இந்தியாவில் இன்று (ஜூன் 21) ஒரே நாளில் 80 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்ற கொள்கை நடைமுறை அமலுக்கு வந்த முதல் நாளிலேயே, இத்தனை லட்ச தடுப்பூசிகள் போடப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும் துல்லியமான இந்த எண்ணிக்கையை, அரசு இன்னும் வெளியிடவில்லை. இன்று இரவு 8 மணி வரையிலான கணக்குப்படி, இந்த எண்ணிக்கை 80 லட்சத்துக்கும் அதிகமிருக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது. விரிவான துல்லியமான எண்ணிக்கை, நாளை காலை அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்படுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த எண்ணிக்கைதான் (80 லட்சம்), இதுவரை பதிவான தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் ஒருநாள் எண்ணிக்கைப் பட்டியலில், மிக அதிகமானதாக இருக்கிறது. முன்னதாக கடந்த ஏப்ரல் 2-ம் தேதி, 42,65,157 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டதே அதிகபட்ச ஒருநாள் தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் எண்ணிக்கையாக இருந்தது.
மாநில அரசுகளின் தொடர்ச்சியான அறிவிப்புகளுக்குப் பிறகு, மத்திய அரசு இன்றுமுதல் 18+ அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழிமுறையை நடைமுறைப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்துடன் சேர்த்து, 75% தடுப்பூசி கொள்முதலை ஏற்கும் திட்டத்தையும் மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதில், 25 சதவிகிதம், ஒவ்வொரு மாநிலங்களுக்கான பொறுப்பாகும். அதன் செலவையும், மத்திய அரசு ஏற்கும். இவையன்றி மீதி 25% தனியார் மருத்துவமனை கொள்முதலுக்கு சொந்தமானதாகும்.
முன்னதாக மாநில அரசு, 18 – 45 வயதினருக்கான தடுப்பூசியில் 50% தடுப்பூசியை தாமே கொள்முதல் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில், 45 வயதினருக்கு மேலுள்ளோருக்கு மட்டுமே மத்திய அரசு இலவச தடுப்பூசியை கொடுத்துவந்தது. அதற்கு உட்பட்டோருக்கு, மாநில அரசு தொகை செலுத்தும். கொள்முதல் செய்வதற்கான நிதி திரட்டலில் பிரச்னைகள் எழுவதாக மத்திய அரசிடம், மாநில அரசுகள் முறையிட்டதன் பேரில், கடந்த 7ம் தேதி பிரதமர் மோடி “உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து 75 % தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும்” என அறிவித்தார்.
அந்த அறிவிப்புதான், இன்று நடைமுறைக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக ட்வீட் செய்திருக்கும் பிரதமர் மோடி, “இந்தியா முழுவதும், ‘அனைவரும் இலவச தடுப்பூசி’ திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் தடுப்பூசி ஏற்றத்தாழ்வு தடுக்கப்படும். ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் என பொருளாதார ஏற்றத்தாழ்வும் இனி இருக்காது; வயது சார்ந்த ஏற்றத்தாழ்வும் இனி இருக்காது.
தடுப்பூசி போட்டுக்கொள்ள, அனைவரும் தாமாக முன்வர உறுதியேற்க வேண்டும். தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நிலைப்பாடு வழியாக நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து கொரோனாவை விரட்டுவோம்” எனக்கூறியுள்ளார்.
இலவச தடுப்பூசி வழிமுறை நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து, மாநிலங்கள் அனைத்தும் தங்களுக்கான ஒருநாள் தடுப்பூசி செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகப்படுத்த, இலக்குகளை நிர்ணயித்து வருகின்றன. நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வுகளும் அமலில் இருப்பதால், மக்களும் ஆர்வமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வந்து, பல மாநில அரசுகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்கின்றனர்.
அந்தவகையில், ஹரியானாவில் இன்று ஒரு நாளில் 2 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அதிகபட்சமாக ஹரியானவின் குருக்ராம் சுகாதார நிலையத்தில், கடந்த 24 மணி நேரத்தில் (மதியம் 2 மணி என்ற அளவுகோலில் எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது) 45,728 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே மிக குறைவாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாநிலமாக இருப்பது அசாம். அங்கு, அடுத்த 10 நாள்களுக்குள் ஒருநாள் தடுப்பூசி உட்கொள்வோர் எண்ணிக்கை 3 லட்சமாக உயர்த்தப்பட வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில், 7 லட்சம் பேருக்கு ஒருநாளில் தடுப்பூசி போடப்பட வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில், மத்திய அரசுக்கும் ஒரு இலக்கு இருக்கிறது. அது, ஒரு நாளில் இந்தியாவில் குறைந்தபட்சம் 1 கோடி பேருக்காவது தடுப்பூசி டோஸ் போடப்பட வேண்டும் என்பது.
மத்திய அரசு இன்று (ஜூன் 21) அளித்த செய்தியறிக்கையின்படி, 29.35 கோடி தடுப்பூசிகள் இலவசமாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அனைத்துக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளது. மேலும் 2.98 கோடி தடுப்பூசிகள் மாநிலங்களின்வசம் இருக்கிறது என்றும்; அடுத்த மூன்று நாள்களில் 24,53,080 டோஸ் தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு தரப்படுமென்றும் கூறப்பட்டுள்ளது.
இதுவரை நேற்று (ஜூன் 20) இந்தியாவில் கொரோனா தடுப்பூசியில், 28,00,36,898 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளன.