Tea Day
Tea Day Freepik
சிறப்புக் களம்

‘அடிக்கிற வெயிலுக்கு சூடா ஒரு கப் டீ குடிச்சா...’ சர்வதேச தேநீர் தினம் இன்று!

Jayashree A

இன்று சர்வதேச தேநீர் தினம்.

நம்மில் பலருக்கும் ஒரு கப் தேநீர் என்பது மனிதர்களுக்குள், இருக்கும் அன்பை, காதலை, நட்பை, பாசத்தை வெளிப்படுத்தக்கூடிய மேஜிக்பானமாக இருக்கும்.

“வாங்க ஒரு டீ சாப்பிடலாம்...” என்ற ஒரு வரியே போதும்! நம்மில் பலரும் மனதில் இருக்கும் அழுத்தம் சற்றே குறைந்தது போல் உணர்வோம்.

ஊட்டி கொடைகானல் போன்ற மலைப்பிரதேசங்களுக்கு சென்று திரும்புபவர்கள் டீ தூள் வாங்கிவருவது என்பது சட்டத்தில் எழுதப்படாத விதி

“மச்சி ஒரு டீ சொல்லுடா...” என்று அமரும் நண்பர்களாக இருக்கட்டும், அறுபதை கடந்த முதியவர்களாக இருக்கட்டும் கையிலிருக்கும் தேநீரை முழுதும் அருந்துவதற்குள் ஊர், உலக விஷயங்கள் அனைத்தையும் பேசி முடித்திருப்பார்கள். கல்யாணம் ஆகட்டும் , காதுகுத்து ஆகட்டும், எதுவென்றாலும் முதலில் நாம் எதிர்பார்ப்பது ஒரு கப் தேநீர் தான்.

அலுவலகங்களில், தேநீர் இடைவேளை என்று ஒன்று இருக்கும். அதுவரை மூளையை பிய்த்துக்கொண்டிருக்கும் நமக்கு, மூளையை புதுப்பித்துக்கொண்டு மீண்டும் வேலையைத்தொடர தேநீரானது உதவும். சிலருக்கு தேநீர் குடித்தால் தான் வேலையே ஓடும். ஒரு நாளைக்கு 5 அல்லது 6 தடவை தேநீர் குடிப்பவர்களும் உண்டு.

இந்தியாவைப் பொருத்த வரையில் ஏழைகளின் பானம் தேநீர். காலையில் ஒரு டீயும் ஒரு ரொட்டியும் தான் பெரும்பாலான பேச்சுலர்களின் காலை உணவு என்றே சொல்லலாம். அதேபோல் என்னதான் காலை உணவை ஒரு கட்டு கட்டினாலும், ஒரு தேநீர் குடித்தால் தான் சாப்பிட்டு முடித்த திருப்தியானது சிலருக்கு ஏற்படும். அலுவலகங்களில் தேநீர் கொண்டு வரும் பொடியனின் கையில் கம்பிவளையில் குடிக்கொண்டிருக்கும் தேநீரானது ஆவிபறந்தபடி இருப்பதைப் பார்த்தால், டீ பிடிக்காதவர்கள் கூட அதை பருக நினைப்பார்கள்.

Tea day
மழைகாலம் என்றதும் என் நினைவுக்கு வருவது ‘நான் ராஜா சார், அப்புறம் ஒரு கப் டீ...’

புத்துணர்ச்சியை ஊட்டும் இந்த தேநீரின் பிறப்பிடம் தென்கிழக்கு ஆசியா என்கின்றனர். ஆனால் இந்தியா, பர்மா, சீனாவில் தான் தேயிலையானது அடையாளம் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எது எப்படியோ... இன்று தேநீர் உலகலாவிய பானமாக திகழ்கிறது. அதில் மாற்றுக்கருத்தே இல்லை! அதனால்தான் இந்த சர்வதேச தேநீர் தினமேவும்!

தேநீரின் நன்மைகள் என்னென்ன?

தேநீர் அருந்துவது மூளையை சுறுசுறுப்படையச் செய்வதுடன், இதில் உள்ள catechin என்னும் வேதிப்பொருள் உடல் எடையை குறைப்பதற்கும் உதவிகிறது (அளவோடு சாப்பிட்டால் மட்டுமே).

க்ரீன் டீ மற்றும் ப்ளாக் டீ அருந்துவதால் மருத்துவரீதியாக பல நன்மைகள் கிடைக்கின்றன.

மன அழுத்தத்தை போக்கும் அருமருந்தாகவும் தேநீரானது இருக்கிறது.

Tea day

ஜப்பான், கொரியா, தாய்வான் ஆகிய நாடுகளில் ஒரு மரபு சடங்காகவும் கலையாகவும் தேநீர் சடங்கு (Tea Ceremony) கொண்டாடப்படுகிறது.

இந்தியாவைப்பொருத்த வரையில் தேநீர் சடங்கு என்று பிரித்து வைப்பதில்லை... ஏனெனில் நமக்கு எந்நேரமும் தேநீர் நேரம் தான். ஆமாங்க.... இப்பொழுது இதை படிக்கும் நேரத்தில் கூட யாராவது தேநீர் சாப்பிட்டபடி தான் இருப்பீங்க! சரிதானே? சரி, தேநீருக்கும் உங்களுக்குமான ஸ்வீட் ரிலேஷன்பை கமெண்டில் சொல்லிட்டு போங்க!

Tea day

அப்பறம், இன்னொரு விஷயம்... எப்படி இருந்தாலும், இந்த சம்மர் சீசனில் முடிஞ்சவரை குளிர்ச்சியை கொடுக்கும் பானங்களை எடுத்துக்கோங்க!