சிறப்புக் களம்

ஒலிம்பிக் பதக்கத்தை நெருங்கும் இந்திய கோல்ஃப் வீராங்கனை - அதிதி அசோக் : வெற்றிக் கதை

EllusamyKarthik

டோக்கியோ ஒலிம்பிக்கில் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் இந்திய கோல்ஃப் வீராங்கனை அதிதி அசோக். கோல்ஃப் விளையாட்டு வீரர்களுக்கான சர்வதேச ரோலக்ஸ் ரேங்கிங்கில் இப்போதைக்கு இவர் 200-வது இடத்தில் உள்ளார். இருப்பினும் ஒலிம்பிக் களத்தில் மகளிர் தனிநபர் ஸ்ட்ரோக் பிளே ஈவெண்டில் சர்வதேச ரேங்கிங்கில் முதல்நிலை வீராங்கனையான அமெரிக்காவின் NELLY KORDA-வுக்கு அடுத்த இடத்தை பிடித்து அற்புதம் நிகழ்த்தியுள்ளார். 

மகளிர் தனிநபர் ஸ்ட்ரோக் பிளேவில் நெல்லிக்கு முதல் இடம். இரண்டாவது இடம் அதிதிக்கு. அதுவும் முதல் மூன்று ரவுண்டுகளில் இந்த இரண்டாவது இடத்தை உடும்பு பிடி போல கெட்டியாக பிடித்துக் கொண்டுள்ளார் அதிதி. அடுத்து நடைபெற உள்ள நான்காவது ரவுண்டிலும் அந்த இடத்தை அவர் தக்க வைத்துக் கொண்டால் அதிதி பதக்கம் வெல்வது உறுதியாகிவிடும். 

அதிதியன் வெற்றிக் கதை!

கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு நகரில் பிறந்தவர் அதிதி. அவருக்கு தற்போது 23 வயது. கர்நாடக மாநில கோல்ஃப் அசோசியேஷன் அமைந்துள்ள பகுதிக்கு பக்கத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு வார விடுமுறை நாட்களில் அதிதியின் குடும்பத்தினர் செல்வது வழக்கம். அப்போது தான் இந்த விளையாட்டை முதன்முதலில் பார்த்துள்ளார் அதிதி. அப்போது அவருக்கு ஐந்து வயது. தனக்கு இந்த விளையாட்டை விளையாட வேண்டும் என பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். அதன்படியே பொழுதுபோக்குக்காக அவருக்கு அதில் பயிற்சி கொடுத்துள்ளனர் பெற்றவர்கள். இப்படி தான் கோல்ஃப் விளையாட்டு அறிமுகமானது. 

ஒரு கட்டத்தில் இந்த விளையாட்டை புரொபஷனலாக அணுக வேண்டுமென்ற ஆசை வந்துள்ளது. அதை  அப்படியே அவரது தந்தையிடம் சொல்ல அவரும் ‘நோ’ சொல்லாமல், மகளுக்கு ‘யெஸ்’ என பதில் சொல்லியுள்ளார். 

சூடுபிடித்த ஆட்டம்

அதன் பிறகு இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் தனது க்ளப்பை (கோல்ஃப் பேட்) ஒரு வீசு வீசியுள்ளார். அதன் மூலம் செல்லும் இடமெல்லாம் வெற்றி வாகை சூடியுள்ளார். 

ஆசிய இளையோர் விளையாட்டு (2013), இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு (2014), ஆசிய விளையாட்டு (2014) மற்றும் ரியோ ஒலிம்பிக் (2016) என பல போட்டிகளில் இந்தியா சார்பாக பங்கேற்ற முதல் கோல்ஃப் விளையாட்டு வீராங்கனை என்ற சாதனை அவர் பக்கம் வசமானது. அதே நேரத்தில் அவர் தொழில்முறையாக 5 டூர்களில் வெற்றி பெற்றுள்ளார். குறிப்பாக LPGA டூர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். 

ரியோவில் 41-வது இடம் - டோக்கியோவில் 2-வது இடம்!

ரியோ ஒலிம்பிக்கில் 41-வது இடத்தை பிடித்த அதிதி டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் தனிநபர் ஸ்ட்ரோக் பிளே ஈவெண்டில் முதல் மூன்று செட்களில் இரண்டாவது இடம் பிடித்துள்ளார். 

ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெற்றதும் “என் நாட்டுக்காக நான் மீண்டும் ஒலிம்பிக்கில் எனக்கு பிடித்த விளையாட்டை விளையாட உள்ளதில் மகிழ்ச்சி” என தெரிவித்திருந்தார். 

இந்த ஒலிம்பிக்கில் அவரது Caddie-யாக (கோல்ஃப் விளையாட்டு உபகரணங்களை வீரருக்காக சுமந்து செல்பவர்) அவரது அம்மா மாஷ் உள்ளார். கடந்த ஒலிம்பிக்கில் அவரது அப்பா அசோக், Caddie-யாக செயல்பட்டிருந்தார். 

அவரது ஆட்டத்தை பார்த்து அமெரிக்காவின் நெல்லியே அசந்து நிற்கிறார். கூடவே அதிதியை சிறந்த வீராங்கனை எனவும் பாராட்டியுள்ளார் அவர். 

“நான் எனது அடுத்தடுத்த ஆட்டத்தில் எப்படி செயல்பட போகிறேன் என்பதை விடவும் எனது செயல்பாட்டினால் இந்தியாவில் இந்த விளையாட்டு மக்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் விளையாட்டாக மாறியுள்ளதே எனக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறேன்” என தெரிவித்துள்ளார் அதிதி. 

நிச்சயம் பதக்கத்துடன் நாடு திரும்ப வாழ்த்துகள் அதிதி! ஆல் தி பெஸ்ட்!