நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானதையடுத்து, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஜூன் 27 முதல் ஜூலை 7-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளது. ஜூலை-17 மருத்துவக் கலந்தாய்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக பிளஸ் டூ தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடக்கும். இந்த முறை அப்படியல்ல. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியும். நீட் தேர்வை எழுதாதவர்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்க முடியாது.
இந்நிலையில், மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு போக உள்ள இடங்களில் 85% இடங்களை மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும், மீதமுள்ள 15% இடங்களை சிபிஎஸ்இ மாணவர்களுக்கும் ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய சுமார் 90 ஆயிரம் மாணவர்களில் 90 சதவிகிதம் பேர் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்றவர்கள். மீதமுள்ள 10 சதவிகிதம் பேர் மட்டுமே சிபிஎஸ்இ பாடப்பிரிவின் கீழ் பயின்றவர்கள். ஆனால் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளபடி 15 சதவீதம் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது மாநிலப் பாடத்ட்டத்தின் கீழ் பயின்றவர்கள் 90 சதவீதம் பேர் இருக்க, அவர்களுக்கு ஒதுக்கீடு 85 சதவீதம்தான். இது குறித்து கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்துக்கு வெளியே இருந்து கேள்விகள் கேட்கப்பட்டதால், தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அகில இந்திய அளவில் முதல் 25 இடங்களைப் பிடித்தவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தஒரு மாணவர் கூட இடம்பெறவில்லை. இது மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வு முடிவுகளில் மாநில அளவிலான ரேங்கிங் வெளியிடப்படாது என்பதால், மாநில அளவில் முதலிடம் பிடித்தவர்கள் யார், மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களின் தேர்ச்சி விகிதம் என்ன, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்தவர்களின் தேர்ச்சி விகிதம் என்ன என்பவற்றைப் போன்ற விவரங்கள் தெரியவரவில்லை.
இந்தியா முழுவதும் 11,38,890 பேர் நீட் தேர்வை எழுத விண்ணப்பித்தார்கள். இதில் மாணவர்களின் எண்ணிக்கை 4,97,043, மாணவிகள் 6,41,839. திருநங்கைகள் 8 பேர். விண்ணப்பித்தவர்களில் 48,805 பேர் நீட் தேர்வை எழுதவில்லை. தேர்வு எழுதிய 10,90,085 பேரில் தேர்ச்சி பெற்றவர்கள் 6,11,539 பேர். மாணவர்களின் எண்ணிக்கை, 2,66,221, மாணவிகளின் எண்ணிக்கை 3,45,313. தேர்வெழுதிய 8 திருநங்கைகளில் 5 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். 4,78,546 மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கு தகுதியற்றவர்கள் என நீட்டால் நிராகரிக்கப்பட்டிருக்கிறார்கள்.
தமிழகத்தின் மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்று 1150 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்கள் பலரும் நீட் தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண்களையே எடுத்திருக்கிறார்கள். இதனால், மருத்துவக் கல்வியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு கடினமாக உழைத்த பலருக்கு, மருத்துவக் கல்வி என்பதை நினைத்துப் பார்க்க முடியாததாகி இருக்கிறது.
மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்று, மருத்துவப் படிப்பை மட்டுமே நோக்கமாகக் கொண்டு படித்து, நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் பெருத்த ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் மொத்தம் 22 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அண்ணாமலைப் பலகலைக்கழக ராஜா முத்தைய்யா மருத்துவக் கல்லூரியில் உள்ள இடங்களையும் சேர்த்து மொத்தம் மூவாயிரத்து 50 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. இவற்றுள் 15 சதவிகித அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் 456 ஆகும். மீதமுள்ள 85 சதவிகித மாநில ஒதுக்கீட்டு இடங்கள் 2594. தமிழக அரசின் புதிய அரசாணையின் படி, தமிழக மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு மாநில ஒதுக்கீட்டில் வழங்கப்பட்டிருக்கும் 85 சதவிகித ஒதுக்கீட்டின் கீழ் 2,203 இடங்கள் கிடைக்கும். சி.பி.எஸ்.இ உள்ளிட்ட இதர பாடத்திட்டங்களின் கீழ் பயின்ற மாணவர்களுக்கு 391 இடங்கள் கிடைக்கும். 7 தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் மொத்தமுள்ள ஆயிரத்து 300 இடங்களில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் 517 ஆகும். அரசு ஒதுக்கீட்டு இடங்களான 65 சதவிகிதத்தில் 664 இடங்கள் மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கும், 119 இடங்கள் இதர பாடத்திட்டங்களில் பயின்ற மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே தமிழகத்தின் பின்பற்றப்படும் இட ஒதுக்கீட்டு முறையின்படி, அனைத்திந்திய இட ஒதுக்கீடான 456 மருத்துவ இடங்கள் போக, மாநில பாடத்தில் பயின்ற மாணவர்களுக்கும் அளிக்கப்பட்டிருக்கும் 85 சதவிகித இடங்களிலும், சிபிஎஸ்இ பாடத்தில் பயின்றவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் 15 சதவிகித இடங்களிலும், ஏற்கனவே தமிழக அரசால் பின்பற்றப்படும் 69 : 31 (இடஒதுக்கீட்டுப் பிரிவு:பொதுப்பிரிவு) என்ற முறையே செயலாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.