சிறப்புக் களம்

இந்தியில் எனக்கு தெரிந்த நான்கு வார்த்தைக்கூட கனிமொழிக்கு தெரியாது - டி.கே.எஸ் இளங்கோவன்!

இந்தியில் எனக்கு தெரிந்த நான்கு வார்த்தைக்கூட கனிமொழிக்கு தெரியாது - டி.கே.எஸ் இளங்கோவன்!

sharpana

’கனிமொழி எம்.பி தனக்கு இந்தி தெரியாது; இந்தி கற்றுக்கொள்ளவுமில்லை’ என்று விளக்கம் அளித்தாலும் பா.ஜ.கவினரும், அவர்களின் சார்பு ஆதரவாளர்களும் கனிமொழிக்கு இந்தி தெரியும் என்றே குற்றச்சாட்டி வருகிறார்கள்.  இத்தனை, வருடங்கள் டெல்லியில் எம்.பியாக இருக்கும் கனிமொழிக்கு இந்தி தெரியாமல் இருக்குமா? உள்ளிட்ட சில கேள்விகளை  தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரும்,  மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ் இளங்கோவன் எம்.பியிடம் முன்வைத்தோம்…

கனிமொழிதான் கலைஞருக்கு இந்தி மொழிபெயர்த்து கொடுத்தார் என்கின்ற பா.ஜ.கவினரின் குற்றச்சாட்டை எப்படி பார்க்கிறீர்கள்?

கனிமொழிக்கு இந்தியே தெரியாது. தமிழ், ஆங்கிலம்தான் நன்கு தெரியும். 1989 ஆம் ஆண்டு 20 வயதிருக்கும். அந்த வயதில் மொழிபெயர்க்கும் அளவுக்கு இருந்திருக்கவில்லை. கனிமொழி வடநாட்டில் வளர்ந்திருந்தால்கூட இந்தி தெரியும் என்று சொல்லலாம். அப்படி, எதுவும் நடக்கவில்லை. இந்தியை ஒரு பாடமாக எடுத்துப் படித்திருந்தால்கூட மொழி பெயர்ப்பு என்பது ஒரு கலை. அதனை எல்லோரும் செய்யமுடியாது. மொழியில் ஒரு ஆற்றல் வேண்டும். கனிமொழி, அப்போது கல்லூரி படித்துக்கொண்டிருந்தார். ’நான்தான் மொழிபெயர்த்தேன்’ என்பதை முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசகாயமே சொல்லிவிட்டார்.  தி.மு.க மீது எந்த ஆதாரமும் இல்லாமல் குற்றம் சாட்டுகிறார்கள். கெட்டப்பெயர் உண்டாக்க நினைக்கிறார்கள். ஆனால், அவர்களின் எண்ணம் ஈடேறாது. காரணம், திமுக மொழிக்கொள்கையில் ரொம்ப சரியாக இருந்திருக்கிறது. அப்படியே மொழி பெயர்க்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் தலைவர் கலைஞர் ஒரு தி.மு.ககாரரை மொழிப்பெயர்க்க விட்டிருக்கமாட்டார். நாங்கள் இந்தியை எதிர்ப்பது உலகத்திற்கே தெரியும்.

’இந்தி தெரியாததால்தான் தமிழர்கள் முன்னேற முடியவில்லை? எங்களுக்கு வேலைக் கிடைக்கவில்லை’ என்று தமிழர்கள் கலாய்க்கும் பதிவுகளை முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ சீரியசாக பதிவிட்டு வருகிறாரே?

கட்ஜூ சென்னைக்கு வந்து பார்க்கட்டும். ரயில்வே, மின்வாரியம் போன்ற பல்வேறு துறைகளுக்குச் சென்று பார்த்தால் நம் தமிழக மக்களின் வேலையைப்  பறித்துவிட்டு எத்தனை வடநாட்டுக்காரர்கள் இருக்கிறார்கள் என்பது புரியும். வேலையை கொடுக்கும் இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. ஆனால், அந்த வேலைகளை வடநாட்டுக்கார்களுக்கு கொடுத்துகொண்டிருக்கிறது மத்திய அரசு. ஏனென்றால், அங்கு அவர்களால் வேலை கொடுக்க முடியவில்லை. இந்தி பேசுபவர்கள் தமிழ்நாட்டிற்குதான் பிழைக்க வருகிறார்கள். நமக்கு இந்தியை கற்றுக்கொள்ள வேண்டிய தேவை  இல்லை. இன்று இந்தியாவில் இந்தி பேசத்தெரியாத மாநிலங்கள்தான் வளர்ந்த மாநிலங்களின் பட்டியிலில் முன்னணியில் உள்ளந்து. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மேற்குவங்கம், குஜராத், மராட்டியம், பஞ்சாப் எல்லாம் வளர்ந்த மாநிலங்களாக உள்ளன. இந்தி பேசும் மாநிலங்கள்தான் கடைசி இடங்களில் உள்ளன. மொழிமேல் குற்றம் இல்லை. அந்த மொழிக்கு ஒரு நவீனத்துவம் கிடையாது. இந்தியைக் கற்றுக்கொண்டால், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பீஹார், ராஜஸ்தான் மாதிரி வேறு மாநிலத்திற்குதான் வேலைத்தேடிச் செல்லவேண்டும்.

ஆனால், கனிமொழி இத்தனை வருடங்கள் எம்.பியாக இருக்கிறார். டெல்லியில் இந்தி பேசவேண்டிய தேவை ஏற்பட்டிருக்குமே?

டெல்லியிலும் இந்தி தேவையே இல்லை. எம்.பியாக இருந்தால் என்ன? வீட்டில் பணிபுரிபவர்களிலிருந்து அனைவரும் தமிழர்கள்தான். எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாருக்குமே இந்தி தெரியாது. அங்கு பேசுபவர்களின் பேச்சைக் கேட்டு ஓரிரு  வார்த்தைகள் பேசலாமே தவிர, இந்தியை ஒரு மொழியாக பேசும் அளவுக்கு தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மொழி அறிவே இல்லை. காரணம், தலைநகர் டெல்லியிலும் ஒரு எம்.பிக்கு இந்தி தேவையில்லை. ஏனென்றால், நாடாளுமன்றத்திலேயே ஆங்கிலத்திலும் தமிழிலும் பேசலாம். அட்டவணைப் பட்டியலில் உள்ள 22 மொழிகளிலும் பேசலாம். இந்தியில்தான் பேசவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நாங்கள் எல்லோரும் தமிழ் அல்லது ஆங்கிலத்தில்தான் பேசுவோம். எனக்கு தெரிந்த நான்கு வார்த்தை இந்திக்கூட கனிமொழிக்கு தெரியாது. நான் பள்ளி மற்றும் கல்லூரி நாட்களிலேயே டெல்லிக்கு சென்றிருக்கிறேன். மற்றவர்கள் பேசுவதை பார்த்து ஒரு சில வார்த்தைகள் தெரிந்திருக்கும். அந்தளவுக்குக்கூட கனிமொழிக்கு இந்தி தெரியாது. எச்.ராஜா சொல்வதைப்போலத்தான் தமிழருவி மணியனின் கருத்தையும் நாம் எடுத்துகொள்ளவேண்டும். எல்லோரும் திமுகவுக்கு எதிர்ப்பாக உள்ளார்கள். அவர்களின் நோக்கம் வேறு. பாஜகவுக்கு தொண்டு செய்யும் வேலையில் இருக்கிறார்கள். இது ஒரு சுயமரியாதை இயக்கம். மக்கள் சமநிலையைப் பேசுகிறோம்.

கலைஞர் குடும்பம் மற்றும் தயாநிதிமாறன் குடும்பத்தினருக்கு இந்தி தெரியும் என்று சொல்லப்படுகிறதே?

இப்போது, வரும் பெரும்பாலான பள்ளிகள் எல்லாம் சி.பி.எஸ்.சி பள்ளிகளாக வருகிறது. 1976 ஆம் ஆண்டு கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியப் பிறகு இரண்டு வகையான பாடத்திட்டம் உள்ளது. ஒன்று மாநில அரசின் பாடத்திட்டம். மற்றொன்று மத்திய அரசின் பாடத்திட்டம். மத்திய அரசின் பாடத்திட்டத்தின்படி நடக்கும் பள்ளிகளில் இந்தி வருகிறது. இப்போது, நிறைய சி.பி.எஸ்.சி பாடத்திட்டம் பள்ளிகள் வருவதால்தான் இந்தி படிக்கிறார்கள். மற்றபடி கலைஞர் குடும்பத்தில் யாரும் இந்தி படிப்பதுபோல் தெரியவில்லை. ஆனால், அவர்கள் நடத்தும் பள்ளியில்தான் உண்டு. அவ்வளவுதான்.

கனிமொழி எம்.பிக்கு ஏற்பட்ட அனுபவம் போல் உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா?

எனக்கு ஏற்பட்டதில்லை. இதுபோல் பேசும் தைரியம் 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தபிறகுதான் உருவாகியுள்ளது. மற்றவர்களை கேலி பேசுவது வாடிக்கையாகிவிட்டது. ஆட்சியில் இருக்கிறோம்; நம்மை காப்பாற்றுவார்கள் என்று நினைத்துக்கொண்டு கண்ணியக் குறைவாக நடந்துகொள்கிறார்கள். இதனை, கட்சியின் தலைமையும் கண்டிப்பதில்லை.

- வினி சர்பனா