சிறப்புக் களம்

இதுதான் தோல்வியை விரட்டி வெற்றியைப் பிடிக்கும் வழி! - பேட்மிண்டன் வீரர் லக்ஷயா சென்

இதுதான் தோல்வியை விரட்டி வெற்றியைப் பிடிக்கும் வழி! - பேட்மிண்டன் வீரர் லக்ஷயா சென்

EllusamyKarthik

20 வயது நிறைந்த இந்திய இளைஞர் ஒருவர் வெறும் ஏழே நாள் வித்தியாசத்தில் அடுத்தடுத்து இரண்டு முக்கிய பேட்மிண்டன் தொடர்களின் இறுதிப் போட்டியில் விளையாடி அசத்தியுள்ளார். ஆனால் அதே இளைஞர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னதாக இந்திய அணிக்காக சர்வதேச களத்தில் விளையாடும் வாய்ப்புக்கான ட்ரையலில் தோல்வியடைந்தவர். அந்த தோல்வி தான் இப்போது அவரை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தது. 

“நான் யானை இல்லை குதிரை. யானை விழுந்தா எழுந்திருக்க டைம் ஆகும். நான் குதிர டக்குன்னு எழுந்திருப்பேன்” என ஒரு பட விழாவில் பேசியிருப்பார் நடிகர் ரஜினிகாந்த். அது போல தான் அமைந்துள்ளது அந்த இளைஞரின் கம்பேக். அவர் வேறு யாரும் இல்லை சர்வதேச பேட்மிண்டன் கோர்ட்டில் ஜொலித்து வரும் இந்திய வீரர் லக்ஷயா சென் தான். 

கடந்த நான்கு மாதங்களில் நடைபெற்ற முக்கிய பேட்மிண்டன் தொடர்களான உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம், இந்தியன் ஓபனில் தங்கம், ஜெர்மன் ஓபனில் வெள்ளி மற்றும் ஆல் இங்கிலாந்து ஓபனில் வெள்ளி என வரிசையாக நான்கு பதக்கங்களை வென்று காட்டியுள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்காக சர்வதேச பேட்மிண்டன் அரங்கில் ‘போஸ்டர் பாய்’ அந்தஸ்தை எட்டியுள்ளார் அவர். 

யார் இந்த லக்ஷயா சென்?

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள அல்மோரா பகுதியை சேர்ந்தவர். அவரது குடும்பத்தில் அப்பா, சகோதரர் என அனைவரும் பேட்மிண்டன் விளையாட்டில் கை தேர்ந்தவர்கள். சிறு வயது முதலே பேட்மிண்டன் விளையாடிய அவர் இந்தியாவுக்காக ஜூனியர் பேட்மிண்டனில் ஜொலித்தவர். தற்போது அதை அப்படியே சீனியர் பிரிவிலும் தொடர்ந்து வருகிறார். நடிகை தீபிகா படுகோனேவின் அப்பா பிரகாஷ் படுகோனேவின் பேட்மிண்டன் அகாடமியில் பயிற்சி பெற்றவர் லக்ஷயா. 

லக்ஷயா சென் கம்பேக் கொடுக்க உதவிய விக்டர் ஆக்சல்சென்! 

“ஆகஸ்ட் (2021) வாக்கில் ட்ரையலில் தோல்வியை தழுவிய லக்ஷயா சென் மிகவும் விரக்தியில் இருந்தார். அந்த நேரத்தில் தான் சுமார் ஒரு மாத காலம் துபாயில் தன்னுடன் இணைந்து பேட்மிண்டன் பயிற்சி மேற்கொள்ள டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற விக்டர், ஐந்து வீரர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதில் ஒருவர் லக்ஷயா. இருந்தாலும் முதலில் அதில் பங்கேற்க தயங்கினார். எங்களது ஆலோசனையின் படி பின்னர் அதில் பங்கேற்றார். அதன் மூலம் பலனும் பெற்றார்” என சொல்கிறார் லக்ஷயா சென்னின் பயிற்சியாளர் விமல் குமார். 

அந்த பயிற்சிக்கு பிறகு லக்ஷயா சென் வரிசையாக நான்கு பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது. அண்மையில் (20/03/22) நடைபெற்ற ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான விக்டர் ஆக்செல்சென்னிடம் தோல்வி அடைந்துள்ளார். 

இருந்தாலும் லக்ஷயா சென் வளர்ச்சியில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னாவின் பங்கும் அதிகம் என சொல்லப்படுகிறது. அவர் பெங்களூருவுக்கு தனது பயிற்சி தளத்தை 2014 வாக்கில் மாற்றியது மூலம் லக்ஷயா பெரிதும் பயன் பெற்றுள்ளார். 

ஆல்-இங்கிலாந்து ஓபன் தொடரில் முத்திரை படைத்த இந்தியர்!

>பெருங்கனவோடு ஆல்-இங்கிலாந்து ஓபன் தொடரில் விளையாடினார் லக்ஷயா. இருந்தும் இறுதிப் போட்டியில் விக்டர் ஆக்சல்சன்னிடம் 10-21, 15-21 என்ற நேர் செட் கணக்கில் ஆட்டத்தை இழந்தார். 

>பிரகாஷ் நாத், பிரகாஷ் படுகோனே, கோபிசந்த், சாய்னாவை தொடர்ந்து இந்த தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடிய ஐந்தாவது இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார். 

>இந்தியா சார்பில் இந்த தொடரில் இறுதிப் போட்டியில் விளையாடிய இளம் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். 

>அதோடு டாப் 10 பேட்மிண்டன் வீரர்களில் ஒருவராக தற்போது இணைந்துள்ளார் லக்ஷயா.

 

வாழ்த்திய பிரதமர் மோடி! 

“உங்களை எண்ணி நான் மிகவும் பெருமை கொள்கிறேன் லக்ஷயா. களத்தில் வெற்றிக்காக அயராது உழைத்தீர்கள். வரும் நாட்களில் நீங்கள் புதிய உயரங்களை எட்டுவீர்கள் என நான் நம்புகிறேன்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

லக்ஷயா என்ன சொல்லியுள்ளார்?

“கடந்த வாரம் தான் விக்டர் உடன் விளையாடி இருந்தேன். ஆனால் இந்த முறை அவர் சில கள வியூகங்களை வகுத்து விளையாடி இருந்தார். அட்டாக் மற்றும் டிஃபென்ஸ் என இரண்டிலும் அவர் மிகவும் உறுதியாக விளையாடினார். நிதானத்துடன் ஆட்டத்தை அணுகியிருந்தார். மிகவும் அற்புதமான ஆட்டமும் கூட. முதல் செட்டில் நான் நிறைய தவறுகளை செய்து விட்டேன். அதனால் ஆட்டத்தையே இழந்தேன். இரண்டாவது செட்டில் நான் கம்பேக் கொடுத்தேன். இருந்தும் அவரது உறுதியான ஆட்டம் அவருக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தது. 

இந்த ஆட்டத்திற்கு முன்னதாக நிறைய அழுத்தம் இருந்தது. ஆனால் களத்திற்கு வந்ததும் அப்படி எதையும் நான் உணரவில்லை. அரையிறுதி தான் மிகவும் முக்கியமான போட்டியாக எனக்கு அமைந்திருந்தது. அதில் கிடைத்த வெற்றி எனக்கு நிறைய நம்பிக்கையை கொடுத்தது. இருந்தாலும் அற்புதமாக விளையாடிய விக்டருக்கு வாழ்த்துகள்” என லக்ஷயா தெரிவித்துள்ளார்.