சிறப்புக் களம்

என்ன ஒரு நகரமே மேப்ல இருந்து காணோம்! கோஸ்ட் நகரமும் வரலாற்றின் கருப்பு பக்கங்களும்!

PT

ஒரு குப்பை கிடங்கை எரித்ததால், ஒரு நகரமே காணாமல் போனதா?

எங்கே, எப்போ? .....

இருங்க இருங்க விரிவா சொல்றேன்.

பிரஞ்சு புரட்சி காலத்தில் இருந்து..

சின்ராலியா என்ற நகரம் அமெரிக்காவில் பென்ஸிலோனியா என்ற இடத்திற்கு அருகாமையில் இருந்தது. 1749ல் ஸ்டீபன் க்ரியாட் என்பவர் சின்ராலியா என்ற நிலப்பரப்பை கண்டுபிடித்தார். அப்பொழுது அங்கு விலையுயர்ந்த கனிமவளம் நிறைந்த இடம் இது என்று தெரிந்திருக்கவில்லை. அங்கு அவர் ஒரு நகரத்தை உருவாக்க நினைத்தார். அதன்படி, 1770 ஆம் ஆண்டில், ரீடிங்கில் இருந்து ஃபோர்ட் அகஸ்டா (இன்றைய சன்பரி) வரை நீண்டு சென்ற ரீடிங் ரோடு 61வது பாதையாக உருவாக்கப்பட்டது. 1793, புரட்சிகரப் போரின் வீரரும் சுதந்திரப் பிரகடனத்தில் கையெழுத்திட்டவருமான ராபர்ட் மோரிஸ், சென்ட்ரலியாவின் பள்ளத்தாக்கு நிலத்தில் மூன்றில் ஒரு பகுதியைக் கைப்பற்றினார். 1798ம் ஆண்டு பிரெஞ்சு கப்பல் கேப்டன் ஸ்டீபன் ஜிரார்ட், மோரிஸின் நிலங்களை $30,000க்கு வாங்கினார், அப்பகுதியை ஆய்வு செய்ததில் அப்பகுதியில் ஆந்த்ராசைட் நிலக்கரி ( Anthracite) இருப்பதை முதன்முதலில் ஸ்டீபன் ஜிரார்ட் தெரிந்துக்கொண்டார்.

சென்ட்ரலியா.. பெயர் எப்படி வந்தது?

பிறகு ஸ்டீபன் ஜிரார்ட் தனது நிலத்தை locust mountain coal and iron என்ற நிறுவனத்திடம் விற்றுவிடுகிறார். லோகஸ்ட் நிறுவனம் ஒரு திறமை வாய்ந்த alexander Rae, என்பவரை மேற்பார்வையாளாராக நியமித்தது. அலெக்சாண்டர் ரே, அங்கு தனது குடும்பத்தை குடியமர்த்தினார், அதன் பிறகு அவ்விடத்தில் மேலும் ஒரு கிராமத்தை அமைக்க விரும்பி, தெருக்களையும் பல இடங்களையும் உருவாக்கத் தொடங்கினார். ரே இந்த நகரத்திற்கு சென்ட்ரல்வில்லி என்று பெயரிட்டார், ஆனால் பின்நாளில் அதை சென்ட்ரலியா என மாற்றினார், அங்கிருந்து நிலக்கரியைக்கொண்டு செல்ல மைன் ரன் ரயில் பாதை 1854 இல் கட்டினார். பிறகு நிலக்கரி சுரங்கம் தோண்டும் பணி ஆரம்பிக்கப்பட்டது.

நிறுத்தப்பட்ட நிலக்கரி உற்பத்தி.. வெளியேறிய மக்கள்!

சென்ட்ரலியாவில் முதல் இரண்டு சுரங்கங்கள் 1856 இல் திறக்கப்பட்டன, லோகஸ்ட் ரன் சுரங்கம் மற்றும் நிலக்கரி ரிட்ஜ் சுரங்கம். பின்னர் 1860 இல் Hazeldell Colliery சுரங்கம், 1862 இல் Centralia சுரங்கம் மற்றும் 1863 இல் கான்டினென்டல் சுரங்கம் என்று படிப்படியாக சுரங்கங்கள் தோண்டப்பட்டது. பெரும் நிலக்கரி சுரங்கமாக செண்ட்ரலியா இருந்தது. 1868 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி, சென்ட்ரலியா மற்றும் மவுண்ட் கார்மல் இடையே ஒரு பிரயாணாத்தின் போது அலெக்சாண்டர் ரே கொல்லப்பட்டார். ஒரு கட்டத்தில் அமெரிக்கப்பங்கு சந்தை வீழ்ச்சியடைந்த சமயம், locust mountain coal and iron தனது நிலக்கரி உற்பத்தியை நிறுத்திக்கொண்டது. அங்கிருந்த பல மக்களின் வாழ்வாதரம் இதனால் பாதிக்கப்பட்டது. பாதி மக்கள் வாழ்வாதாரம் தேடி வெவ்வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர்.

’மழை விட்டும் தூவானம் விடவில்லை’.. "பூட் லெக்" நுட்பமும் நிலக்கரி உற்பத்தியும்

பாதி மக்கள் தங்களின் வாழ்விடம் இது தான் என்று ஒவ்வொருவரும் தாங்களாகவே, சிறு சிறு சுரங்கங்கள் தோண்டி "பூட் லெக்" என்று அழைக்கப்படும் நுட்பங்களைப் பயன்படுத்தி, சுரங்கங்களில் எஞ்சியிருக்கும் நிலக்கரி தூண்களில் இருந்து நிலக்கரியைப் பிரித்தெடுப்பார்கள். இது பல உபயோகத்தில் இல்லாத சுரங்கங்களில் சரிவை ஏற்படுத்தியது, இச்செயலை அமெரிக்க அரசாங்கமும் கண்டுக்கொள்ளவில்லை. அதனால் அங்கு பல சிறு சிறு சுரங்கள் தோண்டப்பட்டு, நிலக்கரியை எடுத்து வந்தனர். இதன் விளவாக, அங்கு பல குப்பைகள் சேரத்தொடங்கின. அந்நகர மக்கள் இக்குப்பைகளை அகற்றுவதற்கு 5 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்து அவர்கள் தேங்கியுள்ள குப்பைகளை எரிக்கும் பணியை செய்து வந்தனர்.

மாறத்தொடங்கிய சரித்திரம்

1962 மே மாதம் 27ம் தேதி அன்றுதான் செண்ட்ரலியாவின் சரித்திரமே மாறத்தொடங்கியது. ஆம், வழக்கம்போல, அந்த ஐவர் குழு, அன்று, பெரிய குப்பை கிடங்கிற்கு ஒன்றுக்கு, தீ மூட்டியது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக அவர்களால் அன்று மூட்டிய அந்த தீயை அணைக்க முடியவில்லை. அவர்களும், இரண்டு மூன்று நாட்கள் அதை அணைக்க பல்வேறு முயற்சிகளை மேற்க்கொண்டனர், ஆனால் நெறுப்பு அணையவில்லை. உடனடியாக மக்கள் இதை அமெரிக்க அரசாங்கத்திடம் தெரியப்படுத்தினர். பென்ஸில்மோனியா நகரத்திலிருந்து, ஒரு குழு அவ்விடத்திற்கு வந்து ஆராய்ச்சியை மேற்க்கொண்டனர். அப்பொழுது அவர்கள் ஒரு விஷயத்தை தெரிந்துக்கொண்டனர். மக்களால் உருவாக்கப்பட்ட ”பூட்லெக்” என்னும் சுரங்கம் ஒன்று குப்பைகிடங்கின் கீழே இருந்துள்ளது, அது வழியாக பரவிய தீயானது உள்ளே உள்ள சுரங்கத்திலும் பரவி மொத்த நிலக்கரியும் எரிந்தது தெரியவந்தது.

தடை செய்யப்பட்ட நகரமாக மாறிய செண்ட்ரலியா

1962ல் ஏற்பட்ட இந்த தீயானது இன்று வரை எரிந்துக்கொண்டு இருக்கிறது. இதனால் அப்பகுதியில் 100 டிகிரிக்கு மேலே வெப்பநிலை அதிகரித்துள்ளது. இதில் இன்னொரு அசம்பாவிதம் என்னவென்றால், நிலக்கரியுடன் சேர்ந்து பூமியின் அடியில் உள்ள மீத்தேனும் வெளியேறி அதுவும் நிலக்கரியுடன் எரிந்து வருவதாக கூறுகிறார்கள். இதனால் இப்பகுதி முழுதும் நிலம் ஈரப்பதத்தை இழந்து, நிலத்தின் நிறம் மாறி, ஆங்காங்கே விரிசல் விட்டும் காணப்படுகிறது. மீத்தேனும் நிலக்கரியும் சேர்ந்து எரிவதால், அப்பகுதி முழுதும், நச்சு வாயுக்கள் அதிகரித்து, மக்களுக்கு பல நோய்கள் ஏற்பட்டு இருக்கிறது. அங்கு வாழ தகுதியற்ற நிலையில் அமெரிக்கா அங்கு வாழ்ந்து வந்த மக்களை முற்றிலுமாக வெளியேற்றி, செண்ட்ரலியாவை ஒரு தடை செய்யப்பட்ட நகரமாக அறிவித்து இருக்கிறது. அங்கு அதனை சுற்றியுள்ள மரங்கள் அனைத்தும் முற்றிலுமாக எரிந்து எலும்பு கூடாக காட்சி அளிக்கிறது. அனைத்து கட்டிடங்களும், அதிக வெப்பத்தால் விரிசலடைந்து வருவதாக கூறுகிறார்கள்.

நரகத்தின் நுழைவாயில்

இந்நகரத்தை அங்குள்ள மக்கள், இது நரகத்தின் நுழைவாயில் என்று கூறி வருகின்றனர். இதில் முக்கியமான செய்தி என்னவென்றால், இதுவரை தீப்பற்றி எரியும் பகுதி 30 சதவிகிதம் தான் என்றும், இன்னும் 400 வருஷங்கள் வரையில் அந்நெருப்பு எரியக்கூடும் எரியக்கூடும் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

புவி வெப்பமயமாவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.

சரி வேறொரு சுவாரஸ்யமான செய்தியுடன் மறுபடி நாளை சந்திக்கலாம்.

- ஜெயஸ்ரீ அனந்த்