இந்திய கிரிக்கெட் அணிக்கு ‘யுவராஜ் சிங்’ ஓய்வு பெற்ற காலத்திலிருந்தே எதிர்கொண்டு வருகின்ற தலையாய சிக்கல் என்றால் அது மிடில் ஆர்டர்தான். அதுவும் குறிப்பாக அந்த 4-வது அல்லது 5-வது டவுனில் களம் இறங்கும் பேட்ஸ்மேனுக்கான தேடல் நீண்ட நெடிய தேடலாகவே இருந்தது. இப்போது அதற்கு சூர்யகுமார் யாதவ் மூலம் விமோசனம் கிடைத்துள்ளதாகவே தெரிகிறது. இவரை செல்லமாக ‘SKY’ என அழைப்பதுண்டு. அந்த பெயருக்கு ஏற்ப களத்தில் வானவேடிக்கை காட்டுவதில் இவர் வல்லவர். அதே நேரத்தில் ஆட்டத்தின் போக்கிற்கு ஏற்ப தட்டித்தட்டி ஆடுவதிலும் கைதேர்ந்தவர்.
லேட்டாக கிடைத்த வாய்ப்பு!
டொமஸ்டிக் கிரிக்கெட்டில் கில்லியாக ஜொலித்தவர் சூர்யகுமார் யாதவ். தவிர ஐபிஎல் லீக்கிலும் 2018, 2019, 2020, 2021 என வரிசையாக அடுத்தடுத்த சீசன்களில் ரன் குவிப்பில் ஈடுபட்டு வரும் பேட்ஸ்மேன். இருந்தாலும் அவருக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு அவ்வளவு எளிதாக கிடைத்துவிடவில்லை. அதற்காக அவர் தவமாய் தவமிருந்தார். 2020 ஐபிஎல் சீசன் நிறைவு பெற்றவுடன் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அந்த தொடரில் சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அது விமர்சனத்துக்கு உள்ளானது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் அது குறித்து கேள்வி எழுப்பினர்.
“உள்ளூர் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாமல் போனது வேதனையையும், வலியையும் கொடுத்தது. நான் மனதளவில் உடைந்து போயிருந்தேன். அப்போது நானும் கேப்டன் ரோகித் ஷர்மாவும் (மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன்) ஜிம்மில் இருந்தோம். அவர் என்னை பார்த்தார். உடனடியாக நான் என மன ஓட்டத்தை அவரிடம் வெளிப்படுத்தினேன்.
‘நீ அணிக்காக (மும்பை இந்தியன்ஸ்) நல்ல பங்களிப்பை கொடுத்துள்ளாய். உன் ஆட்டத்தில் கவனம் வை. உனக்கான வாய்ப்பு நிச்சயம் வரும். அதுவரை பொறுத்திரு’ என சொன்னார். அந்த வார்த்தைகள் எனக்கு நம்பிக்கை கொடுத்தது” என அப்போது சொல்லியிருந்தார் சூர்யகுமார் யாதவ்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் பயோ-பிக் படத்தில் ஒரு வசனம் வரும். அது கரக்பூர் ரயில் நிலையத்தில் நடப்பதுபோல காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அதில் தோனியாக நடித்த சுஷாந்த் சிங் அந்த வசனத்தை சொல்வார். ‘வாய்ப்புக்காக காத்திருக்கிற கொடுமை என்ன மாதிரி ஆளுங்களுக்குதான் தெரியும்’ என்று அந்த வசனம் வரும். அப்படியொரு நிலைதான் அன்று சூர்யகுமாருக்கு. ஆனால் அது வெறும் நூத்து சொச்சம் நாட்கள்தான் நீடித்தது. இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் இடம் பிடித்தார். முதல் போட்டியில் பேட் செய்யும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. இருந்தாலும் அவருக்கு கிடைத்த அடுத்த வாய்ப்பில் 31 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்து மிரட்டினார். அணியில் விளையாட தனக்கு கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.
மேட்ச் வின்னர்!
இதுவரை இந்திய அணிக்காக 7 ஒருநாள் மற்றும் 14 டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் விளையாடியுள்ளார். அதில் அவர் விளையாடிய சர்வதேச டி20 இன்னிங்ஸில் மட்டும் 57, 32, 50, 11, 6*, 25*, 62, 1, 0, 34*, 8, 65 ரன்கள் எடுத்துள்ளார். டி20-யில் அவரது பேட்டிங் ஆவரேஜ் 39. ஸ்ட்ரைக் ரேட் 165.57. களத்தில் மொத்தம் எதிர்கொண்ட பந்துகள் 212. ஸ்கோர் செய்துள்ள ரன்கள் 351. 32 பவுண்டரி மற்றும் 20 சிக்சர்கள் இதில் அடங்கும். அதிலும் அவர் கடைசியாக இன்னிங்ஸில் மேட்ச் வின்னராக ஜொலித்திருந்தார்.
அண்மையில் முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் வெற்றியில் சூர்யகுமாருக்கு முக்கிய பங்கு இருக்கிறது. டார்கெட் செட் செய்வதிலும் சரி, இலக்கை வீரட்டுவதிலும் சரி இவர் தனது திறனை நிரூபித்துள்ளார். அது அவரது அனுபவத்தின் முதிர்ச்சி. 30 வயதில் இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுக வீரராக களம் இறங்கியவர் அவர். ஒருநாள் கிரிக்கெட்டுக்கான இந்திய அணியிலும் தவிர்க்க முடியாத பேட்ஸ்மேனாக அவர் உள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் ஆட்டம் எதிரணியின் கட்டுப்பாட்டில் இருக்க அதை இந்தியாவின் கண்ட்ரோலுக்கு கொண்டு வந்தவர் SKY. அதன் பலனாக அந்த தொடரில் அவருக்கு தொடர் நாயகன் விருதும் கிடைத்தது. இவர் Wrist-களை பயன்படுத்தி ஷாட் அடிப்பதில் வல்லவர். இப்போதைக்கு அவர் பெரும்பாலும் விளையாடியுள்ள போட்டிகள் ஆசியாவில் அமைந்துள்ளது கவனிக்கத்தக்கது.
முதல் தர கிரிக்கெட் போட்டிகளிலும் 5326 ரன்களை அவர் குவித்துள்ளார். அதனால் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அறிமுகமாகும் நாளும் வெகு தொலைவில் இல்லை என்றே தெரிகிறது.
சென்ற அத்தியாயம்: கிரிக்'கெத்து' 22: ஜனநாயக படுகொலைக்கு எதிராக கிரிக்கெட் களத்தில் ஒலித்த போராட்டக் குரல்