரூபாய் நோட்டை செல்லாது என சொல்லவில்லை. அதனால் இப்போதும்கூட புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்தால் வங்கிகள் அதை திரும்பப் பெற்றுக் கொள்ளும்!

இவ்வளவு சிக்கல்களுக்கு இடையே ‘கடந்த 2018-க்குப் பிறகு 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்திவிட்டோம்’ என்றும் சொல்றாங்க. இந்த முரண்களெல்லாம் எதைக்காட்டுகிறது என்றால், Demonetisation நடவடிக்கை முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது என்பதையே காட்டுகிறது.

கொஞ்சம் யோசிச்சு பார்த்தா, முதல்ல என்ன சொன்னாங்க... ‘500, 1000 ரூபாய் நோட்டுகளால் தான் கருப்பு பணமே வருது; அதனால 2000 ரூபாய் நோட்டை கொண்டு வரோம்’ என சொன்னாங்க. இப்ப என்னன்னா, 2000 ரூபாய் நோட்டை திரும்பப் பெறப் போறாங்க. இதெல்லாம் ஏழை எளிய மக்களின் மீது தொடுக்கப்பட்ட துள்ளியமான தாக்குதல் என்றே நான் கருதுகிறேன். பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்ட போது அந்த நடவடிக்கை ‘கள்ளப் பணத்தை ஒழிக்கும்; கருப்பு பணத்தை ஒழிக்கும். ஊழலை ஒழிக்கும். பயங்கரவாதத்தை ஒழிக்கும்’ என்று பிரதமர் சொன்னார்.

இப்ப ஆறு ஏழு வருடம் ஆகிவிட்டது. புயங்கரவாதம் ஒழிந்து விட்டதா என்று நாம் அரசாங்கத்தையே கேட்கலாம்! தினம் ஒருத்தரை அரெஸ்ட் பண்ணி உள்ளே போட்டுக்கிட்டுதான் இருக்காங்க! பிறகு எப்படி பயங்கரவாதத்தை ஒழித்தார்கள் என்று தெரியவில்லை. காஷ்மீரிலும் பயங்கரவாதத்தை தடுக்க முடியல.

அதேபோல ஊழலை பொறுத்தவரையும்கூட லாப அடிப்படையில் செயல்படும் அமைப்பில், எந்த ஒரு பண பரிவர்த்தனை என்றாலும், ஊழல் என்பது தவிர்க்க முடியாது ஒன்றாக இருக்கிறது. மேலும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை ஒழித்துவிட்டால் ஊழலை ஒழித்துவிடலாம் என்பதை யாரும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.

PM Modi

அன்றைக்கு புழக்கத்தில் இருந்த நோட்டுகளின் மதிப்பில் கள்ளப்பணம் என்பது 0.0024 சதவீதம் மட்டுமே. இதனால் எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. கருப்பு பணம் என்பது ரொக்கமாக இருப்பதில்லை. மாறாக சொத்தாகத்தான் இருக்கிறது. எனில் கருப்பு பணம் இந்த இடைப்பட்ட காலத்தில் ஒழிக்கப்பட்டிருக்குமா?

கருப்பு பணம் என்பது மொத்த சொத்து மதிப்பில் 5 முதல் 6 சதவீதம் மட்டும்தான் ரொக்கமாக இருக்கும். இவை அனைத்தும் செல்லாகாசு நடவடிக்கையின் செல்லாத வாதம் தான். உண்மையில் இந்த டிமானிடைசேஷனால் இந்திய பொருளாதாரத்தில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது”

2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துமா?

“நிச்சயமாக மக்களிடையே பீதியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தும். மக்கள் எதைப் பற்றியுமே சிந்திக்காமல், அன்றாட வாழக்கையை சவாலாக கருதிக்கொண்டே வாழ வேண்டும் என்பது தான் இதில் உள்ள விஷயம். செப்டம்பர் 30 வரையிலும் 2,000 ரூபாயை மாற்றிக் கொள்ளலாம் என்று சொல்றாங்க. அதன் பிறகும் செல்லும் என்றும் சொல்றாங்க. ஆனால் அதன்பிறகு என்ன செய்யப் போகிறார்கள் என்று சொல்லவில்லை. அதனால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது”

RBI, 2000 Note, P.Chidambaram

படித்த ஒருவர் தான் பிரதமராக வர வேண்டும் என்ற அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்தை எப்படி பார்கின்றீர்கள்?

“பிரதமர் படித்தவரா படிக்காதவரா என்பதல்ல கேள்வி. எந்த வர்க்கத்தின் சார்பாக அவரது கொள்கைகள் அமலாகிறது என்பதுதான் கேள்வி. அறிஞர்களின் அறிவுரையை கேட்டுதான் ஆட்சி நடத்த வேண்டும் என்பதை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. ஒன்றும் தெரியாமல் ஒருவர் அரசியல் தலைவராக ஆக முடியுமா? அவர் ஏற்றுள்ள தத்துவம் ஒரு மோசமாக தத்துவமாகக் கூட இருக்கலாம். காமராஜர் என்ன படித்தவரா? அவர் சிறந்த முதல்வராக இருக்கவில்லையா? ஆகவே படித்தவரா என்பதைவிட, அவர் தத்துவம் என்னவென்றே பார்க்கவேண்டும். மேலும் இந்த நடவடிக்கை யாருக்கு நன்மை பயக்குது, யாருக்கு துயரத்தை விளைவிக்கிறது என்பதைதான் யோசிக்க வேண்டும். அதை கெஜ்ரிவால பேச வேண்டாமா? மோடியை எதிர்க்கலாம்; ஆனால் அவரை குறைத்து மதிப்பிடக் கூடாது”

2,000 ரூ நோட்டுகளை செல்லாதென அறிவித்தது டிஜிட்டல் கரன்சியை நோக்கிச் செல்லும் முயற்சி என்று பாஜக சொல்வது குறித்த உங்கள் கருத்து?

“பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது 15 லட்சம் கோடி ரூபாய் புழக்கத்தில் இருந்ததாக சொன்னார்கள். ஆனால், இன்றைக்கு 36 லட்சம் கோடி ரூபாய் புழக்கத்தில் இருக்கிறது. டீஜிட்டல் வந்தாலும் பண புழக்கமும் அதிகமாகிக் கொண்டுதான் போகிறது. டிஜிட்டல் இவர்களுடைய கண்டுபிடிப்பும் இல்லை. 2011, 12-லேயே டிஜிட்டல் புழக்கம் நடந்து கொண்டுதான் இருந்தது. அமெரிக்கா, ஜப்பான் நாடுகளில் கூட ஒரு கனிசமான ரொக்கம் புழக்கத்தில் இருக்கத்தான் செய்கிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசு பொய் சொல்லிக் கொண்டேதான் இருக்கிறது”

cm stalin

கர்நாடகாவில் காங்கிரஸ் பெற்ற வெற்றியை திசை திருப்பத்தான் இந்த நடவடிக்கை என தமிழக முதல்வர் கூறிய கருத்து குறித்து?

“முதலமைச்சர் சொல்வதை முற்றிலும் புறம்தள்ள முடியாது. இதை பரபரப்பான விஷயமாக ஆக்கிவிட்டால் அந்த வெற்றியைப் பற்றி பேசமாட்டோம். கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் என்னவெல்லாம் பேசியிருக்கிறார் என்று பாருங்கள். தி கேரளா ஸ்டோரி என்ற படத்தை காங்கிரஸ் எதிர்த்ததால், ‘காங்கிரஸ் பயங்கரவாதிகளை ஆதரிக்கும் கட்சி’ என்று பேசினார்.

இது பிரதமர் பேச வேண்டிய பேச்சா? வெறுப்பைத் தூண்டி மத மோதலை உருவாக்கி மக்களை திசை திருப்ப முயற்சி செய்தார். ஆனால் அவரது முயற்சி வெற்றிபெறலை. அந்த வெற்றி 2024 பொதுத் தேர்தலில் எதிரொலிக்கும் என்ற அச்சம் பாஜகவுக்கு இருக்கு. பதற்றமான நிலையில் இருக்கும் பாஜக மக்களை பதற்றத்துடன் வைக்க வேண்டுமென நினைக்கிறது”

பேட்டியை வீடியோவடிவில் இங்கே காண்க...