சிறப்புக் களம்

முரண்பாடுகளின் முகமா மூன்றாவது அணி?: சண்டைகளை மறந்து சமாதானம் ஆகுமா கட்சிகள்?

முரண்பாடுகளின் முகமா மூன்றாவது அணி?: சண்டைகளை மறந்து சமாதானம் ஆகுமா கட்சிகள்?

webteam

தேசிய அரசியலில் காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத மாற்று அணி என்ற முழக்கம் ஒவ்வொரு முறையும் தேர்தலுக்கு முன்பு ஓங்கி ஒலிக்கும். இந்தமுறை மூன்றாவது அணியின் அவசியம் பற்றி பேசி இருக்கிறார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ். அவரது பேச்சுக்கு மம்தா பானர்ஜி, ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரன், இன்னும் பல தலைவர்களிடம் ஆதரவு கிடைத்துள்ளது. திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் இதுபற்றி மம்தா பானர்ஜி தொலைப்பேசியில் பேசியதாக கூறப்பட்டது. அதான் இந்தக் கதையின் ஹைலட்ஸ். ஆகவே மூன்றாவது அணி குறித்தானப் பேச்சு தேசிய அளவில் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்றப்போது இருந்த எதிர்கட்சிகளின் மனநிலைக்கும், இப்போது நிலவும் மனநிலைக்கும் நிறையவே மாற்றம் இருப்பதை பலரும் உணரலாம். கடந்த பத்து ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மீதிருந்த எதிர்ப்பும், ஊழல்களாலும்தான் பாஜக தலைமயிலான அரசை வெற்றி பெற செய்தது. ஆனால் நாளடைவில் அந்த நம்பிக்கை மெல்ல மறைய ஆரம்பித்துவிடும் என எதிர்கட்சிகள் வழக்கமாக நம்பின. ஆனால் அந்த செல்வாக்கு உயர்ந்ததா என்பதைவிட குறையவில்லை என்பதை பலகட்ட தேர்தல்கள் உறுதி செய்து வருகின்றன. 

இவர்களை எப்படிதான் சமாளிப்பது என்ற எண்ணம்தான் எதிர்கட்சிகளிடம் மேலோங்க தொடங்கியுள்ளது. பாஜக என்ற கட்சியை வளர்தெடுத்தவர்களாக பார்க்கபடும் வாஜ்பாய் மற்றும் அத்வானி ஆகியோரின் காலத்தில் இருந்த அக்கட்சிக்கும் 2014 ஆம் ஆண்டு பிரதமர் வேட்பாளாராக மோடி அறிவிக்கபட்ட பிறகு உள்ள பாஜகவிற்கும் நிறைய வேகமும்,விவேகமும் உயர்ந்துள்ளது.பொதுத் தேர்தல் வெற்றிக்கு பிறகு பாஜகவில் எல்லா நிகழ்ச்சிகளிலும் மோடியும், அமித் ஷாவும் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகின்றனர். அதுவே அக்கட்சியின் வளர்ச்சிப் பாதைக்கு இட்டு சென்று கொண்டுள்ளது.

மோடி-அமித்ஷா கூட்டணியை தோற்கடிக்க எதிர்கட்சிகள் எத்தனையோ வியூகங்களை வகுத்தன. எதிர்கட்சிகளின் கவனவுமெய்ப்படவில்லை. யாவும் தோல்வில் முடிந்தது. இத்தனைக்கும் மாட்டிறைச்சி விவகாரம், பணமதிப்பிழப்பு,ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கை மக்களிடம் பெரிய பாதிப்பை உண்டாக்கும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து கூறின. அப்படி ஏதும் இதுவரை நடந்தபாடில்லை. அதற்கு அண்மையில் நடந்து முடிந்த திரிபுரா, மேகாலயா,நாகலாந்து தேர்தல்கள் உதாரணம். இதுவரை இல்லாத அளவுக்கு பாஜக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

அதுமட்டுமின்றி இப்போது அவர்கள் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கையோ 22 ஆக உயர்ந்துள்ளது. சுகந்திரம் பெற்ற பிறகு காங்கிரசும் இவ்வளவு பெரிய வீழ்ச்சியை சந்தித்தது இல்லை. இப்படி இருக்கும் நிலையில்தான் இனியும் காங்கிரஸை நம்பி பலன் இல்லை எனக் கருதிய மாநிலக் கட்சிகள் பாஜகவை எதிர்க்க ஓரணியில் திரள முடிவெடுத்துள்ளன. அதன் ஒரு பகுதியாக தற்போது மீண்டும் மூன்றாவது அணியின் அவசியம் கூறித்து அவர்கள் பேச தொடங்கியுள்ளனர்.  
     
தேர்தல் வரும்போது எல்லாம் எழுப்பப்படும் கோஷங்களில் ஒன்று 'மூன்றாவது அணி’. பின்னர் தேர்தல் முடிந்த சூட்டோடு அது வெயிலில் காய்ந்த குட்டையாகிவிடும்.‘இதை போன்ற மாற்று’ என்கிற முழக்கம் ஏதோ சமீப காலங்களில் முன்வைக்கபட்டதல்ல. 1990களில் காங்கிரஸுக்கு எதிராக வட இந்தியாவின் ஜனதா தளம், ஆந்திராவின் தெலுங்கு தேசம், அசாம் கன பரிசத், தமிழ்நாட்டின் திமுக ஆகிய கட்சிகள் ஒன்றினணந்து ‘தேசிய முன்னணி’ என்ற ஒன்றை உறுவாக்கினர். 

இக்கூட்டணியின் தலைவராக என்.டி.ராமராவ் பொறுப்பேற்றிருந்தார். ஆனால் அவர் பிரதமர் பதவி ஏற்க விரும்பவில்லை. இதனால் கூட்டணி தலைவர்களால் வி.பி.சிங் இந்தியப் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். இக்கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவளித்த கட்சிகளாக  பாரதிய ஜனதாவும், இடது முன்னணியினரும் இருந்தனர். ஆனால் அதற்கு பிறகு மூன்றாவது அணி பெரிய அளவில் வெற்றியோ, தாக்கத்தையோ ஏற்படுத்தவில்லை. இந்தக் கூட்டணி அரசியலால் கிடைத்த நன்மை என்ன தெரியுமா? மண்டல் கமிஷன். ஆகவேகாதன் இன்றுவரை இந்தியாவின் மாபெரும் அடையாளமாக பார்க்கப்படுகிறார் விஜய் பிரதாப் சிங். 


காலம் மாறமாற காங்கிரஸ்- பாஜக எனும் இருதுருவ அரசியல் தேசிய அரசியலில் மையம் கொண்டது. இதற்கு மக்களின் போட்டி  மனநிலை உருதுணையாக அமைந்தது. மாற்றாக அவ்வப்போது  மூன்றாவது அணி முழக்கங்கள் எழுவதும், விழுவதும் நாட்டின் தலையெழுத்தானது.

2013-ம் வருடம்,கூட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ஃபேஸ்புக்கில், பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக ஃபெடரல் ஃபிரணட் எனும் பிராந்திய கட்சிகளின் கூட்டமைப்பை அதாவது மூன்றாவது அணியை அமைப்பதற்கான யோசனையை வெளிப்படுத்தினார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், உத்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் இதற்கு சம்மதம் தெரிவித்து தங்களது ஆதரவை தெரிவித்தானர். ஆகவே 2014-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்கு மூன்றாவது அணிக்கு அச்சாரம் போட்டது மம்தா என்றாலும், அவருக்கு பரம எதிரியான இடதுசாரிகள் 2013-ம் வருடம் டிசம்பர் மாதத்திலிருந்தே, மூன்றாவது அணியை அமைப்பதில் முனைப்புகாட்டி வந்தன. 2014 மக்களைவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு மாற்று என 11 கட்சிகள் அடங்கிய புதிய அணி அடிக்கடி கூடிப் பேசினாலும் அம்முயற்சி பெரிய அளவில் சோபிக்கவில்லை.

அந்தத் தேர்தலில் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில்தான் மீண்டும் தேசிய அரசியலில் மாநில கட்சிகளிடம் இருந்து மீண்டும் மூன்றாவது அணி என்ற முழக்கம் எழுந்துள்ளது. இம்முறை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மூன்றாவது அணி அமைக்கலாம் என அழைப்பு விடுத்துள்ளார். இவரது முயற்சி முக்கியமானது. அரசியலில் வெற்றியைவிட வியூகம் முக்கியம். அதை வகுக்க இப்போதே ராவ் முயன்றிருக்கிறார். 

இந்நிலையில் திரிபுரா, மேகாலயா, நாகலாந்து ஆகிய மாநிலங்களுக்கு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் மார்க்சிஸ்ட் கட்சியும் படுதோல்வியைச் சந்தித்துள்ளன. கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளாததே இந்தத் தோல்விக்கு காரணம் என்று திரினாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி இருந்தாலும் கூட, தனித்தனியாக வரும் தேர்தலை சந்தித்தால் பிஜேபியை சமளிக்க முடிமா என்கிற ஐயம் தான் இப்போது அவர்களை ஆட்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாகத்தான் மாநில கட்சிகளையும் பிஜேபி மாற்றும் காங்கிரஸ் எதிர்ப்பு மனநிலையில் உள்ள கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் மம்தா, சந்திரசேகராவ் ஆகியோர் முனைப்பு காட்டி வருகின்றனர். 

‘மூன்றாவது அணி’ என்ற தொடர் முழக்கத்தின் வேகம் எப்போதும் இடதுசாரி கட்சிகளிடம் அதிகமாக இருக்கும்.ஆனால் அண்மை காலங்களில் இடதுசாரி கட்சிகளின் இருப்பு கேள்விகுறியாகி கொண்டுள்ளது. வெறும் மாநில அக்கட்சிகளை மட்டும் வைத்துக்கொண்டு நாங்கள் மாற்றதை கொண்டுவருவோம் என்பது வேடிக்கை. அதிலும் நடந்து முடிந்த திரிபுரா,மேகாலயா தேர்தலின் வெற்றியை அடுத்து பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்திருக்கும் நிலையில், கர்நாடகா, பஞ்சாப், மிசோரம், புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களில் காங்கிரசும் ஆட்சியை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் தமிழ்நாடு,ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, மேற்குவங்களம் மட்டுமே மாநில கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களாக உள்ளன. இதிலும் மாற்று அணியை மம்தா முன்னெடுத்தால் இடதுசாரிகள் அதில் இணையுமா என்பதும் கேள்வி. அதையெல்லாம் மீறி பாஜகவை வீழ்த்தியே ஆக வேண்டும் என முடிவெடுத்து இவர்கள் சேர்ந்தாலும் கூட பல காலம் மேற்குவங்கதில் எலியும்,புனையுமாக சண்டையிட்டவர்கள் இப்போது இணைந்தால் அதை அங்குள்ள மக்களால் ஏற்பார்களா? அதை இவர்களால் நியாயப்படுத்த முடியுமா? ஆகவே, குறிப்பிட்ட மாநிலங்களில் உள்ளவர்களைக் கொண்டு மத்தியில் ஒரு ஆட்சியை அமைக்க போதிய பலம் பெறுவது என்பது மூன்றாவது அணியின் கானல் நீர். அந்தத் தாகத்தில் அவர்களால் தண்ணீர் குடிக்க முடியுமா?

இது ஒருபுறம் இருக்க கடந்த முறை மூன்றாவது அணியில் முக்கிய கட்சியாக இருந்த சமாஜ்வாதி கட்சி இப்போது காங்கிரஸ் கூட்டணில் உள்ளது. தமிழ்நாட்டில் ஸ்டாலின் காங்கிரஸ் உறவில் இருக்கிறார். மம்தா அழைத்தாலும், இப்போதைக்கு காங்கிரஸை விட்டு அவர் விலகுவது சந்தேகம்தான். இவைகள் ஒரு புறம் இருந்தாலும் வெளியே சித்தாந்த ரீதியாக தாங்கள் ஒன்றுபட்டு இருப்பதாக கூறிக் கொண்டாலும் இவர்களுக்குள் உள்ள ஒற்றுமை என்பது வேற்றுமையின் உச்சம்.

மேலும் 80 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட உத்திரப் பிரதேசத்தில் இருதுருவங்களாக உள்ள முலாயமும், மாயவதியும் இணைந்து செயல்படுவார்களா என்பது சந்தேகம். இருவருக்குமே பிரதமர் பதவியின் மீது ஒரு கண். குறிப்பிட்ட பிரிவு மக்களின் மக்களின் ஆதரவு இருப்பதாக இருவருமே பெருமைபேசிக் கொள்கின்றனர். ஆனாலும் மீண்டும் உத்திர பிரதேசத்தில் முதல்வராக வர முடியும் என்றால் மாயாவதி காங்கிரஸ் கட்சி அல்லது பாஜகவுடன் கூட்டணி அமைத்து கொள்வதில் தயக்கம் காட்ட மாட்டார்கள். இதில் வேடிக்கை என்வென்றால், மூன்றாவது அணி என்று சொல்லும் கட்சிகள் அனைத்துமே ஒரு காலகட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றம் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்தவர்கள் என்பதும் உண்மை.

தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி இப்போது எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துவிட்டது. காங்கிரஸின் எதிர்காலம் என்பதும் கேள்விக்குறிதான். இந்நிலையில் 3-வது அணி முழக்கம் என்பது காங்கிரஸை தனிமைப்படுத்தக் கூடிய வியூகம். அப்படி ஒருவேளை பல முரண்பாடுகளை மறைத்துவைத்து மூன்றாவது அணி உருவானாலும் கூட அது ஆளும் பாஜக தரப்பிற்கே சாதகமாக அமையும். எது எப்படியோ முரண்பாடுகளின் மொத்த உருவமாக இருக்கும் இந்த மூன்றாவது அணி என்ற கனவு. அதுதான் இப்போதைக்கு உறுதி.