கடந்த நான்கு நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்திருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. பலமுறை ஊரடங்கு, பொதுமுடக்கங்கள் பிறப்பிக்கப்பட்டும் நோய்த்தொற்று மட்டும் குறைந்தபாடில்லை. பல வகையான தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்தாலும், வேலைக்காகவோ, பிற காரணங்களுக்காகவோ வெளியே போகும் மக்கள் முகக் கவசம் அணியாமல் வெகு சாதாரணமாக உலவத் தொடங்கிவிட்டனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த சென்னைவாசிகள் சிலர், "மெட்ரோ, பேருந்து என மெல்ல பொதுப்போக்குவரத்தும் தொடங்கியுள்ளது. மெட்ரோவில் மட்டும்தான் சமூக இடைவெளியுடன் மக்கள் பயணம் செய்வதுபோலத் தெரிகிறது. பேருந்துகளில் நிற்க இடமின்றி நெரிசல் இருக்கிறது. தேநீர்க்கடைகள் மற்றும் ஹோட்டல்களில் கூட்டமாக நின்று காபி, டீ சாப்பிடுவதும், கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருப்பதும் இயல்பாகிவிட்டது.
சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. சென்னைவாசிகளுக்கு எச்சில் துப்புவதில் எந்தக் கட்டுப்பாடும் இருப்பது மாதிரி தெரியவில்லை. யார் வருகிறார்கள், யார் போகிறார்கள் என்ற கணக்கு வழக்கே கிடையாது. பொது இடங்களில் மற்றவர்களைப் பற்றிய கவலையில்லாமல் நடந்துகொள்வதற்கு மக்கள் நிறையவே பழகிவிட்டார்கள். இளைஞர்கள் முகக்கவசம் இல்லாமல் இருசக்கர வாகனங்களில் செல்வதை எங்கும் பார்க்கமுடிகிறது" என தெரிவித்தனர்.
கொரோனாவில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு முதல்கட்ட பாதுகாப்பு என்பது முகக்கவசம் மட்டுமே. அதற்குப் பிறகுதான் கபசுரக் குடிநீர், மாத்திரைகள், மருத்துவ சிகிச்சை எல்லாம் வருகிறது. இன்னும்கூட ஆய்வு நிலையிலேயே தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு இருந்துவருகிறது. தடுப்பூசிக்கான பல கட்டப் பரிசோதனைகள் தொடர்கின்றன. கொரோனாவுடன் வாழப் பழகுவது என்றால், முகக்கவசம் அணியாமல் திரிவதல்ல என்று புரிதல் வேண்டும் என்பதும் பலரின் கருத்தாகவே உள்ளது
தமிழகம் முழுவதும் புதிதாக 5,589 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 86 ஆயிரத்து 397 ஆக அதிகரித்துள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னையில்தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதை கவனத்தில் கொள்ளவேண்டும். இதுபற்றி கவலையுடன் எச்சரிக்கை விடுத்துள்ளார் சென்னை மாநகராட்சி ஆணையர் கோ. பிரகாஷ்.
ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்
பொதுமக்கள் அனைவரும் வெளியே செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும். வணிக வளாகங்கள் மற்றும் பயணங்கள் மேற்கொள்ளும்போதும் தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும். அனைத்து தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், அங்காடிகள், வங்கிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லக்கூடிய இடங்களில் கைகளை சுத்தம் செய்ய சோப்பு கரைசல் அல்லது கைகழுவும் திரவம் கண்டிப்பாக இருக்கவேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
எனவே பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத தனிநபர் அல்லது தொழில், வணிக மற்றும் இதர நிறுவனங்கள் மீது அபராதம் அல்லது அபராதத்துடன் நிறுவனத்தை மூடி சீல்வைத்தல் போன்ற கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், "சென்னை மக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும். வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிவதை கடைப்பிடிக்கவேண்டும். இது மிகவும் முக்கியம். கைகழுவுவது, எச்சரிக்கையுடன் பொது இடங்களில் நடந்துகொள்வது என சில கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைபிடித்தால் கொரோனா பாதிப்பு குறையும்" என்றார்.