சிறப்புக் களம்

குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி

Sinekadhara

'வைட்டமின் டி' உடலுக்கு மிகவும் அவசியம் என்று நாம் அடிக்கடி கேட்டுக்கொண்டே இருக்கிறோம். சூரிய ஒளியில் நின்றால் 'வைட்டமின் டி' கிடைக்கும் என்றும் நமக்கு தெரியும். இந்த வைட்டமின் உடலில் நேரடியாக வினைபுரியாமல், நாம் சாப்பிடும் உணவிலிருந்து கால்சியம் உடலில் சரியாக சேர உதவிசெய்கிறது. இந்த வைட்டமின் எலும்பு மற்றும் பற்களின் வலிமைக்கு மிகவும் தேவையான ஒன்று. மேலும் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் மற்றும் மனநலனுக்கும் மிகவும் அவசியம். பெரும்பாலும் குழந்தைகள் டயட்டில் கால்சியம் அதிமாக உள்ள பால் மற்றும் மற்ற உணவுகளை சேர்ப்பதில் கவனம் செலுத்தும் பெற்றோர்கள் 'வைட்டமின் டி' எந்த அளவில் சேருகிறது என்பதில் கவனம் செலுத்துவதில்லை.

பிறந்த குழந்தைக்கு எவ்வளவு தேவை?

'வைட்டமின் டி'யை யூனிட் மற்றும் மைக்ரோகிராம் என இரண்டு விதங்களிலும் குறிப்பிடலாம். நிபுணர்கள் கூறும்போது, பிறந்த குழந்தை முதல் 2 வயது குழந்தைகள் வரை 400 யூனிட் 'வைட்டமின் டி' தேவைப்படும் என்கின்றனர். அதே குறைமாதத்தில் பிறந்த குழந்தைக்கு அதைவிட அதிகமாகத் தேவைப்படும் என்கின்றனர். இரண்டு வயது தொடங்க ஆரம்பிக்கும்போதே 'வைட்டமின் டி'யின் அளவு படிப்படியாக உயர்ந்து குறைந்தது 600 யூனிட் தேவைப்படும் என்கின்றனர்.

'வைட்டமின் டி' ஏன் அவசியம்?

உடலானது கால்சியத்தை உறிஞ்சி அதை முறையாக எலும்புக்கு செலுத்த 'வைட்டமின் டி' உதவிபுரிகிறது. மேலும் தசை, நரம்பு மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தையும் வலுவாக்குகிறது. கால்சியம் சரியான அளவில் கிடைத்தால்தான் குழந்தை வளரும். எனவே, அந்த கால்சியம் உடலில் சேர 'வைட்டமின் டி' அவசியம். 'வைட்டமின் டி' குறையும்போது அது எலும்பு வளைவு நோய், மூட்டு விலகல், வயிறு பெருத்தல் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாதல் போன்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.

தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி?

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது மட்டுமே தேவையான 'வைட்டமின் டி'யை கொடுத்துவிடாது. எனவே அவர்களுக்கு 'வைட்டமின் டி' ட்ராப்ஸ் அல்லது மருத்துவர்கள் ஆலோசனைப்படி 'வைட்டமின் டி' நிறைந்த குழந்தைகளுக்கான மற்ற உணவுகளைக் கொடுக்கவேண்டும். குழந்தைகளுக்கு மாட்டுப்பால் கொடுக்கும் தாய்மார்கள் அதனுடன் மருத்துவர் பரிந்துரைக்கும் 'வைட்டமின் டி' சிரப்/ஹெல்த் டிரிங்க்ஸை கலந்து கொடுக்கலாம். குழந்தை மற்ற உணவுகளை சாப்பிட ஆரம்பித்தவுடன் அதிகம் பால் சார்ந்த மற்றும் வலுவூட்டப்பட்ட உணவுகளைக் கொடுக்கவேண்டும். முட்டை மற்றும் மீனில் அதிக சத்துகள் நிரம்பியுள்ளது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அதை குழந்தைகளுக்கும், சைவப் பிரியர்களுக்கும் கொடுக்கமுடியாது.

எனவே 'வைட்டமின் டி'யை வலுவூட்டப்பட்ட எண்ணெய்கள், வெண்ணெய் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் போன்றவற்றின்மூலம் எடுத்துக்கொள்ளலாம். சைவம் சாப்பிடுபவர்கள் காளான், சோயா மற்றும் பீன்ஸ் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும். சைவம் மட்டுமே சாப்பிடுபவர்கள் குழந்தைகளுக்கு இரண்டு வயதானாலும் 'வைட்டமின் டி' ட்ராப்ஸ் கொடுப்பதை நிறுத்தவேண்டாம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

சூரியஒளியின் முக்கியத்துவம்!

சூரியஒளி உடலில்படும்போது நமது உடலானது 'வைட்டமின் டி'யை தானாக உற்பத்தி செய்கிறது. காலைநேரத்தில் சிறிது நேரம் வெயிலில் நிற்பது குழந்தைகளுக்கு போதுமானது. அதேசமயத்தில் நீண்டநேரம் குழந்தைகள் வெயிலில் இருப்பது அவர்களுடைய சருமத்தை பாதிக்கும்.

வைட்டமின் டி3 ட்ராப்ஸ்

குழந்தைகள்நல மருத்துவர்கள் பொதுவாக வைட்டமின் டி3 ட்ராப்ஸை குழந்தைகளுக்கு பரிந்துரைக்கின்றனர். ஒரு வயது குழந்தை 400 யூனிட் ட்ராப்ஸை தினசரி எடுத்துக்கொள்ள வேண்டும். மாதங்கள் கூட கூட 800 யூனிட் வரை கொடுக்கலாம். இந்த ட்ராப்ஸ்களில் அளவுகள் குறிப்பிடப்பட்டிருக்காது. எனவே எவ்வளவு கொடுக்கிறோம் என்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்தவேண்டும். அதைவிட அதிகரிப்பதும், குறைப்பதும் குழந்தைகளின் டயட்டைப் பொருத்தது என்கின்றனர் மருத்துவர்கள். சரியான அளவைத் தெரிந்துகொள்ள உங்கள் மருத்துவரை அடிக்கடி அணுகி ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் 'வைட்டமின் டி' அதிகரிப்பு பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதை மறவாதீர்கள்.