சிறப்புக் களம்

‘அடங்காதவன்: அசராதவன்’-கிரீஸில் டான்ஸ்; ஆட்டத்தில் ஃப்யர் - ரிஷப் பண்ட் பேட்டிங் ஒரு அலசல்

EllusamyKarthik

பொதுவாக கிரிக்கெட் விளையாட்டின் மூன்று பார்மெட்டிலும் விளையாடும் வீரர்கள் (குறிப்பாக பேட்ஸ்மேன்கள்) அந்தந்த பார்மெட்டுக்கு ஏற்ற வகையில் தங்களை தகவமைத்துக் கொண்டு விளையாடுவார்கள். அதற்கு சிறந்த உதாரணமாக விராட் கோலி, ரோகித் ஷர்மா மாதிரியான வீரர்களை சொல்லலாம். ஆனால் டெஸ்ட், ஒருநாள், டி20 என எந்த பார்மெட் என்றாலும் நான் இப்படி தான் ஆடுவேன் என சொல்லும் தொனியில் விளையாடும் வீரர்களும் உண்டு. அதில் ஒருவர் தான் ரிஷப் பண்ட். 

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அவர் விளையாடிய கடைசி ஐந்து இன்னிங்ஸில் 18, 56, 8, 52* மற்றும் 96 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அவர் சதம், அரைசதம் விளாசிய போட்டிகளில் மிகவும் குறைவான பந்துகளில் அதை ஸ்கோர் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதிலும் அவர் கடைசியாக விளையாடிய டெஸ்ட் போட்டியில் 97 பந்துகளில் 96 ரன்களை எடுத்திருந்தார். அதன் பலனாக ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் டாப் 10 இடங்களில் பத்தாவது இடத்தை பிடித்துள்ளார். இப்படியாக எந்த பார்மெட் போட்டியானாலும் அதில் தனது இயல்பான ஆட்டத்தை ஆடக்கூடியவர். சமயங்களில் அதனால் ரன் குவிக்க முடியாமால் போகும் போது அவரது ஆட்டம் விமர்சனத்திற்கு உள்ளாகும். அதை அப்படியே கண்டும் காணாமல் தனது ஆட்டத்தில் தொடந்து கவனம் செலுத்துபவர். 

கிரீஸில் டான்ஸ் ஆடும் பண்ட்!

ரிஷப் பண்ட் பேட்டிங் குறித்து பல்வேறு பேச்சுகள் உண்டு. ஆனால் அவர் பூலோகம் படத்தில் வரும் ஜெயம் ரவி காதப்பத்திரம் போல கிரீஸில் டான்ஸ் ஆடுபவர். அவரது பேட்டிங் ஸ்டேன்ஸ் குறித்து பல்வேறு கருத்துகள் உலாவுவதும் உண்டு. டிசம்பர் முதல் ஜனவரி வரையில் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் பண்ட் ஆட்டம் குறித்து காட்டமான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. குறிப்பாக அவர் பொறுப்புடன் விளையாட வேண்டும். பயிற்சியாளர் டிராவிட் அவரது ஆட்ட அணுகுமுறையில் மாற்றம் கொண்டு வர வேண்டுமென்று பலரும் ஃப்ரீ அட்வைஸ் கொடுத்திருந்தனர்.

ஆனால் அதே தொடரில் 139 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தவர் பண்ட். அதோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் மூன்று டிஜிட் இலக்கத்தை எட்டிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் ஒருவர். பண்ட் குறித்தும், அவரது அணுகுமுறை குறித்தும் கிரிக்கெட்டின் பைபிள் என சொல்லப்படும் ‘விஸ்டன்’ வலைதளத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் அவருக்கு கிரீஸில் டான்ஸ் ஆடுவது மிகவும் பிடித்தமானது என சொல்லப்பட்டுள்ளது.  

டெஸ்ட் கிரிக்கெட்டில் தலைசிறந்த பந்து வீச்சாளர்களை அப்செட் செய்வதில் பண்ட் வல்லவர். கடந்த ஆண்டு இதே மார்ச் மாதத்தில் இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் வீசிய பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி பந்தை பவுண்டரிக்கு விரட்டியது அதற்கு உதாரணம்.  வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து மண்ணில் மட்டும் தான் அவர் இன்னும் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசாமல் உள்ளார். 

அடங்காதவன்: அசராதவன்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் 68.63, ஒருநாள் கிரிக்கெட்டில் 109.33, டி20 கிரிக்கெட்டில் 125.78 மற்றும் ஐபிஎல் போட்டிகளில் 147.46 ஸ்ட்ரைக் ரேட்டை கொண்டவர். “பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட் கொஞ்சம் வீக்கு” என்ற நடிகர் வடிவேலுவின் ஃபேமஸ் வசனம் அனைவருக்கும் நினைவு இருக்கும். அந்த வசனம் போல சில நேரங்களில் பண்ட் ஆடுவதுண்டு. பேட்டை கெட்டியாக பிடித்து பந்தை அடித்து துவம்சம் செய்யும் பண்ட் சமயங்களில் நிலை தடுமாறி களத்தில் விழுவார். ஆனால் பண்ட் அடித்த பந்து பவுண்டரிக்கு சென்றிருக்கும். அதே போல ஒற்றைக் கையில் அவர் விளாசும் சிக்ஸர்கள் உலக ஃபேமஸ். இவரை ஆர்தோடக்ஸ் அல்லது அன்-ஆர்தோடக்ஸ் என்ற எந்த பிரிவிலும் சேர்க்க முடியாது. ஏனெனில் பண்ட் வழி தனி வழி. அதனால் தான் அவர் இந்தியாவுக்காக மூன்று பார்மெட்டிலும் விளையாடி வருகிறார். அதுவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் சேர்க்கும் ஒவ்வொரு ரன்னும் அணிக்கு மகத்தான ரன்களாக மாறிவிடுகிறது. 

இந்தியாவுக்காக 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பண்ட் மொத்தம் 1831 ரன்களை சேர்த்துள்ளார். அதில் 4 சதங்களும் அடங்கும். அதோடு 5 முறை 90+ ரன்களை கடந்த போது விக்கெட்டை இழந்துள்ளார். இந்திய அணியின் மேட்ச் வின்னராக உருவாகி நிற்கும் பண்ட், வரும் நாட்களில் புதிய உச்சங்களை எட்டுவார் என நம்புவோம்.