சிறப்புக் களம்

“எனக்கு என்ன உரிமை இருக்கிறது? அப்பா என்பதை தவிர...” - மகள்களால் ஆன அப்பாக்களின் உலகம்!

“எனக்கு என்ன உரிமை இருக்கிறது? அப்பா என்பதை தவிர...” - மகள்களால் ஆன அப்பாக்களின் உலகம்!

கலிலுல்லா

ன்புள்ள மகளே! தந்தையின் மனம் திறந்த மடல் இது..

வழிந்தோடிய கண்ணீரை துடைத்துக்கொண்டு ஓடோடிச் சென்றேன். ஆப்ரேஷன் தியேட்டரிலிருந்து வந்த செவிலி மகாலட்சுமி பிறந்திருக்கிறாள் என்றாள். தேவதைகள் உலகில் ஜனிப்பதில்லை என்ற பொய்களை உடைத்தது உன் அழுகுரல். உன்னை அள்ளி எடுத்து ஆரத்தழுவுகையில் அதுவரை கனமாக இருந்த வாழ்வு லேசானது. வாழ்வின் ஆகச்சிறந்த அந்த நொடிகள் ப்ரேம் போட்ட புகைப்படமாக என் நெஞ்சில் இன்றும் ஒட்டிக்கொண்டிருக்கிறது.

'ப்பா..' என உன் மழலை மொழி உதிர்த்த வார்த்தையை ரெக்கார்டு செய்து வைத்த பாக்கியசாலி நான். பொக்கிஷமாக பொத்தி வைத்த அந்த ஒலிநாடாவை 60 வயது கடந்தும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். தேன் கூட தெகட்டிவிடுமாம். உன் குரலுக்கு தெகட்டலில்லை. என் கவலை நேரங்களின் கானம் அது. பெண் பிள்ளைகள் அம்மாக்களைக்காட்டிலும் அப்பாக்களுக்குத்தான் ஸ்பெஷல்!

மகள்களின் வருகைக்குப்பிறகு அப்பாக்களின் உலகம் கலர்புல்லாகிவிடுகிறது. இல்லை..மகள்கள் கலர்புல்லாக்கிவிடுகிறார்கள். உனக்கு நினைவியிருக்கிறதா? உன்னுடைய பள்ளியின் முதல் நாளன்று நீ மகிழ்ச்சியாக வகுப்புச் சென்றாய். யாரோ ஒருவர் எனக்கு பிரியமான ஒன்றை பறித்துவிட்ட உணர்வில், அன்றைய தினம் முழுவதும் வாட்ச்மேனுடன் வாழ்க்கை நடத்தினேன். நீ திரும்பி வந்ததும் மழையைப்பார்த்த மயிலாய் தோகை இல்லாத குறை மட்டுமே; ஆனாலும் துள்ளி குதித்தேன். நீ வளர வளர உன்னுடன் சேர்ந்தே நானும் வளர்ந்தேன்.

அப்போது நீ 7வது படித்துக்கொண்டிருந்தாய். பாலாய்போன சிக்கன் குனியா என் உடலில் தஞ்சம் புகவும் தவறவில்லை. உன் அம்மாவோ உறவினர் திருமணத்துக்கு ஊருக்கு சென்றுவிட்டாள். என் வாழ்வின் அப்படியொரு காய்ச்சலை எதிர்கொண்டதில்லை. ஒடுங்கிவிட்டேன். உலகம் அன்பால் மட்டுமல்ல மகள்களின் வாஞ்சையால்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதை அன்று உணர்ந்தேன். ‘ஸ்கூலுக்கு போ மா.. நான் பாத்துக்குறேன்’ என்றவனிடம், ‘உங்களவிட எனக்கு ஸ்கூல் முக்கியமில்லப்பா.. நீங்க இருங்க சுடு தண்ணி எடுத்துட்டு வரேன்’ என நீ கூறியபோது அருவியாய் நீர் கண்களிலிருந்து பெருக்கெடுத்தது.

என் இன்னொரு அன்னையாக அருகிலிருந்து என்னை பார்த்துக்கொண்டாய். நான் தடுமாறி விழுந்த நொடிகளில் நீ கலங்கினாய். ‘ஒன்னுல்லப்பா சரியாயிடும்’ என்ற உன் வார்த்தைகள் உள்ளுற புது தெம்பை பாய்ச்சியது. இன்னும் கூட உன்னுடைய அந்த வார்த்தையை நினைத்துதான் இந்த கொரோனாவை கடந்துகொண்டிருக்கிறேன்.

நீ பெரியவளானதய் எண்ணி சுற்றியிருக்கும் எல்லோரும் சந்தோஷம் அடைந்தார்கள். ஆனால் எனக்குள் கலக்கம் தான் அதிகரித்தது. அம்மா, மனைவியைப்போல மாதந்தோறும் என் மகளும் மாதவிலக்கு வலியை அனுபவிக்க வேண்டுமே என வருந்தினேன். ஆண்களுக்கு மட்டும் ஏன் இந்த பிரச்னைகள் எதுவும் இருப்பதில்லை என அன்று அடிக்கடி என்னை நானே கேட்டுக்கொண்டேன். திருமணத்துக்கு முன்புவரை ஆணாதிக்கத்தில் திளைத்தவன். கர்வத்தால் சுற்றித்திரிந்துகொண்டிருந்தேன். ‘பெண்களுக்கென கட்டுப்பாடுகள் உண்டு. அவர்கள் கோட்டை தாண்டக்கூடாது. ஆண் தான் எல்லாமே’ என்ற இறுமாப்பை நீ வந்து தளர்த்திவிட்டாய். ஆணாக இருப்பதையையே குற்ற உணர்ச்சியாக உணர்கிறேன்.

என் கர்வங்கள் யாவும் கரைந்துவிட்டன. ஆண் என்பது வெறும் பாலின அடையாளம் மட்டுமே என்பதை உணர்த்தியவள் நீ. தினந்தோறும் செய்தித்தாள்ளில் படிக்கும் ஆணவக்கொலைகளையும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் கண்டு கோபம் கொப்பளிக்கிறது. மனித மிருகங்களைப்பற்றி நான் கூட உன்னிடம் சொல்லியிருக்கிறேன். ‘கடவுள் வாழும் உலகில் சாத்தான்களும் இருக்கவே செய்கிறார்கள். யாருக்கும் பயப்படாத. உனக்கு பிடிச்ச பண்ணு. எதா இருந்தாலும் அப்பா பாத்துக்குறேன்’ என நான்சொன்னதும், ‘எல்லா இடத்துலையும் பொண்ணுங்கள மட்டும் ஏன்ம்பா ஈஸியா அபியூஸ் பண்றாங்க; அவங்களுக்கு எந்த சுதந்திரம் கொடுக்குறதில்ல’ என நீ கேட்ட கேள்விகளுக்கு இன்றும் விடைகாண அலைந்துகொண்டிருக்கிறேன்.

‘எல்லாரும் டூர்போறோம் நியூம் வாடி’ என உன் தோழி அழைத்தபோது, ‘எங்க அப்பா ஏற்கெனவே பணக்கஷ்டத்துல இருக்காரு. இப்போ போய் காசு கேட்டு அவர இன்னும் கஷ்டப்படுத்த விரும்பலடி’ என நீ கூறியதை கேட்டதும் உடைந்துவிட்டேன். என்னால் உன் சந்தோஷங்கள் ஒருபோதும் தடைபடக்கூடாது. ‘என்னை விற்றாவது உன் சந்தோஷத்தை நிறைவேற்றவேண்டும்’ என்பது நீ பிறக்கும்போது எடுத்த முடிவு. அதில் ஒருபோதும் பின்வாங்கியதில்லை. அடுத்த அரைமணிநேரத்திலேயே அந்த பணத்தை ஏற்பாடு செய்தேன்.

ஆனால் நீயோ.. அந்த பணத்தை கடன் வாங்கியவரிடமே திருப்பி கொடுத்து, ‘அப்பா கடன் கேட்டா கொடுக்காதீங்க அங்கிள்’ என கண்டிப்புடன் கூறி வந்திருக்கிறாய். ‘ஏற்கெனவே இருக்குற கடன்ல இதுவேறயா; வேணாம்பா’ என அதட்டினாய். ‘உனக்காகத்தான்மா’ என்றபோது, நீங்க கடனில்லாம இருக்குறது தான் சந்தோஷம் என என் சந்தோஷத்தை உன் மகிழ்ச்சியை வாரியிறைத்துக்கொண்டவள் நீ!

பெண்கள் பொருளாதார விடுதலை அடைய வேண்டும் என தீர்க்கமாக நம்பினேன். ‘பொண்ணுங்க யாரையும் சார்ந்த வாழக்கூடாதும்மா’ என அடிக்கடி சொல்லுவேன். ‘தெரியும்பா..’ என கூறி, வேலைக்குச்சென்ற அடுத்தமாதமே எனக்கான சட்டையை வாங்கி கொடுத்தாய். இதோ இன்றும் அந்த சட்டையை அணிந்துகொண்டுதான் எழுதிக்கொண்டிருக்கிறேன். தேவதைகள் உயர பறக்க வேண்டும். உனது சிறகுகளை ஒருபோதும் நான் பறிக்க மாட்டேன். யாரும் பறிக்கவும் விடமாட்டேன்.

எல்லாவற்றையும் கடந்துவிட்ட எனக்கு உன் திருமணத்தின் பிரிவை எப்படி கடக்கப்போகிறேன் என தெரியவில்லை. திருமணமாகி பெண்கள் மட்டும் ஏன் கணவர் வீட்டுக்கு செல்ல வேண்டும். இந்த க்ளிஷேக்களை மாற்றி ஆண்கள் மனைவியின் வீட்டுக்கு வரலாமே என தோன்றும். வீட்டோட மாப்பிளைகளை சமூகம் கௌரவக்குறைச்சலாக பார்க்கிறது. சமூகம் எதைத்தான் கௌரவக்குறைச்சலாக பார்க்கவில்லை. உனக்கான மாப்பிள்ளையை தேடிக்கொண்டிருந்தபோதுதான், இன்ஸ்டாகிராமில் உன் காதலுடன் நீ இருக்கும் செல்ஃபியைப் பார்த்தேன். வீட்டுக்கு வந்த ப்ரோக்கரிடம், ‘என் பொண்ணு லவ் பண்றா, அந்த பையன கல்யாணம் பண்ணி வைக்கப்போறேன்’ என்று சொல்லிவிட்டேன்.

உனக்கான விருப்பங்களில் முட்டுக்கட்டையிட எனக்கென்ன உரிமை இருக்கிறது... அப்பா என்பதை தவிர. நீ என் தேவதை. சிறகடித்து பறக்க வேண்டும்… மகள்களால் ஆன அப்பாக்களின் உலகம் அழகானது!

-கலிலுல்லா