சிறப்புக் களம்

பிரதமரின் பயணத்திட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி உருவாக்கப்படும்? - விரிவான அலசல்

Veeramani

பஞ்சாப்பில் பிரதமரின் வாகனம் முற்றுகையிடப்பட்டதால் அவரின் பயணம் ரத்து செய்யப்பட்டது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. பிரதமரின் பாதுகாப்புக்கு முக்கிய பங்கு வகிக்கும் எஸ்பிஜி, ப்ளூ புக் மற்றும் மாநில காவல்துறை பற்றி இங்கே பார்ப்போம்...

பிரதமரின் பயணத் திட்டங்கள் அனைத்துமே சிறப்பு பாதுகாப்பு படையின் (எஸ்பிஜி) 'புளு புக்கின்' படியே அமைக்கப்படுகின்றன. பிரதமரின் முழுமையான பயணத்திட்டம், தற்காலிக வழி, பாதுகாப்பான தங்குமிடம், சந்திக்கும் நபர்கள் உள்ளிட்ட அனைத்தும் எஸ்பிஜி,ஐபி மற்றும் மாநில காவல்துறை உள்ளடக்கிய குழுவால் தெளிவாக திட்டமிடப்படுகிறது.

சிறப்பு பாதுகாப்பு படை (SPG)என்றால் என்ன?

எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படைதான் பிரதமரின் பாதுகாப்பு அரணாக விளங்குகிறது. எஸ்பிஜி கமாண்டோக்கள்தான் பிரதமருக்கு முழு பாதுகாப்பினையும் வழங்குகிறார்கள். ஒரு மாநிலத்திற்கு பிரதமர் செல்ல திட்டமிட்ட பின்னர் அம்மாநில அதிகாரிகளுடன் இணைத்து ப்ளூ புக்கை உருவாக்கி அதன்படி முழுமையான பயணத்தை திட்டமிடுவது சிறப்பு பாதுகாப்பு படைதான்.

ப்ளூ புக் விதிகளின் படி பிரதமர் செல்லும் பாதை மற்றும் தங்குமிடங்களில் சோதனை செய்து, மேற்பார்வையிட்டு, ஒத்திகை நடத்தி, மாநில காவல்துறையுடன் இணைந்து பல்வேறு ஆய்வுகளுக்கு பின்னரே பிரதமரின் ஒவ்வொரு பயணமும் உருவாக்கப்படும். அவசர காலங்களில் தேவையான மாற்று ஏற்பாடுகள் குறித்தும் எஸ்பிஜி திட்டம் வகுத்து வைத்திருக்கும். எத்தனை அவசர நிலை ஏற்பட்டாலும் பிரதமரின் தனிப்பட்ட பாதுகாப்பு என்பது முழுக்கவும் எஸ்பிஜியின் பொறுப்புதான்.

ப்ளு புக் என்றால் என்ன?

பிரதமரின் பாதுகாப்பை கவனிக்கும் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் மாநில அரசு அதிகாரிகளுடன் இணைந்து பிரதமர் பயணம் மேற்கொள்ளும் ஒரு வார காலத்துக்கு முன்பே சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டு கூட்டங்கள் நடத்தும். இந்த ஆலோசனைகளில் மாநில காவல்துறை, உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய அரசின் அதிகாரிகள் பங்கேற்பார்கள்.

இந்த ஆலோசனை கூட்டங்களுக்கு பிறகு பிரதமரின் பயண நிகழ்ச்சி விரிவாக திட்டமிடப்படும், இந்த ஆலோசனையின் போதே அவசர காலங்களில் எடுக்க வேண்டிய மாற்று திட்டங்கள் மற்றும் முக்கிய பயணப்பாதை நிகழ்ச்சி தடைபட்டால் மாற்று வழி ஆகியவை குறித்தும் திட்டமிடப்படும். இவை அனைத்தும் ஒருங்கிணைந்து குறைந்தது 200 பக்கங்கள் இருக்கும் ஒரு சிறு புத்தகமாக உருவாக்கப்படும். எந்த இடத்திற்கு பிரதமர் சென்றாலும் அவரின் ஒவ்வொரு நகர்வும் இந்த ப்ளூ புக்கின் அடிப்படையில்தான் நடக்கும்.

மாநில காவல்துறையின் பொறுப்பு என்ன?

எஸ்பிஜி மற்றும் மாநில காவல்துறை அதிகாரிகள் இணைந்து ப்ளூ புக்கை உருவாக்கிய பின்னர், பிரதமரின் நிகழ்ச்சி நிரல் திட்டமிடப்படும். எந்த மாநிலத்திற்கு பிரதமர் சென்றாலும், அம்மாநிலத்தில் சாலைகளில் உள்ள தடைகள் மற்றும் பிரச்னைகளை சரிசெய்யும் பொறுப்பு மாநில காவல் துறையினுடையது. பிரதமர் செல்லும் வழிகளில் சட்டம் ஒழுங்கினை பராமரிக்க வேண்டியதும் மாநில காவல்துறையின் பொறுப்புதான்.

தற்போது சர்ச்சை எழுந்துள்ள பிரதமரின் பஞ்சாப் பயண விவகாரத்தில் மாநில அரசின் செயல்பாடுகள் குறித்து பலரும் விமர்சனங்களை முன் வைத்து வரும் நிலையில், முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிறப்பு பாதுகாப்பு படை (SPG) குறித்தும் கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இது மத்திய மாநில அரசுகளின் கூட்டுப்பொறுப்பு. அரசியலை தவிர்த்துவிட்டு நாட்டின் பிரதமர் என்ற முரர்றையில் அவரது பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்து முறையாக விசாரிக்க வேண்டும் என்றும் பாதுகாப்பு நிபுணர்கள் சில வலியுறுத்தியுள்ளனர்.