சிறப்புக் களம்

இந்தியாவின் டாப் 10 குற்ற நகரங்கள்!

இந்தியாவின் டாப் 10 குற்ற நகரங்கள்!

webteam

இந்தியாவில் நடைபெறும் குற்றங்களின் அடிப்படையில் டாப் 10 குற்ற நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 

டாப் 10 : மல்லபுரம்

கேரளாவின் அழகிய இடங்களுள் ஒன்று. முக்கியமான மாவட்டமும் கூட. 3,300 சதுர கி.மீ அளவு கொண்டது. ஏறக்குறைய 42 லட்சம்
பேர் இங்கு வசிக்கிறார்கள். மல்லபுரத்தில் ஒரு லட்சம் பேரில் 123 பேர் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள்.
கொலை செய்வது போன்ற குற்றங்களில் ஈடுபடுவது குறைவு என்றாலும், இதர குற்றங்கள் அதிக அளவில் நடைபெறும் இடமாக
உள்ளது. குறிப்பாக பாலியல் வன்கொடுமைகள் அதிக அளவில் அரங்கேறும் இடமாக இருக்கிறது. அதே நேரத்தில் கடந்த சில
ஆண்டுகளக குற்றங்களின் அளவு குறைந்திருக்கின்றன.

டாப் 9 : மதுரை

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த ஊர். தென் தமிழ்நாட்டின் தவிர்க்க முடியா நகரம். ஆனால், குற்றங்கள் செய்வதிலும் தன்னை
முன்னிலைப்படுத்தும் இடமாக மாறிப் போய் இருக்கிறது. 1 லட்சம் பேரில் 206 பேர் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களாக இருக்கிறார்கள்.
பாலியல் வன்கொடுமை போன்றவை இல்லாவிட்டலும் கொலைக் குற்றங்கள் அடிக்கடி நடக்கும் ஊராக உள்ளது. 2013, 2014 ஆண்டுகளில்
குறைய ஆரம்பித்த குற்ற அளவு, தற்போது வரை குறைந்து கொண்டே இருக்கிறது. ஆனால், சில சமயங்களில் கொடூர குற்றங்கள்
அரங்கேறும் இடமாகவும் இருக்கிறது.

டாப் 8 : துர்க் பிள்ளை நகர்

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நகரம். மற்ற முக்கிய நகரங்களை காட்டிலும் அதிக அளவிலான குற்றப் பதிவை கொண்டுள்ள இடம். ஒரு
லட்சம் பேரில் சுமார் 524 பேர் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களாக இருக்கிறார்கள். ஒரு வருடத்திற்கு குறைந்தபட்சம் 5000 குற்ற
சம்பவங்கள் புகாராக பதிவாகிறது. சராசரியாக 90 பாலியல் வன்கொடுமை வழக்குகள், 205 கடத்தல் வழக்குகள் பதிவாகிறது.

டாப் 7 : நாக்பூர்

மும்பையை விட அதிகமான குற்ற சம்பவங்கள் பதிவாகும் நகரம். ஒரு ஆண்டுக்கு 162 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகிறது.
பெண்களை தாக்கும் நிகழ்வுகள் அதிகரித்திருக்கிறது; ஒரு லட்சத்துக்கு சுமார் 600 பேர் குற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஒட்டுமொத்த
மக்கள் தொகை 25 லட்சம் என்றாலும், இதை விட அதிக மக்கள் வாழும் மற்ற நகரங்களை விட இதன் குற்றவழக்குகள், நிகழ்வுகள்
அதிகமாக உள்ளது.

டாப் 6 : ஜெய்ப்பூர்

ராஜஸ்தானின் மற்ற நகரங்களில் பதிவாகும் குற்ற செயல்களை விட ஜெய்ப்பூரில் தான் அதிக குற்ற செயல்கள் பதிவாகிறது. ஒவ்வொரு
ஆண்டும் இங்கு பதிவாகும் பாலியல் வன்கொடுமை வழக்கின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு
இல்லாத நகரங்களுள் ஒன்றாகவும் மாறிப் போயிருக்கிறது ஜெய்ப்பூர்.

 டாப் 5 : குவாலியர்

குவாலியரில் வசிக்கும் ஒரு லட்சம் பேரில் 686 பேர் குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்கள். பெண்கள் வசிப்பதற்கு சாத்தியமில்லாத
நகரங்களுள் ஒன்று. டெல்லிக்கு பிறகு அதிகான பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகும் நகரம். கடந்த ஆண்டில் மட்டும் சுமார்
10693 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

டாப் 4 : போபால்

மத்திய பிரதேசத்தின் தலைநகர். ஆண்டுக்கு 133 பாலியல் வன்கொடுமை வழக்கு, 322 பெண்கள் தாக்கப்பட்ட நிகழ்வு என குற்றங்கள்
தொடர்ந்து கொண்டிருக்கிறது. மக்கள் தொகைக்கும் நடக்கும் குற்றங்களுக்குமான விகிதம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து
கொண்டே செல்கிறது. குறிப்பாக கொலை, பாலியல் வன்கொடுமை, கடத்தல் போன்றவை பிரதான குற்றங்களாக இருக்கிறது.

டாப் 3 – இந்தூர்

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நகரங்களுள் ஒன்று இந்தூர். ஒரு லட்சம் பேரில் 760 பேர் குற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். பதிவாகும்
குற்றப் புகார்கள் குறைகிறது என்று சொன்னாலும், குற்றங்களின் அளவு குறையாத ஊராக இருக்கிறது. கொலை, கொள்ளை, நூதன
திருட்டு போன்றவற்றில் முன்னணி வகிக்கிறது. மத்திய பிரதேசத்திலேயே அதிகம் குற்றம் நடக்கும் ஊர் இது.

டாப் 2 : கொச்சி

சுற்றுலாவுக்கு பிரபலமான ஊர். வெளிநாட்டினர் அதிகம் வந்து தங்கி செல்லும் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று. கடந்த 2009க்கு
பிறகு இங்கு நடக்கும் குற்றங்கள் 193 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏமாற்றுதல் வழக்குகளில் நாட்டிலேயே முதலிடம்.

டாப் 1 – டெல்லி

அனைத்திலும் டாப் 1 ஆக இருக்கும் இடம். ஆனால் எதில் இருக்க கூடாதோ அங்கும் டாப் 1. பெண்கள் வாழ பாதுகாப்பில்லா
நகரங்களிலும் டாப் 1. 173947 வழக்குகள் சராசரியாக ஆண்டுதோறும் பதிவாகிறது. அதில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் மட்டும்
1893, வழிப்பறி 6766, கடத்தல் 6630. இப்படி அனைத்து குற்றங்களும் அதிகம் பதிவாகும் இந்தியாவின் தலைநகரம் டெல்லி, டாப் 1.